வீடு என்பது நிறைய உறவுகளையும், நண்பர்களையும் பார்த்திருக்கிறது. நிறைய சந்தோசங்களை பார்த்திருக்கிறது. அதனாலேயே உணர்வுபூர்வமானதாய் இருக்கிறது. ***
இலக்கியா பிறந்து இருபது நாள் கைக்குழந்தை. அத்தை வீடு அருகே வீடு மாறினோம். அரசு கட்டி, விற்ற வீடுகள். சிங்கிள் பெட்ரூம் தான். அடுத்தவீட்டில் மோட்டார் போட்டால், எங்கள் வீட்டு மோட்டார் ஓடுவது போல அதிரும். அக்கம் பக்கத்து வீடுகளில் என்ன கொழம்பு வைத்தாலும், எங்களையும் தொந்தரவு செய்யும். ஒவ்வொரு வீடும் அத்தனை நெருக்கம்! நல்லா பழகியிருந்தால், நமக்கும் கொடுத்திருப்பார்கள். பெரும்பாலும் வெளியே சுற்றிக்கொண்டிருப்பதால், கொழம்போ, பொரியலோ வாங்கும் அளவிற்கு நெருக்கமாக முடியவில்லை. அவங்க பேசும் பொரணியிலும் பங்கெடுக்கமுடியவில்லை. இதுக்கெல்லாம் இவர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் என நினைத்துவிட்டார்கள்.
பதினாறு வருடங்கள். ஒரே வீட்டில் இருந்தது சென்னையில் சாதனை தான். அத்தைக்கு ராயப்பேட்டையில் பழக்கமான ஒருவருடைய வீடு தான் அது. தரைத்தளம் மட்டும் தான். பிறகு மொட்டை மாடி. அவ்வளவு தான். நாலைந்து வருடத்திற்கு ஒருமுறை தான் வீட்டை வந்து பார்த்து வீட்டு செல்வார். வீடு அங்கேயே இருக்கிறதா! ஏதும் கொஞ்சம் நகர்த்தி கொண்டு போயிருக்கிறார்களா? என்பதை சோதிக்க வருவார். நல்ல வீட்டு ஓனர். ஆனால், கொரானா காலத்தில் எல்லா மாதங்களிலும் கறாராக வாடகை வசூலித்துவிட்டார்.
பகுதியில் உள்ள கோவில் வரி கேட்டால், பொது விசயத்திற்கு வாருங்கள். தருகிறோம் என மறுத்துவிடுவோம். ஆனால், சாமி கும்பிட்டு எல்லா வீட்டுக்கும் பிரசாதம் தரும் பொழுது எங்களுக்கும் தருவார்கள். நாங்க வரி கொடுக்கவில்லையே என நினைவுப்படுத்தினால், பரவாயில்லை! என்பார்கள். வரி கொடுக்கவிட்டாலும், ”கடவுள் ஆசி” நமக்கு உண்டு.
சாமி கும்பிட மாட்டோம் என தெரிந்தாலும், கெங்கை அம்மனுக்கு கூழ் காய்ச்சினால், பக்கத்து வீட்டுக்காரர்கள் அன்போடு தருவார்கள். விசேச நாட்களில் சின்ன சின்ன பலகாரங்களும் வரும். லெனின் பிறந்தநாளில், ரசிய புரட்சி நாளன்று அந்த நாட்களின் சிறப்பைச் சொல்லியே இனிப்பு கொடுக்கவேண்டும் என நினைப்போம். ஆனால், அந்த நாட்களில் தான் மற்ற எந்த நாளையும் விட அதிகமான வேலைகளில் ஓடிக்கொண்டு இருப்போம். இரவு பதினோரு மணிக்கு வீடு வந்து சேருவோம்.
தேர்தல் சமயங்களில் வாக்குக்கு பணம் தந்தால் எங்கள் வீட்டுக்கு தப்பித்தவறி கூட வரமாட்டார்கள். மக்கள் ஏதோவிதத்தில் நம்மை புரிந்துவைத்திருக்கிறார்கள். இன்னும் கவனம் கொடுத்து சுற்றி உள்ள மக்களோடு பழகியிருக்கவேண்டும் என கருதுகிறேன்.
எங்கள் வீட்டு மொட்டை மாடி. அந்த பகுதி பிள்ளைகளுக்கு பிடிக்கும். எங்கள் தெருவில் உள்ள மொட்டை மாடிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். மேலே மேலே வீடுகளை எடுத்து கட்டிவிட்டார்கள். அப்படியே இருந்தாலும், விளையாட அனுமதிக்கமாட்டார்கள். எதிர்த்த வீட்டு கஞ்சர் அவர் மொட்டை மாடியில் விளையாட அனுமதிக்கமாட்டார். (கஞ்சனா இருந்தாலும் பக்கத்துவீட்டுக்காரர் என்பதால் மரியாதை) நீங்க இல்லாத பொழுது இப்படி விளையாடினார்கள். அப்படி சேட்டை செய்தார்கள் என நாங்கள் வரும் வரை காத்திருந்து போட்டுக்கொடுப்பார். பிள்ளைகள் என்றால் அப்படித்தான். பார்த்துக்கலாம் என்பேன். கடுப்பாயிடுவார். வாசலில் விளையாடுவார்கள். தண்ணீர் வேண்டுமென்றால் உள்ளே வந்து கேட்பார்கள். குடிப்பார்கள். அங்கு இருக்கும் ஸ்நாக்ஸ் டப்பாவை பார்த்து கைநீட்டுவார்கள். தருவோம். சந்தோசமாய் சாப்பிட்டுவிட்டு ஓடிப்போய் விளையாடுவார்கள்.
எங்கள் வீட்டு வாசலில் முருங்கை மரம் ஒன்று இருந்தது. இலக்கியா அப்பா, கடைக்காரர் இளைய மருமகன் என அழைப்பது போல முருங்கைமரத்து வீட்டுக்காரர்கள் எனவும் பெயரும் உண்டும். எங்களுக்கு முன்னாடி குடியிருந்த அண்ணி வைத்துவிட்டு போன மரமிது. வருடத்திற்கு நாலைந்து சீசனில் கொத்துகொத்தாய் காய்க்கும். காய்கள் நல்ல நீளமாய் இருக்கும். சுவையாகவும் இருக்கும். எங்கள்வீடு, அத்தை வீடு, அண்ணி வீடு தேவை போக அத்தை இருக்கும் வரையில் அவர் வீட்டைச் சுற்றி உள்ளவர்களுக்கு குறைவான விலைக்கு தருவார். மிஞ்சியதை கடையில் போட்டு விற்பனை செய்வார். மரம் என்பது எப்பொழுதும் இலைகளை உதிர்த்துக்கொண்டே இருக்க கூடியது. எங்களை போலவே பக்கத்து வீட்டுக்காரர்களும் பொறுமையாக கூட்டி பெருக்கி அள்ளுவார்கள். ஆகையால், சுற்றி உள்ள மக்களுக்கு மட்டும் ஒவ்வொரு சீசனிலும் காய்கள் விலையன்றி தருவோம். அயர்ன் கடைக்காரர், தெருவில் இருப்பவர்கள், பக்கத்து தெருவில் இருந்து வந்து கேட்டாலும் கீரையும் தருவோம். காய்கள் இருந்தாலும் தருவோம். ஒரு நாளும் நாங்கள் காசு வாங்கியதேயில்லை.
அந்த வீட்டில் இத்தனை ஆண்டுகள் இருந்ததற்கு முக்கிய காரணம். அடுத்த தெருவில் குடியிருக்கும் எங்க அத்தை, மாமா தான். நாங்கள் இருவரும் வேலைகள் என போய்விட்டால், இலக்கியாவை மிகுந்த அக்கறையோடு கவனித்துக்கொண்டது அவர்கள் தான். வீட்டில் என்ன சமைத்தாலும் எங்களுக்கும் வந்து தருவார். அப்படிப்பட்ட அத்தை கொரானாவின் இரண்டாவது அலையில் நாலைந்து தெருக்களில் கொரானா அறிகுறியே இல்லாத பொழுது கொரானாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு சென்றவர். முப்பது நாட்களுக்கும் மேலாக கடுமையாக போராடியவர், அவர் உடல் தான் இறுதி மரியாதைக்காக வீடு வந்து சேர்ந்தது.
வீடு என்பது நிறைய உறவுகளையும், நண்பர்களையும் பார்த்திருக்கிறது. நிறைய சந்தோசங்களை பார்த்திருக்கிறது. அதனாலேயே உணர்வுபூர்வமானதாய் இருக்கிறது. புதிய வீட்டிற்கு போவதின் அவசியம் கூட அத்தை இறந்ததால், மாமாவை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதால் தான் நகர்கிறோம். தூரமாக இல்லை. அடுத்த தெருவிற்கு தான்.
வீட்டில் அத்தியாவசிய பொருட்களை தவிர எதுவும் இல்லாததால், ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிட்டோம். வீட்டில் உள்ள பொருட்களை விட, புத்தகங்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஆகையால், அதுவும் சுமையாக தெரியவில்லை. மாற்றுவதற்கு அக்கா மகன் முத்துசெல்வமும், தோழர்களும் பெரிதும் உதவினார்கள்.
ஆகையால், நண்பர்களும், உறவினர்களுக்கும் இதையே தகவலாக சொல்லிக்கொள்கிறேன். பழைய வீட்டுக்கு தவறியே போனாலும் கூட புதிய வீட்டுக்கு அவர்களே வழிகாட்டுவார்கள். புதிய வீட்டிற்கும் தெரிந்த ஒரு குடும்பம் தான் வருகிறது.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment