> குருத்து: போக புத்தகம் – போகன் சங்கர்

December 24, 2021

போக புத்தகம் – போகன் சங்கர்


எழுத்தாளர் போகன் சங்கரை ஆனந்த விகடனில், முகநூலில் என ஆங்காங்கே கொஞ்சூண்டு கொஞ்சூண்டு படித்திருக்கிறேன். இப்பொழுது தான் முதன் முதலில் புத்தகமாக வாசிக்கிறேன்.


முகநூலில் எழுதியதை எல்லாம் 106 தலைப்புகளில் இந்த புத்தகத்தில் தொகுத்து தந்துள்ளார்கள். வெவ்வேறு தலைப்புகளில், வெவ்வேறு உணர்ச்சிகள் வெளிப்பட்டாலும், பரவலாக வெளிப்படுகிற உணர்ச்சி பகடி தான். ”அவள் பாசாகி டீச்சராகிவிட்டாள். இவன் கோட்டாகி, நடிகர் முரளி போல நிரந்தர மாணவனாகிவிட்டான்.” (பக். 35).

மார்ச்சுவரி வாசலில் ஒருவர் தொடர்ந்து ஒரு எண்ணுக்கு முயன்றுகொண்டே இருக்கிறார். அவர் எடுக்கவில்லை. இவரிடம் உதவி கேட்கிறார். இவரும் முயற்சி செய்கிறார். திடீரென சுதாரித்து உங்கள் பையன் பெயர் என்ன என்கிறார். சொல்கிறார். மார்ச்சுவரிக்குள் ஓடிப்போய் செத்துப்போன அந்த பையனின் பெயரை கேட்கும் பொழுது அவரும் அதே பெயரை சொல்கிறார்.

”எனக்கு சட்டென்று இந்தக் கவிதை நினைவு வந்தது.
எமிலி டிக்கின்சனின் கவிதை.

”மூழ்குதல் அத்தனை துயரமானதில்லை
மூழ்காமல் இருக்க நாம் செய்கிற முயற்சிகள் போல
மூழ்கும் மனிதன் மூழ்கும் முன்பு
மூன்றுமுறை மேலெழும்பி
வானத்தைப் பார்க்க வருவான் என்று சொல்லப்படுகிறது
பிறகு அவன் நேரடியாக அமிழ்ந்துபோய்விடுகிறான்
அந்த அந்தகாரத்தில்
நம்பிக்கையும் அவனும் கடைசியாகப் பிரிகிற
ஒரு கணத்தில்.”

நான் பலத்த சப்தத்துடன் வெடித்து அழ ஆரம்பித்தேன். (பக். 58)

சமீபத்தில் ஆசிரியருடைய மீட்பு சிறுகதையைப் பற்றி கேள்விப்பட்டு, தேடும் பொழுது, பவா செல்லத்துரை அந்த கதையை வாசித்திருந்த ஒரு காணொளியைப் பார்த்தேன். அந்த கதை எனக்கு பிடித்திருந்தது.

பகடி ஆசிரியருக்கு நன்றாகவே வருகிறது. எல்லா இடங்களிலும் வெளிப்படுத்துகிற பகடி விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. கனலிக்கு கொடுத்த பேட்டியின் ஓரிடத்தில்… “பகடியாய் எழுதுவதை நிறுத்து என சொல்வதன் மூலம் எழுதுவதை நிறுத்த சொல்கிறார்கள். மற்றவைகளுக்கு சிரிப்பவர்கள் தங்களை பகடி செய்யும் பொழுது முகத்தை திருப்பிக்கொள்கிறார்கள்” என்கிறார்.

தமிழில் பகடியாய் எழுதுபவர்கள் மிகவும் குறைவு. இதே பகடி வேறு ஒருவரிடமும் படித்திருக்கிறோமே என யோசித்த பொழுது, எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சட்டென நினைவுக்கு வருகிறார். ”கடவுள் தொடங்கிய இடம்” என ஒரு தொடரை அவர் ஆனந்த விகடனில் எழுதியிருந்தார். அந்த தொடர் என்பது வெவ்வேறு காரணங்களுக்காக வேறு வழியே இல்லாமல் சொந்த மண்ணை விட்டு ஓடுகிவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பலதரப்பட்ட பிரச்சனைகள் தான் நாவலின் அடிப்படை. அவருடைய பகடி இத்தனை கனமான விசயத்திலும் வரும் பொழுது அது தரவேண்டிய நியாயமான உணர்ச்சியை தரவில்லை என்பதை உணர்ந்தேன்.

அவருடைய பல பதிவுகள் தன்னளவில் தான் எழுதுகிறார். இதே எழுத்து தான் என்னுடையதும் என்பதால் ஆசிரியர் எனக்கு நெருக்கமாய் தெரிகிறார். அவர் கவிதைகளும் எழுதியிருப்பார் போலிருக்கிறது. கவிதையில் எப்படி பகடி? என யோசித்துக்கொண்டிருக்கிறேன். படிக்கவேண்டும்.

பக். 334
விலை ரூ. 350
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

0 பின்னூட்டங்கள்: