> குருத்து: Will you be there (2016) தென்கொரியா - Feel Good Movie

July 16, 2023

Will you be there (2016) தென்கொரியா - Feel Good Movie



நாயகன் ஒரு மருத்துவர், தன் கல்லூரி செல்லும் பிரியத்துக்குரிய மகளுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு புற்றுநோய் இருக்கிறது. எப்பொழுது வேண்டுமென்றாலும் செத்துபோய்விடும் நிலையில் இருக்கிறார்.


கம்போடியாவில் மருத்துவ முகாம் சென்றிருந்த பொழுது, கண் தெரியாத ஆதிவாசி ஒருவரின் பேத்திக்கு உதவும் பொழுது, நன்றிக்கடனாக அவர் (மந்திர) மாத்திரைகளைப் போல இருக்கும் ஒரு சின்ன பாட்டிலைத் தருகிறார்.

அதில் ஒன்றை விழுங்கினால், சரியாக முப்பது வருடங்களுக்கு முன்பாக காலப் பயணம் செய்கிறார். அங்கு தன்னுடைய இளவயதுள்ளவனைப் பார்க்கிறார். எல்லாம் இருபது நிமிடம் தான். மீண்டும் சமகாலத்துக்கு வந்துவிடுகிறார்.

மீண்டும் பயணிக்கிறார். தான் காதலித்த பெண்ணைப் பார்க்க செல்கிறார். இதில் இளவயது நாயகனுடன் பேசும் பொழுது, அவள் ஒரு விபத்தில் இறந்து போகும் ஒரு செய்தியை வாங்கிவிடுகிறான். காதலியைக் காப்பாற்ற வேண்டும் என்கிறான். அவளைக் காப்பாற்றினால், அதற்கு பிறகு ஒருவரை திருமணம் முடித்து பிறந்து, இப்பொழுது தன் மகளாக இருக்கும் அவள் இல்லாது போய்விடுவாள்.

இருவருக்கும் பாதிப்பு இல்லாமல் என்ன செய்வது என்பதை இருவரும் பேசி வைத்துக்கொண்டு நடக்க முயல்கிறார்கள். ஆனால், இயற்கை சில திருப்பங்களை தருகிறது. அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***
காலப்பயணம் குறித்து உலக அளவில் நிறைய படங்கள் வந்துவிட்டன. தமிழிலும் கூட படங்கள் வந்துவிட்டன. முன்பெல்லாம் காலப்பயணம் குறித்து நீட்டி முழக்கிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. சமீபத்தில் பார்த்த ஒரு படத்தில் ஒரு இருட்டான அறையில் போய் ஒரு தேதியை நினைத்துக்கொண்டால், அங்கு போய்விடுவார் என காட்சி வைத்திருந்தார்கள். அது போல இந்தப் படத்திலும், எளிதாக ஒன்றை வைத்திருக்கிறார்கள்.

காலப்பயணத்தில் (என்ற கற்பனையில்) நல்லதும் இருக்கிறது. அபாயமும் இருக்கிறது தானே! இப்பொழுது உள்ள கொஞ்சம் நஞ்சம் நல் வாழ்க்கையும் தொலைந்து போனால் என்ன செய்வது? தனக்கு கிடைத்த நல் (!) வாய்ப்பினை அந்த மருத்துவர் எவ்வளவு புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டார்? அதில் வெற்றி பெற்றரா என்பதை பீல் குட் மூவியாக நகர்த்தியிருக்கிறார்கள். உணர்வுப்பூர்வமாகவும் நகர்த்தியிருக்கிறார்கள்.

ஒரு மனிதனுடைய ஆளுமை கட்டமைக்கப்படுவது என்பது, அவன் வாழ்ந்த வாழ்வியலில் தானே இருக்கிறது. வாழ்க்கையை அதன் திசை வழியில், அப்போதிருந்த மனநிலையில் , சூழலில் வாழ்ந்து, அதன் நல்லது, கெட்டதில் கற்றுக்கொண்டு, அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துவிடுவது தான் சரியானது. என்ன சொல்கிறீர்கள்?

படத்தில் நடித்தவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் ஒரு பிரெஞ்சு நாவலை அடிப்படையாக கொண்டு எடுத்தது என்கிறார்கள். படம் மெதுவாகத் தான் நகர்கிறது. நிறைய நேரம் இருப்பவர்கள் பாருங்கள். இப்பொழுது இணையத்தில் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. நான் நண்பரிடமிருந்து வாங்கிப் பார்த்தேன்.

0 பின்னூட்டங்கள்: