> குருத்து: On your wedding day (2018) தென்கொரியா ஒரு காதல் கதை

July 5, 2023

On your wedding day (2018) தென்கொரியா ஒரு காதல் கதை



"முதல் காதல் என்பது நடைபயிற்சி போன்றது, நீங்கள் விழ கற்றுக்கொள்ள வேண்டும், அதனால் நீங்கள் சரியாக நடக்க முடியும்."

****

நாயகன் பள்ளியில் படித்துவருகிறான். விளையாட்டு பிள்ளை. அங்கு புதிதாய் ஒரு பெண் வந்து பள்ளியில் சேர்கிறார். அந்தப் பெண்ணை பிடித்துப் போகிறது. இவன் பழக துவங்க, இருவரும் நட்பாகிறார்கள். பிறகு காதலாகிறார்கள். திடீரென அவள் ஒரு நாள் காணாமல் போகிறாள்.

காரணம் - அவளின் அப்பா ஒரு பெருங்குடிகாரர். குடும்பத்தை பெரிய தொந்தரவு செய்கிறார். அதனால் அம்மாவும், பெண்ணும் (தலைமறைவாக) தனியாக வாழ்கிறார்கள். அந்த ஆள் துப்பறிந்து இவர்களை கண்டுபிடிக்கும் பொழுது, பெரிதாக பிரச்சனை செய்கிறார். அதற்கு பிறகு இன்னொரு ஊர் என நகர்கிறார்கள்.

பெரும் சோகமாகிறான். ஒருநாள் தலைநகர் சியோலில் ஒரு கல்லூரிப் புகைப்படத்தில் எதைச்சையாக பார்க்கிறான். காலில் செயினைக் கட்டி, மல்லுக்கட்டி படித்து, சியோலில் உள்ள கல்லூரியில் படிக்க நுழைவுத் தேர்வில் வெற்றியும் பெறுகிறான். சந்தோசமாய் அங்கு போனால், தனக்கு ஒரு காதலன் இருக்கிறான் என சொல்லும் பொழுது, வருத்தப்படுகிறான். இருந்தாலும் அதை காண்பித்துக்கொள்ளாமல் பழகிவருகிறான். அந்த புதிய காதலன் ஒரு பிராடு என தெரிந்ததும், மீண்டும் இருவரும் நெருங்குகிறார்கள்.

இப்படி நெருங்குவதும், காரணங்களால் விலகி செல்வதுமாக இருக்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

****

பள்ளி, கல்லூரி, அதற்கு பிறகான வாழ்க்கை என பத்து ஆண்டுகள் இருவருடைய காதலைப் பற்றித்தான் படம் பேசுகிறது. அவர்களுக்குள் இருக்கும் காதல், மோதல், ஊடல் தான் கதை. அதை நன்றாக செய்திருக்கிறார்கள்.


இந்த காதல் ஜோடி 30 வயது தாண்டியவர்கள். ஆனால், நடிப்பிலும், காட்சிகளாலும் மாணவர்கள் என நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். மற்றவர்களும் சிறப்பு.

உறவுகளில் காதலும் உண்டு, ஊடலும் உண்டு. சில சமயங்களில் ஊடல்களை காதலோடு சரியாக கையாள தெரிந்திருக்கவேண்டும். இல்லையெனில், உறவுகளில் என்னென்ன சிக்கல் வரும் என்பதை நன்றாக காண்பித்திருக்கிறார்கள்.

ஒரு காதல் பீல் குட் படம். வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள். இப்பொதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை என இணையம் சொல்கிறது. வேறு வழிகளில் முயலுங்கள். நான் ஒரு நண்பரிடமிருந்து முன்பு வாங்கி வைத்திருந்தேன். இப்பொழுது தான் பார்த்தேன்.

"உன்னால் தான் ஒரு புதிய கனவை கண்டேன். உன்னை சந்தித்திராவிடில், என் வாழ்க்கையை வீணடித்திருக்கலாம். காதலால் நீ என்னை ஒரு மனிதனாக்கிவிட்டாய். என் வாழ்க்கையில் திடீரென்று தோன்றியதற்கு நன்றி.”

0 பின்னூட்டங்கள்: