> குருத்து: இப்படிக்கு வயிறு - டாக்டர் செல்வராஜன்

December 3, 2021

இப்படிக்கு வயிறு - டாக்டர் செல்வராஜன்


பொதுவாக மருத்துவ ரீதியான கட்டுரைகள் படிப்பதில் எனக்கு கொஞ்சம் அலர்ஜி. கொஞ்சம் பயமுறுத்திவிடுவார்கள். உடலில் ஏதாவது பிரச்சனை என்றால், அதுவாக இருக்குமோ! இதுவாக இருக்குமோ என நமக்கே தோன்றும். அதனாலேயே படிக்காமலே தவிர்த்து வந்தேன். தனிப்பட்ட முறையிலேயே வயிறு தொந்தரவு கொஞ்சம் இருந்ததால், படிக்கவேண்டிய நெருக்கடிக்கு வந்துவிட்டேன். நான் பயந்த அளவிற்கு புத்தகம் இல்லாதது பெரிய ஆறுதல்.


மருத்துவரின் வெர்சனாக இல்லாமல், வயிறு ”தன் வரலாறு சொல்வது” போல எழுதியிருந்தார்கள். அதே போல மருத்துவரே எழுதாமல், விகடன் ஆசிரியர் இரா. சரவணன் எழுதியிருக்கிறார். ஓரிடத்தில் ”பெண்கள் சேலை கட்டும் பொழுது வைத்துக்கொள்ளும் கொசுவம் போல. மடிப்பு மடிப்பாக சிறுகுடலின் உட்புறமாய் இது பரந்து இருக்கும் என்றெல்லாம் எழுதியிருக்கிறார். ஆகையால், எளிமையாகவும் இருந்தது. நிறைய படங்களுடன் இருந்ததும் புரிந்துகொள்ள வசதியாக இருந்தது.

நம்ம அறிவுக்கு அறிவியல் விசயங்களை தவிர்த்துவிட்டு, சில விசயங்களை மட்டும் பேசலாம்.

நன்றாக மெல்லுவதற்கு தான் நமக்கெல்லாம் பற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், நாம் பற்களுக்கு நன்றாக வேலை கொடுக்காமல், நேரே வயிற்றுக்கு அனுப்பிவிடுகிறோம், வயிறு நம்மை கெட்ட கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டி, செரிக்கும் வேலையை இன்னும் மல்லுக்கட்டி செய்யவேண்டியிருக்கிறதாம். நமக்கு நன்றாக மென்று திங்கவேண்டும் என்று கூட சொல்லிக்கொடுக்கவில்லையே! சோகம்.

சாப்பிடும் பேசும் பொழுது பேசக்கூடாது. பேசினால், சாப்பாட்டுடன் காத்தும் உள்ளே போனால், தொந்தரவு என்கிறது வயிறு. சாப்பிடும் பொழுது தான் எல்லா ஊர்க்கதையும் வாய் ஓயாமல் பேசுகிறார்கள். உடன் சாப்பிடுவர்களை பேசாமல் சாப்பிடுங்கள்! என சொன்னால் யார் கேட்கிறார்கள்? அவர்களை நிறுத்தமுடியாது. சும்மா கேட்டுக்கொள்ளலாம் என்றால், நம்மிடம் கேள்வி வேறு கேட்டு பேச வற்புறுத்துகிறார்கள். சோகம்.

வயிறுக்கு எந்த பிரச்சனை வந்தாலும், நாமே குத்துமதிப்பாய் புரிந்துகொண்டு மருந்து எடுப்பது தவறு என்கிறது. ஒரு நோய் அறிகுறி பல்வேறு நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். ஆகையால், துவக்கத்திலேயே மருத்துவம் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் இன்னும் சிக்கலாகி அறுவை சிகிச்சைக்கு கொண்டு போய்விட்டுவிடும் என வயிறு எச்சரிக்கிறது.

நாம் சாப்பிடுகிற எல்லாவற்றையும் செரித்து, கூழாக்கி, சத்துக்களை உறிஞ்சி, மீதமுள்ளதை, தேவையில்லாததை வயிறு வெளியே தள்ளுகிறது. எலும்பை கூட கரைத்துவிடுகிற அமிலங்களால், ஆல்கலாலை மட்டும் வயிறால் ஒன்றுமே செய்யமுடியாமல் போகிறதாம். நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறாம்.

நம்ம ஊரில் அரசு விற்கும் சாராயம் தான் பிரச்சனை. உடலில் எல்லா கோளாறுகளையும் கொண்டுவந்துவிடுகிறது. வளர்ந்த நாடுகளில் குடிக்கிற சாராயம் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என அப்பாவியாய் நம்பிக்கொண்டிருந்தேன். அப்படி எல்லாம் இல்லை. எல்லா ஆல்கஹாலுமே பிரச்சனை என்கிறது வயிறு.

ஆக திருமூலர் சொன்னது போல “உடல் வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே” என்பதை கொஞ்சம் மாற்றி, ”வயிறை நன்றாக பார்த்துக்கொண்டேன். உயிர் வளர்த்தேனே” என்பதாக மாற்றிச்சொல்லலாம்.

பக்கங்கள் : 136
வெளியீடு : விகடன்

0 பின்னூட்டங்கள்: