> குருத்து: சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா, சிறந்த தொகுப்பாளர் லெனின், சிறந்த படத்தொகுப்பு துப்பாக்கி

April 20, 2022

சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா, சிறந்த தொகுப்பாளர் லெனின், சிறந்த படத்தொகுப்பு துப்பாக்கி



மக்களின் மனநிலையை ஒரு படத்தொகுப்பாளர் நிச்சயம் அறிந்திருக்கவேண்டும். ஆகையால் மக்களோடு மக்களாக அவ்வப்பொழுது படம் பார்க்கிறேன்.


ஒரு நகைச்சுவை காட்சி முடிகிறது என்றால், தொகுப்பாளர் மக்கள் சிரிப்பதற்கு கொஞ்சம் இடம் கொடுக்கவேண்டும். அடுத்தக் காட்சி சீரியசாக இருந்தால், சிரிக்க முடியாமல் போய்விடும்.

இந்தியாவில் சிறந்த தொகுப்பாளர் எடிட்டர் லெனின். நல்ல சிறப்பான எடிட்டிங் அமைந்த படம் துப்பாக்கி. துவக்கத்தில் இருந்து கடைசி வரை சிறப்பாக அமைந்தது. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் இளையராஜா. தேவையான இடத்தில் இசை. தேவையான இடத்தில் மெளனம் இருக்கும். படத்தை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தி தருவார்.

ஒரு இயக்குநர் துவக்கத்தில் கதை சொல்வார். எப்படி எடுக்கப்போகிறேன் என்பதையும் சொல்வார். ஆனால் அதை எடுக்கும் பொழுது, காலநிலை மாற்றங்கள். பட்ஜெட் பிரச்சனை, நடிகர்களின் தேதி பிரச்சனை என பல நடைமுறை பிரச்சனைகளை எதிர்கொள்வார். மொத்த குழுவின் ஆற்றலையும் பயன்படுத்தி, அவர் சொன்னதில் 50% எடுத்து வந்தால் ஆச்சர்யம். என்னிடம் சொன்னதைப் போல 75% எடுத்து வந்து ஆச்சர்யப்படுத்தியவர் ”கற்றது தமிழ்” இராம்.

பொதுவாக கதை, திரைக்கதை, வசனம் எழுத சில மாதங்கள். அதை எடுப்பதற்கு சில மாதங்கள் செலவழிக்கிறார்கள். ஆனால், பின்னணி இசை, ஒலிப்பதிவு, படத்தொகுப்புக்கு போதுமான நேரம் தருவதில்லை. இந்த பகுதி தான் படத்தை மிகவும் செழுமை செய்யும் பகுதி. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வேகப்படுத்தும் பொழுது, அவசர, அவசரமாய் வேலைகளை முடிக்கும் பொழுது அதற்குரிய தரத்துடன் தான் வெளிவருகிறது. ஒரு இயக்குநர் பல மாதங்கள் அதில் உழன்று கொண்டிருப்பதால், சரி என தோன்றும் காட்சிகள் கூட நிதானமாய் அவரே தன் படத்தை பார்த்தால், மாற்ற தோன்றும். இயக்குநர் மணிரத்னம் ஒரு இடைவெளி விட்டு அவரே தன் படத்தைப் பார்த்து, தேவையான மாற்றங்கள் செய்வார்.

தமிழில் ஒரே படத்தில் நிறைய விசயங்களை சொல்லவேண்டும் என நினைக்கிறார்கள். பட்ஜெட் நீண்டுவிடுகிறது. மலையாளத்தில் ஒரு எளிய கதையை எடுத்துக்கொண்டு வாழ்வியலோடு எடுக்கும் பொழுது, பட்ஜெட் அவர்கள் கைகளுக்குள் இருக்கிறது. விரைவாகவும் எடுத்து முடித்துவிடுகிறார்கள்.

முன்பெல்லாம் பிலிம் விலை அதிகம். ஆகையால், காட்சிகளை சிக்கனமாக எடுப்பார்கள்.. இப்பொழுது டிஜிட்டல் என்பதால், ஒரு காட்சியையே வேறு வேறு கோணத்தில் எடுத்துவந்து தருகிறார்கள். நிறைய இருக்கிறது என ஒரு காட்சியில் தேவையில்லாமல் நிறைய கோணத்தை மாற்றிக்கொண்டே இருக்ககூடாது. பார்வையாளர்களை சிரமப்படுத்தும். எவ்வளவோ நம் முன் இருந்தாலும், வயிற்றின் அளவிற்கு தானே சாப்பிடமுடியும்.

சிஜி என சொல்லப்படும் கணிப்பொறி தொழில்நுட்பம் இன்னும் நமக்கு தேவையான அளவிற்கு இந்தியாவில் வளரவில்லை. வளரவேண்டும்.

முன்பு படத்தயாரிப்பு நிறுவனங்கள் செல்வாக்கில் இருந்த பொழுது, இயக்குநர் படம் இயக்குவதற்கு முன்பு படத்தொகுப்பு சில மாதங்கள் கற்றுக்கொள்ள வலியுறுத்துவார்கள். இயக்குநர்களும் கற்றுக்கொள்வார்கள். அது நல்ல பலனைத் தந்தது.

- திரைப்பட தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்,
ஏழு தேசிய விருதுகளை வென்றவர்

நன்றி : Chai_With_Chitra

0 பின்னூட்டங்கள்: