> குருத்து: சினிமா வியாபாரம் – கேபிள் சங்கர்

December 22, 2021

சினிமா வியாபாரம் – கேபிள் சங்கர்





பொதுவாக அந்தந்த துறை சார்ந்த நபர்கள் எத்தனை திறமைசாலி என்றாலும், பொதுமக்களுக்கோ அல்லது துறையில் முன்னேறி வரும் இளம் ஆட்களுக்கோ ஒரு விழிப்புணர்வை/வழிகாட்டலை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், எழுதுவது என்பது பழக்கமில்லாததால், நடைமுறை சாத்தியமில்லாமல் போகிறது. விகடன் போன்ற பத்திரிக்கைகள் அவர்களை பேசவைத்து, எழுதக்கூடிய தன் ஆட்களை வைத்து தங்கள் பத்திரிக்கைகளில் வெளியிடுகிறார்கள். இப்பொழுது யூடியூப் என்ற சானல் வந்துவிட்டதால், நேரிடையாக போய் பேசி, பதிவு செய்து வெளியிடுகிறார்கள். நல்ல விசயம்.

 
அப்படி திரைத்துறையில் பல ஆண்டுகளாக ஒரு விநியோகிஸ்தராக, திரையரங்கை நடத்திய பங்குதாரராக, கலகலப்பு, ஈகோ படங்களுக்கு வசனகர்த்தாவாக, ”தொட்டால் தொடரும்” படத்திற்கு இயக்குனராக திரை உலகில் தொடர்ந்து இயங்கிவரும் கேபிள் சங்கர் “சினிமா வியாபாரம்” குறித்து தான் வைத்திருந்த தளத்தில் தொடர்ந்து எழுதி வந்தார். அவ்வப்பொழுது நானும் படித்த நினைவு இருக்கிறது. அதை எல்லாவற்றையும் தொகுத்து, இப்பொழுது ஒரு புத்தகமாக தந்திருக்கிறார்.
 
 
தமிழ்நாட்டில் திரைப்படங்கள் எப்படி வெளியிடப்படுகிறது? தயாரிப்பாளர்கள் – விநியோகிஸ்தர் – திரையரங்கு உரிமையாளர்கள் – மூவருக்கும் உள்ள உறவு என்ன? எந்தெந்த முறைகளில் தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள்? ஒரு படத்தை எந்தெந்த வழிகளில் விற்கலாம்? எவ்வளவு வருமானம் வருகிறது? நம்மூரில் இப்படி என்றால்.. ஹாலிவூட்டில் எப்படி தயாரிக்கிறார்கள்? எப்படி வெளியிடுகிறார்கள் என்பதை முதல் பாகத்திலும், தன் நண்பர்களுடன் ஒரு திரையரங்கை எடுத்து நடத்திய பல அனுபவங்கள், மேலும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பதையும் ஒரு பறவைப் பார்வையில் பல விசயங்களையும் இந்த புத்தகத்தில் பேசியிருக்கிறார்.
 
புத்ததகம் படித்ததில் இருந்து… இத்தனை ஆண்டு காலங்கள் கடந்தும், திரைப்படத்துறை இன்னும் முறைப்படுத்தப்படவில்லை என்பது விளங்குகிறது. ஆகையால், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் ஒரு சுமூகமான நிலை என்பது இல்லை. ஒரு சூதாட்ட விளையாட்டு போல இருக்கிறது. பல கோடிகளில் பணம் புழங்குகிறது. கிடைத்தவரை சுருட்டுவது என்பதாக இருக்கிறது. இதனால் சிலர் விரைவாக மேலே செல்கிறார்கள். பலர் தெருவிற்கு வந்துவிடுகிறார்கள். சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்கள் செய்கிற எல்லா கோளாறுகளும், இந்த திரை உலகைச் சார்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும், , இறுதி நுகர்வோர்களான மக்களைத்தான் பாதிக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
 
ஆசிரியர் சொல்வது போல கேரளாவில் முறைப்படுத்தப்பட்ட நுழைவுக் கட்டணம் இருக்கிறது. அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகிறது. ஆகையால், இன்னும் குடும்பத்தோடு படம் பார்க்கும் பழக்கம் இருக்கிறது என்கிறார். அதே போல ஆந்திராவிலும் கட்டணம் உயர்வு அதிகமில்லை. திரையரங்கு வசதிகளும் நன்றாக செய்து தருகிறார்கள் என்கிறார். தமிழ்நாடு ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது? இதையெல்லாம் திரையுலகை சார்ந்த சங்கங்களும், அரசு தான் முறைப்படுத்தவேண்டும்.
 
சென்னையில் உள்ள ஒரு பழைய அதுவும் பிட்டு படம் ஓட்டிய திரையரங்கை, நண்பர்களுடன் வாடகைக்கு எடுத்து, அதன் களங்கத்தை துடைக்க திரையரங்கை சீரமைத்து புதிய படங்களை வெளியிட படாதபாடு பட்டு என பல்வேறு அனுபவங்களை இரண்டாவது பாகத்தில் சொல்லியிருக்கிறார். அதில் பார்வையாளர்களில் சிலர் செய்யும் பிரச்சனை, உள்ளூரில் இருந்து இலவசமாய் பார்ப்பதற்காக சிலர் செய்யும் சேட்டைகள் என வேகமாய் சொல்லி சென்றுவிட்டார். அதைத் தனியாக விரித்து எழுதினால் தனிப்புத்தகமாக போடலாம். நல்ல பதிவாக இருக்கும். யோசியுங்கள் கேபிள் சங்கர்.
 
இதில் ஒவ்வொரு விசயத்திலும் இன்னும் நிறைய அம்சங்கள் விவாதிக்க இருக்கின்றன. மிகவும் நீண்டு போய்விடும் என பயந்துகொண்டு இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
 
மத்தப்படி புத்தகத்தின் வடிவமைப்பு பொறுத்தவரையில், புத்தகத்தில் கால்வாசி ஆங்கிலத்தில் தான் எழுதியிருக்கிறார். இதை அவரிடம் கேட்டால், நடைமுறையில் அப்படித்தானே இருக்கிறது என பதில் சொல்லலாம். இப்பொழுது சமூகத்திலேயே ஒரு பிரச்சனை இருக்கிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரத்தில்! படிப்பது ஆங்கில வழியாக இருக்கிறது. பலரிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் அல்லது தமிங்கிலீஷில் பேசுகிறார்கள். அதனால், எழுதுவதும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் கேபிள் சங்கர் 70களில் பிறந்திருப்பதால் முயன்றால், பல ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து தமிழில் எழுத முடியும். இந்த ஒரு புத்தகம் மட்டுமல்ல வேறு சில புத்தகங்களையும் தொடர்ந்து எழுதிவருகிறார். ஆகையால், அடுத்து எழுதும் புத்தகத்தில் இதை சரிசெய்வார் என நம்புகிறேன்.
 
தன் தளத்தில் எழுதியதை எந்தவித திருத்தம் இல்லாமல், வெளியிட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே சில இடங்களில் எழுத்துப்பிழை இருக்கிறது. சில இடங்களில் ஆங்கில வார்த்தைகள் வரவேண்டும். அதற்கு பதில் தமிழ் வார்த்தைகள் இருக்கிறது. இரண்டாவது பதிப்பில் சரிசெய்யவேண்டும்.
 
பக்கங்கள் : 192
ஆசிரியர் : கேபிள் சங்கர்.
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

0 பின்னூட்டங்கள்: