> குருத்து: ஓ மணப்பெண்ணே! (2021)

November 6, 2021

ஓ மணப்பெண்ணே! (2021)


 நாயகன் ஒரு விட்டேத்தியான ஆள்.  கல்யாணம் பண்ணிவைத்தால் பொழைச்சிக்குவான் (!) என ஜாதககாரர் சொல்ல, பெண் பார்க்க போகிறார்கள். போன இடத்தில் கதவு மூடிக்கொள்ள, நாயகி தனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை என சொல்ல… கொஞ்சம் ரிலாக்சாகி, தங்களது கடந்த கால வாழ்க்கையை இயல்பாக பகிர்ந்துகொள்கிறார்கள். தவறுதலாக வேறு வீட்டுக்கு வந்துவிட்டோம் என அறிகிறார்கள். பிரிகிறார்கள்.

 

இருவரும் குணத்தில் எதிரெதிர் துருவம் என்றாலும்,  பேசியதில்.. நாயகனுக்கு சமைப்பதில் ஆர்வம். நாயகிக்கு நடமாடும் வேனில் சமைக்கும் தொழிலை செய்வதில் ஆர்வம். இருவரும் இணைகிறார்கள்.  அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

 

பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக முடித்திருக்கிறார்கள்.

 

***

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்று, தேசியவிருது எல்லாம் பெற்றிருக்கிறது. பிறகு இந்தி, மலையாளம் என ஒரு சுற்று சுற்றி இப்பொழுது தமிழில் எடுத்திருக்கிறார்கள். நன்றாகவும் எடுத்திருக்கிறார்கள்.  நன்றாகவும் நடித்திருக்கிறார்கள்.

 

படத்தில் எனக்கு குறையாகப்பட்டது.  இருவருக்குள்ளும் ஒரு புரிதல், ஒரு நெருக்கம் உருவாக்கும் காட்சிகள் மிக குறைவு. ஒரு பார்வையாளனாக என்னால் அவர்கள் சேர்ந்தே ஆகவேண்டும் என்ற உணர்வு வரவில்லை.  இதே படத்தை மலையாளத்தில் டிரைலர் பார்த்தேன்.  அப்படியே ரீமேக் செய்யாமல், மலையாளத்திற்கு தகுந்தவாறு மாற்றி எடுத்திருப்பதாக உணர்கிறேன்.  தமிழிலும் கொஞ்சம் அந்த குறையை சரி செய்திருக்கலாம் என தோன்றுகிறது.

 

படத்தில் நாயகி நாயகனிடம் ஓரிடத்தில் சொல்வாள். ஒரு ப்ரீ அட்வைஸ். கேட்கிறியா? என்பாள். அது போல எனக்கும் ஒரு ப்ரீ அட்வைஸ் இருக்கிறது. குணத்தில் வெவ்வேறு துருவங்கள் கொண்டவர்கள் நண்பர்களாக பழகலாம். வாழ்க்கையில் இணைவது மிகவும் சிக்கலாகிவிடும்.

 

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. பாருங்கள்.

 

 

 

0 பின்னூட்டங்கள்: