> குருத்து: பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!

February 28, 2011

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!


பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !
போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!
கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!

" அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு "

23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும்.
ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?

மேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். " குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்". கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.

இப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து "பஸ் டே" விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு(preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத்தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் "லத்தி சார்ஜ்" ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.

கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக்கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது,ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.

தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் "தம்பி" என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.

அவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் , என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.

இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் "ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?" என்றனர் பேராசிரியர்கள். அதற்கு "நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?" என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உறுதியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.

இதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.

ஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.

*****

ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.
" நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் "
எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம்.

மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.

பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.

பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ' வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.

இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.

அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.

காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்? நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. " சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? " என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன?

ஈராண்டுகளுக்கு முன்புவரை "ரூட்" பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்களையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.

உடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள்.
அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.


இது ஏதோ "பஸ் டே" பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.


NDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் " மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது" என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் "மாணவர் சக்தி ". தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.

மாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.

நிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர் வரலாறு மீண்டும் திரும்புகிறது.

மாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். " கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்" மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல' நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.

இதோ !!!!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம்
நாம் ?


- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
தொடர்புக்கு : 9445112675

3 பின்னூட்டங்கள்:

ஊரான் said...

"தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது".

சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் நுழைந்து வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் காவல் துறை தாக்கிய சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது.

உண்மை என்னவென்று தெரியாமலேயே "பச்சையப்பன் கல்லூரியும் பன்னாடைப்பயல்களும்" என்று தலைப்பிட்டு பிலாசபி பிரபாகரன் எனபவர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பற்றி ஒரு மோசமான சித்தரிப்பை வலை உலகில் ஏற்படுத்தியுள்ளார். விவரத்திற்குள் செல்லாமலேயே சில பதிவர்களும் வாசகர்களும் அவசரப்பட்டு அவரது கருத்தை ஆமோதித்துள்ளார்ள்.

இந்தப் பதிவு மாணவர்களுக்கெதிரான அவதூறுகளை துடைத்தெறியும் என நம்புகிறேன். அதே நேரத்தில் பல பதிவர்களை சிந்திக்கவும் வைக்கும்

ஆழமான ஒரு பரிசீலனையோடு மாணவர் சமூகத்திற்காக வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

i do not believe this

Anonymous said...

இவ்வளவு உள்குத்து வேலைகள் இருக்கிறதா?