> குருத்து: PK (2014) இந்தி

December 16, 2021

PK (2014) இந்தி


நம்ம பூமியை ஆய்வு செய்ய வேற்று கிரகத்திலிருந்து நாயகன் வருகிறார். வந்த உடனேயே தனது கிரகத்தை தொடர்பு கொள்ள வைத்திருக்கும் ரிமோட் டாலரை ஒரு திருடனிடம் பறிகொடுக்கிறார். அதன் துணை இல்லாமல் தன் கிரகத்தை தொடர்புகொள்ள முடியாது. ஆகையால், தேட துவங்குகிறார்.


தேடும் பொழுது “ஆண்டவன் தான்யா உனக்கு உதவவேண்டும்” என பலரும் சொல்ல, எல்லா கடவுள்களையும் கும்பிட துவங்குகிறார். ஆனால் கிடைத்தபாடில்லை. நாயகி ஒரு செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். இவருடைய நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு, விசாரித்து உதவ முன்வருகிறார்.


அந்த ரிமோட் ஒரு கார்ப்பரேட் சாமியாரிடம் சிக்கி இருப்பது தெரியவருகிறது. அந்த சாமியார் “அது சிவனிடமிருந்து கிடைத்தது” என மக்களிடம் அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார். அதை மீட்டார்களா? தனது சொந்த கிரகத்துக்கு போனாரா என்பதை பல கலாட்டாக்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
******

முன்னாபாய் எம்பிபிஎஸ் (தமிழில் வசூல் ராஜா எம்பிபிஎஸ்), 3 இடியட்ஸ் (தமிழில் நண்பன்) படங்களின் இயக்குநர் இராஜ்குமார் ஹிரானி தான் இந்தப்படத்தையும் எடுத்திருக்கிறார். அவர் எடுத்தது சில படங்கள் என்றாலும் பல விருதுகளை பெற்றுள்ளன. பல மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளன.

ஒரு ஏலியன் மனிதன் கதாப்பாத்திரத்தை வைத்து திரில்லர், ஆக்சன் என பல படங்களை எடுத்து கல்லாக் கட்டிக்கொண்டிருக்கும் பொழுது, சமூக அக்கறையுடன் சமூகத்தில் உள்ள அம்சங்களை குறிப்பாக மதம் சம்பந்தப்பட்ட விசயங்களை விவாதித்தது அருமையான விசயம்.

எல்லா கடவுள்களையும் நெக்குறுகி வேண்டினாலும், அவருடைய வேண்டுதல் நிறைவேறாதது போல... இந்த நாட்டில் பல கோடிக்கணக்கான மக்கள் விதவிதமான கடவுள்களை வேண்டினாலும், அவர்களுடைய பிரார்த்தனைகள் எல்லாம் காற்றில் எழுதியது போல கரைந்து போய்விடுகின்றன. சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் போல தங்களுடைய வேண்டுதல்களை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில் ”பாகிஸ்தானி முஸ்லீம் என தெரிந்தும் அமைதியாகிவிட்டீர்களே!” என்பார் நாயகியிடம்! இதோ மாநாடு படத்திலும் நாயகன் கேட்கிறார். “முசுலீம்னு தெரிஞ்சிருந்தா பேசியிருக்க மாட்டீங்க! அப்படித்தானே!” என்பார். இரண்டு படங்களுக்கான கால இடைவெளி ஏழு வருடம் தான். ஆனால், இந்த இடைவெளி இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு பெரிதாக ஆக்கப்பட்டிருக்கிறது! துயரம்.

ஏலியனாகவே வாழ்ந்திருக்கும் அமீர்கான், கெளரவ வேடத்தில் வரும் சஞ்சய் தத், நாயகி அனுஷ்கா சர்மா, சமீபத்தில் இறந்த சுஷாந்த் என எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அருமையான படம். வந்த புதிதிலேயே பார்த்து கல கலவென சிரிக்க வைத்தும், சிந்திக்கவும் வைத்தப்படம். யூடியூப்பில் தமிழில் சப் டைட்டிலுடன் இலவசமாக இருக்கிறது. கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.

0 பின்னூட்டங்கள்: