> குருத்து: பாவமன்னிப்பு (1961)

July 16, 2023

பாவமன்னிப்பு (1961)




ஊரில் வைர வியாபாரி ஒருவர் இருக்கிறார். பேராசைப் பிடித்த ஆள். தன்னிடம் வியாபாரம் செய்த ஒருவரை விஷம் வைத்து கொல்கிறார். போலீசு விசாரணையில், தன் கார் ஓட்டுநரை மாட்டிவிடுகிறார். இதனால், ஓட்டுநரின் குடும்பம் சிதைகிறது. அவருடைய இரு மகள்களும் இரு குடும்பத்தால் தத்து எடுக்கப்பட்டு, வளர்க்கப்படுகிறார்கள்.


ஓட்டுநர் போலீசிடமிருந்து தப்பித்து வைர வியாபாரியை கொலை செய்யும் முயற்சியில் தோற்க, அவர்களில் இரு பையன்களில் இளையவனைத் தூக்கிக்கொண்டு போய் தண்டவாளத்தில் விட்டுவிடுகிறார். அந்த பையனை ஒரு முசுலீம் எடுத்து வளர்க்கிறார்.

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிடுகிறார்கள். வைர வியாபாரியின் பையன் சொந்த ஊரிலேயே போலீஸ் அதிகாரியாகிறார். அவர் ஓட்டுநரின் மூத்தப் பெண்ணை காதலிக்கிறார். முசுலீம் பாய் தத்தெடுத்த பையன் ஊருக்கே மருத்துவம் பார்க்கும், நல்லது, கெட்டதுகளில் பங்கேற்கும் இளைஞனாகிவிடுகிறார். ஓட்டுநரின் இரண்டாவது பெண்ணான கிறித்துவர் எடுத்து வளர்க்கும் பெண்ணை காதலிக்கிறார்.

வைரவியாபாரி திருந்தியவராயில்லை. கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாழும் மக்களை காலி பண்ணி, ஒரு முதலாளிக்கு விற்பதற்கு ஏற்பாடு செய்கிறார். தன் செயல்களுக்கு தடையாய் இருக்கும் யாராயிருந்தாலும், என்ன வேண்டுமென்றாலும் செய்ய துணிகிறார்.

இறுதியில் என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***

படத்தில் சிவாஜி, தேவிகா, ஜெமினி, சாவித்திரி, எம்.ஆர். ராதா என பல முக்கிய கதாப்பாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒருவர் பேட்டியில் இரு நாயகர்கள் நடிப்பது குறித்து சொல்லும் பொழுது, அந்த காலத்தில் அது இயல்பாக நடந்தேறியிருக்கிறது. இந்தப் படம் போல பல படங்களில் இயல்பாக நடித்திருக்கிறார்கள். இன்றைக்கு மலையாள திரையுலகில் அந்த பண்பாட்டை இன்னும் கடைப்பிடித்துவருகிறார்கள் என தெரிகிறது.

சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, தேவிகா இன்னும் சில குணச்சித்திர நடிகர்கள் என தேர்ந்த நடிகர்கள் பலர் இருந்தாலும், மொத்தப் படத்தையும் தன் வில்லத்தனமான நடிப்பாலும், வசனத்தாலும், ஆக்கிரமிப்பது எம்.ஆர். ராதா தான். துவக்கத்தில் இருந்து அவ்வளவு வில்லத்தனமாக நடித்துவிட்டு, இறுதியில் திருந்துவது எல்லாம் நேர்மறையான முடிவுக்கு வேண்டுமென்றால், ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருக்கிறது.

சிவாஜிக்கு அத்தனை சாந்தமான பாத்திரம். மக்களுக்கு தொண்டாற்றும், வழிகாட்டும் பாத்திரம். அப்படிப்பட்டவர் ஓரிடத்தில் எம்.ஆர். ராதாவிற்கு எதிராக துப்பாக்கியை காட்டி மிரட்டுவது, சரியாக போலீசு வந்து அவரை கைது செய்து அழைத்துச் செல்வது தான் நம்பும்படி இல்லை. அவரை அவர் வாழும் பகுதியிலிருந்து நகர்த்தினால் தான் அந்த மக்களை அங்கிருந்து அகற்றமுடியும். அதனால் சிறைக்கு அனுப்ப இயக்குநர் முடிவு செய்துவிட்டார். அவ்வளவு தான்.

படத்தில் பல்வேறு மதத்தினர் ஒரே பகுதியில் ஒன்றாக கலந்து வாழ்கிறார்கள். அப்பொழுதும் அப்படித்தான். இப்பொழுதும் அப்படித்தான். இடையில் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், குறிப்பாக இந்துத்துவ கருத்தை வைத்து அரசியல் செய்வதால் அந்த ஒற்றுமையில் ஒரு சுணக்கம் வந்திருக்கிறது. அதை நம்முடைய ஒற்றுமையால் அவர்களை ஓரம்கட்டுவோம்.

”அத்தான் என்ன அத்தான்”, “எல்லோரும் கொண்டாடுவோம்”, “காலங்களில் அவள் வசந்தம்”, ”பாலிருக்கும் பழமிருக்கும்”, “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்”, “வந்த நாள் முதல்” என படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் எல்லா பாடல்களுமே சிறப்பு. பீம்சீங் இயக்கியிருக்கிறார்.

படம் மூன்று மணி நேரம் ஆறு நிமிடங்கள் ஓடுகிறது. தெளிவான தரத்தில் யூடியூப்பிலேயே இலவசமாக பார்க்க கிடைக்கிறது.

0 பின்னூட்டங்கள்: