> குருத்து: Aranyak – திரில்லான வெப் சீரிஸ்

December 18, 2021

Aranyak – திரில்லான வெப் சீரிஸ்


இமாச்சல் பிரதேசத்தில் ஒரு மலையடிவாரத்தில் உள்ள சிறுநகரம் அது! வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளும் வருகிற பகுதி. துவக்கத்திலேயே ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் காட்டிற்குள் தூக்கில் தொங்குகிறாள்.


19 ஆண்டுகளுக்கு முன்பு 9 இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, காட்டிற்குள் இதே போல தொங்கவிடப்பட்டிருக்கிறார்கள். சொல்லிவைத்தாற் போல எல்லோருடைய கழுத்திலும் சிறுத்தையின் கீறல் அழுத்தமாக பதிந்திருக்கிறது. இதை செய்வது ஒரு சிறுத்தை மனிதன் என ஊர் மக்களிடத்தில் ஒரு கதை நிலவுகிறது.

நாயகி உள்ளூரில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். கணவரோடு பிணக்கில் இருக்கிறார். மூத்தப் பெண்ணுக்கு நல்ல கல்லூரி கிடைக்கவேண்டும் என்பதற்காக வீட்டை கவனித்துக்கொள்ள ஒரு வருடம் விடுப்பில் செல்ல முடிவெடுக்கிறார். அவரை விடுவிக்க நாயகன் இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார். இந்த சமயத்தில் இந்த மர்ம கொலை நடக்கிறது. தன் திறமையை நிரூபிக்க ஒரு நல்வாய்ப்பு இது என கருதுகிறார். ஆகையால், விடுப்பை ரத்து செய்துவிட்டு, நாயகனும், நாயகியும் இணைந்து விசாரணையை துவங்குகிறார்கள்.

உள்ளூரில் ”இராஜவம்சத்தில்” வந்த ஒரு எம்பிக்கும், அமைச்சராக உள்ள பெண்மணிக்கும் அரசியல் ரீதியாக பகை இருக்கிறது. ”இராஜவம்ச” எம்பி ஒரு பப் நடத்துகிறார். அங்கு எல்லா வித போதை பொருட்களும் சரளமாக கிடைக்கிறது.

படத்தில் வருகிற அத்தனை கதாப்பாத்திரங்களும் ஏதோ விதத்தில் இந்த கொலையில் குறுக்க மறுக்க வந்து போகிறவர்களாக இருக்கிறார்கள். அதனால் பலரும் சந்தேக வலையில் இருக்கிறார்கள்.

இறுதியில் இந்த கொலையை செய்தது யார் என கண்டுப்பிடித்தார்களா என்பதை திரில்லராக சொல்லி முடித்திருக்கிறார்கள்.

***

இந்த வெப்சீரிஸ் ஒரு எபிசோடில் 8 அத்தியாயங்களாக வெளிவந்திருக்கிறது. மொத்தம் 5.30 மணி நேரம். கொலை நடந்து, விசாரணை துவங்கி, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இறுதி இரண்டு அத்தியாயங்களில் எல்லா புதிர்களையும் அவிழ்க்கிறார்கள். நான் பார்த்த சில வெப் சீரிஸ்களில் ஒரு நாடகம் போல இழுக்கிற தன்மை இருந்திருக்கிறது. ஆனால் இந்த சீரிஸ் துவக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும், திரில்லாகவும் கொண்டு சென்ற சீரிஸ் என்பேன்.

இந்த மாதிரி கொலை விசாரணை கதைகளில் பலரையும் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வருவார்கள். ஆனால் அந்த புதிர்களை அவிழ்க்கும் பொழுது, பலரையும் டம்மியாக்கிவிடுவார்கள். அப்படி செய்யாமல், எல்லோருக்குமே கதையில் கவனமாக இடம் தந்து இருக்கிறார்கள் என்பது சிறப்பு.

ஒவ்வொரு மனிதனுக்கும் ரகசியம் இருக்கிறது என்பார்கள். உண்மை தான். இவர்கள் ஆடும் அதிகார, ஆணாதிக்க விளையாட்டுகளில் ஒரு அப்பாவி இளம்பெண் பலியாவது தான் சமூக அவலம்.

நாயகியாக ஆளவந்தான் நாயகி ரவீனா டான்டன் தன் வேலைக்கும், குடும்பத்திற்கும் இடையே அல்லாடுகிற ஒரு கதாப்பாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார். கஹானி படத்தில் நாயகிக்கு உதவும் போலீஸ் பாத்திரத்தில் வரும் Parambarata Chatterjee இதிலும் இன்ஸ்பெக்டராக அருமையாக செய்திருக்கிறார். மற்ற பாத்திரங்களாக வருபவர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வசனமும் சிறப்பு. ஒரு இடத்தில் ”ஒருவன் என்ன நல்லா படிச்சாலும் அறிவாளியாக தான் முடியுமே தவிர, ஒரு நல்ல மனிதனாக முடியாது” என்பார். திரில்லர் கதை என்பதால், அதிலேயே கொண்டு செல்லாமல், உணர்வுபூர்வமாகவும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் செய்யும் பொழுது, ”ஜெய் ஹிந்த்” என சொல்கிறார்கள். இன்னொரு படத்திலும் இதே மாதிரி பார்த்தேன். ஆச்சர்யமாக இருந்தது. எந்தந்த மாநிலங்களில் இந்த நடைமுறை இருக்கிறது என தெரிந்தால் சொல்லுங்கள். நானும் தேடுகிறேன்.

நெட் பிளிக்சில் இருக்கிறது. தமிழ் ஆடியோவும் இருப்பது சிறப்பு. நிச்சயம் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: