கவிஞர் ஞானக்கூத்தன் வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு என்றொரு கவிதையை எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையில் வருவது போல எனது பள்ளி நாட்களில் அறிவியல் பாடம் நடத்தும் போது எலும்புக் கூடு ஒன்றை வகுப்பறைக்குக் கொண்டுவருவார்கள்.
காரிடாரில் எலும்புக்கூடு போவதைக் காண வேடிக்கையாக இருக்கும்.
வகுப்பறைக்குள் டார்வின் சிந்தனைகள் நுழைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. இன்று பரிணாமக் கோட்பாடு முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. டார்வினின் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் உருவாகி மரபணு ஆய்வுகள் வழியே பரிணாமத்தை விளக்குகிறார்கள். இன்று பரிணாமவியலில் நடந்துள்ள பாய்ச்சல் நினைத்துப் பார்க்க முடியாதது.
ஆனால் டார்வின் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்தது எளிதாகயில்லை. மத நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்பை மீறியே டார்வின் கோட்பாடுகளை ஆசிரியர்கள் பள்ளியில் கற்பித்தார்கள். இதற்காக அறிவியல் ஆசிரியர்கள் கேலி செய்யப்பட்ட்டார்கள். தண்டிக்கபட்டார்கள். நீதி விசாரணை நடைபெற்றிருக்கிறது.
அப்படியான ஒரு நீதி விசாரணையை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்டதே Inherit the Wind திரைப்படம்.
ஆசிரியர்கள் அவசியம் காண வேண்டிய திரைப்படம்.
அமெரிக்காவில் 1925ம் ஆண்டு ஜான் டி. ஸ்கோப்ஸ் என்ற பள்ளி ஆசிரியர் வகுப்பில் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டினை கற்பித்த காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதி விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் மாநில சட்டத்தை மீறியதற்காகவும் தெய்வ நிந்தனைக்காகவும் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது
இந்த வழக்கில் இருதரப்பிலும் இரண்டு முக்கியப் பிரபல வழக்கறிஞர்கள் பங்கேற்றார்கள். பரிணாமக் கோட்பாடு சரியா. தவறா அதை வகுப்பில் கற்பிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.
இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்டதே Inherit the Wind திரைப்படம். ஜெரோம் லாரன்ஸ் மற்றும் ராபர்ட் எட்வின் லீயின் நாடகத்தைத் தழுவி, ஸ்டான்லி கிராமரால் உருவாக்கபட்டுள்ளது.
வகுப்பறை சுதந்திரம் குறித்து பேசும் இப்படம் ஆசிரியர் எதைக் கற்பிக்க வேண்டும் எதை கற்பிக்க கூடாது என்பதை யார் முடிவு செய்வது ஏன் மதம் இதில் தலையிடுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
அமெரிக்காவின் ஹில்ஸ்போரோ நகரிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் டார்வினை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது காவலர்கள் உள்ளே நுழைந்து கைது செய்கிறார்கள். ஆசிரியருக்கு வால் இருக்கிறதா என்று கேலி பேசுகிறார்கள். ஆசிரியரின் செயலை நகரமக்கள் கண்டிக்கிறார்கள். அவரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்கிறார்கள். அந்த வழக்கு விசாரணையில் இரண்டு முக்கிய வழக்கறிஞர்கள் எதிரெதிராக களம் இறங்குகிறார்கள். மதமும் அறிவியலும் நேரடியாக மோதிக் கொள்ளும் நீதிமன்ற வாதங்கள் அபாரமாகவுள்ளன.
வழக்கறிஞர் டிரம்மண்ட் ஒரு காட்சியில் “fanaticism and ignorance is forever busy, and needs feeding.“ என்று சொல்கிறார். அது இன்றைக்கும் பொருந்தக்கூடியதே.
அடிப்படைவாதத்தை நேரடியாகக் கேள்வி கேட்கும் படம் என்ற விதத்தில் இப்படம் முன்னோடியானது. அறிவியல் உண்மைகளை எவராலும் மறைத்துவிட முடியாது என்பதற்கு இப்படமே சாட்சியம்.
ஸ்பென்சர் டிரேசியின் நடிப்பு மற்றும் எர்னஸ்ட் லாஸ்லோவின் ஒளிப்பதிவு மிகுந்த பாராட்டிற்குரியது.
- எஸ். இராமகிருஷ்ணன்,
எழுத்தாளர்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment