> குருத்து: Koode (2018) மலையாளம் அண்ணனுக்கும் தங்கைக்குமான உரையாடல்

July 13, 2023

Koode (2018) மலையாளம் அண்ணனுக்கும் தங்கைக்குமான உரையாடல்


“உங்களுக்குத் தேவையானது உங்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒரு மனிதர் மட்டுமே. ஆனால் உங்களைக் கண்டுபிடிக்க, நீங்கள் எப்போதும் கடமைகள் மற்றும் தளைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும். அங்கு, அடிவானத்தில், உண்மையான சுதந்திரம் உள்ளது.”

- From Hindustan times

அம்மா, அப்பா, பள்ளி படிக்கும் மாணவன் என சிறுகுடும்பம் அது. மீண்டும் ஒரு மகள் பிறக்கிறாள். அவளை மொத்த குடும்பமும் மகிழ்வோடு வரவேற்கிறது.

இந்த மகிழ்ச்சி எல்லாம் இரண்டு வருடங்கள் தான். அந்த குழந்தை நோயுறுகிறாள். அவளின் நோயைக் குணப்படுத்த மருந்தில்லை அவள் வாழும் வரை வாழட்டும். அதற்கு மருத்துவம் உதவி செய்யும் என சொல்லிவிடுகிறது.

மருத்துவ செலவுகள் அந்த எளிய குடும்பத்தை தலைகீழாய் புரட்டிப்போட்டுவிடுகிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு போய்விடுகிறது. மகனின் பத்தாவது படிப்பை நிறுத்திவிட்டு, அவனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறார்கள். அவனுக்கு படிப்பின் மீது அத்தனை ஆர்வம் இருந்தாலும், தங்கையின் நிலைக்காக அவன் சம்மதித்து செல்கிறான்.

அவளுக்கு வாழவேண்டும் என அத்தனை ஆசை. அத்தனை உற்சாகம். ஆனால், கல்லூரி படிக்கும் பொழுது, அவள் அணைந்துவிடுகிறாள். அவளின் இறப்புக்கு பிறகு நாயகனான சகோதரன் ஊருக்கு வந்துசேர்கிறான்.


தங்கையின் உணர்வுகளால் அவன் உந்தப்படுகிறான். ஆகையால், அவனுக்கு மட்டும் கண்ணில்படுகிறாள். அப்பா வைத்திருந்த ஒரு பழைய வேனை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி வருகிறான். அந்த வேனில் அவனோடு கலகலப்பாக பேசுகிறாள். விவாதிக்கிறாள். சண்டை போடுகிறாள்.

அவனோடு பள்ளிப் படித்த நாயகி, திருமணமாகி, பிறகு விவாகரத்தாகி, இப்பொழுது தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக வேலை செய்கிறாள். அவளின் குடும்பம் பழைய விழுமியங்களோடு இருக்கிறது. நாயகனோடு பேச துவங்குகிறாள். அந்த குடும்பம் சண்டைக்கு வருகிறது.

பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

படம் மனித உணர்வுகளைப் பற்றித்தான் பேசுகிறது. தங்கையைப் பிடிக்கும். தங்கையின் வாழ்வுக்காக தான் அவன் வெளிநாடு செல்லவேண்டிய நிர்ப்பந்தம். ஆகையால் சூழலின் மீது அத்தனை கோபம் அவனுக்கு. அவன் இழந்து போன வாழ்வில் தேங்கி நிற்கிறான். தங்கையோ அந்த தன் வாழ்நாளின் இறுதி தெரிந்துவிட்டதால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் உற்சாகமாய் வாழ்ந்தாள். அண்ணனுடனான உரையாடல் மூலம் அவனையும் நிகழ்காலத்துக்கு இழுத்து வருவது தான் கதை.

நாயகன் பிரித்விராஜ். மென்சோகத்தோடு அலைகிற பாத்திரம். கச்சிதமாக பொருந்துகிறார். துறுதுறுப்பான தங்கையாக நஸ்ரியா. இந்தப் பாத்திரம் வேறு யாருக்கும் இத்தனை பொருந்திபோகும் என தெரியவில்லை. நஸ்ரியாவிற்காக இந்தக் குழு காத்திருந்திருக்கிறது. நாயகியாக பார்வதி. அருமையாக நடித்திருக்கிறார்.

படத்தில் வரும் அந்த வேனுக்கு படத்திலேயே ஒரு காதல் கதை சொல்வார்கள். எனக்கு அந்த வேனைப் பார்த்ததும், Into the wild (2007) கிறிஸ்டோபர் நினைவுக்கு வந்தார். அவர் ஒரு மாணவர். தன் எல்லா அடையாளங்களையும் அழித்துவிட்டு, அலாஸ்காவிற்கு போய், இப்படி ஒரு வேனில் தான் வாழ்ந்து, உயிர் துறப்பார். அது ஒரு உண்மைக் கதை. அதுவும் நல்லப் படம். பாருங்கள்.

Bangalore days இயக்கிய அஞ்சலி தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். நல்ல படம். பாருங்கள். அமேசானிலும், யூடியூப்பிலும் இருப்பதாக இணையம் சொல்கிறது.

0 பின்னூட்டங்கள்: