மார்ச் முதல் வாரம். வெயில் எத்தனை அடித்தாலும், கோவை குற்றாலம் என அழைக்கப்படுகிற சிறுவாணி அருவியின் குளிர்ச்சியை குறைக்கவே முடியவில்லை. அத்தனை குளிர்ச்சியாக இருந்தது. எந்த அருவியிலும் இத்தனை குளிர்ச்சியை நான் உணர்ந்ததில்லை. அருவி நீர் அத்தனை சுவையாக இருக்கிறதே எனக் கேட்டால், உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் என ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.
காவிரியாற்றின் துணை நதியான பவானி ஆற்றின் ஒரு கிளை ஆறாக உள்ளது சிறுவாணி. கோவையின் ஒரு சுற்றுலாத்தலமாகவும், இயற்கை சூழலோடும், அமைதியான இடமாகவும் உள்ளது சிறுவாணி.
கொரனா பாதிப்பால் குற்றாலத்தைப் போலவே இங்கும் மக்களை அனுமதிக்கவில்லையாம். பிறகு கடந்த டிசம்பரில் தான் வரம்பிட்டு மக்களை அனுப்பியிருக்கிறார்கள். இப்பொழுது கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.
கோவையிலிருந்து 37 கி.மீ தூரத்தில் இருக்கிறது. பேருந்து வசதிகள் உள்ளது. அருவி உள்ள பகுதி காடு என்பதால், நம் கொண்டு அனைத்து பொருட்களையும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். யானைகள் நடமாட்டம் உள்ள ஒரு குறிப்பிட்ட தொலைவை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைப் வாங்கி கொண்டு வேனில் ஏற்றிக்கொண்டு போய், இறக்கிவிடுகிறார்கள். அருவி இதோ கொஞ்ச தூரம் தான்! இந்த வந்துருச்சு! இந்தா வந்திருச்சு என சொல்லி சொல்லியே அருவியை அடைந்துவிடுகிறோம்.
இயற்கையான அருவி எல்லாம் மிகுந்த உயரத்தில் இருந்து விழுகிறது. ஆகையால், நம்மை போல சுற்றுலாக்காரர்கள் குளிப்பதற்கு வசதியாக அருவியை போல அடுத்தடுத்து உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். அதில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக உற்சாகமாய் குளிக்கிறார்கள். குடிநீரை சிக்கல் பண்ணக்கூடாது என சோப், சீயக்காய், ஷாம்பூவை எல்லாம் அனுமதிப்பதில்லை. நல்லது தான்.
சிறுவாணி ஆறு தான் கோவை மக்களுக்கு குடிநீர் பெரிய ஆதாரம் என்கிறார்கள். அருவிக்கு மேலே சிறுவாணி அணை இருக்கிறதாம். அணையை பிரட்டிஷ் காலத்தில் கட்டியிருக்கிறார்கள். பிறகு பலப்படுத்தியிருக்கிறார்கள். அங்கு செல்ல வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெறவேண்டுமாம்.
அருகாமையிலுள்ள பிற சுற்றுலாத்தளங்கள் என பரம்பிக்குளம், ஆழியார், சோலையார், பாலார் மற்றும் ஆனமலை வனச்சரகம் இருப்பதாக சொல்கிறார்கள். அடுத்து வரும் பொழுது அங்கு செல்லலாம் என ஆறுதல் சொல்லிக்கொண்டே கிளம்பிவிட்டோம்.
நான் எடுத்த சில புகைப்படங்களுடன், இணையத்தில் கிடைத்தப் புகைப்படங்களும்!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment