தமிழகத்தில் அருவிகளுக்கு பெயர் பெற்றது குற்றாலம்.
குற்றாலத்தில் இருந்து 25கிமீ செங்கோட்டை வழியாக போனால் கேரளாவைத் தொட்டு, கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவில் உள்ள பாலருவியை அடைந்து விடலாம்.
காட்டுக்குள்ளே நான்கு கிமீ போனால் தான் அருவியை அடைய முடியும்.
காடு என்பதால், காட்டு விலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால், நாம் கொண்டு செல்லும் எந்த வண்டியையும் உள்ளே அனுமதிப்பதில்லை. நடந்து செல்லவும் அனுமதியில்லை.
கேரள அரசு 50 இருக்கைகள் கொண்ட பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 10 நிமிடங்கள் பயணிக்கிறோம்.
பெரியவர்களுக்கு போக, வர ரூ.70 வசூலிக்கிறார்கள். குழந்தைகள், மாணவர்களுக்கு கொஞ்சம் குறைவான கட்டணம் வசூலிக்கிறார்கள்.
அருவி என்றாலே சீசனில் தான் தண்ணீர் விழும். வார நாட்களில் மிதமான கூட்டம், வார இறுதிகளில் நல்ல கூட்டமும் இருக்கிறது. கூட்டத்திற்கேற்றவாறு காத்திருக்கும்படி ஆகிவிடுகிறது.
உள்ளே கொண்டு போய், இறக்கிவிட்டால்... நானூறு மீட்டர் நடந்து சென்றால்... பாலருவியை அடைந்துவிடுகிறோம்.
300 மீட்டர் உயரத்தில் இருந்து பாலை ஊற்றியது போல அருவி அழகாய் கொட்டுகிறது. அதனால் தான் பாலருவி.
பாதை கொஞ்ச தூரம் தான். ஆனால் எளிது அல்ல! வயதானவர்கள், நோயுற்றவர்கள் அந்த பாதை வழியாக கடந்து அருவியில் குளிப்பது சிரமம்.
சாப்பிட கடைகள் ஏதும் இல்லை. டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஐஸ் கிரீம் விற்கிறார்கள். விலை அளவாகத்தான் இருக்கிறது.
நல்ல குளிர்ச்சியான பகுதி. நல்ல அருவி. நல்ல குளியல். நிச்சயம் போய்வரலாம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment