> குருத்து: வாழ்த்துரை -‍ தோழர் மருதையன்

August 11, 2011

வாழ்த்துரை -‍ தோழர் மருதையன்



கடந்த மாத இறுதியில் தோழர் ஒருவருக்கு 'வாழ்க்கை துணை நல ஏற்பு விழா' நடைபெற்றது. தாலி மறுத்து, சடங்குகள் மறுத்து எளிமையாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி பேசியவர்களில் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனும் ஒருவர். 10 நிமிடங்கள் அவர் பேசியதில், நான்கு விசயங்கள் மிகவும் முக்கியமானவை. பகிர்ந்துகொள்ள வேண்டியதின் அவசியம் கருதி, சுருக்கமாய் இங்கு பதிகிறேன்.

*******

பொதுவாக இந்த மணவிழாவை போல புரட்சிகர திருமணங்கள் தமிழகமெங்கும் ம.க.இ.க அமைப்பாலும், அதன் தோழமை அமைப்புகளாலும் ஏராளமாக நடத்தப்படுகின்றன.

இந்த மணவிழாவை பொறுத்தவரை, மற்றவர்கள் குறிப்பிட்டது போல தோழருக்கு தாமதமான திருமணம். (பெண்) தோழருக்கு இது மறுமணம். இப்படி ஒரு சொல்லால் குறிப்பிடுவது என்பது இங்கு இருக்கிறது. மேலை நாடுகளில் இப்படி இல்லை. அது திருமணமா? மறுமணமா? என்ன வெங்காயமா இருந்தா உனக்கென்ன? இப்படி ஒரு அநாகரிகம் நம் சமூகத்தில் இருக்கிறது. அதனால் முதல் திருமணம், மறுமணம் என சொல்ல வேண்டியிருக்கிறது.

பொதுவில் திருமணம் என்பதை எப்படி பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள் என்றால், முழு வாழ்க்கையில் அது முக்கியமான சம்பவம். தன்னைப் பற்றிய ஸ்டேட்மெண்ட். தன்னை பிரகடனப்படுத்தி கொள்கிற நிகழ்வு. அதற்காக எல்லா பொருளையும், சிந்தனையையும், உழைப்பையும் செலவழிக்கிறார்கள்.

இந்த தோழர்களை பொறுத்தவரை அப்படி இல்லை. தோழருடைய வாழ்க்கை தான் ஒரு ஸ்டேட்மெண்ட். இந்த திருமணம் இப்படி நடத்த வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒரு பதிவு திருமணமாகவோ, சில நண்பர்களுக்கு வீட்டளவில் தேநீர் வழங்கியோ கூட முடித்து கொண்டிருக்கலாம். பிறகு ஏன் நடத்துகிறோம்? சுயமரியாதை திருமணம், சாதி மறுப்பு, தாலி மறுப்பு, இவற்றையெல்லாம் பிரபலப்படுத்த வேண்டும் என்பது ஒரு நோக்கம்.

ஒரு குறிப்பிட்ட வயது கடந்துவிட்டால், மாப்பிள்ளையாய் மேடையில் அமருவது கூச்சத்திற்குரிய விசயம் என்ற கருத்து நம்மிடம் இருக்கிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேலே போனால், மாப்பிள்ளை இல்லையா? அல்லது மறுமணம் என்றால் திருமணம் இல்லையா?! இதை முறிப்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

இப்படிப்பட்ட திருமணம் உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலே கொண்டு செல்லப்பட வேண்டும். (பெண்) தோழர் இருக்க கூடிய கிராமத்திலே, 25 இளம் கைம்பெண்கள் இருப்பதாக கூறினார்கள். அந்த கிராமத்திலே 500 தலைக்கட்டு (குடும்பங்கள்) இருக்குமா? அந்த ஊரிலே மணவயதில் 25 கைம்பெண்கள் இருப்பது கொடுமையில்லையா? அவர்கள் வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்வார்கள் என்பது எவ்வளவு பெரிய சமூக அநீதி.

இந்த மணவிழாவை உறவினர்கள், ஊர்க்காரர்கள் பார்த்து, இன்னும் ஒன்றிரண்டு திருமணங்கள் நடைபெற்றால் கூட மிகப்பெரிய வெற்றி என பார்க்கவேண்டும்.

தோழரின் பெற்றோர், உறவினர்களும் வந்திருக்கிறார்கள். தோழரின் தந்தைக்கு வருத்தம் இருக்கும். எந்த பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை பொது வாழ்க்கைக்கு அனுப்பிவிட்டு, மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்!

தன் குடும்பம், தன் பெண்டு என வாழ்வதை தான் முன்மாதிரியான வாழ்க்கை என பொற்றோர்கள் கருதுகிறார்கள். பிள்ளைகளையும் அப்படியே பயிற்றுவிக்கிறார்கள். பிற்காலத்தில் தன் பிள்ளை தங்களுக்கு சோறுபோட மாட்டேன் என்று சொல்லும் பொழுது கூட இப்படி சுயநலவாதிகளாக பயிற்றுவித்தது தப்பு என புரிவதில்லை. உரைப்பதில்லை. இது துரதிருஷ்டம்!

தொடரும்! அடுத்த பதிவில் முடிவடையும்!

2 பின்னூட்டங்கள்:

Amudhavan said...

சமகாலச் சிந்தனையாளர்களில் முக்கியமான ஒருவராய் திரு மருதையன் அவர்களைக் கருதுகிறேன். அவருடைய கருத்துக்கள் நிச்சயம் பலரை சிந்திக்கவைக்கும் ஒன்றாக இருக்கிறது. முக்கிய நிகழ்வை இங்கே பதிந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

ஊரான் said...

பகிர்ந்தமைக்கு நன்றி!
கட்டுரையின் முகப்பில் பூ மாலை எதற்கு? மாலைகூட தேவையில்லை என்பதே எனது கருத்து. மாலையும் ஒரு சம்பிரதாயமாகவே மாறிவருகிறது. சடங்கு சம்பிரதாயங்கள் அற்ற ஒரு மணவிழாவில் மாலை என்கிற சம்பிரதாயம் எதற்கு? மலர்-மாலை குறித்த "மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்" என்ற தலைப்பில் வினவில் வெளியான எனது கட்டுரையில் மேலும் கூடுதல் விவரங்களைக் காணலாம்.