> குருத்து: முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!

January 18, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!



முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!
****************
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!
************************
கருத்தரங்கம்
பொதுக்கூட்டம்
கலைநிகழ்ச்சி
****************
ஜனவரி 25, 2009
அம்பத்தூர்
சென்னை
****

ஒரு தொழிலாளி என்று நம்மால் நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ள முடிகிறதா?

வேலைக்கும், சம்பளத்துக்கும், வாழ்க்கைக்கும் முதலாளிகளின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அடிமைகளாகத்தான் நாம் வாழ்கிறோம். இந்த உலகத்தையே தன்னுடைய வியர்வையால் படைத்த, தன்னுடைய உழைப்பால் இயக்குகின்ற தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை இப்படித்தான் உள்ளது.

தொழிலாளி வர்க்கம் இதுவரை போராடிப் பெற்ற உரிமைகள் எல்லாம் காகிதத்தில் தூங்குகின்றன. காகிதத்தில் இருப்பவையும் ஒவ்வொன்றாக காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கச் சட்டம், வேலை நிரந்தரச் சட்டம், எல்லோருக்கும் ESI, PF என்றெல்லாம் இருந்த சட்டங்கள் எங்கே? பல போராட்டங்கள், அடக்குமுறைகள், வேலை இழப்பு தியாகங்கள் செய்து பெற்ற உரிமைகள் எங்கே?

8 மணி நேர வேலை என்று சட்டம் இருக்கிறது. ஆனால் 10-12 மணி நேர வேலை என்பது கட்டாயம். இப்படி உழைத்தாலும் போதிய சம்பளம் கேட்டால் வேலையே கிடையாது என்கிறான் முதலாளி. வேலையைக் காப்பாற்ற அற்பக் கூலிக்கு பணிந்து போகிறோம். உழைப்புக்கேற்ற கூலிதானே கேட்டோம் என்று குரல் உயர்த்திப் பேச முடியவில்லை. கொத்தடிமையை விட கேவலமாக அல்லவா இருக்கிறது, நம் நிலைமை?

தினம் ஒரு ஆலையைத் திறப்பதாகவும், பல ஆயிரம் பேருக்கு வேலை தரப்படுவதாகவும் அரசாங்கம் பீற்றிக்கொள்கிறது. இதில் எத்தனைப் பேருக்கு நிரந்தர வேலை? நூற்றுக்கு 90 பேர் காண்டிரக்ட் தொழிலாளிகளாகத்தான் இருக்கின்றோம். நிரந்தர வேலை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறான், முதலாளி. எல்லா வேலைகளும் காண்டிராக்ட்மயமாகி விட்டது. 20 வயதில் உழைக்க்ட் துவங்கினால் 30-35 வயதுக்குள் சக்கையாய் பிழிந்துவிட்டு துரத்திவிடுகிறான். உடம்பில் தெம்பு போன பின்பு என்ன வேலைக்குப் போவது? கடைசியில் செக்யூரிட்டி வேலையில் சேர்ந்து வந்தவன் – போனவனுக்கு சல்யூட் அடித்து நிற்கிறோம். நெஞ்சு வெடிக்கிறது. ஆனாலும் அடங்கிப் போகிறோம்!

480 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது சட்டம். 480 நாள் வேலை செய்ததற்கு ஆதாரத்தைக் காட்டு என்பது சட்டத்தின் நிர்ப்பந்தம். ஆதாரத்தை தொழிலாளியால் காட்டமுடியாது என்பது சூழ்நிலை. மீறிக்காட்டினால் இருக்கின்ற வேலையும் போய்விடும் என்பது எதார்த்தம்.

ESI, PF – என்கிற சலுகைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இன்றோ எதுவும் கிடையாது. வேலையில் அடிபட்டு செத்தாலும் நாதியற்ற பிணமாகத்தான் கிடக்க வேண்டும்.

தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை 80 ஆண்டுகளுக்கு முன்பாக போராடிப் பெற்றோம். இன்று ஒரு தொழிற்சாலையில் சங்கம் அமைப்பதாகப் பேசினாலே வேலை பறிக்கப்படுகிறது. ஆலை மூடப்படுகிறது. போலீசும் வருகிறது. தொழிற்சங்கம் வைக்க முயற்சிப்பதே ஒரு கிரிமினல் குற்றமாக்கப்பட்டு விட்டது. ஆனால் முதலாளிகள் சங்கம் வைக்கிறார்கள். அவர்களது சங்கத்தில் தீர்மானம் போடுகிறார்கள். அவர்கள் காலால் இடுவதை அரசாங்கம் தலையால் செய்து முடிக்கிறது. அவர்கள் சொடக்குப் போட்டு கூப்பிட்டால் மந்திரி ஓடுகிறார்.

பட்ஜெட் போடுவதற்கு முன்பாக முதலாளிகளிடம் ஆலோசனை கேட்கிறது, அரசாங்கம். வரிச்சலுகை, மானியங்களை வாரிக் கொட்டுகின்றன, மத்திய-மாநில அரசுகள். வரி ஏய்ப்பு செய்யும் முதலாளிகள் கேட்டதை எல்லாம் செய்கிறது, அரசு. தொழில்துறை முடக்கத்தால் லாபம் குறைந்து போனால் மானியம் தந்து ஈடுகட்டுகிறது, அரசு. மொத்தத்தில் முதலாளிகளின் சங்கம் என்ன சொல்கிறதோ அதுதான் நாட்டின் சட்டமாக ஆகிறது.

ஆனால் 30 கோடி தொழிலாளர்களை ஒரு பொருட்டாகவே அரசு மதிப்பதில்லை. தொழிலாளர்களின் பிரச்சினைக்காகக் கூட தொழிற்சங்க தலைவர்களிடம் அரசு ஆலோசித்ததாக வரலாறு இல்லை.நம்முடைய PF பணம் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை HSBC, ICICI புரூடன்சியல், ரிலையன்ஸ் ஆகிய வர்த்தகச் சூதாடிகளுக்கு பங்கு போட்டுக் கொடுத்தபோது கூட நம்முடைய அனுமதியை வாங்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நமது எதிர்ப்பை மீறித்தான் செயல்பட்டது, அரசு.

இதைவிட கிள்ளுக்கீரையாகவும், கேவலமாகவும் யாரையாவது நடத்த முடியுமா? கலவரம் செய்கின்ற, அரசு பஸ்சைக் கொளுத்துகின்ற சாதித் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்துகிறது, அரசு. ஆனால் உழைப்பால் நாட்டையே இயக்குகின்ற தொழிலாளி வர்க்கத்துக்கு அரசு கொடுக்கும் மரியாதை இதுதான்!

மே தினத்தன்று ஹூண்டாய் கார் கம்பெனியின் தொழிற்சங்க கொடிக்கம்பத்தை நிர்வாகம் பிடுங்கி எறிந்தது. சாதி சங்கத்தின் கொடியையோ, ரசிகர் மன்றத்து பேனரையோ இப்படி பிடுங்கி எறிந்துவிட முடியுமா? சாலையோரத்து கோயிலை இடித்தால் கூட நாலுபேர் மறியல் செய்கிறார்கள். ஆனால், தொழிலாளர் தினத்தன்று தொழிலாளி வர்க்கத்தின் கொடியைப் பிடுங்கி எறிந்த செய்தி கேட்டு நம்மில் எத்தனை பேருக்கு ரத்தம் கொதித்தது? இங்கே தொழிற்சங்கம் துவங்கியதற்காக பழிவாங்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்? பின்னி, டன்லப், மெட்டல் பாக்ஸ், ஸ்டாண்டர்டு போட்டார்ஸ் என்று தற்கொலை செய்து கொண்ட தொழிலாளர்கள் எத்தனைபேர்? இவர்களெல்லாம் நம்முடைய வர்க்கம் என்று நாம் பதட்டபட்டிருக்கிறோமா? அப்படி பதறி கிளர்ந்தெழுந்திருந்தால் இத்தனை பேர் கேட்பாரின்றி மடிய நேரிட்டிருக்குமா?

ஊரப்பாக்கத்தில் சாதிப் பிரச்சனை என்றால் உசிலம்பட்டியில் பஸ்சை உடைக்கிறார்கள், சாதி சங்கத்தினர். அமர்நாத், அயோத்தி, ராமன் பாலம் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கலவரம் செய்கிறார்கள், மதவாதிகள். ஆனால் இந்த தமிழகத்தில் இந்த சென்னை நகரில் பக்கத்து கம்பெனியில் தொழிலாளிக்கு நடக்கும் அநீதியைக் கூட நாம் கண்டுகொள்வதில்லல. அவன் வேறு, நாம் வேறு என்று நினைக்கிறோம். நிரந்தரத் தொழிலாளி-காண்டிராக்ட் தொழிலாளி, அமைப்பாக்கப்பட்ட தொழிலாளி-அமைப்பு சாரா தொழிலாளி என்று தொழிலாளர்களுக்குள்ளேயே முதலாளிகள் புதுவகை பிரிவினையை ஏற்றுக்கொண்டு வர்க்கப் பாசம் இன்றி இருக்கிறோம்.

இன்று அவன் பலி என்றால் நாளை நாம். ஆனால் நாமெல்லாம் ஒரே வர்க்கம் என்று உணர்வதில்லை. நாமெல்லாம் ஒரே வர்க்கம் என்று உணர்வதில்லை. நாமெல்லாம் ஒன்று திரண்டால் எந்த முதலாளித்துவ கொம்பானாலும் நம்மை வீழ்த்தமுடியாது. அவன் அடிபணிந்தே தீர வேண்டும்.

ஓட்டுக் கட்சிகளுக்கு நாம் ஓட்டுப் போடும் எந்திரம். முதலாளிக்கோ உழைத்துப்போடும் மனித எந்திரம்! கெஞ்சிய குரலும், அஞ்சிய வர்க்கமும் உரிமையைப் பெற்றதாக வரலாறு இல்லை. ஒற்றுமை உணர்வும், ஓங்கிய கைகளும் என்றும் தோற்றதில்லை. உழைத்துக் காய்த்த நம் கைகள் ஆயிரம் ஆயிரமாக ஒன்று சேர்ந்தால் முதலாளித்துவத்தின் இரும்புக் கோட்டையும் சிதறிப் போகும். முதலாளிகள் – அரசு கூட்டணியை தூள் தூளாக்கும்! வர்க்கமாய் திரள்வோம்; வலிமையைக் காட்டுவோம்!

- புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

தொடர்புக்கு : அ. முகுந்தன், 110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், சென்னை – 600 024 செல் : 94448 34519

- மாநாட்டுக்காக வெளியிட்ட பிரசுரத்திலிருந்து

0 பின்னூட்டங்கள்: