> குருத்து: தோசை பிரியரும், விபத்தும்!

April 14, 2024

தோசை பிரியரும், விபத்தும்!


சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு அம்மா, தோசை குறித்த ஒரு தலைப்பில் விவாதிக்கும் பொழுது தன் மகன் 25 தோசைகளுக்கு மேல் விரும்பி சாப்பிடுவான் என மகிழ்ச்சியாய் பகிர்ந்துகொண்டார். அந்த பையனை அந்த சமயத்தில் இணையத்தில் ட்ரோல் செய்து இருக்கிறார்கள்.


கடந்த வாரம் அந்த பையன் தாம்பரம் மின்சார ரயில் பாதையை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டான். டிரோல் செய்த கண்ணேறு பிரச்சனையால் தான் இப்படி அல்ப ஆயுசில் செத்துப்போய்விட்டான் என சிலர் இரக்கப் பதிவுகள் எழுதியிருக்கிறார்கள். அதை விமர்சித்தும் ஆங்காங்கே பதிவுகளை பார்க்க
முடிந்தது.

சென்னை வந்த புதிதில் இப்படி ரயில்வே பாதைகளை கடந்து செல்பவர்களைப் பார்த்து பதைப்பதைத்து பார்த்திருக்கிறேன்.

என் துணைவியாரின் சொந்தக்கார பெண் குரோம்பேட்டையில் தன் தோழியுடன் ரயில் பாதையைக் கடக்கும் பொழுது திடீரென ரயில் வர… மோதியதில் உடன் வந்த தோழி பலியாக...சொந்தக்காரப் பெண் தன்னுடைய காலை முழுவதும் இழந்தார்.


அதற்கு பிறகு செய்திகளை கூர்ந்து கவனிக்கும் பொழுது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பத்திரிக்கையில் ஒரு குட்டி செய்தியாக மூலையில் வரும். இவ்வளவு நபர்கள் ரயில் பாதையை கடக்கும் பொழுது இறந்துவிட்டார்கள். அதில் அடையாளம் காணப்பட்டவர்கள் இத்தனைப் பேர். காணப்படாதவர்கள் இத்தனைப் பேர் என்ற கூடுதல் குறிப்புகளும் தருவார்கள்.

இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை அநேகமாக 90லிருந்து 100 பேர்வரைஎன பலமுறை பார்த்திருக்கிறேன். இதெல்லாம் தலைநகர், அதை ஒட்டிய பகுதிகளில் மட்டும் தான்! ஆக ஒரு நாளைக்கு ஒரு நபர் என்ற அளவில் இறக்கிறார்கள் என கணக்கு வைக்கலாம்.

இதெல்லாம் ட்ரோல், விதி, கர்மா என கடந்து போய்விட முடியுமா! சென்னை என்பது இரவும் பகலும் உற்பத்தியில் ஈடுபடுகிற தூங்காத் தலைநகரம். இதில் மக்கள் பாதுகாப்பாக ரயில் பாதைகளைக் கடக்கும் வழிகளை இத்தனை ஆண்டுகளில் உருவாக்கியிருக்க வேண்டுமா இல்லையா! அதை ரயில்வே நிர்வாகம் செய்ய தவறியிருக்கிறது.

ஒரு ரயில்வே பாதையை கடப்பதற்கு ஒரு பாலம் கட்டுகிறார்கள். அது 100 படிகள் வைத்து கட்டுகிறார்கள். லிப்ட் கிடையாது. நகரும் படிக்கட்டுகள் இருப்பதில்லை. இதை எப்படி வயதானவர்கள், குழந்தைகள் கடப்பார்கள் என்ற அக்கறையே இல்லை. கடமைக்கு பாலத்தைக் கட்டி கணக்கு காட்டுகிறார்கள். சுத்திப் போவதை விட கொஞ்சம் கவனத்துடன் கடந்துவிடலாம் என கடக்கிறார்கள். விபத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.

ரயில்வேயில் ஒரு காலகட்டம் வரை சேவை என்கிற மனப்பான்மை இருந்தது. இப்பொழுது எப்படி கல்லாக் கட்டலாம் என லாப வெறி கொண்ட முதலாளித்துவ நிறுவனம் போல மாறிவிட்டது. அதனை பல்வேறு உதாரணங்கள் உண்டு.


முன்பாவது நிலைமை பரவாயில்லை. இப்பொழுது செல்போன்களினால் கவனச்சிதறல் அதிகம் இருக்கிற காலம். ஆக, இன்னும் கவனத்துடன் வசதிகளை செய்து தந்து மனித உயிரிழப்புகளை காக்கவேண்டும். ஆனால் செய்வதில்லை.

ரயில்வேயில் வேலை செய்கிற கார்டுகளுக்கு (Guard) ஒரு தொழிற்சங்கம் உண்டு. அதன் தொழிற்சங்கத் தலைவர் “இப்படி தொடர்ச்சியான விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்கு நிறைய பரிந்துரைகளை கொடுத்திருக்கிறோம். ஆனால், ரயில்வே நிர்வாகம் இதை கண்டுகொள்வதில்லை. ஏதாவது பெரிய இழப்பு ஏற்பட்ட பிறகு தான் ஒவ்வொன்றாக கணக்கில் கொள்கிறார்கள்” என வருத்தப்பட்டு சொன்னார்.
ஆக நாம் விவாதிக்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தையும், அதைக் கட்டுப்படுத்துகிற இந்த ஒ ன் றி ய ஆட்சியையும் தான்!
அதைவிட்டுவிட்டு கண்ணேறு, கர்மா, விதி என விவாதித்துக்கொண்டிருந்தால், என்றைக்கும் இந்தப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. மனித உயிரிழப்புகளும் நிற்கப்போவதில்லை!

0 பின்னூட்டங்கள்: