”ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள். அதிர்ஷ்டசாலியாக இருப்பது நல்லது. ஆனால் அதிர்ஷ்டம் வரும்போது நாம் தயாராக இருக்கவேண்டும்.”
- நாவலில் இருந்து...
தென் அமெரிக்காவில் கியூபாவைச் சேர்ந்த மிக வயதான மீனவர் அவர். குடும்பம் ஏதுமின்றி கடற்கரையோரம் உள்ள குடிசையில் தனியனாக வாழ்கிறார். கடலுக்குள் தன் வைத்திருக்கும் சிறு படகில் சென்று தூண்டில் போட்டு மீன் பிடித்து அதில் கிடைக்கும் சொற்பத்தை வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். அவர் மேல் அன்பு கொண்டு அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் அவரோடு நட்பாக இருக்கிறான். சிறுவனுக்கு தொழில் சொல்லிக்கொடுத்த குரு அவர்.
கடந்த சில நாட்களாக மீன் எதுவும் கிடைக்காமல் சோர்வடைந்து இருக்கிறார். அந்த சிறுவன் அந்த மீனவரோடு தொடர்ந்து வந்தவன் தான். இப்பொழுது மீன் எதுவும் கிடைக்காததால், அவனுடைய பெற்றோர் வேறு ஒரு படகில் அனுப்பி வைக்கிறார்கள்.
இந்தச் சூழலில் அன்றைக்கும் மனம் தளராமல், தன்னுடைய சிறு படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் தனியாக செல்கிறார். அன்றைக்கு அவருடைய தூண்டிலில் சிக்குவதோ மிகப்பெரிய மீன். அதாவது அவரின் படகை விட இரண்டு மடங்கு பெரிது. தன் மொத்த வித்தையையும், தன் உடலில் உள்ள மொத்த பலத்தையும் பயன்படுத்தி, அந்த மீனை வீழ்த்தி, படகோடு சேர்த்து கட்டிக் கொண்டு வரும் பொழுது, பெரிய பெரிய சுறாக்கள் அவர் பிடித்து வைத்திருந்த மீனை சூறையாடுகின்றன. அவைகளோடும் மல்லுக்கட்டுகிறார். பிறகு அவரும், பிடித்து வைத்திருந்த மீனோடும் கரை வந்தடைந்தாரா என்பதை சாகசமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
***
உலகப் புகழ்பெற்ற நாவல் இது. இதை எழுதியவர் அமெரிக்காவைச் சேர்ந்த எர்னஸ்ட் ஹெமிங்வே. 1953ல் இந்த நாவலுக்காக இலக்கியத்திற்காக தரப்படும் புலிட்சர் விருதும், 1954ல் நோபல் பரிசும் பெற்றிருக்கிறார். இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்நாவலை வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு மொழிகளில் படமாகவும் உருவாக்கியிருக்கிறார்கள்.
மொத்த நாவலையும் படித்து முடித்தப்பின்பு மனதில் தோன்றிய வார்த்தைகள். சொந்தங்கள் இல்லாமல் சோர்ந்து வாழும் அந்த மனிதனுக்கு ஒரு கடும் போராட்டத்தையும், தன் உயிரையும் தந்து இனி வாழும் காலம் வரைக்கும் பெரும் நம்பிக்கை கொடுத்துவிட்டது அந்த பெரிய மீன். நாவல் படித்து முடித்தப்பின்பு எனக்கே அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டுவிட்டது. “இப்போது உங்களிடம் இல்லாததைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. உள்ளதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்” என்ற நாவலில் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
இந்த நாவல் முழுவதும் அவர் தனக்குள்ளே பேசிக்கொள்வது, யாரும் இல்லாததால், வெளிப்படையாகவும் வாய்விட்டு பேசிக்கொள்கிறார். அவருடைய அக உலகத்தையும், கடலையும் விரிவாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். ஒரு நாவலுக்கும், ஒரு திரைப்படத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை இந்த நாவலையும், படத்தையும் பார்த்தால் நன்றாக உணரமுடியும்.
மற்றபடி, மீனவரின் வாழ்க்கை எப்பொழுதும் மற்ற தொழில்களை காட்டிலும் ஆபத்தானாக இருக்கிறது. கரையில் இத்தனை மக்களோடு பாதுகாப்பாய் வாழ்வை கடக்கிறோம். மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கடலோடும், மாறுகிற காலநிலைகளோடும் போராடி போராடித் தான் நாம் சாப்பிடுகிற அந்த சுவையான மீன் கிடைக்கிறது என்பது எல்லோரும் நினைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானது.
இந்த நாவலின் மூல நாவலை ஹெமிங்வே 28 பக்கங்களில் எழுதியதாக ஒரு குறிப்பு படித்தேன். ஆனால் எப்படி இத்தனைப் பக்கங்களில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள் என்பது ஆச்சர்யம். தமிழிலேயே வேறு சிலரும் இந்த நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். இந்த நாவல் மொழி பெயர்ப்பு நாவல் போல இல்லாமல் தமிழ் நாவலை போலவே அருமையாக மொழியாக்கம் செய்துள்ளார் எம்.எஸ். அவருக்கு நமது நன்றிகள்.
இந்த நாவல் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடத்திட்டமாகவும் வைத்திருக்கிறார்கள். இந்த நாவலை பார்த்த பின்பு 20 நிமிட அனிமேசன் படத்தைப் பார்த்தேன். அதுவும் நன்றாக இருந்தது. பின்னூட்டத்தில் பகிர்ந்துகொள்கிறேன். பாருங்கள்.
அனைவரும் படிக்கவேண்டிய அருமையான நாவல். படியுங்கள்.
நாவலில் உள்ள வாசகங்களோடு முடிப்போம்.
“மனிதன் தோல்விக்காக படைக்கப்படவில்லை. ஒரு மனிதனை அழிக்க முடியும். ஆனால் தோற்கடிக்க முடியாது” – நாவலில் இருந்து...
பக்கங்கள் : 104
ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் : எம். எஸ்
வெளியீடு : காலச்சுவடு
0 பின்னூட்டங்கள்:
Post a Comment