திருமுல்லைவாயில் பகுதியில் உள்ளே நுழையும் பொழுது.. பதினைந்து வயது பையன் லிப்ட் கேட்டான்.
பைக்கில் அத்தனை வேகமாகவும், லாவகமாகவும் உட்கார்ந்த முதல் ஆள் அவன் தான்.
"என்ன தம்பி ஸ்கூல் போகலையா?"
"வேலைக்குப் போறேன் அங்கிள்".
(லிப்ட் கேட்ட பொழுது அண்ணன். ஏறி உட்கார்ந்த பிறகு அங்கிளா?!
"ஏன் படிக்கலையா?"
"ஒன்பதாம் வகுப்பு வரை படிச்சேன். பெயிலாகிட்டேன்."
"என்ன பாடம் கஷ்டமாயிருந்தது?"
"தமிழும் ஆங்கிலமும்!"
"இங்கிலீஷ் மீடியமா?"
"இல்லையில்லை. கவர்மெண்ட் ஸ்கூல்ல தமிழ் மீடியத்துல தான் படிச்சேன்."
"மத்த பாடமெல்லாம்?"
"அதுவும் சிரமம் தான்" என்று சொல்லிவிட்டு நெளிந்தான்.
கொஞ்ச தூரம் லிப்ட் கொடுக்கிறதுக்கு எத்தனை கேள்விகள்? மனசுக்குள் கொஞ்சம் திட்டியிருப்பான்.
"கூடப்பிறந்தவங்க?"
"ஒரு அக்கா டிகிரி முடிச்சாட்டாங்க! ஒரு அண்ணா பிளஸ் டூ படிக்கிறான். நான் தான் கடைசி பையன்" என்றான்.
"10 வது வரைக்குமாவது படிச்சிருக்கலாம்லா?"
"படிப்பு வரல்லை! ஸ்கூல்ல இருந்து கூப்பிட்டு பேசனாங்க! வீட்டுல உள்ளவங்களும் படிப்பு வரலைன்னு முடிவு பண்ணி நிறுத்திட்டாங்க!"
"அப்பா என்ன வேலை செய்யிறார்?"
"அப்பா மேஸ்திரி. வீட்டுலயும் பணம் கஷ்டம் இருந்துச்சி! அதனால வேலைக்கு போயிட்டேன்."
"இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சிருக்கலாம் பின்னாடி வருத்தப்படுவடா தம்பி"
"உங்களைப் போல நிறைய பேர் இப்படித்தான் சொல்றாங்க!"
"இப்ப என்ன வேலை செய்ற?"
"ஒரு ஹோட்டலில் வேலை செய்றேன். தினசரி 300 ரூ. சம்பளம்.
"என்ன வேலை பார்ப்ப?"
"காய்கறி வெட்டுறது! உருளைக் கிழங்கு உரிக்கிறது! இப்படி அவங்க சொல்ற வேலை எல்லாம் செய்வேன்!"
"உன் பெயர் என்ன தம்பி?"
அவன் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதால் இறங்கி கொண்டே "சந்தோஷ்" என்றான்.
அவன் முகத்தை இப்பொழுது மீண்டும் பார்த்தேன்.
நிறைய முடி. கண்ணுக்கு கீழே கொஞ்சம் கருவளையம் லேசா கருப்பாக இருந்தது. அந்த வயதுக்கு உரிய வெகுளித்தனம் இல்லை.
பத்தாவது பொது தேர்வு. எழுதினால், பெயிலாவன். பள்ளியின் பெயர் டேமேஜ் ஆகும்!
கொரானா காலம். வறுமை என எல்லாமுமாய் சேர்ந்து எல்லோரும் சேர்ந்து, ஒரு குழந்தை தொழிலாளியை உருவாக்கியிருக்கிறார்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment