”இந்த வெடி மருந்துக் கலவையை
இனியும் எத்தனைக் காலம்
வெற்றிகரமாய்
அடக்கி அழுத்திவிடுவார்களாம்.”
- உக்ரேசன், இந்தி கவிஞர், பக். 54
இந்தியாவில் 1970 களின் காலம் மிகவும் கொந்தளிப்பான காலம். காரணம் நக்சல்பாரி இயக்கம் துவங்கி இந்தியா முழுவதும் பரவி இருந்த காலம். அந்த காலக்கட்டத்தில் தோழர் சுமந்தா இந்திய முழுவதிலும் பல மொழிகளிலிருந்தும் கவிதைகளை தொகுத்தார். அதில் இருந்த 73 கவிதைகளில் 52 கவிதைகளை தேர்ந்தேடுத்து இந்த கவிதை தொகுப்பு உருவாகியுள்ளது.
“மனிதத்துவம் செத்து மடியத்தான் வேண்டுமென்றால்
உலகை இயற்றிய
எவன் அந்த கொடிய படைப்பபளி?
அவனும் செத்து வீழட்டும்”
- ரவீந்திர (சிங்) நாத் – ஒரியா
இந்த கவிதைகளையும், பாடல்களையும் எழுதிய பெரும்பாலோர் மா.லெ இயக்கத்தில் இயங்கியதால் சிலர் அரசால் கொல்லப்பட்டவர்கள். சிலர் பல ஆண்டுகள் சிறையில் வதைப்பட்டவர்கள். ஆந்திராவின் முக்கிய கவிஞர் செரபண்ட ராஜூ இயக்கத்தில் வேலை செய்தவர். அதனால் 12 ஆண்டுகள் சிறையில் வதைப்பட்டவர். மூளைப் புற்று நோயினால் இறந்துபோனார். இதில் சில கவிதைகள் சிறையில் எழுதப்பட்டவை.
”எதை நான் வெறுக்கிறேனோ
அதை அகற்றாமல்
என் கண்களைப் பிடுங்க முயற்சிக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு இதமாக
முத்தம் நான் தந்தால் – அந்த
ஈரத்தை கத்திக்கொண்டு சுரண்டுகிறார்கள்.
எனது குரல் ஒரு குற்றம்
சிந்தனைகளோ அராஜகம்
ஏனெனில்
அவர்களின் ராகத்துக்கு நான் பாடுவதில்லை
அவர்களை என் தோள்கள் சுமப்பதும் இல்லை.
அவர்கள் மதத்துக்கோ ஆட்சிக்கோ
எனது தொண்டைக் குழியிலிருந்து
ஒரு பாடலும் பிறக்காது.
எனது ஒவ்வொரு ரத்த துளியையும்
எனது நாட்டு விடுதலைக்காகவே
வித்துக்களாய் தூவுகிறேன்.
கைதியாக என்னை ஒடுக்கலாம்.
ஆனால்
என்றும் நான் ஒரு அடிமை அல்ல
தாக்கி நொறுக்கப்படலாம்
கடலின் அலைபோல – நான்
மீண்டும் மீண்டும் பிறப்பேன்.
- செரபண்ட ராஜூ, தெலுங்கு பக். 106.
தொகுப்பில் உள்ள கவிதைகளும், பாடல்களும் அந்த காலக்கட்டத்தைப் பற்றிய காட்சிகளை நம் கண் முன்னே கொண்டு வருகிறது. இயக்கம் எப்படி கிராமங்கள் வரைக்கும் வீச்சாக சென்றதையும் புரிந்துகொள்ள முடிகிறது. புத்தகத்தில் உள்ள தோழர் சுமந்தாவின் முன்னுரை முக்கியமானது. புத்தகத்தில் உள்ள பல விசயங்கள் விவாதித்து புரிந்துகொள்ள வேண்டும். நிறைய படிக்கவேண்டிய தேவையையும், மக்களிடையே வேலை செய்ய வேண்டியதையும் அழுத்தமாய் உணர்த்துகிறது.
1970களின் காலக்கட்டத்தின் நிலையிலும், இன்றைய நிலையிலும் பெரிய மாற்றம் இல்லை. அன்றைய காலக்கட்டதின் தேவையும், இன்றைய தேவையும் சமூக மாற்றம் தான். அன்று இந்தியாவே போராட்டமயமாகத் தான் இருந்தது. ஆனால், இன்று போராட்டங்களின் அலை கொஞ்சம் குறைந்திருக்கிறது. “தேசபக்தர்களின்” ஆட்சி நடந்து கொண்டிருப்பதால், உண்மை தேசபக்தர்களில் பலர் சிறையில் வாடுகிறார்கள். வழக்குகளில் சிக்கவைக்கப்படுகிறார்கள். அதனால் என்ன? ஒடுக்கப்படுகிறவர்களுக்கு போராட்டம் தவிர குறுக்கு வழி ஏதுவும் இல்லை.
தோழர் செரபண்ட ராஜூவின் வரிகளுடனே முடிப்போம்.
”என் மணிக்கட்டையே
நீ வெட்டி எறிந்தாலும்
ஏந்திய வாளை
நான் எந்நாளும் விடமாட்டேன்
தமிழில் : தோழர் வீராச்சாமி, மகஇக
பக்கங்கள் 120
வெளியீடு : மகஇக
0 பின்னூட்டங்கள்:
Post a Comment