> குருத்து: சென்னை : இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

August 22, 2022

சென்னை : இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


மதுரையை சுத்திய கழுதை வேறு எங்கும் போகாது என்பார்கள். முப்பது வயது வரை மதுரையில் தான் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்படியே இருந்துவிடுவேன் என நம்பிக்கொண்டிருந்தேன். பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து சேர்ந்தேன்.


சிலர் சென்னை முதலில் வாட்டும். பிறகு நல்ல வாழ்க்கை தரும் என்கிறார்கள். வந்தநாள் முதல் இன்றைய நாள் வரை எப்பொழுதும் வாட்டியதேயில்லை. நன்றாகவே கவனித்துக்கொண்டது. இந்த மண் எனக்கு வாழ்வையும், நிறைய நல்ல தோழர்களையும், மனிதர்களையும், சொந்தங்களையும் தந்திருக்கிறது.

பிறந்த ஊர் பெருமையெல்லாம் பேசுவதில்லை. ஏதோ ஒரு வார்த்தையில், பேசும் தொனியில் யாரேனும் உற்றுப்பார்த்து சொந்த ஊரை சொல்லி கேட்கும் பொழுது, மண்டையாட்டுவதோடு சரி. தொழிலாளிக்கு வாழும் ஊர் தான் சொந்த ஊர். ஆக சென்னை தான் நமக்கு சொந்த ஊர்.

383 வயது. வந்தவர்களை எல்லாம் சென்னை வரவேற்கிறது. வாழவைக்கிறது. அத்தோடு நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல உணவு தர கொஞ்சம் திணறித்தான் போகிறது. ஒரு மனிதன் உண்ணும் உணவு என்பது செரித்து, சத்துக்களாக மாறி, உடல் முழுவதும் சீராக சென்று சேரவேண்டும். அது தான் ஆரோக்கியம். அது தான் வளர்ச்சி. சத்துக்கள் எல்லாம் தோள்பட்டையில் மட்டும் சேர்ந்தால், அதன் பெயர் வளர்ச்சி அல்ல! கட்டி. உடனே அறுவைச் சிகிச்சை செய்து சரி செய்யப்படவேண்டும்.

அது சென்னையின் பிரச்சனையில்லை. ஆள்பவர்களின் பிரச்சனை, பின்னால் இருந்து ஆட்டுபவர்களின் பிரச்சனை. அதனால் தான் சென்னையில் வாழ்ந்த பூர்வகுடிகளை, அதன் அஸ்திவாரத்திற்கு உழைக்கிற உழைக்கும் மக்களை நகருக்கு வெளியே தூக்கி எறிகிறார்கள். நாம் எப்பொழுதும் ஆளப்படுகிறவர்களின் பக்கம் நின்று தோள்கொடுப்போம். நம்ம சென்னையை நாம் பாதுகாப்போம்.

சென்னைக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
!

0 பின்னூட்டங்கள்: