ஒரு பெரிய கோடீசுவரி. தன்னைவிட இளையவனை காதலித்து திருமணம் செய்கிறார். பிறகு அவன் வாழ்வில் வேறு ஒரு பெண் வர, சொத்தை இழக்க மனமில்லாமல், மனைவியை கொலை செய்துவிடலாம் என முடிவெடுக்கிறான். மருந்து கம்பெனியே அவன் வைத்திருப்பதால், அவளுக்கு ஒரு மருந்தை கொடுத்து, இயற்கை மரணம் போல செட் செய்கிறான்.
மார்ச்சுவரிக்கு உடலை எடுத்து போன பிறகு, அன்றிரவு அங்கிருந்து கடத்துகிறார்கள். விசாரணை துவங்குகிறது. கணவன் என்பதால், அவனுக்கு தான் சொத்து போகும் என்பதால், அவனை அழைத்து வந்து விசாரிக்கிறார்கள்.
அங்கு சில மர்மங்கள் நடக்கின்றன. அவன் ஒயினில் கலந்து கொடுத்ததை அவள் குடிக்காமல் இருந்திருக்கலாம் அல்லது குடித்திருந்து மாற்று மருந்து கொடுத்து தப்பித்து இருக்கலாம் என அவன் நினைக்கிறான். போலீசு இவன் தான் எல்லாமும் ஆள் வைத்து செய்கிறான் என பெரிதாய் சந்தேகிக்கிறது.
பிறகு என்ன நடந்தது என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
****
திரில்லர் ஆனால் நம்மூர் ஸ்டைலில் இல்லையே என பாதியில் நிறுத்திவிட்டு தேடினேன்.. ”The Body” என 2016ல் வந்து வெற்றிப் பெற்ற ஸ்பானிஷ் திரில்லர் படத்தை மீண்டும் எடுத்திருக்கிறார்கள் என தெரிந்தது. ஒரு கொலை. அதற்கு பின்னால் உள்ள மர்மங்கள் என்ற கதை தான். திரைக்கதையிலும், எடுத்தவிதத்திலும் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.
கன்னடத்திற்கும், தமிழுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் எடுத்திருக்கிறார்கள். விசாரணை அதிகாரியாக அர்ஜூன், கோடீஸ்வரியாக மனிஷா கொய்ராலா, கணவனாக ஷாம் என கொடுத்தப் பாத்திரத்தை செய்திருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் ஏதோ படத்தில் குறையாக இருந்தது. ஒருவேளை ஸ்பானிசில் பார்த்தால் அது என்னவென்று தெரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். ராஜா தான் இசை. பின்னணி இசையில் சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு பாடல் நன்றாக இருந்தது. ராஜீவ்காந்தி கொலையை ஒட்டி, ”சைனைடு” என கன்னடத்தில் எடுத்து ”குப்பி” என தமிழில் வந்தப் படத்தை இயக்கிய A.M.R. இரமேஷ் தான் இயக்கியிருக்கிறார்.
யூடியூப்பில் இலவசமாக பார்க்க கிடைக்கிறது. திரில்லர் விரும்பிகள் பார்க்கலாம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment