> குருத்து: 2012

December 28, 2012

போராடும் மக்களை ஒடுக்க ஜெயாவின் ' போலீசு ஆட்சி' பிரகடனம்!

போராடும் மக்களை ஒடுக்க ஜெயாவின் ' போலீசு ஆட்சி' பிரகடனம்!

18 மணி நேர மின்வெட்டை எதிர்த்து சாலை மறியல் செய்தால் சிறை!
குடிகெடுக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து மறியல் செய்தால் பெண்களுக்கும் சிறை!
கல்வி கேட்டும் மாணவருக்கு சிறை!
உரிமை கேட்டால் தொழிலாளிக்கும் சிறை!
வழி நடத்தும் முன்னணியாளருக்கு குண்டர் சட்டம்!

போலீசுக்கு ஆள்காட்டி வேலை செய்ய இளைஞர் கூலிப்படை!
இணையத்தின் மூலம் அரசை விமர்ச்சித்தாலும் குண்டர் சண்டம்!

உழைக்கும் மக்களே!

ஜெயாவின் அடிமைகள், போலீசு தவிர நாம் அனைவரும் குண்டர்களா?

பாசிச ஜெயாவின் போலீசு ஆட்சியை முறியடிக்க அணிதிரள்வோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

December 27, 2012

தில்லி மாணவி பாலியல் வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!

தில்லி மாணவி மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக...

மாலை : 4.30 மணி அளவில்

அம்பேத்கர் சிலை அருகில்,
பல்லாவரம் பேருந்து நிலையம், சென்னை

அனைவரும் கலந்துகொள்ளுங்கள்!

*****

தில்லி மாணவி மீது கொடூர பாலியல் வன்முறை!
பாலியல் வெறியர்களை தூக்கில் போடு!

* தனியார்மய - தாராளமய கொள்கை பரப்பும் பாலியல் வக்கிரங்களே
பெண்கள் மீதான தாக்குதல் பெருகுவதற்கு காரணம்!

* பாலியல் வெறியை பரப்பும் சினிமாக்கள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒழித்துக்கட்டப் போராடுவோம்!

* அரசு திட்டமிட்டே பரப்பும் நுகர்வுவெறி,
போதை சீரழிவுகளை வேரறுக்க அணிதிரள்வோம்!

- பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை

December 25, 2012

தில்லி மாணவி மீது கொடூர பாலியல் வன்முறை!


* தனியார்மய - தாராளமய கொள்கை பரப்பும் பாலியல் வக்கிரங்களே
பெண்கள் மீதான தாக்குதல் பெருகுவதற்கு காரணம்!

* பாலியல் வெறியை பரப்பும் சினிமாக்கள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒழித்துக்கட்டப் போராடுவோம்!

* அரசு திட்டமிட்டே பரப்பும் நுகர்வுவெறி,
போதை சீரழிவுகளை வேரறுக்க அணிதிரள்வோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

December 24, 2012

டிசம்பர் 25 - கீழ் வெண்மணி நினைவு நாள்!

தலித் மக்கள் மீது பெருகி வரும்
ஆதிக்க சாதிவெறித் தாக்குதலை முறியடிப்போம்!


தமிழக அரசே!

* தருமபுரி தாக்குதலைத் தொடர்ந்து அடுத்து அடுத்து அரங்கேறுகின்றன
  சாதி வெறிக்கொலைகள்! சாதிவெறி கிரிமினல்களை பாதுகாக்காதே!

*  அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!

*  பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு இழப்பீடு உடனே வழங்கு!

*  அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்!

உழைக்கும் மக்களே!

*  சாதிக்கட்சிகள் - சங்கங்களை விட்டு வெளியெறுங்கள்!
   உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்!

*  சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்போம்!

* புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!


மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

போலீசின் பொய் வழக்குகளையும், அடக்குமுறைகளையும் முறியடிப்போம்!

December 23, 2012

தருமபுரி : தலித் மக்கள் மீதான தாக்குதல்! - உண்மை அறியும் குழு அறிக்கை!

//"வீட்டுக்குள்ளாற  ரூம்ல ஒளிஞ்சிருந்தோங்க.
கொழந்தைங்க்கல்லாம்
ரெண்டுலேருந்து பத்து வயசுக்குள்ளாறதான்.
தீய கொளுத்திட்டுப் போட்டுடுப் போயிட்டாங்க.

ஒரே பொகைங்க. மூச்சு வேற அடச்சிகிச்சு.
கொழந்தை அணு தண்ணி...தண்ணின்னு கேட்டு
மயங்கிடுச்சு.  எங்களூக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல.
கத்தவும் பயமா இருந்துச்சு.

வேற வழியில்லாம மத்த குழந்தைங்கள
மூத்தரம் பேயச் சொல்லி
அதத்தாங்க குடிக்க வச்சு உசுர காப்பத்துனோம்."//

- தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி, செங்கல்மேடு ஆகிய தலித் மக்கள் வாழும் கிராமங்கள் மீது நவம்பர் 7, 2012 அன்று ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதல் குறித்து, மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு அமைத்த உண்மை அறியும் குழு, நவம்பர் 8,9,10,11, 24 ஆகிய தினங்களில் அக்கிராமங்களுக்குச் சென்று மக்களிடமும் அதிகாரிகளிடமும் நேரடியாக விசாரித்து வெளியிடும் அறிக்கை .


வெளியீடு :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

நன்கொடை ரூ. 20/-

31 பக்கங்கள்.

கிடைக்குமிடம் :

அலுவலகம் :

702/5, ஜங்சன் ரோடு,
விருத்தாச்சலம்,
கடலூர் மாவட்டம் - 606 001
9443260164

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
பேச : 044-28412367

December 15, 2012

மாதவிடாய் - ஆவணப்படம்!

என் 20 வயதில் அலுவலகத்தில் உடன் வேலை செய்த பெண், வயிற்றைப் பிடித்து கதறிய பொழுது, பயந்தே போயிருக்கிறேன்.

சாதாரண நாட்களில் சாந்தமாய் இருப்பவர்கள் இந்த 'மூன்று நாட்களில்,  எரிச்சலும், கோபமாய் கடித்து குதறுபவராக 'வேறு ஒரு நபராய்' சிலரை பார்த்திருக்கிறேன்.

'மாதவிடாய்'  என்பது மனித இனத்தை மறு உற்பத்தி செய்வதற்கான ஒரு சுழற்சி முறை. ஒரு அருமையான விஷயம். குறித்த அறிவியல்பூர்வமான விளக்கம் அறிந்த பிறகு,  'தீட்டு'  கழிப்பதற்காக நடத்தப்படும் சடங்குகளுக்கு செல்வதை நிறுத்தியிருக்கிறேன்.

இந்த சடங்கில் கலந்து கொள்ளும் ஆண்கள்/பெண்கள் பலரும் தங்கள் குலசாமிகளுக்கு ஆகாது என சாப்பிடாமல் செல்வதை குறித்து, சாமிகள்/ஆசாமிகள் குறித்த பல கேள்விகள் மனதில் எழுந்திருக்கிறது.

'மாதவிடாய்' குறித்த ஆவணப்படம் பெரியார் திடலில் நேற்று திரையிட்டார்கள்.  போயிருந்தேன்.

****
இரு மாணவிகளிடம் 'மாதவிடாய்' என்றால் என்ன?' கேள்வி கேட்கப்படுகிறது.  கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கூச்சத்தோடு சங்கடமாய் நெளிகிறார்கள்.  படம் துவங்குகிறது.

நகரங்களில், கிராமங்களில் மாதவிடாயின் பொழுது உடல்ரீதியான, உளரீதியான, சமூக ரீதியான பாதிப்புகளைப் பற்றி பல வர்க்கப் பெண்களும், பல துறை பெண்களும் தங்கள் அனுபவங்களை பகிர்கிறார்கள்.

மாதவிடாய் என்றால் என்ன? என்பதற்கு அறிவியல்பூர்வமான விளக்கம் படத்தில் தரப்படுகிறது.

இந்து, முஸ்லீம், கிறித்துவ பெண்கள் 'தீட்டு' என தள்ளி வைத்து பார்க்கும் நம்பிக்கைகளை, பழக்கவழக்கங்களை பகிர்கிறார்கள்.

நாப்கினில்  உள்ள வகைகள் என்ன?  அதில் உள்ள வசதிகள் என்ன? என்பதையும் விளக்குகிறார்கள்.

அரசு சமீப காலங்களில் பள்ளிகளில்  நாப்கின் தரும் இயந்திரத்தையும், எரிக்கும் இயந்திரத்தையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

'மாதவிடாய்' குறித்த ஒரு தெளிவையும், சிரமப்படும் பெண்களின் மீது அக்கறை கொள்ளுங்கள் என்பதையும் முன்வைக்கிறது படம்.

****

படம் நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு பெண் பருவம் எய்துவிட்டால், கவனமாய் 'பாதுகாக்கும்' சமூகத்தில் கழிப்பறை, தண்ணீர் வசதி இல்லாத பல பள்ளிகளில் இடைநிற்றல்கள் அதிகமாக இருக்கிறது.  படத்தில் கிராமப்புற பள்ளியைச் சேர்ந்த ஒருவர் இந்த தகவலை சொல்கிறார்.

பா.ஜ.க. தமிழிசை பள்ளியில் இயந்திரம் வைத்தற்காக ஜெ.வை மனம் உவந்து பாராட்டுகிறார்.  ஜெ. 91 லிருந்து கடந்த 21 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார்.  ஒரு பெண்ணாகவும் இருந்து கொண்டு ஏன் இத்தனை தாமதமாய் செய்தார்? இன்னும் ஏன் பல பள்ளிகளில் இந்த வசதியை ஏற்படுத்தி தரவில்லை? ஆட்சியாளர்கள் எப்பொழுதும் ஆட்சியாளர்களாக நடந்துகொள்கிறார்கள்.

தலைமைச் செயலகம் துவங்கி அரசு மருத்துவமனைகள், பொதுக்கழிப்பறைகள் எல்லாம் ஏன் படுகேவலமாக இருக்கிறது?

'சுதந்திரம் பெற்று' 65 ஆண்டுகள் காலமாகி, இந்த நாட்டில் சரிபாதி பெண்கள் மாதந்தோறும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனையை மாநில அரசும், மத்திய அரசும் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன?

சென்னையில் மதுரவாயில் பகுதிகள் உழைக்கும் மக்களை திரட்டி ஒரு பொதுக்கழிப்பறை கட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், பெண்கள் விடுதலை முன்னணியும் சில ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. குடிமக்களின் மீது இந்த அரசுக்கு அத்தனை அக்கறை!

*****

சமூக எதார்த்தத்தை படமாக முன்வைத்திருக்கிறார். மற்றபடி அரசியல் அம்சங்கள் படத்தின் இடையில் ஒளிந்திருக்கின்றன. பார்க்கும் நாம் தாம் அதை வெளிக்கொண்டுவரவேண்டும். பெண்கள் பிரச்சனை குறித்த ஆவணப்படங்கள், குறும்படங்கள் மிககுறைவு.  இந்த சூழலில் இந்த படம் அவசியமானது.

மாச மாசம் ரத்தப் போக்கு ஏலே லம்படி  ஏலோ,
மாதவிடாய் ஆனதுவே  ஏலே லம்படி  ஏலோ,
தீட்டு தீட்டு என்று சொல்லி ஏலே லம்படி  ஏலோ,
ஒதுக்கி வச்சி ஒடுக்குனாங்க ஏலே லம்படி  ஏலோ,

வயசுக்கு வந்துட்டாலே ஏலே லம்படி  ஏலோ,
வீட்டுக்குள்ளே அடைக்கணுமா ஏலே லம்படி  ஏலோ,
மாச தீட்டு ரத்தம் தானே ஏலே லம்படி  ஏலோ,
கரு வளர உதவும் தானே ஏலே லம்படி  ஏலோ,

மாச மாசம் ரத்தப் போக்கு ஏலே லம்படி  ஏலோ,
மாதவிடாய் ஆனதுவே  ஏலே லம்படி  ஏலோ,

- என படத்தில் சாலைச்செல்வம் பாடும் ஒருபாடல் படம் முழுவதும் வருகிறது. அருமையான பாடல்.  இசையும், ஒளிப்பதிவும், எடிட்டிங் எல்லாம் உறுத்தாமல் படத்திற்கு உதவி செய்திருக்கின்றன. படக்குழுவினருக்கு பாராட்டுகள்.

பார்க்கவேண்டிய, பகிர்ந்துகொள்ளவேண்டிய படம்.

****
'மாதவிடாய்'  - ஆவணப்படம்!

இது ஆண்களுக்கான பெண்களின் படம்!

படம் : 38 நிமிடங்கள்

இயக்கம் : கீதா இளங்கோவன்

விலை ரூ. 100

December 12, 2012

இது கூட தெரியலையே?

ஒன்றாம் வகுப்பு படிக்கும் இலக்கியாவுடன், பள்ளி செல்லும் வழியில்...

"படத்தில நடிக்கிறவங்க பேரை நான் சொல்றேன்பா!"

"சொல்லு!" என்றேன்.

"ரஜினி, ரஜினிகாந்த், விஜய், விஜய்காந்த், ஒல்லியா இருப்பாங்களே தனுஷ், சூர்யா".

"இப்ப லேடீஸ் ‍‍- திரிஷா (உடன் படிக்கும் பெண்ணின் பெயரென்பதால்)

(மேற்கொண்டு தெரியவில்லை) அதனால் ஒவ்வொரு போஸ்டராக பார்த்துக்கொண்டே....

"சிவாஜி படத்தில?"

"ஸ்ரேயா" என்றேன்.

"யானை படத்தில் (கும்கி)?"

"தெரியல" என்றேன்.

"மறந்துருவாங்களே" அந்த படத்தில்?" (நடுவுல கொஞ்சம் பக்கத்தை!)

"???????"

"ஈயிடா..ஈயிடா (பாட்டை பாடிக்காட்டி) படத்தில்?

"??????" (தீவிரமாக மூளையை கசக்கினாலும் நினைவுக்கு வரவில்லை)

"10 நிமிசம் டைம் தர்றேன். அதுக்குள்ளே சொல்லிறனும்!"

10 நொடிகளில், "சொல்லுப்பா"

"ஞாபம் வரலையேப்பா! கொஞ்சம் டைம் கொடு! நாளைக்கு சொல்றேன்!"

"என்னப்பா இதுகூட தெரியல!" என நொந்து கொண்டாள். அடுத்த நொடி, பட்டாம் பூச்சிகளை பார்த்து நிறங்களை சொல்வதில் கவனம் திருப்பினாள்.

ஏதோதோ வேலைகளில் மூழ்கி, இப்படி 'முக்கிய'மான கதாநாயகிகளின் பெயரை தெரியாமல் இருந்துவிட்டேனே! :(

December 11, 2012

பால் வெள்ளைக் காகிதம்!

காலைப் பனிபோல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமானவளாக்கும்' என்று அலட்டிக்கொண்டது ‍ 'நான் பிறக்கும் பொழுதுதே தூய்மையாகப் பிறந்தேன்; காலம் முழுவதும் நான் இவ்வாறே தூய்மையாக இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலனாக்கிலும் பரவாயில்லை. பொறுத்துக்கொள்வேன். ஆனால் கறுமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கப்பட்டேன்.  தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில் கூட வரமுடியாது.'

இந்தப் பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுக்கட்டிக்கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன.  அவையும், அந்த காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும் கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்!

‍கலீல் ஜிப்ரான், மிட்டாய் கதைகளிலிருந்து....

December 5, 2012

ரயிலில் இனி அடையாள அட்டை அவசியம்!

இனி ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட்களில் பயணிப்பவர்கள் அனைவரும் அடையாள வைத்திருக்கவேண்டும். இல்லாமல் பயணித்தால், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர் என முடிவு செய்து இரண்டு மடங்கு வசூலிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்து இப்பொழுது நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். - ‍ செய்தி

****


சரியான நபர்கள் தான் பயணிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த அறிவிப்பை செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்த அறிவிப்பு மூலம் அடையாள அட்டை பெரும்பாலும் வைத்திருக்காத உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பலரையும் ரயிலில் ஏறவிடாமல் தடுத்திருக்கிறார்கள்.

என்னுடைய துணைவியார் டிகிரி முடித்தவர். சென்னையில் ஒரு நல்ல நிறுவனத்தில் பொறுப்பான வேலையில் பணிபுரிகிறார். ஸ்கூட்டி ஓட்டுகிறார்.. இப்பொழுது அவரே ரயிலில் ஏறமுடியாது.

காரணம் வாக்காளர் அட்டை ஒரிஜினல் தொலைந்து போய், ஜெராக்ஸ் வைத்திருக்கிறார். அவருடைய கொள்கை முடிவுப்படி தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போய், பல ஆண்டுகளாக ஆனதால், வாக்களிக்கப்போவதில்லை. அதனால், தேவையில்லை என முடிவு செய்து, புதிய அட்டைக்காக விண்ணப்பிக்கவும் இல்லை.

அரசுக்கு வரி கட்டும் அளவுக்கு சம்பாதிக்கவில்லை. பான்கார்டையாவது (PAN Card) ஆசைக்காகவும், பயணங்களுக்கும் பயன்படும் என‌ வாங்கலாம் என்றால், அதிலும் சிக்கல். வாங்குவதற்கு ஒரு அடையாள சான்றிதழும், முகவரி சான்றிதழும் வேண்டும். இருக்கிற ஒரே அடையாள சான்றிதழ் வாக்காளர் அட்டை தான். ஒரிஜினலே தெளிவாக இருக்காது. ஜெராக்ஸ் சுத்தம். அதை வைத்து ஜெராக்ஸ் எடுத்தால், ஒரே இருட்டாக தான் இருக்கிறது. முகத்தை காணோம். குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என்ற முறையில் என்னுடைய புகைப்படம் தான் இருக்கிறது.

சரி வேறு வாய்ப்பு இருக்கிறதா என தேடிப்பார்த்தால், பச்சை மையில் கையெழுத்திடுகிற ஒருவர் 'இவர் எனக்கு தெரிந்தவர்' என கையெழுத்திடவேண்டும். இதுநாள் வரை அப்படித்தான் இருந்தது. கடந்த மூன்று மாதங்களாக பச்சை மையில் பலரும் கையெழுத்திட்டு ஏமாத்திவிட்டார்கள் போலிருக்கிறது! அதனால் கையெழுத்திடுகிறவர் அவருடைய அடையாள அட்டையை ஜெராக்ஸ் எடுத்துதரவேண்டும் என்று நிபந்தனை விதித்துவிட்டார்கள்.

வசிக்கும் பகுதியில் கையெழுத்து இடுகிற மருத்துவர் ஜெராக்ஸ் தர மறுக்கிறார். "வேணும்னா, என்னோட ஓட்டு உரிமம் ஜெராக்ஸ் தருகிறேன்" என காமெடி பண்ணுகிறார்.

வண்டி ஓட்டியாவது ஓட்டுநர் உரிமம் பெற்றுவிடலாம் என நினைத்தால், எட்டு போடும்பொழுது, ஒரே ஒருமுறை கால் கீழே வைத்ததற்காக தர மறுக்கிறார்கள்.இவரை விட‌ மோசமாக ஓட்டுகிற ஆள்களுக்கெல்லாம் ஓட்டுநர் உரிமம் தந்துவிட்டதால், கடுப்பில் இருக்கிறார். இனி அடுத்தமுறை ஒருமுறை கால் வைக்காமல் ஓட்டவேண்டும். அப்பொழுது தான் ரயிலில் ஏற வாய்ப்பு இருக்கிறது.

ரயிலில் டிக்கெட் கிடைப்பதே அரிதாக இருக்கும் பொழுது, கிடைத்தாலும் என் துணைவியார் ரயிலில் ஏறமுடியாத நிலை தான்.

நம் நாட்டில் ஒரிஜினலை எடுத்துக்கொண்டு பயணிப்பது என்பது நிறைய ரிஸ்க். தொலைத்துவிட்டால், அதை வாங்குவதற்குள் நம் ஆயுளுக்கும் வருந்துகிற அளவுக்கு செய்துவிடுவார்கள். நிலைமை இவ்வாறு இருக்கையில் ஒரிஜினலை வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்ற அறிவிப்பு தவறு!

இந்த அறிவிப்பில் ஒரு சந்தேகம். ஒரு நபர் தனியாக போனால், அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டை இருக்கும் ஒரு நபரோடு ஒரே டிக்கெட்டில் இருக்கும் மற்ற நபர்களுக்கு அடையாள அட்டை தேவையா? இல்லையா?

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

November 30, 2012

வாஜ்பேயி சுதந்திர போராட்ட தியாகியா?

//குஜ்ராலின் மறைவு இந்திய சரித்திரத்தின் ஒரு முக்கியமான காலகட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய கடைசி தேசியத் தலைவர் ஐ.கே. குஜ்ராலாகத்தான் இருப்பார். //

குஜராலின் மறைவை ஒட்டி, தினமணி வைத்தியநாதன் இன்றைய தினமணியில் தலையங்கத்தில் மேற்படி எழுதியிருக்கிறார். இப்படி எழுதியதன் மூலம் வாஜ்பேயி "சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்" என்ற ஆர்.எஸ்.எஸ். அம்பிகளின் பொய்யை வைத்தியநாதன் மறுக்கிறார். ஒருவேளை வாஜ்பேயி செத்துப்போய்விட்டாரோ என தேடிப்பார்த்தேன். உயிருடன் தான் இருக்கிறார்.


வரலாறு என்னவென்றால், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நடந்த சமயத்தில், ஒரு கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய கொடியை ஏற்றினார்கள். இந்த விசயம் கேள்விப்பட்டு பிரிட்டிஷ் காவல்துறை சுற்றி வளைத்த பொழுது, வாஜ்பேயி கைதானார். அதுவரை சரி! அதற்கு பிறகு தான் டிவிஸ்ட். "கொடி ஏற்றியவர்களை காட்டிக்கொடு! உன்னை விட்டுவிடுகிறோம்" என்றதும், காட்டிக்கொடுத்துவிட்டு, பாதுகாப்பாய் வீட்டுக்கு போனவர் தான் இந்த வாஜ்பேயி.


இது வரலாறு. சில வருடங்களுக்கு முன்பு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வாஜ்பேய்க்கு சுதந்திர போராட்ட தியாகி என பில்டப் கொடுத்து பேசினார்கள். அப்பொழுது தான் வாஜ்பேயின் துரோக வரலாறு வெளியே வந்தது!

November 21, 2012

கசாப்பிற்கான செலவு!

கசாப்பிற்காக பாதுகாப்பான சிறை கட்டியது, இந்தோ-திபேத் படையினர் 250 பேரை தேமே என பாதுகாப்புக்காக நிறுத்தியது என மத்திய அரசும், மாநில அரசும் செலவு செய்த தொகை ரூ. 30 கோடி!

- போலி என்கவுன்டர் புகழ் 'காக்க.. காக்க' சூர்யா போல பேசுகிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 'நமது' பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவிற்காவும், பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே சிந்தித்து செயல்படுகிறார். அவருக்காக செய்யப்படும் அனைத்து செலவுகளையும் இந்தியா தான் வெட்டியாக செலவு செய்கிறது! மக்கள் தலையில் தான் வரியாக சுமத்தப்படுகிறது!

# கணக்குப்பார்த்தா எல்லாத்தையும் கணக்கு பார்க்கனும்!

//மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் மன்மோகன்சிங் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 2001 மற்றும் 2007 ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். - விக்கிபீடியா//

November 6, 2012

இன்று புரட்சி நாள்னு சொல்லு!

ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் பெண்ணுடன் பள்ளி செல்லும் வழியில்..

"புது டிரஸ் போட்டா பிறந்தநாள்னு நினைப்பாங்கப்பா!"

"பிறந்தநாள் கிடையாது!  புரட்சி நாள்னு சொல்லு! எல்லோரும் ஸ்வீட் சாப்பிட்டு, கொண்டாட வேண்டிய நாளுன்னு உன் பிரண்ட்ஸ்கிட்ட‌ சொல்லு!"

போகிற வழியில் ஸ்வீட் கடையை பார்த்ததும், லட்டு சாப்பிடுகிற 'பீம்' நினைவுக்கு வந்து...

"எல்லோருக்கும் லட்டு கொடுக்கலாமா!"

"நிறைய செலவாகும் பாப்பா! அவ்வளவு வசதி கிடையாது. எல்லோருக்கும் சாக்லெட் கொடுக்கலாம்!"

சாக்லெட் வாங்கி, பள்ளி ஆசிரியரிடம் ரசிய புரட்சி தினத்தை சுருக்கமாய் விளக்கி, சக மாணவர்களுக்கு தரச்சொல்லி பேசும் பொழுது, சமீப காலங்களில் குழந்தைகளுக்கு சாக்லெட் தரக்கூடாது என பள்ளி விதிமுறை இருக்கிறது. ஏதாவது சாப்பிட்டு விட்டு தொந்தரவு ஆனால், சிக்கலாகிவிடும் என்பதால் இந்த விதிமுறை என்றார்.  பரவாயில்லை என வாழ்த்துக்களை மட்டும் பகிர்ந்துவிட்டு விடைபெற்றேன்.

October 22, 2012

மின்வெட்டைத் தீர்க்க அரசாலும், ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கும் முதல் கட்டத் தீர்வுகளில் உள்ள உண்மை!

“தமிழகத்தின் மின்வெட்டிற்கான காரணமும் தீர்வும்” கட்டுரையை 9-10-2012 இல் கீற்று இணைய தளம் மற்றும் முகநூலில் வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையை ஆதாரமாகக் காட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி 15-10-2012 அன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மின்வெட்டைக் குறைப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைக்கொண்ட 10 பேர் குழுவினை 17-10-2012 அன்று தமிழக அரசு அமைத்தது.

600 மெகாவாட் திறன்கொண்ட புதிய மேட்டுர் அனல் மின் அலகும், பழுதாகி பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த வழுதூர் எரிவாயு மின் நிலையங்களும் தம் உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சென்னையில் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை இரண்டு மணி நேரமாகக் கூட்டி, உபரி மின்சாரத்தை மாநிலத்தின் பிற பாகங்களுக்கு 18-10-2012 தேதியில் இருந்து பகிர்ந்தளிக்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

இந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் நமக்கு மேட்டூர் புதிய மின் அலகில் இருந்து 600 மெகாவாட்டும், வழுதூர் 1 மற்றும் 2 அலகுகளில் இருந்து 187 மெகாவாட்டும், சென்னையில் இருந்து பிரித்தளிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 250 மெகாவாட்டும், ஆக மொத்தம் சுமார் 1037 மெகாவாட் கிடைக்க வேண்டும். அதாவது மாநிலத்தின் பற்றாக்குயான 4000 மெகாவாட்டில் கால் பகுதி இதன் மூலம் சரியாகியிருக்க வேண்டும்.

ஆனால் உண்மை நிலை இதுதானா?

இல்லை என்பதையே நமது ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேட்டூர் புதிய அலகானது 608 மெகாவாட் உற்பத்தியை 12-10-2012 அன்று எட்டியது. ஆனால் அதன் பின் அதனால் அந்த அளவு உற்பத்தியை செய்ய இயலவில்லை. அடுத்து வந்த நாட்களில் 300 - 350 மெகாவாட் மின்சாரத்தை சில நாட்களில் உற்பத்தி செய்வதாகவும், பிற நாட்களில் உற்பத்தி அடியோடு நிறுத்தப்படுவதாகவும் நிலையற்ற நிலையிலேயே அது இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை எப்பொழுது சரியாகும் என்பதை உறுதிப் படுத்தமுடியவில்லை.

வழுதூர் எரிவாயு மின் அலகுகளின் பிரச்சினை வேறாக உள்ளது. 2012 ஜூன் மாதம் மோசமாகப் பழுதடைந்த 95 மெகாவாட் திறன் கொண்ட வழுதூர் 1 ஆம் அலகினை சரி செய்வதற்குத் தேவைப்பட்ட புதிய உபரி பாகங்களை தமிழக அரசு வாங்கவில்லை. மாறாக, பிப்ரவரி 2012 இல் இருந்து பழுதடைந்து நிறுத்தபட்டிருந்த 101 மெகாவாட் திறனுடைய குத்தாலம் எரிவாயு மின் நிலையத்தின் ரோட்டர் மற்றும் கியர் பாக்ஸ் ஆகியவற்றை அது பிரித்தெடுத்தது. இவற்றைக் கொண்டு வழுதூர் 1 இன் பிரச்சினைகளை அது சரி செய்தது.

101 மெகாவாட் திறனுடய குத்தாலம் எரி வாயு மின் நிலையத்தினை சரிசெய்வதை விட்டுவிட்டு வழுதூர் 1 ஆம் அலகின் பழுதினை நீக்குவதற்குத் தேவையான உபரி பாகங்களைக் கொடுக்கும் ஒரு இடமாக அதனை தமிழக அரசு மாற்றியது எதற்காக?

இவ்வாறு குத்தாலம் மின் நிலையத்தின் உபரி பாகங்களைக் கொண்டு பழுது நீக்கப்பட்ட வழுதூர் 1 ஆம் அலகு இன்று உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து 95 மெகாவாட் கிடைக்கக் கூடும்.

வழுதூர் 2 ஆம் அலகின் கதை என்ன?

தமிழக அரசின் எரிவாயு நிலையங்களிலேயே மிக அன்மையில் நிறுவப்பட்ட மின் உற்பத்தி அலகுதான் இது. 17-2-2009 ஆம் தேதியன்று உற்பத்தியைத் தொடங்கிய இந்த 92 மெகாவாட் திறன்கொண்ட மின் அலகானது 9-1-2010 ஆம் தேதியன்று மிக மோசமாகப் பழுதடைந்தது. அதாவது அதன் கியாரண்டி காலமான ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பழுதடைந்து போனது. அதனைப் பழுது நீக்க 16 மாத காலம் தேவைப்பட்டது. மீண்டும் 7-5-2011 ஆம் தேதியன்றுதான் அது தன் உற்பத்தியைத் தொடங்கியது. என்றாலும் கூட, அதன் பழுது முற்றாக நீக்கப்படவில்லை. பழுது நீக்கப்பட்ட பிறகும் அதன் ரோட்டர் கருவியானது மிக மோசமான அதிர்வினை வெளிப்படுத்துவதால் 92 மெகாவாட்டுக்கு பதிலாக 68 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே இந்த மின் அலகால் உற்பத்தி செய்யும் சூழ்நிலை உருவானது. இவ்வாறு குறைந்த திறனில் இயக்கப்பட்டு வந்த இந்த அலகானது அடுத்து வந்த ஓராண்டில் சுமார் 15 முறை பிற பழுதுகளால் (ட்ரிப்பிங்) பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. கடைசியில், ஒரு குறிப்பிட்ட உபரி பாகம் இல்லாத காரணத்தால் ஜூன் 2012 இல் இருந்து 45 நாட்களுக்கு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்றும் அது 92 மெகாவாட்டுக்குப் பதிலாக 68 மெகாவாட்டைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் இந்த அவலம்?

மின் வாரியத்தின் நான்கு எரிவாயு நிலையங்களில் மூன்று நிலையங்கள் – குத்தாலம், கோவில்களப்பால் மற்றும் வழுதூர் 1 – பாரத மிகு மின் நிலையத்தின் (BHEL) எந்திரங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனமே இந்த நிலையங்களை நிறுவும் ஒப்பந்ததாரராகவும் இருந்தது.

ஆனால் வழுதூர் 2 ஆம் நிலையத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பி.ஜி.ஆர் (B.G.Raghupathy) என்ற தனியார் நிறுவனத்திற்கு 2006 ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கியது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த நிறுவனத்திற்கு இதற்கு முன் மின் நிலையங்களைக் கட்டிய அனுபவம் ஏதும் இல்லை என்பதுதான். இதுவே அந்த நிறுவனம் மேற்கொண்ட முதல் மின் நிலைய ஒப்பந்தமாகும்.

இந்த மின் நிலையத்தை நிறுவுவதற்காக அது இத்தாலி நாட்டின் ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களைத் தருவித்தது. தமிழ்நாடு மின்வாரியத்தின் மற்ற மின் நிலையங்களின் ஒப்பந்தகார நிறுவனமான பாரத மிகுமின் நிலையம் போல பி.ஜி.ஆர் நிறுவனமானது எந்திர வடிவமைப்பிலோ, எந்திர உற்பத்தியிலோ ஈடுபட்டதில்லை. வழுதூர் 2 ஆம் மின் அலகினை அமைப்பதன் மூலம் அது மின்நிலையம் ஒன்றை எவ்வாறு நிறுவுவது என்பதற்கான பயிற்சியையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டது என்றுதான் சொல்ல முடியும். ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களை அதனால் சரியாக நிறுவத் தெரியவில்லை. இதன் காரணமாகமே ஒப்பந்த காலமான 21 மாத காலத்திற்குள் இந்த நிலையத்தினை அதனால் நிறுவ இயலவில்லை. இதற்காக அது கூடுதலாக 10 மாதங்களை எடுத்துக் கொண்டது. இதற்குப் பிறகும் கூட மின் நிலையத்தின் பணிகளை அது அரைகுறையாகவே முடித்துக் கொடுத்தது.

ஒப்பந்த காலமாகிய ஓராண்டு காலம் வரை நிலையத்தில் ஏற்படும் பழுதுகளுக்கு ஒப்பந்தகார நிறுவனமே – அதாவது பி.ஜி.ஆர் நிறுவனமே - பொறுப்பாகும். ஆனால் 9-1-2010 இல் ஏற்பட்ட பழுதிற்கும், அதன்பிறகு 16 மாத காலம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பிற்கும் பி.ஜி.ஆர். நிறுவனத்தைத் தமிழக அரசோ, தமிழ்நாடு மின் வாரியமோ பொறுப்பாக்கியதாகத் தெரியவில்லை. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 43 கோடி ரூபாயாகும்.

மேலும், மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தியையே இந்த நிலையம் இன்றும் தந்து கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் யாரைப் பொறுப்பாளியாக்குவது?

இதனை விட மிகப்பெரிய சோகம் ஒன்றும் இருக்கிறது. வழுதூர் 2 ஆம் மின் நிலையத்தைச் சரியாக அமைத்துக் கொடுக்கத் தெரியாத இதே பி.ஜி.ஆர் நிறுவனத்திற்குத்தான் இன்று நாம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மேட்டூர் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்தத்தை தமிழக அரசு கொடுத்த்து என்பதுதான் அந்தச் சோகம்.

மின்வாரியத்தின் அனைத்து மின் நிலையங்களும் பாரத மிகுமின் நிலையத்தின் எத்திரங்களையே உபயோகின்றன. அதன் புதிய மின் நிலையங்களும் இந்த மரபைத்தான் பின்பற்றி வருகின்றன.

ஆனால், பி.ஜி.ஆர் நிறுவனத்தால் கட்டப்பட்டுவரும் மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்தில் சீன நாட்டின் Tang Fang நிறுவனத்தின் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையம் 25-9-2011 இல் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அதனால் நிலையான உற்பத்தியைத் தொடங்க இயலவில்லை.

அனல் மின் நிலையங்களுக்கான சீன நாட்டின் எந்திரங்கள் தரம் குறைவானவை என்பதால் அவற்றைக் கொள்முதல் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நடுவண் மின் துறை அமைச்சகம் கடந்த காலத்தில் அறிவுறுத்தியிருந்ததை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்திலும் வழுதூர் 2 ஆம் நிலையத்தைப் போலவே கட்டுப்படுத்த இயலாத அளவு அதிர்வுகள் இருப்பதாகத் தெரிகிறது. வழுதூர் 2 ஆம் நிலையம் போலவே மேட்டூர் புதிய மின் நிலையம் எதிர்காலத்தில் நோயுற்ற யானையாக இருந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

வழுதூர் 2 ஆம் நிலையத்தின் பழுதுகளுக்குப் பொறுப்பேற்க வைக்கப்படாத பி.ஜி.ஆர். நிறுவனம் எதிர்காலத்தில் மேட்டூர் புதிய மின் நிலையத்தில் ஏற்படும் இழப்புகளுக்கும் பொறுப்பேற்க வைக்கப்படுமா என்ற அச்சம் எழுகிறது. உற்பத்தியைத் துவங்குவதற்கு ஏற்பட்டுள்ள கால தாமதத்திற்கு இந்நிறுவனம் தோராயமாக 1000 கோடி ரூபாய் அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றையும் விட மின் உற்பத்தி இழப்பானது இன்று கடுமையான மின் வெட்டிற்கு மாநிலத்தைத் தள்ளியுள்ளது. இது வழுதூர் 2 ஐப் போன்று 6 மடங்கு உற்பத்தியைக் கொண்ட மின் நிலையமாதலால், இதில் ஏற்படும் பழுதுகள் மாநிலத்தின் மின்சார வினியோகத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

ஆக, அரசும், செய்தி ஊடகங்களும் சொல்வதைப் போல இன்று நடைமுறையில் உள்ள மின் தட்டுப்பாட்டில் பெரிய மாற்றங்களேதும் உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை.

அவ்வாறு ஏற்பட வேண்டுமென்றால்:

• பி.ஜி.ஆர் நிறுவனத்திடம் கொண்டிருக்கும் மென்மையான அணுகு முறையினை அரசு கைவிட வேண்டும். மக்களின் நலன் கருதி ஒப்பந்தகாரப் பொறுப்புகள் அனைத்தையும் அந்த நிறுவனம் உடனடியாக செயல்படுத்தித் தர நிர்ப்பந்திக்க வேண்டும்.

• குத்தாலம் மற்றும் வழுதூர் மின் நிலையங்களில் நிகழும் பழுதுகள் யாவும் நீண்டகாலம் நீக்கப்படாமல் இருப்பது இந்நிலையங்களைச் சுற்றி உள்ள 8 தனியார் எரிவாயு மின் நிலையங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதற்காகத்தானோ என்ற
சந்தேகம் உள்ளது . அரசு மின் நிலையங்கள் பழுதடைந்து கிடப்பதால் அவற்றிற்குக் கிடைக்க வேண்டிய அரிதான இயற்கை எரிவாயுவினை இந்தத் தனியார் மின் நிலையங்கள் தங்குதடையின்றி பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அருகில் தனியார் மின் நிலையங்கள் ஏதும் இல்லாத கோவில்களப்பால் அரசு எரிவாயு மின் நிலையம் இதுபோன்ற பழுதுகளை 2004 ஆம் ஆண்டிலிருந்தே சந்திக்கவில்லை என்பது இந்த சந்தேகத்தினை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.

• ஆந்திர மாநிலத்தின் சிம்மத்திரி அனல் மின் நிலைத்தில் இருந்து இன்றுவரை நமக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தைக் கேட்காமல் இருக்கும் நிலைப்பாட்டினை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும். உடனடியாக நமக்குக் கிடைக்க வேண்டிய இந்தப் பங்கினை நாம் கேட்டுப் பெற வேண்டும்.

• குத்தாலம் எரிவாயு மின் நிலையத்திலிருந்து வழுதூர் 1 அலகிற்குப் பிரித்து எடுத்துச் செல்லப்பட்ட எந்திரங்களுக்குப் பதிலாக பாரத மிகுமின் நிலையத்திலிருந்து உடனடியாகப் புதிய எந்திரங்களை வாங்கிப் பொறுத்தி இயக்க வேண்டும்.

அன்புடன்
கோவை. சா.காந்தி,
19 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111

நன்றி : கீற்று

தொடர்புடைய சுட்டிகள் : 

தமிழக மின்சார பிரச்சனைக்கான உண்மை காரணமும், அதற்கான தீர்வும்! - கோவை. சா.காந்தி - கீற்று

October 15, 2012

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!

  
தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.

குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.

2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும்.

வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்.

இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.

சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.
ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.

ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல்,
கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது.
தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.

கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான்.  மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.

இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22% ஐ கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது.

எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.
…………..
கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும்.
“மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.

2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.

அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.

அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.
பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:

• சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.

• திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.
சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது.

அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:

• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.
அன்புடன்

கோவை. சா.காந்தி,
9 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111

October 10, 2012

கூடங்குளம் மக்களின் அளப்பரிய தியாகம்! உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்க!

செப். 9, 10 அணு உலை முற்றுகையின் பொழுது, 10ந்தேதி கண்ணீர்புகை குண்டு, தடியடி என அவிழ்த்துவிடப்பட்ட வெறிநாய்களைப் போல, காவல்துறை மக்கள் மீது பாய்ந்தது.  வைராவிக்கிணறு, இடிந்தகரை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.  இடிந்தகரை போராட்ட மேடையில் மாதா சிலையை உடைத்தார்கள்.  பேனர்களை கிழித்தெறிந்தார்கள்.  அங்கேயே சிறுநீர் கழித்தார்கள். இதையெல்லாம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

இதே வேளையில் கூடங்குளம் மொத்த மக்களும் ஒன்றுகூடி இந்த வெறித்தாக்குதலை கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக்கோரி அணு உலை எதிரே ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  அங்கும் சென்ற காவல்துறை "உங்களுக்கும் இடிந்தகரை மக்களுக்கும் நெடுங்கால பகை உண்டு (இந்து நாடார்கள் Vs கிறிஸ்துவ மீனவர்கள்)  அதனால், அவர்களுக்கு என்ன நடந்தால் என்ன? கலைந்து செல்லுங்கள்!" என பிரித்தாளும் சூழ்ச்சியை செய்திருக்கின்றனர். கூடி நின்ற மக்களோ "அதெல்லாம பழைய கதை.  இப்பொழுது அணு உலையை எதிர்த்து ஒற்றுமையாய் போராடுகிறோம்!" என காவல்துறையின் மீது காறி உமிழ்ந்தனர் மக்கள்.

காவல்துறை உடனே கண்ணீர்புகை, தடியடி என ஆரம்பித்துவிட்டது.  20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாச்சாத்தியை மீண்டும் காவல்துறை அரங்கேற்றியது.  ஏழு வயது பையனை லத்தியால் அடித்து, கை பெரிதாய் வீங்கிவிட்டது.  நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு, வந்து படுத்திருந்தவரை அடித்து, கைது செய்திருக்கிறார்கள்.  30 பைக்குகளுக்கும் மேலாக திருடி சென்றுவிட்டார்கள்.  40 பைக்குகளுக்கும் மேலாக பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதப்படுத்தியிருக்கிறார்கள். தங்கள் பயன்பாட்டுக்கு வைத்திருந்த ஜீப்களையும், தொழிலுக்காக வைத்திருந்த லாரியையும் நொறுக்கிவிட்டார்கள். தேர்வுக்கு கிளம்பிய எம்.பி.ஏ மாணவனை நடுமண்டையில் அடித்து, ரத்தத்துடன் கைது செய்து சென்றிருக்கிறார்கள்.  ஆக்கி வைத்திருந்த சோற்றை கீழே தள்ளிவிட்டிருக்கிறார்கள்.  வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளையும் ஒன்றுவிடாமல் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.   பெண்களை "உதயகுமாரோடு தான் படிப்பியா! எங்க கூட படுக்க மாட்டியா!" என கேவலமாக பேசியிருக்கிறார்கள்.  லத்திக்கம்பைக் கொண்டு பெண்ணுறுப்பில் குத்தியிருக்கிறார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தோழர்கள் "உண்மை அறியும் குழு"வாக சென்ற பொழுது, இதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள் சொன்னதில் ஒரு பகுதி தான். இந்த கொடூரமான காவல்துறையின் அட்டகாசத்தின் நோக்கம் இனி, இந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் கூடங்குளம் கிராமத்து மக்கள் கலந்து கொள்ள நினைக்ககூடாது!".

"இத்தனை மோசமாக இழிவுப்படுத்தியிருக்கிறார்கள்! கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்! இனி போராடுவீர்களா?" என கூடங்குள பெண்களிடம் தோழர்கள் கேட்டப்பொழுது,   "அணு உலை எங்கள் உயிர் போகும் பிரச்சனை.  இப்பொழுது குடும்பம், குடும்பமாய் போராடுவது போல, இறுதிவரை போராடுவோம்!" என உறுதியாய் கூறியிருக்கிறார்கள்.

இடிந்தகரை, வைராவிக்கிணறு பகுதியில் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான காவல்துறை அந்த மக்களை குதறிக்கொண்டிருப்பதை கேள்விப்பட்டு,  படையில் பாதியை நம் பக்கம் திருப்புவோம் என ஊர்கூடி முடிவு செய்து, போராட்டம் செய்திருக்கிறார்கள். என்ன ஒரு உயரிய நோக்கம்! 

மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள் இடிந்தகரை மக்களிடம் இந்த போராட்டத்தின் நோக்கத்தையும், பாதிப்பையும் பகிர்ந்த பொழுது, இடிந்தகரை, வைராவிக்கிணறு மக்கள் உள்ளம் நெகிழ்ந்து போனார்கள்.


உழைக்கும் மக்கள் போராட்டக்களத்தில் உறுதியோடு தொடர்கிறார்கள்.  அவர்களின் போராட்டம் வெல்லட்டும்!

இந்த தாக்குதலுக்காக நீதி விசாரணை வேண்டி, நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

****

டிஸ்கி : கடந்த பிப்ரவரியில் அணு உலை எதிர்ப்பு பிரச்சாரத்தை நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் பேருந்தில் செய்துகொண்டிருந்த பொழுது,  ஒரு நடுத்தர வயதை சேர்ந்த ஒருவர், "அவங்க (நாடார்களும், கிறிஸ்துவர்களும்) எந்த காலத்திலும் ஒண்ணு சேர மாட்டாங்க சார்!"  இந்த போராட்டம் தோத்துத்தான் போகும்!" என திரும்ப, திரும்ப ஆதங்கத்தோடு சொல்லிக்கொண்டே இருந்தார்.   இதோ மக்களின் போராட்டப் பாதையில், இழப்புகளை தாங்கிகொண்டு, இணைய முடியாத (!) அவர்கள், இணைந்துவிட்டார்கள்.

October 6, 2012

திரெண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள்! - சிறு வெளியீடு!

திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

சிறு வெளியீடு :

விலை: ரூ. 5

பக்கங்கள் : 16

"கடந்த 25/07/2012 அன்று சென்னை தாம்பரத்தில் உள்ள சீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்த சுருதி என்கிற முதல் வகுப்பு மாணவி பள்ளியின் பேருந்து ஓட்டையில் விழுந்து இறந்து போனது நினைவிருக்கலாம்.  சீயோன் பள்ளி நிர்வாகத்தின் லாப வெறியே ஓட்டை ஒடிசல் பேருந்துகளை இயக்கத்திற்கு காரணம் என்பதை உணர்ந்த பொதுமக்கள் பள்ளியின் பேருந்துக்கு தீவைத்து கொளுத்தினர். மக்களது இந்த கோப்த்தை எந்த பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் வன்முறை என்று கூறவில்லை.  மக்களது நியாயமான கோபத்தை குற்றம் என்று சொல்ல எவருக்கு மனம் ஒப்பவில்லை.

ஏனென்றால் மாணவியின் இறப்பு பள்ளி நிர்வாகம் நட்த்திய படுகொலை என்று தான் மக்கள் பார்த்தார்கள்.  பள்ளிப் பேருந்து எரிந்ததை குறைந்த பட்ச நியாய நடவடிக்கை என்றுதான் பார்த்தார்கள். வன்முறை என்று பார்க்கவில்லை  இதே கண்ணோட்டத்தை தானே மாருதி தொழிலாளர்களுக்கும் பொருத்தவேண்டும்.  ஆனால் , மாருதி சம்பவத்தை வன்முறை என முத்திரை குத்துவது எதனால்? " பக்.4.

"எதிர்த்து கேள்வி எழுப்பினால், போராடினால் திவீரவாதிகள், வன்முறையாளர்கள் என முத்திரை குத்துவோம், ஒடுக்குவோம் என்று மிரட்டுகிறது அரசாங்கம்.  அரசாங்கத்திற்கு கொம்பு சீவிவிட்டு கொண்டிருக்கின்றன முதலாளிகள் சங்கங்கள்.

இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சி, குட்டக் குட்டக் குனிந்து, இனி குனிவதற்கில்லை என்று தொழிலாளி வர்க்கம் நிமிர்ந்ததன் விளைவு தான், மாருதி போராட்டம்.

நிமிரத்துவங்கி விட்டோம்! இனி குனிவது என்ற பேச்சுக்கே இடமில்லை!" பக். 15.

புத்தகத்திலிருந்து....

வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி


நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை - 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
பேச : 044-28412367

October 4, 2012

சேலை

உடுத்துவதும்
பயன்படுத்துவதும்
எத்தனை சிரமமானது என்பதை
ஒரு மனநிலை சரியில்லாத பெண்
புரிய வைத்தாள்!

October 3, 2012

அணு உலை எதிர்ப்பிலும் வெற்று சவடால் அரசியல்!

சீமான், வைகோ, திருமா இன்னபிற தலைவர்கள் எல்லாம் இடிந்தகரைக்கு போய், ஒரு கால இடைவெளியில் ஆளாளுக்கு 20 நிமிடம் ஆவேசமான, நெகழ்ச்சியான‌ உரை நிகழ்த்திவிட்டு வருகிறார்கள். யூடியூப்பில் அவ்வப்பொழுது பார்க்கமுடிகிறது.

அதை தவிர்த்து அவர்களுடைய ஆயிர
க்கணக்கான அணிகளை கொண்டு பொதுக்கூட்டமோ, மக்களிடம் பிரச்சாரமோ செய்வதை கேள்விப்படவே முடியவில்லை. போய் பேசிவிட்டு வந்துவிட்டால் போதும் என நினைக்கிறார்களா?

அணு உலை முற்றுகை போராட்டத்தின் பொழுதும் அதற்கு பிறகு காவல்துறை வெறிநாய்கள் இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் மீது பாய்ந்து கடித்த பொழுதும், களத்தில் எந்த வாக்கு வங்கி தலைவர்களும், அணிகளும், தமிழின அமைப்புகளும், அணிகளும் யாரும் இல்லை. மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் தான் அம்மக்களோடு நின்றார்கள். ஆதாரங்களை சேகரித்து நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அம்பலப்படுத்தினார்கள்.

வெற்று சவடால் அரசியலை அணு உலை விசயத்திலும் அமுல்படுத்துகிறார்கள். அதுதான் கவலையாக இருக்கிறது!

September 27, 2012

வின் தொலைக்காட்சியில் 11 மணிக்கு விவாதம்!

இன்று காலை 11 மணி அளவில் 'வின்' தொலைக்காட்சியில் "சில்லறை வர்த்தகத்தில் 51% அந்நிய முதலீடு" குறித்தான விவாதத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் சுப. தங்கராசு பங்கேற்கிறார்.

பாருங்கள்!

தொடர்புடைய சுட்டிகள் :

சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!! - வினவு

இந்துத்துவா கும்பலின் சுதேசி பித்தலாட்டம்! - வினவு

சில்லறை வணிகத்தில் வால்மார்ட்! ஆதரிக்கும் பதிவர்களுக்கு பதில்!! - வினவு

September 26, 2012

முதலாளிகளின் 'நேர்மையும்' உழைக்கும் மக்களின் நேர்மையும்!

நிறுவனங்களுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் மாதம் இது. தணிக்கையாளர் அலுவலகம் அடிக்கடி போய்வருகிறேன். ஒவ்வொரு முதலாளியும் தணிக்கையாளருடன் தனித்தனியாக ரகசியம் பேசி கிளம்புகிறார்கள்.

தங்கள் ஈட்டிய லாபத்திற்கு வரி கட்ட மூக்கால் அழுகிறார்கள் முதலாளிகள்.  10 லட்சம் கட்ட வேண்டியிருந்தால், 1 லட்சம் கட்டினால் போதும் என்கிறார்கள்.  தணிக்கையாளர்  லாபத்தை கொஞ்சம் கூடுதலாக காட்டலாம் என எப்படியெல்லாமோ பேசி முயற்சி செய்கிறார். தணிக்கையாளர் கொஞ்சம் கூடுதலாக காட்டினால், தன் நிலைக்கு ஆபத்து வராது என நினைக்கிறார். ஆனால், முதலாளிகள் கறாராக மறுத்துவிடுகிறார்கள். 

முதலாளிக்கு இன்னும் அழுத்தம் கொடுத்தால், தணிக்கையாளரை மாற்றிவிடுவார்கள்; தன் பொழப்பு போய்விடும் என்பதால், அதற்கு தகுந்தாற் போல பொய்கணக்கை தயாரிக்க துவங்கிவிடுகிறார். முதலாளிகள் எல்லா துறை அதிகாரிகளையும் லஞ்சத்தால் வாயை மூடிவிடலாம் என தங்களது சொந்த அனுபவத்திலும், சக முதலாளிகளின் அனுபவ பகிர்விலும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். 

இந்த நாட்டில் நேர்மையாக அனைத்து வரிகளையும் செலுத்துபவர்கள் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தான்!

September 10, 2012

மக்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து சைதையில் ஆர்ப்பாட்டம்! 100 தோழர்கள் கைது!

மக்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து சைதையில் ஆர்ப்பாட்டம்! 100 தோழர்கள் கைது!

இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும் அங்கே குவிக்கப்பட்ட உள்ள போலீசு படைகளையும் உடனே திரும்ப பெறவேண்டும்.

அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிப்பதை நிறுத்த வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்தவேண்டும்.

மக்களுக்கும் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரு நாசம் விளைவிக்கும் அணு உலைகள் இழுத்து மூடப்படவேண்டும்

இன்று மக்கள் மீது போலீசு நடத்திய கொடூர தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டை கண்டித்து, இன்று மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் 100 பேர் வரை கைதானார்கள்.

போராடும் மக்களுக்கு தோள்கொடுப்போம்! ஆபத்தான அணு உலையை இழுத்து மூடுவோம்!

September 8, 2012

காதல் திருமணமும்! பெற்றோர்களின் சம்மதமும்!

இன்று ஒரு காதல் திருமணம். அலுவல் ரீதியான‌ நண்பர் அவர். மூன்று வருடங்களாக காதலித்தும், போராடியும் இருவீட்டிலும் சம்மதிக்க வைத்தார்கள். இருவரும் வசதியான குடும்பத்து ஆட்கள் எல்லாம் இல்லை. லோயர் மிடில் கிளாஸ் தான். வயது இருவருக்கும் 27 தாண்டாது. இப்பொழுது தான் சம்பாதிக்க துவங்கியிருக்கிறார்கள். இருவர் வீட்டிலும் இவர்கள் தான் ஒரே பிள்ளை. அதனால், கடனெல்லாம் வாங்கி, தடபுடலாக திருமணம் நடந்தது. 1000 பத்திரிக்கை ரூ. 15000 ஆனதாம். மொத்த பட்ஜெட் 5 லட்சத்திற்கும் மேல்! என்றார்.   இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் கடனை கட்டுவதில் தான் இவர்களின் வாழ்க்கை நகரும்.

நிறைய காதல் திருமணங்களை தொழில் நிமித்தமாகவும், நட்பு ரீதியாகவும் மதுரை பெண் வழக்க‌றிஞர் ஒருவர் நடத்தி வைப்பார்.  அவர் அடிக்கடி சொல்வார். "காதலர்க‌ள் அவர்களின் நண்பர்கள் மட்டும் வந்தால், அந்த திருமணம் சடங்கு, சம்பிராதயங்கள், வரதட்சணை, மொய் இன்றி எளிமையாக நடக்கும்.  ஒருவர் வீட்டில் சம்மதித்து பெற்றோர் வந்துவிட்டார்கள் என்றால் கூட திருமணத்தில் எல்லா கோளாறுகளையும் கொண்டுவந்துவிடுவார்கள்.  என்னைப் பொறுத்தவரையில் கல்யாணம் முடியும்வரையில் பெற்றோர்கள் வராமல் இருப்பது நல்லது என்பார். :)"

சரிதானே! :)

August 26, 2012

மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்!

மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் நேற்று (25.8.12) ஒருவர்  கொலை செய்து வீசப்பட்டுயிருந்தார்.விசாரணைக்காக போலீசு வந்தது. கொலை சம்பவம் என்பதால் பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் வேடிக்கை பார்த்த பகுதி இளைஞர்களை குறிவைத்த போலீசு அவர்களைத் தூக்க முடிவு செய்தது. வழக்கமாக குற்றவாளிகள் கிடைக்காமல் இப்படி அப்பாவிகள் மீது வழக்கு போடுவது போலீசின் உத்தி. அருகில் நின்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர்-முன்னணி தோழர்கள் திவாகரும், குமரேசனும் மாணவர்களுக்கே உரிய துணிவோடு கொலையில் சம்பந்தமற்ற அப்பாவி இளைஞர்களை எதற்காக கைது செய்கிறீர்கள் என்று போலீசு கும்பலை எதிர்த்துக் கேட்டனர். உடனே தோழர்களை தாக்கிய காக்கிச்சட்டை ரவுடிகள் அவர்களையும் வண்டிக்குள் திணித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு பறந்தனர்.

போலீசு அந்த இளைஞர்களையும், தோழர்களையும் கைது செய்யவில்லை மாறாக கடத்தியிருக்கிறது. போலீசு ரவுடிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களும் தோழர்களும் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருக்கின்றனர்.

இதனை அறிந்த புமாஇமு தோழர்கள்  இன்று(26.8.12) பிற்பகல் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு சென்று பொய் வழக்கில்  கைது செய்த தோழர்களை விடுவிக்க கோரியும், அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சொல்லுமாறும்  கேட்டபோது போலீசார் எங்கள் தோழர்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலைவெறியோடு அடித்து விரட்டினர்.

மேலும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து ரிமாண்ட் செய்து உள்ளனர்.

August 23, 2012

கருத்தரங்கம்! அனைவரும் வருக!

நாள் : 25/08/2012 (சனிக்கிழமை)

நேரம் : மாலை 5 மணி முதல் 9 மணி வரை

இடம் : தேரடி, திருவெற்றியூர்

***
திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

****

சிறப்புரை:

தோழர் விஜயகுமார்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.

தோழர் காளியப்பன்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

ஏற்பாடு :

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
சென்னை

பேச : 944480 34519

அனைவரும் வருக!

தொடர்புடைய சுட்டிகள் :


கார்ப்பரேட் வர்க்கத்துக்கு தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி - புதிய ஜனநாயகம்

August 19, 2012

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்! - பிரசுரம்!

திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்! - பிரசுரம்!


பொதுக்கூட்டங்கள்
தெருமுனைக்கூட்டங்கள்
கலை நிகழ்ச்சிகள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர்.  அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ்.  முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர்.  அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர்.  தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார வர்க்கம் போல் பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளிகள்.  ஒரு நிமிடத் தாமதத்திற்குக் கூட அதை வேலை நீக்கத்திற்கான குற்றமாக்குவது, இயந்திரங்களின் வேகத்தைக் காட்டி தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிவது, இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க தவறினால் சம்பள வெட்டு, கழிப்பறைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அற்பக்காரணங்களுக்கும் அசிங்கமாய் திட்டி அவமானப்படுத்துவது என அடுக்கடுக்கான அடக்குமுறைகள். பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்ற பெயரில் குண்டர்களையும் போலீசையும் வைத்து தொழிலாளர்களைத் தாக்க முற்பட்ட போது தொழிலாளிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத்திய போராட்டத்தில் தான் அந்த அதிகாரி பலியானான்.  வன்முறைக்கு வித்திட்டது ஆலை நிர்வாகம், தொழிலாளிகளல்ல.

நாட்டில் 90 சதம் பேர் தொழிலாளிகள், உழைப்பாளிகள்.  அவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேச்சுவார்த்தை என அமைதியான வழிகளில் தான் போராடுகிறார்கள்.ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான முதலாளிகள் தான் அதிகார வர்க்கம், போலீசின் துணையோடு ஒடுக்கின்றனர்.  மிக மிக அரிதாகத் தான் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.  எங்கோ, எப்போதோ ஒரு அதிகாரி பலியானால் ஊளையிடும் ஓட்டுக்கட்சிகளும், ஒப்பாரி வைக்கும் ஊடங்கங்களும் முதலாளிகள் நடத்தும் படுகொலைகள், வன்முறை பற்றி வாய் திறப்பதில்லை.

தனியார்மயத்தின் பெயரால் நாட்டை மீண்டும் காலனியாக்கும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு வரும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளிகளின் வன்முறை மிகப்பெருமளவில் அதிகரித்துவருகிறாது.  நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் கிடைத்த எட்டு மணிநேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையை ஒழித்துவிட்டு முதலாளிகள் தங்கள் விருப்பப்படி 12 மணி, 14 மணி, 16 மணி என உழைப்பை உறிஞ்சுகிறார்களே இது வன்முறையில்லையா?  எட்டு மணி நேரம் என்ற சட்டத்தை முதலாளிகள் அமுல்படுத்தினால் இன்னும் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கலாம்.  வேலையில்லாத் திண்டாட்டம் என்பது முதலாளிகளின் லாப வெறியால் உருவாக்கப்படும் கொடுமை.  இது சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறையில்லையா?

240 நாட்கள் ஓராண்டில் தொடர்ச்சியாகப் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை எந்த முதலாளியும் மதிப்பதில்லை.  பத்தாண்டு, இருபதாண்டு பணியாற்றியவர்களைக் கூட திடீரெனத் தூக்கியெறிந்து குடும்பங்களை வீதியில் நிறுத்துகின்றனர் முதலாளிகள்.  பயிற்சியாளர்கள் (ட்ரெய்னி) தொழில் பழகுநர் (அப்ரெண்டிஸ்) என்ற பெயரில் சம்பளமே இல்லாமல் அல்லது அற்பச் சம்பளத்தில் இளவயது ஆற்றலை உறிஞ்சி விட்டு தூக்கியெறிந்து விடுகின்றனர்.  இந்த மோசடியும், துரோகமும் வன்முறையில்லையா?  தமிழகத்தின் பெருந்தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளிகளில் முக்கால்வாசிப்பேர் ஒப்பந்த தொழிலாளிகள்  பெரும்பாலான் ஒப்பந்தத் தொழிலாளிகளை முதலாளிகள் கணக்கில் காட்டுவதேயில்லை.  சென்னையைச் சுற்றி ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், இருங்காட்டுகோட்டை, மறைமலை நகர் போன்ற பகுதிகளில் நோக்கியா, ஹூண்டாய், சிமென்ஸ், செயிண்ட் கோபெய்ன் என பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.  அன்றாடம் நடக்கும் ஏராளமான விபத்துகளிலும் 'மர்ம'மான முறையிலும் ஏராளமான தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்.  இவ்வளவு பெரிய தொழில்பகுதியில் தீவிர, அவசர சிகிச்சைக்க்கு ஒரு மருத்துவமனை கூட இல்லை.  அண்மையில் ஹவாசின் என்ற தொழிற்சாலையில் பணியாற்றிய 7 பேர் சாலை விபத்தில் இறந்தனர்.  இவர்கள் அனைவரும் மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் அடையாளம் தெரியாதவர்கள் என்றே பதிவு செய்யப்பட்டனர்.  புகழ்பெற்ற டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் கை நசுங்கிய தொழிலாளிக்கு பஞ்சை வைத்துக் கட்டி பேருந்து செலவுக்கு ரூ. 25/- கொடுத்து அனுப்பி விட்டது நிர்வாகம்.  முதலாளிகளின் கொடிய மனதுக்கு சிறு எடுத்துக்காட்டு இது.  'சுமங்கலித் திட்டம்' எனும் பெயரில் கிராமப்புறத்தில் ஏழை இளம்பெண்களைத் திரட்டி கொட்டடிகளில் அடைத்து வரைமுறையின்றி வேலை வாங்குவது, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது என சொல்லொணாக் கொடுமைகளை கோவை திருப்பூர் பஞ்சாலை முதலாளிகள் நடத்துகின்றனர்.   முதலாளிகள் நடத்தும் வரம்பற்ற வன்முறைகளைப் பற்றி ஊடகங்களோ, ஓட்டுக்கட்சிகளோ பேசுவதில்லை.

கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி, சாலை வசதி என அரசு வழங்கவேண்டிய சேவைகள் அனைத்தையும் தனியார்மயத்தின் பெயரில் முதலாளிகள் கைப்பற்றிக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.  மழலையர் பள்ளி முதல் மருத்துவக் கல்வி வரை ஆக்கிரமித்து 'தரமான கல்வி'  என்ற போர்வையில் விதவிதமான வழிகளில் - கல்விக் கட்டணம், சிறப்பு வகுப்பு, செருப்பு, சீருடை பேனா, பென்சில், பேருந்து என பெற்றோர்களைக் கசக்கிப் பிழிகின்றனர். எந்த சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றனர்.  அரியானா மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் இருநூறு ரூபாய் பணம் கட்டவில்லை என்பதால், இன்குபேட்டரில் இருந்த குழந்தைக்கு சிகிச்சையை நிறுத்தியதால் அந்தப் பச்சிளங்குழந்தை இறந்துவிட்டது.    அரசு மருத்துவமனையே இப்படியென்றால் தனியார் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.  அப்பல்லோ போன்ற கார்ப்பரேட், தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் முன்பணம் கட்டாவிட்டால் தொட்டுக்கூட பார்க்கமாட்டார்கள்.  இவையெல்லாம் அரசின் துணையோடு முதலாளிகள் நடத்தும் வன்முறையில்லையா?

போலி மருந்து தயாரித்து மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள், பத்து மடங்கு, இருபது மடங்கு லாபம் வைத்து மருந்து விற்பனையில் கொள்ளையடிக்க்கும் கொலை பாதகத்தைச் செய்பவர்கள் யார்?  தொழிலாளிகளா, முதலாளிகளா?  மாசுப்பட்ட குடிநீரால் சென்னையில் காலரா நோய்க்கு 30 பேர் பலியாகிவிட்டனர்.  அசுத்தமான குடிநீரில் அன்றாடம் வாந்தி பேதிக்கு இரையாகும் மக்கள் ஏராளம்.  ஆனால் கொக்கோ கோலா, பெப்சி, டாடா, உள்ளூர் மாபியாக்கள் அனைவரும் நீர்வளத்தை உறிஞ்சி விற்று பல்லாயிரம் கோடிகளை சுருட்டுகின்றனர்.  தண்ணீர் சமூகத்தின் பொதுச்சொத்து, அதை முதலாளிகள் கைப்பற்றி உரிமை கொண்டாடுவது வன்முறையில்லையா?  கட்டுப்படியாகாமல் கடன்பட்டு இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்?  விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை அநியாய விலைக்கு விற்று, அடிமாட்டு விலைக்கு விளைச்சலை அபகரித்த முதலாளிகள் தானே!  இது வன்முறையில்லையா?

பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பது, கறுப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குவது, பொருள்களைப் பதுக்கி விலையேற்றுவது, கலப்படம் செய்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பொதுச்சொத்துக்கள், கனிவளங்கள், கிரானைட் ஆகியவற்றை கொள்ளையடிப்பது இப்படி அனைத்துக் கிரிமினல் குற்றங்களையும் செய்வது யார் தொழிலாளியா?  முதலாளியா? இக்குற்றங்கள் வன்முறையில்லையா?  பயங்கரவாதவில்லையா?  சாராயம் காய்ச்சும் ரெளடி மீது பாயும் குண்டர் சட்டம் ஒரு குற்றத்தைக் கூட விட்டு வைக்காமல் செய்யும் முதலாளிகள் மீது பாய்வதில்லை.  காரணம் இக்குற்றங்கள் தனியார்மயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு அரசு அதிகாரிகள் துணையோடு நடத்தப்படுவதால் தான்!

உழைப்பைச் சுரண்டுவது, நாட்டின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதோடு பண்பாட்டுத்துறையிலும் தங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் முதலாளிகள்.  விற்பனையை அதிகரிக்கவும், சந்தையை விரிவுப்படுத்தவும் பெரு விளம்பர யுத்தத்தை நடத்தி மொத்த சமூகத்திலும் நுகர்வு வெறியை, பாலூணர்வைத் தூண்டுகின்றனர்.  எல்லாவற்றையும் அனுபவிப்பது, எந்த வழியிலும் பணம் சேர்ப்பது, சுயநலம், ஆடம்பரமோகம் என்ற சித்தாந்தத்தைப் பரப்புவதன் மூலம் ஒழுக்கக் கேட்டையே புதிய சமூக ஒழுங்காக மாற்றுகின்றனர்.  இதன் விளைவு தான் நாள்தோறும் பெருகிவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ரெளடித்தனம் ஆகியவை.  சமூகம் பாதுகாப்பற்றதாக மாறிவரக்காரணம் முதலாளிகளின் லாபவெறித்தானே!  இது வன்முறை இல்லையா?

முதலாளிகளின் அனைத்தும் தழுவிய இந்த வன்முறையை, பயங்கரவாதத்தை ஓட்டுக் கட்சிகளோ ஊடகங்களோ அம்பலப்படுத்துவதில்லை.  ஏனெனில் இவர்கள் தனியார்மயத்தின் பங்காளிகளாகிவிட்டனர்.  ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பது, அதற்குப் போட்டி போடுவதே அவர்களின் ஜனநாயகம்.  உங்கள் எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை அம்பலப்படுத்த்வதால் தான் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள் யார் வன்முறையாளர்கள்?  எது வன்முறை?

சூழ்ச்சி, வஞ்சகம், பித்தலாட்டம், மோசடி, லாபம் இவைதான் முதலாளிகளின் சிந்தனை. வரைமுறையின்றி இயற்கை வளங்கைச் சுரண்டுவதன் மூலம் சுற்றுச்சூழலை அழித்து பூமியின் இருத்தலுக்கே எதிராக இருப்பவர்கள் முதலாளிகள்.

உழைப்பாளி மக்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறோம்.  வன்முறையை நாம் சிந்திப்பதேயில்லை.  அதனால் தான் அணு உலை வேண்டாம் என்கிறோம்.  ஆபத்து எனத் தெரிந்தும் தங்கள் சுயநலத்திற்கு அணு உலை வேண்டும் என்கின்றனர் முதலாளிகள்.

உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா?  மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.

முதலாளித்துவ சுரண்டல், பயங்கரவாத ஒடுக்குமுறை இவற்றிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டுமானால் காங்கிரஸ், பா.ஜ.க. பிற ஓட்டுக் கட்சிகள் அமுல்படுத்தும் தனியார்மயக் கொள்கைக்கு முடிவுகட்டவேண்டும்.  இதற்கு மார்க்சிய - லெனினிய மாவோ சிந்த்னை வழியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தலைமையில்  அணிதிரள்வது ஒன்றே வழி!

* நாடு மீண்டும் காலனியாவதைத்
தடுத்து நிறுத்துவோம்!

*  முதலாளித்துவ பயங்கரவாதத்தை
அடித்து வீழ்த்துவோம்!

*  போலி ஜனநாயக தேர்தல் பாதையைத்
தூக்கியெறிவோம்!

* நக்சல்பாரி புரட்சிப் பாதையில்
ஒன்றிணைவோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.


தொடர்புக்கு:
அ. முகுந்தன்,
110, 2வது மாடி,  மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 24
பேச : 94448 34519

August 10, 2012

கட்டுமான தொழிலாளர்களின் அவலநிலை! போராட்டம் தான் தீர்வு!

இரண்டு நாள்களுக்கு முன்பு ஜேப்பியார் இன்ஸ்டூட்டுக்காக கட்டப்பட்ட விளையாட்டு ஸ்டேடியத்திற்காக நடந்த கட்டுமான வேலைகள் நடைபெற்றதில் 10 பேர் கோரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.  பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இது போல சென்னையில் ஆங்காங்கே தினம் ஒருநபராவது வேலையின் பொழுது கொல்லப்படுகிறார்கள்.

கொல்லப்படுகிறார்கள் என எழுதுவதற்கு காரணம் இருக்கிறது.  கட்டுமான தொழிலாளர்களுக்கு பணிச்சூழல் என்பது படுமோசமான நிலை இருக்கிறது. ஹெல்மெட் கிடையாது. பாதுகாப்பு கவசங்கள் கிடையாது.  பாத்ரூம், டாய்லெட் வசதி கூட முறையாக கிடையாது.  முன்பு சென்னையில் ஆந்திர மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வேலை செய்தனர். கடந்த சில வருடங்களாக வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது.  இவர்களுக்கு தற்காலிகமாக கட்டித்தரப்படும் வீடுகள் மாடுகள் இருப்பதற்கு கூட தகுதியற்றவை!

மேலும், பல கட்டுமான நிறுவனங்கள் வேலையை துவங்கிவிட்டால், தங்களுடைய கொள்ளை லாபத்திற்காக இரவு பகல் என தொடர்ச்சியாய் வேலைகளை செய்கிறார்கள்.  ஜேப்பியார் போன்ற கல்வி வியாபாரிகள் ஒவ்வொர் ஆண்டும், மாணவர்களிடமிருந்து ஜூன், ஜூலையில் மாணவர்களிடமிருந்து லட்சகணக்கான பணத்தை நன்கொடை என்ற பெயரில் பிடுங்கி தான் தங்கள் கட்டுமான வேலைகள் உட்பட எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க துரிதப்படுத்துகிறார்கள். பில்டர்களும் தனது வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கி தான் வேலையை துவங்குகிறார்கள். இப்படி அடித்து பிடித்து, வேலைகளை செய்யும் பொழுது, கட்டுமான விதிகளை காற்றில் பறக்கவிடுகிறார்கள். உயிரிழப்பும், விபத்தும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இந்நிறுவனங்களில் வேலை பார்க்கும் பொறியாளர்கள், சூப்பர்வைசர்கள் காலையில் 7 மணிக்கு வேலைக்கு போனால், இரவு திரும்ப 11 மணி ஆகிவிடுகிறது. மூன்று சிப்டுக்கு பதில் இரண்டு சிப்டுகளிலேயே ஆள்களிடம் வேலை வாங்கிவிடுகிறார்கள்.

தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காவது இ.எஸ்.ஐ. மருத்துவ பாதுகாப்பு உண்டு. கட்டுமான தொழிலில் சீசனல் வேலை என்பதால், இவர்களுக்கு இ.எஸ்.ஐயும் கிடையாது.

இந்தியாவில் விவசாயத்திற்கு பிறகு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களுக்கே இந்த கதி?  சமீபத்தில் ஒரு கட்டுமான தொழிற்சங்கம் வேலையின் பொழுது உயிரிழப்பு ஏற்பட்டால், இரண்டு லட்சம் கேட்டு போராட்ட அழைப்பு விடுத்திருந்தது. இன்றும் இரண்டு லட்சத்திற்கே போராடும் நிலை என்பது அவலம் தான்!

ஜேப்பியார் இன்ஸ்டூட்டில் நடந்த சம்பவத்திற்கு பிறகு, ஒரே ஒரு நபரை கைது செய்தார்கள். மக்கள் போராட்டங்களுக்கு பிறகு தான், ஜேப்பியாரை கைது செய்திருக்கிறார்கள். நாளையே தனது செல்வாக்கை வைத்து, வெளியில் வந்துவிடுவார்.

மக்கள் நலன் நாடும் அரசாய் இருந்தால் தொழிலாளர்களுக்கான உரிமைகளை முறைப்படுத்துவார்கள். நடப்பது மக்கள் விரோத அரசு தானே!  போராட்டங்கள் தான் நமக்கான உரிமைகளை பெற்றுத்தரும்! 

July 31, 2012

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை ஒடுக்க முதலாளிகள் ஜெ.விடம் அழுகாச்சி கடிதம்!

நேற்று முதலாளிகள் சங்கம் (The Employers' Federation of Southern India (EFSI) முதல்வர் ஜெயலலிதாவிடம் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் உரிமைகளுக்காக போராடும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலைஇலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணியை ஒடுக்க கடிதம் கொடுத்திருக்கிறார்களாம்.

ஜெ. முதலாளிகளின் அழுகாச்சி கடிதத்தை கையில் வாங்கி கொண்டு, "ஆமாம்பா! சமச்சீர் கல்வி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, பேருந்து கட்டண உயர்வு என பல விசயங்களில் எனக்கே குடைச்சல் கொடுத்தார்கள்; கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்" என புலம்புவார் என நினைக்கிறேன்!

தொடர்ந்து சமரசமின்றி போராடும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கு நமது வாழத்துக்களை தெரிவித்துக்கொள்வோம்!
http://timesofindia.indiatimes.com/city/chennai/Employers-want-action-against-trade-union/articleshow/15287429.cms

July 14, 2012

நாளை நம் குழந்தைகள் கைநாட்டுகளாக மாறும்! போராட வாருங்கள்!



இன்று பூந்தமல்லியில் ஒரு வேலை விசயமாக சென்றிருந்தேன். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு குறித்து பேருந்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவர் பேசியதின் சாரம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

உங்களுடைய காதுகளை ஒரு பொதுப்பிரச்சனைக்காக இரண்டு நிமிடம் இரவலாக தாருங்கள்.

கடந்த ஜூன் 28 அன்று நுங்கம்பாக்கம் கல்வி இயக்குநரகம் வாசலில் எங்கள் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் ஒரு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.  கோரிக்கை என்ன?

"அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொடு!
அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளையும் அரசுடைமையாக்கு!"

இந்த போராட்டத்தை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கினார்கள்.  ஒரு பெண்ணை நான்கு போலீசார் வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றினார்கள்.  ஒரு கைக்குழந்தையை ஒரு அதிகாரி கழுத்தைப் பிடித்து தூக்கினார்.  இதையெல்லாம் அனைத்து தொலைக்காட்சி சானல்களிலும், பத்திரிக்கைகளிலும் நீங்களே பார்த்தீர்கள்.

இப்பொழுது நிலைமை என்ன?

ஒவ்வோரு ஆண்டும் 10வது, 12 வது தேர்வு முடிவுகள் வெளியே வரும் பொழுது தோல்வியடைந்த மாணவர்கள் ஒன்றிரண்டு பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.  அது போல ஜூனில் பள்ளி, கல்லூரிகள் துவங்கியதுமே தங்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத பெற்றோர்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இந்த அவல நிலை ஏன் ஏற்பட்டது?  கடந்த 20 ஆண்டுகளில் அரசு கல்விக்காக ஒதுக்கும் மானியங்களை படிப்படியாக வெட்டிக்கொண்டே வருகிறது.  விளைவு புற்றீசலைப் போல தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகிபோய்விட்டன.  எவனெல்லாம் கள்ளச்சாராயம் காய்ச்சினானோ, கந்துவட்டிக்கு பணத்தை கொடுத்து மக்களை கொள்ளையடித்தானோ, சாதி சங்க தலைவனோ அவனெல்லாம் இந்த 20 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து கல்வித்தந்தையாகவும், கல்வி வள்ளலாகவும் வளர்ந்து நிற்கிறார்கள்.

தான் வாழ்நாள் முழுவதும் சிறுக சிறுக சேமித்த பணத்தையெல்லாம் தன்னுடைய ஒரு பிள்ளையை கல்லூரியில் சேர்க்க செலுத்துகிறார்கள்.

கடந்த காலங்களில் மன்னர்களுடைய, நிலப்பிரபுக்களுடைய குலக்கொழுந்துகள் தான் படித்தார்கள். ஒரு விவசாயினுடைய, தச்சருடைய குழந்தையோ படிக்க வாய்ப்பே இல்லை.

அது போல, இன்றும் காசு இருப்பவர்களுக்கு தான் கல்வி என மாறிவருகிறது.  எதிர்காலத்தில் உழைக்கும் மக்களுடைய குழந்தைகள் படிக்க முடியாத நிலை உருவாகி கைநாட்டாக மாறும் நிலை உருவாகி வருகிறது.

இந்த அவல நிலையை மாற்ற, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர்
தமிழகத்தில் ஐந்து இடங்களில் மாநாடு நடத்துகிறார்கள்.  சென்னையில் ஜூலை 17 அன்று மதுரவாயிலில் எம்ஜிஆர் பல்கலை கழகம் எதிரே எஸ்.வி. மகாலில் மாநாடு நடத்துகிறார்கள். சமூக அக்கறை கொண்ட பேராசிரியர்கள், கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இது ஒரு நீண்ட நெடிய போராட்டம்.  இந்த போராட்டத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்!  நன்றி!"

மக்கள் அருமையான ஆதரவு தந்தார்கள்.

July 7, 2012

ஸ்வீட்டான சண்டை!

சமீபத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தை சார்ந்த வழக்கறிஞர் தோழர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது! ஏறக்குறைய 1000 பேர்களுக்கும் மேலாக கலந்துகொண்டார்கள். அதில் ஒரு நிகழ்வு!

தோழர்களின் குழந்தைகள் தங்கள் அருகே அமர்ந்திருந்த எல்லோருக்கும் 'ஜூஸ்' வாங்கி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு அந்த வேலை கொடுக்கப்படவில்லை இருந்தாலும். பொறுப்பாக கொடுத்து கொண்டிருந்தார்கள்.

அதே போல திருமண நிகழ்ச்சி முடியும் வரை பொறுமை காத்த குழந்தைகள் முடிந்ததும் விளையாட்டிலும் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.

சாப்பிடும் பொழுது, மூத்த பெண் தோழர் ஒருவருக்கு 'குலோப்ஜமூன்' தட்டில் இல்லை. இதைக் கவனித்த 8 வயது குட்டித் தோழர், அருகில் இருந்த தனது சகவயது குட்டிப் பெண் தோழரின் தட்டில் இரண்டு குலோப்ஜாமுன்கள் இருந்ததைப் பார்த்தார். உடனே ஏதும் அனுமதி கேட்காமல், அதில் ஒன்றை எடுத்து தோழருடைய தட்டில் வைத்தார்.

உடனே அந்த குட்டித்தோழர் "தோழர்! இது சரியில்லை. என்னிடம் கேட்காமல் எடுத்துவிட்டீர்கள்" என கோபித்துக்கொண்டார். அதைப் பார்த்த மூத்த தோழருக்கு சங்கடமாகிவிட்டது. "எனக்கு வேண்டாம்மா! நீங்க எடுத்துங்கங்க!" என்றார்.

"தோழர்! நீங்க சாப்பிடுங்க தோழர்! உங்களுக்கு வேணும்னா இன்னொன்றையும் எடுத்துங்கங்க! பிரச்சனை அந்த தோழர் என்னிடம் கேட்காமல் எடுத்தது தான்!" என்றார்.

June 29, 2012

மது வேண்டும் : தா. பாண்டியன் மது வேண்டாம் : நல்லக்கண்ணு

28.06.2012 தேதியிட்ட தினமணி நாளிதழில்: பூரண மதுவிலக்கு கோரி நடத்தப்பட உள்ள 'ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை' தொடக்கிவைத்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கையெழுத்திட்டார் என்று ஒரு செய்தி மூன்றாம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது.

தே 28.06.2012 தேதியிட்ட தினமணி நாளிதழில்: "தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்தார் என்று மற்றொரு செய்தியும் ஏழாம் பக்கத்தில்வெளிவந்துள்ளது.

"தமிழகத்தில் அரசு மதுக் கடைகளை மூடினால் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்குச் சென்று மது குடித்துவிட்டு வருவார்கள். எனவே, தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை. தமிழகத்தைப் போன்றே மதுபானக் கடைகளைத் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது" என்று தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், 02-06- 2012 அன்று காந்தீய மக்கள் இயக்கம் நடத்திய மதுவிலக்கு மாநாட்டில் தா.பாண்டியன் கலந்து கொண்டு மதுவை ஒழிக்க சிறப்புரை ஆற்றியிருக்கிறார்.

- அருள் பக்கங்களிலிருந்து....

இலவச கல்வி உரிமைக்காக போராடியவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்! கைது!

காட் ஒப்பந்தம் என்கிற அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வி, மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து ’சேவை’த் துறைகளையும் தனியார்மயமாக்கி கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கு திறந்துவிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு.
இலவசமாக வழங்க வேண்டிய அடிப்படை கல்வியிலிருந்து உயர் கல்வி வரையிலான மொத்த கல்வித்துறையையும் தனியார் முதலாளிகளுக்கு திறந்துவிட்டு, கல்வி அளிக்கும் சேவையிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஒன்று தான் ’கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009’. தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்கிற பெயரில் கல்வியில் தனியார்மயமாக்கலின் முதல் நடவடிக்கையாக இதை தற்போது செயல்படுத்தி வருகிறார்கள்.
கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசின் இந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த 3-6-12 அன்று  சிதம்பரத்தில் இலவசக் கல்வி உரிமைக்காக ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும்’ ’மனித உரிமை பாதுகாப்பு மையமும்’  இலவச கல்வி உரிமை மாநாட்டை நடத்தின.
வரும் 17-ம் தேதி தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம் ! என்கிற முழக்கத்துடன் புரட்சிகர மாணவர்–இளைஞர் முன்னணி ’கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டை’ சென்னை, திருச்சி, கரூர், விழுப்புரம், கடலூர் ஆகிய நகரங்களில் நடத்துகிறது.
இந்த மாநாட்டிற்கு முன்னதாக இன்று காலை தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம் ! என்கிற முழக்கத்துடன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர் பு.மா.இ.மு.வினர்.
அதன்படி சென்னையின் முக்கிய இடங்களில் எல்லாம் இதற்கான அறிவிப்பு சுவரொட்டிகள் முதல் நாள் இரவே, அதாவது நேற்று நள்ளிரவே ஒட்டப்பட்டிருந்தன. இன்று விடியற் காலையிலேயே இந்த சுவரொட்டிகளை பார்த்து அதிர்ந்து போன நுங்கம்பாக்கம் துணை ஆணையர் வெங்கடாஜலபதி காலை ஆறு மணிக்கே பு.மா.இ.மு அலுவலகத்திற்கு தொலைபேசி செய்துவிட்டார். “முற்றுகை எல்லாம் வேண்டாம், கல்வித்துறை இயக்குநரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன், எனவே முற்றுகையை விலக்கிக் கொள்ளுங்கள்” என்றார். அவருடைய வாக்குறுதிகளை எல்லாம் தோழர்கள் நம்பவில்லை. எனவே திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்பு கூடினர். ஆனால் அதற்கு முன்பாகவே போலீசை கூட்டம் கூட்டமாக அங்கே இறக்கியிருந்தனர். இன்னொரு பக்கம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
தோழர்களை உள்ளே விடாமல் வாயிலை மறித்து நின்று கொண்டிருந்தது போலீசு. சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் ஆய்வாளர்களும், நுங்கம்பாக்கம் துணை ஆணையரும் இவர்களோடு நூற்றுக்கணக்கான போலீசும், சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகளையும் கல்லூரி மாணவர்களையும் அவர்களுக்கு துணையாக நின்ற பெண்கள் மீதும் எப்போதும் பாய்ந்து பிடுங்குவதற்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது.
துணை ஆணையர் வெங்கடாஜலபதி மீண்டும் தோழர்களிடம் வந்து “இயக்குனரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன், முற்றுகை போராட்டம் வேண்டாம், ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்றார். “இயக்குனரை சந்திக்க நாங்களும் தயாராக இருக்கிறோம், சார் வரச்சொல்லுங்கள் பேசுவோம்” என்றார்கள் தோழர்கள். உங்களில் ஐந்து பேர் மட்டும் வாருங்கள் உள்ளே போய் பேசுவோம் என்றார்.
அதற்கு உடனடியாக பதிலளித்த தோழர்கள், “ஐந்து பேர் மட்டும் உள்ளே போய் ரகசியமாக எல்லாம் பேச முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள் என்று மக்கள் அனைவர் முன்பும் பேச வேண்டும் எனவே அவரை கீழே வரச்சொல்லுங்கள் மக்கள் அவரோடு பேசுவார்கள்” என்றார்கள். தனியாக கூட்டிச்சென்று சமரசம் செய்துவிடலாம் என்பதற்கான போலீசின் முயற்சிகளை எல்லாம் தோழர்கள் முறியடித்தனர்.
அடுத்ததாக வாயிலுக்கு முன்பாக காவல் துறை வாகனங்கள் அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினர். உள்ளே நுழைய முடியாதபடி வாயிலை சுற்றி பாதுகாப்பு அரணை அமைத்தனர். உள்ளே நுழைய காத்திருந்த தோழர்கள் முழக்கமிட்டபடியே அந்த அரணை மீறி வாயிலை நோக்கிச் செல்ல முயன்ற போது, அதற்காகவென்றே காத்திருந்த போலீசு கும்பல் தோழர்கள் மீது பாய்ந்து குதறியது. எதிர்த்து நின்ற தோழர்களை கடுமையாக தாக்கி முன்னேற முடியாதபடி அங்கேயே தடுத்து நிறுத்தி தனது வெறியாட்டத்தை துவங்கியது.
டிபிஐ-முற்றுகை-மாணவர்கள்-தோழர்கள் மீது-போலீசு-கொலைவெறி தாக்குதல்
குழந்தைகள், சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்களின் பிஞ்சு கைகளையும் கால்களையும் பிடித்து போலீசு வெறியர்கள் முரட்டுத்தனத்துடன் சாலையில் இழுத்து வீசினார்கள். எதிர்த்து நின்ற மாணவர்களையும் பெற்றோர்களையும் கைகளை இறுக்கிக் கொண்டு வயிற்றிலும், நெஞ்சிலும் ஓங்கி ஓங்கி குத்தினார்கள். பெண் தோழர்களை லத்தி கம்புகளால் விளாசினார்கள். ஆறு மாத கைக்குழந்தைகளோடு வந்திருந்த பல பெண் தோழர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. வெறி நாய் கூட்டம் போல மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று அனைவர் மீதும் பாய்ந்த போலீசு நாய்கள் கடித்துக் குதறின.
துணை ஆணையர் வெங்கடாஜலபதி நடுவில் நின்று கொண்டு வெறித்தனத்துடன் நாலா பக்கமும் திரும்பி திரும்பி இதோ இவனை அடி, அதோ அவனை அடி, அவளை அடி, கையை உடை, காலை உடை என்று ஒரு ரவுடியை போல கத்திக் கொண்டிருந்தார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இரண்டு பெண் தோழர்களுக்கு பலத்த அடிபட்டதால் கடுமையான நெஞ்சு வலியால் அங்கேயே மயங்கி விழுந்தனர். ஆஸ்த்மா நோயாளியான ஒரு தோழரின் நெஞ்சிலேயே ஓங்கி ஓங்கி குத்தியதால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் மயக்க நிலைக்குச் சென்றார். இன்னொரு தோழரின் உயிர்நிலையில் பூட்ஸ் கால்களால் ஒரு போலீசு பொறுக்கிநாய் ஓங்கி உதைத்ததில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். இவர்களோடு மேலும் ஒரு தோழர் மோசமாக தாக்கப்பட்டிருந்தார்.
கடுமையான தாக்குதலுக்குள்ளான இந்த ஐந்து தோழர்களையும் போராட்டக்களத்திலிருந்து KMC மருத்துவமனைக்கு பிற தோழர்கள் எடுத்துச் சென்றனர். இன்னொரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
போராடுவதற்கான ஜனநாயக உரிமைகளை மறுத்து மனிதத்தன்மையற்ற முறையில் தடியடி நடத்தி வெறியாட்டம் போட்ட போலீசை கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மில்டனும், சக்தி சுரேஷும் உடனடியாக அங்கு வந்தனர். அவர்கள் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே அவர்களையும் தாக்கியது பாசிச ஜெயாவின் விசுவாச நாய்கள். சுற்றி நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் காமராக்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தன.
இந்த தாக்குதலை கண்டித்து தோழர்கள் அனைவரும் அடுத்தபடியாக கல்லூரி சாலையை மறித்துக் கொண்டு உட்கார்ந்தனர். முற்றுகைப் போராட்டம் மறியலாக மாறியது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்த போலீசு உட்கார்ந்துகொண்டிருந்த தோழர்களை தரதரவென இழுத்துச் சென்று போலீசு வண்டிகளில் ஏற்றியது. தோழர்கள் ஏற மறுத்து அடம்பிடித்த போது மீண்டும் கைகளை குவித்து பலங்கொண்ட மட்டும் குத்தி மூச்சு முட்டச் செய்து வண்டிக்குள் திணித்தனர். மொத்த தோழர்களையும் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தைவிட்டு அப்புறப்படுத்தி கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசுக்கு விசுவாசமாக வெறியாட்டம் போட்டது பாசிச ஜெயாவின் போலீசு.
தோழர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அடுத்து பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. துணை ஆணையரிடம் கேள்வி கேட்கச் சென்ற வின் டி.வி யின் நிருபரை முரட்டுத்தனத்துடன் தாக்கிக் கீழே தள்ளிவிட்டனர். இதை கண்டித்து அவர்கள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தற்போது நூற்று இருபத்நு ஐந்து தோழர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள APVP திருமணமண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமாவர். இவர்களுடன் மாணவர்களும் பெற்றோரும் உள்ளனர். காலையில் கைது செய்யப்பட்ட தோழர்கள் இந்த நிமிடம் வரை விடுவிக்கப்படவில்லை.
திருமணம் நடக்கின்ற மண்டபத்தில் தற்போது அரங்கக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறன ! ஆம் திருமண மண்டபத்தை நமது தோழர்கள் பிரச்சார மேடையாக்கி வருகின்றனர். மண்டபத்திற்குள் நுழைந்ததுமே அமைப்பு கொடிகளையும் பதாகைகளையும் கட்டி ஒரு பொதுக்கூட்டம் நடக்கின்ற இடத்தை போல மண்டபத்தை மாற்றியமைத்து விட்டனர்.
தோழர்கள் அனைவரும் சிறை வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தபடியே நடந்திருக்கிறது. சைதை நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.  ஆனால் மத்திய, மாநில ஆட்சிகளில் அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது.

- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி