January 16, 2009
கார்ப்பரேட் கிரிமினல்கள்
நன்றி : லைட்ங்க்
நீங்கள் துப்பாக்கி முனையில் யாரை யாவது மிரட்டி சில ஆயிரம் ரூபாய்களை கொள்ளையடித்தீர்களானால் இந்த நாட்டில் உங்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி. ஆனால் உங்கள் மீது நம்பிக்கை வைத்து மற்றவர்கள் கொடுக்கிற பெருவாரியான பணத்தை வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டால் உங்களுக்கு அவ்வளவு பெரிய தண்டனை கிடைக்காது. ஓராண்டோ அல்லது அதிகபட்சமாக மூன்றாண்டோ சிறைவாசம் மட்டுமே.
பசியால் துடிக்கிற ஒருவர் ஒரு கடையில் உணவுபொருளை திருடிவிட்டால் அவரை பல ஆண்டுகள் சிறைக்குள் தள்ள முடியும். ஆனால் இந்திய பங்குச் சந்தை, மையம் கொண்டிருக்கிற மும்பை தலால் தெருவில் உட்கார்ந்து கொண்டு, நீங்கள் வாழ்க்கை முழுவதும் சேமித்த பணத்தை சூறையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. இதுதான், பெரும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் செய்யும் கடும் குற்றங்கள் மீதான இந்திய சட்ட நடைமுறையின் அதிகபட்ச பிரதிபலிப்பு.
பெரும் நிறுவன கிரிமினல்கள் மீது மிகவும் சாதுவான முறையில் நடந்து கொள்ளும் விதத்திலேயே இந்திய சட்ட அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது.
கடந்த புதன்கிழமை புத்தாண்டு கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. சில மணி நேரங்களிலேயே, இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்களில் ஒன்றான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில், தாங்கள் முதலீடு செய்திருந்த பணம் பங்குச்சந்தையில் காணாமல் போய்விட்டதை, ஆயிரக்கணக்கான இந்திய முதலீட்டாளர்கள் அறிந்து பதறினர்.
சத்யம் நிறுவனம், அமெரிக்க பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்று. உலகம் முழுவதும் பெரும் நிறுவனங்கள் என்று பட்டியலிடப் பட்ட 500 கம்பெனிகளில் இதுவும் ஒன்று.
இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக பங்குதாரர்களின் பணத்தை சூறையாடிய அதன் தலைவர் ராமலிங்க ராஜூ, தற்போது சட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார். நேற்றுவரைக்கும் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து எதையும் செய்யாத இந்த கார்ப்பரேட் பிசினஸ் மேக்னட், இன்று சட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறுவது விந்தையானது.
ராஜூவுக்கு தெரியும், இந்திய சட்ட அமைப்புமுறை தன்னைப்போன்ற பெரும் பணக்காரர்களுக்கு உதவியாகவே இருக்கிறது என்று. தான் சிறைக்கு செல்லப் போவதில்லை என்றும் அவருக்குத் தெரியும். ஒருவேளை அப்படி நடந்தாலும், முதலீட்டாளர்களிடம் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ஏராளமான வழக்கறிஞர்களை விலைக்கு வாங்கி ஓரிரு நாட்களிலேயே அவரால் பெயிலில் வரமுடியும்.
சத்யம் நிறுவன ஊழல் இந்த நாட்டில் நடக்கிற முதல் ஊழல் அல்ல. ஹர்சத் மேத்தாவில்
துவங்கி, கேதன் பரேக் முதல் சி.ஆர்.பன்சாலி (பார்க்க: படம்) வரை நம்மிடம் ஏராளமான மோசடிப் பேர்வழிகளின் பட்டியல் இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்த 5,651 கம்பெனிகளில், 2,750 கம்பெனிகள் மாயமாய் மறைந்து போய்விட்டன; சும்மா போகவில்லை, தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் பொது மக்களின் பணத்தை பல நூறு கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டு காணாமல் போய்விட்டன.
ஆனால் இவர்களுக்கெல்லாம் சட்ட ரீதியான தண்டனை கிடைத்ததா?
இந்த பெரும் ஊழல்களின் விளைவாக, அந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனார்கள். ஆயிரக்கணக்கானோர், தங்களது வாழ் நாள் சேமிப்பை இழந்தார்கள். ஆனால் குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப் படவில்லை.
உலகம் முழுவதும் பொதுவாக ஊழல் பேர்வழிகள் என்று வெறுப்புணர்வு உண்டாக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளை விட, இந்த கார்ப்பரேட் கிரிமினல்கள் ஆபத்தானவர்கள். ஊழல்செய்த அரசியல்வாதிகள் கூட, சில பல ஆண்டுகள் சிறையில் கழிக்கிறார்கள்.
இங்கு நடப்பதற்கு மாறாக சில வளர்ந்த நாடுகளில் கார்ப்பரேட் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படு கிறது. 2006ல் அமெரிக்காவில் நிதி நிறுவன ஊழல் செய்து மாட்டிக்கொண்ட ஜெப்ரி கே ஸ்கில்லிங்கிற்கு 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் சிறையில் இருக்கிறார். மிகப்பெரும் ஊழலில் சிக்கிய என்ரான் நிறுவனத்தின் தலைவர் கென்னத் லே-க்கு
(பார்க்க: படம்) 20 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசம் துவங்குவதற்கு முன்னரே அவர் இறந்துபோனார். அந்த நிறுவனத்தின் ஊழலுக்கு உதவிய தணிக்கையாளர் ஆர்தர் ஆண்டர்சனின் நிறுவனம் மூடப்பட்டது.
நிதி முறைகேடு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்ட வேர்ல்டு காம் நிறுவனர்களில் ஒருவரான பெர்னார்டு எப்பர்ஸ் 25 ஆண்டு சிறைதண்டனையை அனுபவித்து வருகிறார்.
சத்யம் நிறுவனத்தில் ராமலிங்க ராஜூவும் அவரது கூட்டாளிகளும் நிதி கணக்குகளை கள்ளத்தனமாக மாற்றி எழுதியுள்ளனர். மேலே குறிப்பிடப்பட்ட தண்டனைகளைப் போல இவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்று சத்யம் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்க முடியுமா? இவர்கள் மேற்கொண்ட மோசடி கணக்குகளுக்கு சான்றிதழ் கொடுத்த ஆடிட்டர்களுக்கு சிறைவாசம் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? இதற்கு, ‘இல்லை’ என்று ஒரே பதில்தான் இருக்கிறது.
இந்திய தண்டனைச்சட்டம் 1860ல் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தை உருவாக்கிய தாமஸ்
பாபிங்டன் மெக்காலே, (பார்க்க: படம்) முற்றிலும் இன ரீதியான மற்றும் வர்க்க ரீதியான பாகுபாட்டோடுதான் இச்சட்டத்தை வடிவமைத்தார். இச்சட்டம் அப்போதைய பிரிட்டிஷ் முதலாளிகளுக்கும், அவர்களது இந்திய கூட்டாளிகளுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய நிதிக்குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட தண்டனை அளிக்கவில்லை.
பிரிட்டிஷ் இந்தியாவில், நிர்வாகத்திலும் வர்த்தக நடவடிக்கைகளிலும் பிரிட்டிஷ்காரர்களே உயர்அதிகாரிகளாக இருந்தனர். இவர்கள் நிதி தொடர்பான குற்றங்களில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிந்தும், அவர்களது உள்ளூர் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ஜமீன்தார்கள், ஏழை மக்களின் நிலங்களை மோசடி செய்து அபகரித்த போதிலும் அவர்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காதவிதத்தில் இந்திய தண்டனைச்சட்டம் வடிவமைக்கப்பட்டது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் கூட, அவர்களுக்கு உடல் ரீதியாக போலீசாரால் தண்டனை ஏதும் தரப்படாதவிதத்தில் இந்த சட்டம் அமலாக்கப்பட்டது.
பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டை விட்டு போனபின்னரும், இந்த சட்டங்களில் சில, ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவானதாக இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய தண்டனைச்சட்டம் மட்டுமல்ல, வேறு சில நிதிச்சட்டங்களும் கூட இந்த வகைப்பட்டவையே. இப்படித்தான், பெரு மளவு வருமான வரி ஏய்ப்பு செய்தாலும் கூட வெகுசில மாதங்கள் மட்டுமே தண்டனை அளிக்கிற வருமான வரிச்சட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம். வருமானவரி சட்டத்தில், பெரும்பாலான குற்றங்களுக்கு அபராதம் செலுத்தினால் போதும் என்றே விதிகள் உள்ளன.
இதனால்தான் வரி ஏய்ப்பும் மோசடியும் ஊக்குவிக்கப்படுகிறது. சிறிய வணிகர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை வரி ஏய்ப்பு எளிதாக செய்ய முடிகிறது. பலவீனமான சட்டங்கள் இருப்பது அவர்களுக்கு தெரியும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படித்தான் மெகா மோசடிகளை செய்ய அச்சமின்றி துணிந்துள்ளன. இவற்றை தண்டிக்க வலுவான சட்டங்கள் மட்டுமின்றி அரசியல் உறுதியும் தேவை. போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். மிகப்பெரிய பேரழிவு அது. ஆனால் இந்த நிறுவனத்தின் தலைவர் வாரன்
ஆண்டர்சன் (பார்க்க: படம்) கைது செய்யப்பட்ட அடுத்த நாளே வெளியில் வந்துவிட்டார். இந்திய தொழில் நிறுவனங்களின் வரலாற்றில் மிகப் பெரும் குற்றம் இழைத்த இந்த நிறுவனத்தின் தலைவரை, இந்த குற்றத்திற்கு எப்படி பொறுப்பாக்குவது என்று சட்டத்திற்கு தெரியவில்லை.
இந்தியாவில் புதிய பயங்கரவாத ஒழிப்பு சட்டங்கள், பழைய சட்டங்களில் திருத்தங்கள், நீதித்துறை ஆணையம் ஆகியவற்றை பற்றி தீவிரமாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன மோசடி வெளியாகியுள்ளது. இந்த மிகப்பெரும் கார்ப்பரேட் குற்றத்தை இந்திய சட்டம் எப்படி கையாளுகிறது என்பதை பார்ப்போம்.
நன்றி : http://lightink.wordpress.com
Subscribe to:
Post Comments (Atom)
4 பின்னூட்டங்கள்:
போபால் விபத்தினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டது உண்மைதான்
ஆனால் அது விபத்து. ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் அதற்கு காரணம் மற்றவர் செய்த குற்றம் தான் என்ற சிந்தனை சிறுபிள்ளைத்தனமானது
நான் யூனியன் கார்பை நிறுவனத்திற்கு வக்காலத்து வாங்க வில்லை.
ஆனான் என்ரானையும் யூனியன் கார்பைடையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பது தவறு என்று புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
டாக்டர் புருனோ,
//ஆனால் அது விபத்து. ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் அதற்கு காரணம் மற்றவர் செய்த குற்றம் தான் என்ற சிந்தனை சிறுபிள்ளைத்தனமானது//
தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கருவிகள், பாதுகாப்பான சுற்றுசூழல் இன்னபிற சமூக பாதுகாப்பை உருவாக்கி தருவது அந்த தொழிற்சாலையின நிர்வாகத்தின் பொறுப்பு. அந்த ஆலைக்கு அனுமதி கொடுத்த நம் அரசாங்கத்தின் பொறுப்பு.
இதில் ஏதேனும் பிழை ஏற்படுமானால்... நீங்கள் சொல்கிற படி "மற்றவர் செய்த குற்றம் தான்" என சிறுபிள்ளைத்தனமாய் மன்னிக்க முடியாது. தண்டனை தான் தர வேண்டும்.
தண்டனை கிடைக்கவில்லை என்பது தான் இந்திய வரலாறு..
இந்த கட்டுரையின் சாரம்சம் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகத்தினர் எப்படி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து கொள்கிறார்கள் என்பது தான்.
ஒரு தட்டில் வைத்து பார்ப்பது சரி!
மிகச்சரியான பதிவு,
போபாலில் மக்களை கொன்ற யூனியன் கார்பைடு முதல் சத்யம் வரை யாருக்கும் கண்டிப்பாய் தண்டனை தரப்போவதில்லை ஏனெனில் அவர்கள் தான் சட்டதை உருவாக்கினார்கள்,உருவாக்குகிறார்கள் தேவையெனில் புதிதாய் உருவாக்குவார்கள்
கலகம்
test
Post a Comment