> குருத்து: எங் கதெ – இமையம்

December 20, 2021

எங் கதெ – இமையம்


நாயகன் விநாயகத்தின் குடும்பம் விவசாய குடும்பம்.  அவனுக்கு மூன்று தங்கைகள். குடும்பமே ஆண் பிள்ளை என்பதால் எந்த வேலையும் வாங்குவதில்லை. டிகிரி வரை படித்திருந்தும், வேலைக்கு போகாமல் வெட்டியாக ஊரை சுற்றிக்கொண்டிருக்கிறான். 

 

நாயகி கமலாவின் கணவன் ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியர்.  (இரட்டையர்களான) இரண்டு பெண் பிள்ளைகள். கணவர் விபத்தில் இறந்துவிட, வேலையில் இருக்கும் பொழுது இறந்ததால், கருணை அடிப்படையில் நாயகிக்கு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி கிடைக்கிறது. நாயகனின் ஊருக்கு தன் பிள்ளைகளை அழைத்து வந்து பணியில் சேர்கிறாள்.

 

கணவனை இழந்தவள் என்பதாலும், பார்ப்பதற்கு வசீகரமாக இருப்பதாலும் ஊரில் உள்ள பலர் அவளோடு ’பழக’ முயற்சி செய்ய விநாயகம் அவளோடு பழகுகிறான். திருமணம் செய்யாமலே இருவரும் வாழ துவங்குகிறார்கள்.  நாயகனின் வீட்டிற்கு தெரிந்து, அவனுக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள். அவன் வேறு வேறு காரணம் சொல்லி மறுத்துவிடுகிறான்.

 

வேலையில் அடுத்த நிலை பதவி கிடைத்து, கடலூருக்கு செல்கிறாள். அங்கு ஒரு சிஇஓ அதிகாரி வீட்டிற்கு ஏசி, லேப்டாப் வாங்கித்தந்து அவளை ’தொல்லை’ செய்கிறான். நாயகன், நாயகி இருவருக்குள்ளும் சண்டைகள் வருகின்றன. பிறகு இந்த உறவு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லிமுடித்திருக்கிறார்.

 

****

கிராமத்தில் Living together வாழ்க்கை. அதில் எழும் சிக்கல்கள் தான் கதை. சம காலத்தில் திருமணம் செய்து கொண்ட வாழ்க்கையிலேயே தம்பதிகளிடையே புரிதல்கள், பொருளாதாரம், செக்ஸ் என ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் எழும் பொழுது, கல்யாணம் முடிக்காமல் வாழ்வது என்பது தெரிந்தே இன்னும் ஆயிரம் பிரச்சனைகளை இழுத்துப் போட்டுக்கொள்வது தான்!

 

நாயகன், நாயகி இருவரும் விட்டேத்திகளாக தான் இருக்கிறார்கள். நாயகிக்கு வேலை இருக்கிறது. விதவை திருமணம் செய்தால், அரசு வேலை கூட போய்விடலாம். அவள் ஓரளவு பொருளாதார பின்புலம் உள்ளவள் தான். அவளின் இயல்புக்கு வேறு ஒரு வேலை கூட தேடிக்கொண்டிருக்கலாம் நாயகன் அவளிடம் மயங்கி கிடக்கிறான். கல்யாணம் முடித்துக்கொள்ளலாம். வேலைக்கு போகச் சொல்லியிருந்தால் அவனும் கூட போயிருப்பான். சமூக ஒழுங்கு என்று மட்டும் இல்லாமல், இருவருக்குள்ளும் ஒரு கமிட்மெண்ட் வருவதற்காகவது திருமணம் செய்திருக்கலாம். செய்யவில்லை.

ஒரு சண்டையின் பொழுது, ” என்னை திருமணம் செய்துகொள்.நான் வேலையை விட்டுவிடுகிறேன். வேலைக்கு போய் எனக்கு சோறு போடு” என நாயகி கோபமாய் சொல்வாள். அவன் அதை சட்டை செய்யமாட்டான்.  நாயகியை விட நாயகன் இன்னும் விட்டேத்தியான ஆள்.

 

ஒரு திருடன் கூட தன் நிலைக்கு நியாயம் கற்பித்துக்கொண்டு தான் வாழ்வான். இல்லையெனில் அவன் குற்ற உணர்வே அவனை கொன்றுவிடும்.  நாயகன் நாவலின் முழுமைக்கும் தன்னைத்தானே அவ்வளவு தாழ்த்திக்கொள்கிறான்.  அவனின் இருப்புக்கு அவன் ஏதோ நியாயம் கற்பித்துக்கொண்டு தான் வாழமுடியும். ஆசிரியர் முடிவு செய்து படிக்கும் வாசகனை அவனை வெறுத்து ஒதுக்கும்படி செய்திருக்கிறார்.

 

நாயகன் வேலைக்கு செல்வதில்லை. தமிழகத்தின் இப்போதைய டிரெண்ட் என்னவென்றால், இப்படி வெட்டியாக சுற்றுகிறவர்கள் எல்லாம் குடிகாரர்களாக, குடிநோயாளிகளாக மாறியிருப்பார்கள்.  நாயகன்  மண்டையில் தாறுமாறாக யோசிக்க கூடிய ஆள். குடியும் சேர்ந்திருந்தால், அந்த உறவு எப்பொழுதோ முறிந்துபோயிருக்கும்.  இதெல்லாம் நம் கற்பனை. அதனால் ஒதுக்கி வைத்துவிடுவோம். 

 

நாயகின் பின்புலம் கிராம பொருளாதாரத்தில் இருந்தவன் தான். ஆகையால், நிலவுடமை பண்பாட்டில் தான் வாழ்கிறான். பெண்ணை உடைமை பொருளாக தான் பார்ப்பான். கதைப்படியே அப்படித்தான் பல முறை சிந்திக்கிறான். அந்த திசையில் தான் கதையின் இறுதி பக்கங்களில் ஒரு முடிவை நோக்கி நகர்கிறான். ஆகையால் இறுதி டிவிஸ்ட் முடிவு எடுப்பதெல்லாம் ஆசிரியரின் ஆசையாக இருக்கும். அவன் என்ன நோக்கத்தில் போனானோ அதை செய்வதற்கு தான் 100% சாத்தியம்.

 

கிராமத்துப் பின்னணியில் நாயகனின் குடும்பத்திற்கு தெரிந்தும் பல ஆண்டுகளாக இந்த உறவை விட்டுவைக்கிறார்கள் என்பது சாத்தியமில்லாத ஒன்று.  பையனை ஒன்றும் சொல்லாமல் வீடேறி பெண்ணை மிரட்டுவார்கள்.  சில வருடங்களுக்கு பிறகு மூன்று தங்கைகளும் நாயகி வீட்டுக்கு போய் ஒரு கலாட்டா செய்வார்கள்.  அது எப்போதோ நடந்திருக்கும்.

 

இன்னும் விவாதிப்பதற்கு நாவலில் பல அம்சங்கள் இருக்கின்றன. நீண்டு விடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

 

இமையம் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். ஆசிரியர். சமூக செயல்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டவரும் என்பதால், அவர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. இமையத்தின் சிறுகதைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் படித்திருக்கிறேன். இப்பொழுது தான் அவருடைய முழு நாவலை படித்திருக்கிறேன்.

 

நாயகனின் பார்வையில் மட்டும் மொத்த நாவலும் நகர்கிறது. ஏன் இந்த வடிவத்தை தேர்ந்தெடுத்தார் என தெரியவில்லை.  நாயகியின் பார்வையை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. வட்டார வழக்கில் நாவல் எழுதப்பட்டிருந்தாலும், மிகவும் சிரமப்படுத்தவில்லை என்பது எனக்கு ஆறுதலாய் இருந்தது. அவருடைய மாஸ்டர் பீஸ் சொல்லப்படுகிற நாவலை விரைவில் படித்துவிடவேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.

 

அனைவரும் படிக்கவேண்டிய நாவல். படியுங்கள்.

 

பக்கங்கள் : 110

வெளியீடு : க்ரியா

ஆசிரியர் : இமையம்

 

 


0 பின்னூட்டங்கள்: