> குருத்து: முல்லை பெரியாறு - தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

December 30, 2011

முல்லை பெரியாறு - தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!
முல்லை பெரியாறு அணையைப் பாதுகாப்போம்!
தமிழக உரிமையை நிலைநாட்டுவோம்!

* பழைய அணையை இடித்துவிட்டு
புதிய அணையைக் கட்டத்துடிக்கும்
கேரள அரசின் சதியை முறியடிப்போம்!

* கேரள அரசின் அடாவடித்தனத்திற்கு
துணைநிற்கும் மத்திய அரசை எதிர்த்துப்
போராடுவோம்!

* இரட்டைவேடம் போடும்
தேசியக்கட்சிகளை தோலுரிப்போம்!

*தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட
ஓரணியில் திரள்வோம்!

தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்

உழைக்கும் மக்களே,

தமிழகத்தின் ஐந்து தென் மாவட்டங்களின் வாழ்வுக்கும் வளத்திற்கும் உயிராதாரமாக இருப்பது முல்லைப் பெரியார் அணை. அந்த அணை பலவீனமாக உள்ளது என்றும், அணை உடையும் அபாயத்தில் உள்ளது என்றும், 40 லட்சம் கேரள மக்களின் உயிரை, உடைமைகளை காவு வாங்கப்போகிறது என்றும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சதித் திட்டத்தோடு கோயபல்சு பாணியில் பொய்ப்பிரச்சாரம் செய்கிறது கேரள அரசும், ஓட்டுக்கட்சிகளும் மற்றும் ஊடகங்களும்.

கேரளத்தின் புளுகுனித்தனத்தின் உச்சக்கட்டமாக கடந்த ஒரு வாரகாலமாக கம்பம்-குமுளி எல்லைப்புறத்தில் பதற்றச் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது கேரளக்கட்சிகள். அன்றாடம் பிழைப்புக்காக கேரளாவிற்கு கூலி வேலைக்குச் செல்லும் தமிழ் மக்களை தாக்குவது, ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களை இழுத்துப்போட்டு அடிப்பது, தமிழ்நாட்டு வாகனங்களில் ஆபாசமாக இனவெறுப்பை கக்கி எழுதுவது, தமிழக முதல்வரின் உருவ பொம்மையை எரிப்பது போன்ற இனவெறி காலித்தனம் செய்து, தமிழின வெறுப்பை உமிழ்கிறார்கள். இந்த காலித்தனத்தை கேரள போலீசின் பாதுகாப்போடு அனைத்து ஓட்டுக்கட்சிகளும் முன்னின்று நடத்துகிறார்கள்.

உண்மையில் அணை உடையும் ஆபத்தில் உள்ளதா? இல்லையெனில், ஏன் இந்த பொய்ப்பிரச்சரம்? புரிந்து கொள்ள முல்லைப்பெரியார் அணையின் சில உண்மைகளை தெரிந்துகொள்ளவேண்டும். உண்மைகளை எப்பொழுதும் வெல்லமுடியாது.

முல்லைப்பெரியாறு அணைத்தோற்றம்!

1850களில் மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் ஏற்பட்ட பஞ்சத்தையும் அதனால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்யவும், வரிவசூல் செய்யவும், விவசாயத்தை சீரமைக்கவும் நினைத்து வெள்ளை அரசு அதற்கு நிலையான நீர்த்தேக்கம் தேவை என கருதி மேற்கு நிலையான நீர்த்தேக்கம் தேவை என கருதி மேற்கு தொடர்ச்சி மலையில் வீணாகக் கடலில் கலக்கும் முல்லைப்பெரியாரின் நீரைக்கட்டி, தேக்கி தமிழகத்திற்கு திருப்புவது என முடிவெடுத்தது. அத்திட்டத்தை பென்னிகுயிக் என்ற பொறியாளரிடம் ஒப்படைத்தது.

இதற்காக 1886 இல் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் சென்னை மாகாண கவர்னருக்கும் பெரியார் அணைக்கட்டுமான 999 வருட குத்தகை ஒப்பந்தம் ஏற்பட்டது.

தமிழக மக்களின் உழைப்பை, உயிரை, உதிரத்தைக் கொடுத்தும் பென்னி குயிக்கின் முன்முயற்சியில் பெரியார் அணை கட்டப்பட்டது.

பெரியார் அணையினால் தமிழகத்தில் 4 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது. 1958 லிருந்து மின்னுற்பத்தியும் செய்யப்படுகிறது. தமிழக மக்களின் நலனை கருத்திற்கொண்டு கட்டப்பட்ட பெரியார் அணை நிலக்குத்தகை ஒப்பந்தத்தை முழுக்க முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது. ஒப்பந்தப்படி அணை கட்ட தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை குத்தகை பணம் தவறாமல் செலுத்தப்பட்டிருக்கிறது.

அணையில் சீரமைப்புப் பணிகளும் வல்லுநர் குழு ஒப்புதலும்!

1979இல் மலையாள மனோரமா இதழில் அணை உடையப்போகிறது என புரளி செய்தி வெளியிட்டது. இதையொட்டி அணையின் பலம் குறித்து பிரச்சனையை கேரள அரசு தீவிரமாகக் கிளப்பியது.

அதனால், மத்திய நீர்வல ஆணையத்தின் தலைவர் கே.சி. தாமஸ் தலைமையில் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, அணையில் சீரமைப்புப் பணிகள் செய்து முடிப்பது என்று உடன்பாடு ஏற்பட்டது.

அதில் முதற்கட்டப் பணிகள் முடியும் வரை நீர்மட்டம் 136 அடியும் முதற்கட்டப் பணிகள் முடிந்தவுடன் 142 அடியாகவும் அனைத்துப் பணிகளும் முடிந்தவுடன் 152 அடியாகவும் உயர்த்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. சீரமைப்புப் பணிகளுக்கு கேரள அரசின் வனத்துறை, நீர்வளத்துறை, காவல்துறை போன்ற துறைகள் பல வகைகளில் இடையூறு செய்து பணிகளை தடுத்து நிறுத்தியது. இருந்தும், பேபி அணையைப் பலப்படுத்தும் சீரமைப்புகளைத் தவிர மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்த அனைத்துப் பணிகளையும் செய்து முடித்தது தமிழக அரசு. அணையின் பலம் பாதுகாப்பாக உள்ளது என்பதற்கு இந்தியாவில் உள்ள முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவியல் ரீதியாக சோதனை செய்து அறிக்கையை அளித்துள்ளனர். மத்திய நீர்வள ஆணையத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த பொறியாளர்களும் அணையின் பலம் குறித்து விவாதித்த பின் அணியின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கி உள்ளனர்.

நாட்டின் சிறந்த நீரியல் பொறியாளர்கள் 6பேர் அடங்கிய குழுவை மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் டாக்டர் பி.கே. மிட்டல் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவில் இடம்பெற்ற கேரள அரசின் பிரதிநிதி தவிர அனைவரும் அணையின் வலிமைக்கு சான்றளித்து 142 அடி நீரைத் தேக்கலாமென அறிக்கை தந்தார்கள். ஆனால், கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்த அடாவடித்தனமாக மறுத்து வருகிறது.

தமிழகம் அணையின் மீதுள்ள பல உரிமைகளை இழந்துள்ளது. மீன்பிடிக்கவும் படகு விடவும், சாலைகள், பாதுகாப்பு உட்பட அனைத்தையும் இழந்துள்ளது. இப்போது அணையில் நீர்த்தேக்கும் உரிமையையும் கேரளா அடாவடித்தனமாக மறுக்கிறது. பெரியார் அணை சம்பந்தமாக 'இல்லாத' ஒரு பிரச்சனையை எழுப்பி இவ்வளவு பிடிவாதம் செய்ய காரணம் என்ன?

அடாவடித்தனத்தின் உள்நோக்கம்!

முக்கியக் காரணம் இடுக்கி அணையின் 800 வாட் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இதற்கு பெரியார் நீர் தேவை. ஆகையால் பெரியார் அணையில் 136 அடிக்கு மேல் நீர் தேக்கினால் மின் உற்பத்தி பாதிக்கும்.

ஆனால், 1886 ஆம் ஆண்டு குத்தகை ஒப்பந்தப்படி அணையும், 152 அடி நீர்த்தேக்கும் உரிமையும் தமிழகத்துக்கு சொந்தமாக இருக்க இடுக்கி அணைக்கு நீர் தேவை என்பதை நேர்மையான முறையில் கூறி, தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியாது என்பதால், அணை உடையும் ஆபத்து என்ற பீதியைக் கிளப்பி 136 அடி நீர்மட்டத்தை நிரந்தரமாக்க முயற்சிக்கிறது கேரள அரசு. எங்கே சென்றாலும் நாம் தோற்றுப்போவோம் என்று தெரிந்து தான் சட்டப்படியான தீர்வுகளுக்கோ அல்லது அறிவியல் முறையிலான தீர்வுகளுக்கோ ஒத்து வராமல் கேரள அரசு பிரச்சனைகளை இழுத்துக்கொண்டே இருக்கிறது.

இப்பொது, புதிதாக அணை கட்டும் வாதத்தை வைத்து அங்கே புதிய அணையை புவியியல் அமைப்பின்படியும் கட்டுமான பொறியியலின் படியும் 140 அடிக்கு மேல் கட்ட இயலாது. 136 அடிக்கு மேல் நீரையும் தேக்கமுடியாது. ஆக மொத்தம் கேரள அரசின் நோக்கம் நிறைவேறும். புதிய அணை, புதிய ஒப்பந்தம் என்று கூறுவதன் நோக்கம் அணையையும் தமிழக உரிமையையும் களவாடுவதுதான்.

மத்திய அரசு மற்றும் நீதிமன்றத்தின் கயவாளித்தனம்!

உச்சநீதிமன்றம் 142 அடி நீரைத் தேக்க உத்தரவிட்டது. நீதிமன்றத் தீர்ப்பை மீளாய்வு செய்யக்கோரி தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பையும் உறுதி செய்து தீர்ப்பையும் உறுதி செய்தது நீதிமன்றம். தனது தீர்ப்பை அமுல்படுத்தாமல் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையிலான 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவிடம் ஒப்படைத்து பிரச்சனையை கேரள அரசு விரும்பியபடி துவங்கிய இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

மத்திய அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்பை, வல்லுநர் குழுவின் முடிவுகளை - எதையும் ஏற்றுக்கொள்ளாமல் அடாவடி செய்யும் கேரளத்தை கண்டித்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். அணையை மத்திய நீர்வலத்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு புதிய அணை கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்ய கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி கேரளத்தின் அடாவடித்தனத்திற்கு துணை போகிறது. நம்மை மீண்டும் மீண்டும் பேச்சு வார்த்தை, ஆய்வுகுழு என்று 30 ஆண்டு காலமாக செக்கு மாட்டைப் போல சுற்றிவரச் செய்கிறது.

காங்கிரசு, பி.ஜே.பி. போலிக்கம்யூனிஸ்டுகளின் பித்தலாட்டம்!

தேசிய ஒருமைப்பாடு பேசும் அகில இந்திய கட்சிகளான காங்கிரசு, பி.ஜே.பி., போலிக் கம்யூனிஸ்டு கட்சிகள் ஓட்டுக்காக தேசிய இனவெறியைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது. கேரள மக்களுக்காக தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்து அனுப்பு உணவு தானியங்கள் -காய்கறிகள் முதலானவற்றுக்கு தேவையான நீரின் அளவு 511 டி.எம்.சி ஆகும். அந்த அளவிற்கான நீரையாவது தமிழகத்திர்கு தரவேண்டும் என்ற நியாய உணர்வு கூட அக்கட்சிகளிடம் இல்லை.

வல்லுநர்கள் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற போதும் அணையில் நீர்க்கசிவு உள்லது என திருத்தச் சொல்லி பயபீதி ஊட்டியும் குறுகிய தேசிய வெறியைக் கிளப்பிவிட்டு புதிய அணை கட்டும் திட்ட்டத்தை செயல்படுத்தி இடுக்கி அணைக்கு நீரைக் கொண்டு செல்ல கேரளாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் செயல்படுகிறது. இதன் மூலம் அணையை தனது பொறுப்பில் வைத்து கொண்டு தமிழகத்தின் 5 தென்மாவட்டங்களையும் பாலைவனமாக்கத் துடிக்கின்றது.

இவ்வளவுக்கு பின்னரும் இரு மாநில அரசுகளும் இணக்கமாக பேசித் தீர்க்கவேண்டும் என அக்கட்சிகளின் மையத் தலைமை உபதேசம் செய்கிறது. தமிழகத்தின் நியாய உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து, தேசியக் கட்சிகளின் தமிழ் மாநில தலைமை எந்த போராட்டத்தையும் நடத்தியதில்லை. அக்கட்சிகளின் கேரள மாநில தலைமையின் அடாவடித்தனத்தைக் கண்டித்து, அகில இந்திய தலைமையிடம் வாதிட்டதும் இல்லை. இப்பித்தலாட்டப் பேர்வழிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தி இவர்களை தமிழகத்தை விட்டு விரட்டியடிக்காமல் பெரியாறு நீரில் தமிழகத்தின் நியாய உரிமைகளை நாம் பெறமுடியாது.

நமது பெரியாறு உரிமையைப் பெற வழி!

நமது நியாய உரிமைகளை மறுக்கின்ற கேரள மாநிலத்திற்கு எதிரான பொருளாதார முற்றுகைதான் உடனடி பணி.

பரம்பிக்குளம் - ஆழியாறு - மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரளத்திற்கு செல்லும் தண்ணீரை மறுப்பது, சபரிமலை மற்றும் கேரளத்திற்குச் செல்லும் சாலை, இரயில் போக்குவரத்தை மறிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் மேற்கொள்ளவேண்டும்.

கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் எவ்வளௌ முக்கியமோ, அதைப்போல தமிழகத்திலிருந்து கேரளம் அடையும் பொருளாதார உதவியும் முக்கியம் என்பதை அம்மாநில மக்களுக்கு உணர்த்தவேண்டும். இது இனவெறி ஊட்டும் செயல் அல்ல. மாறாக, தமிழகத்திற்கு நியாய உரிமையை மறுக்கும் இனவெறி அடாவடித்தனத்திற்கு இப்படித்தான் பாடம் புகட்டமுடியும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒரு மாநில அரசு மறுக்கும் பொழுது மைய அரசு அம்மாநில அரசின் மீது அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து தீர்ப்பை அமுலபடுத்தவேண்டும். இதை மைய அரசு செய்யாத போது, மைய அரசின் அனைத்து அதிகாரங்களையும் ஏற்க மறுப்பதற்கு தமிழகத்திற்கு எல்லாவித நியாயமும் உரிமையும் உண்டு. ஆகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த வக்கற்ற மத்திய அரசின் எந்தவொரு அதிகாரத்தையும் நாம் ஏற்கக்கூடாது. அனைத்து பகுதிகளிலும் மத்திய அரசின் அலுவலகங்களையும், நீதிமன்றங்களை இழுத்து மூடவும் மத்திய அரசுக்கான் வரிகளைச் செலுத்த மறுப்பதன் மூலமாகத்தான் நம்து பெரியாறு அணையைப் பாதுகாக்கவும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் முடியும்.

முல்லை பெரியாறு அணையைப் பாதுகாப்போம்!
தமிழக உரிமையை நிலைநாட்டுவோம்!

* பழைய அணையை இடித்துவிட்டு
புதிய அணையைக் கட்டத்துடிக்கும்
கேரள அரசின் சதியை முறியடிப்போம்!

* கேரள அரசின் அடாவடித்தனத்திற்கு
துணைநிற்கும் மத்திய அரசை எதிர்த்துப்
போராடுவோம்!

* இரட்டைவேடம் போடும்
தேசியக்கட்சிகளை தோலுரிப்போம்!

*தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட
ஓரணியில் திரள்வோம்!

தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்


இவண் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

0 பின்னூட்டங்கள்: