> குருத்து: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி - கள்ளனிடமே சாவி!

August 18, 2008

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி - கள்ளனிடமே சாவி!


முன்குறிப்பாக : கடந்த ஜீலை 30 தேதியன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் இந்த செய்தியைப் பார்த்ததும்... இதன் முக்கியத்தும் கருதி உடனடியாக பதிவு எழுத வேண்டும் என நினைத்தேன். தாமதமாகி விட்டது

இப்பொழுது தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்வதால், பல செய்திகள் அருகில் இருந்து அறிய முடிகிறது.

நிறுவனம் தொடங்கி, 10 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்தால் E.S.I யும், 20 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் பொழுது பி.எப். யும் நிறுவனம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அரசு விதி. (இந்த விதியே அபத்தமானது)

ஆனால், நடைமுறையில், 20 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்தாலும், எந்த ‘நல்ல’ முதலாளி கூட தொழிலாளர்களுக்கு E.S.I, பி.எப். வழிவகை செய் வதில்லை. காரணம் – லாப சதவிகிதம் குறைந்துவிடும். கொடிபிடித்து சங்கம் வைத்துவிடுவார்கள் என்பது தான். பல முதலாளிகள் இதை வெளிப்படையாகவே சொல்கிறார்கள். மேலும், பாதிக்குப் பாதி தான் தொழிலாளர்களை கணக்கு காட்டுகிறார்கள்.

அரசு அதிகாரிகள் இந்த நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டுமே! அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று பார்த்தால்.... அவர்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தப்புக்கு தகுந்த லஞ்சம் வாங்கிகொள்கிறார்கள். வாங்கியதற்கு கைமாறாக எப்படி கணக்கை சரி செய்வது என்ற டெக்னிக்கையும் சொல்லி தருகிறார்கள்.

ஏறிக்கொண்டே இருக்கிற விலைவாசியில், 2000, 3000 சம்பளத்தில் வாழ்வதற்கே பிரச்சனையாக இருக்கிற பொழுது, எதிர்கால சேமிப்பாக பி.எப். பிடித்தம் செய்வதை, பல தொழிலாளர்களே வேண்டாம் என்கிறார்கள்.

இப்படி பல கண்டங்களை தாண்டித்தான், 4 கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் பி.எப். பில் இணைந்திருக்கிறார்கள். இந்த பணத்திற்கு கி.பி. 2000 க்கு முன்பு வரை, வருட வட்டியாக 12% வழங்கிவந்தார்கள். வழக்கம் போல, பணவீக்கத்தை காரணம் காட்டி, கி.பி. 2000க்கு பிறகு, 8.5% ஆக குறைத்துவிட்டார்கள்.

அதற்கு பிறகு, தொழிற்சங்கங்கள் “குறைத்ததை தா!” என பல ஆண்டுகளாக அரசிடம் கோரிவருகிறார்கள். இப்பொழுது தொழிலாளர்களுடைய பணத்தைச் பெருமுதலாளிகளிடமும், பன்னாட்டு முதலாளிகளிடமும் பங்குச் சந்தையில் சூறையாட தூக்கிகொடுத்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே, ICICI Prudential, HSBC மட்டும் தான் பரிசீலனையில் இருந்திருக்கிறார்கள். கடைசி நேரத்தில், ரிலையன்ஸ் கேப்பிடலை திணித்து இருக்கிறார்கள். கோடிகளை செலவழித்து எம்.பி.க்களை விலைக்கு வாங்கி, மன்மோகன்சிங் அரசை காப்பாற்றியதற்கு அன்பு பரிசு.

மேலும் இது தொடர்பான செய்திகளை பின்வருகிற துண்டறிக்கை விரிவாக விளக்குகிறது.

நாடுமுழுவதும் இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை அறிவித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
அனைத்து தொழிலாளர்களர்களும், இதன் விபரீதம் உணர்ந்து போராட்டத்துடன் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்.

- சாக்ரடீஸ்

*******
அன்பார்ந்த தொழிலாள தோழர்களே!

முதுகெலும்பு உடைய பல ஆண்டுகள் வேலை செய்தும் போதிய சம்பளமோ, வேலை நிரந்தரமோ இல்லாமல் லட்சக்கணக்கான தொழிலாள்ர்கள் இருக்கின்றனர். எந்த உரிமையைக் கேட்டாலும் முதலாளிகள் வேலையை விட்டே துரத்தி விடுகின்றனர். தொழிலாளர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்சம் பாதுகாப்பே சேமநலநிதி எனப்படும் பிராவிடண்ட் பண்ட் சேமிப்புதான்.

நம்முடைய எதிர்கால பாதுகாப்பு கருதி நமது சம்பளத்தில் பிடித்தம் செய்து அரசு அலுவலகத்தில் சேமிக்கப்படும் இந்த PF பணத்தை வேலையில் இருந்து ஓய்வு பெறும் போதோ அல்லது வேலையை இழக்கும் போதோ எடுத்துக் கொள்கிறோம். நம்முடைய சம்பளத்தில் பிடிக்கும் தொகைக்கு சமமாக முதலாளிகளும் பங்குத் தொகை போடவேண்டி இருப்பதால் லாபக் கணக்கு பார்க்கும் முதலாளிகள் பலர் PF பிடித்தம் செய்வதே இல்லை. மேலும் PF பிடித்தம் செய்தால் நாம் வேலை செய்ததற்கு ஆதாரமாகிவிடும் என்பதால் சில முதலாளிகள் PF பிடிக்காமல் ஏய்த்து வருகின்றனர். கொஞ்சமாவது பிடிக்கப்ப்டும் PF பணத்திலிருந்து நம்முடைய வயதான காலத்தில் பென்சன் வாங்குகின்ற வசதியும் உள்ளது. இந்த PF பணத்துக்கும், பென்சனுக்கும் வேட்டு வைத்துவிட்டது, மன்மோகன்சிங் அரசு.

இந்தியாவில் PF சட்டம் நடைமுறைக்கு வந்த 1952-ம் ஆண்டு முதல் தொழிலாள்ர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EFPO) மொத்தமாக சேகரிக்கிறது. இப்படி சேகரிக்கப்படும் பணத்தை அரசு வங்கியான ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கிறது. ஸ்டேட் வங்கியானது மொத்த பணத்தையும் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து தொழிலாளர்களின் சேமிப்புக்குரிய வட்டியை வழங்குவதுடன், பென்சன் வழங்குவது போன்றவற்றையும் மேற்கொள்கிறது.

இந்த பணியை செய்வதற்காக EFPO அமைப்பு ஸ்டேட் வங்கிக்கு பராமரிப்பு நிதி தருகிறது. ஸ்டேட் வங்கி அரசு வங்கி என்பதால் அங்கு ஒப்படைக்கப்படும் தொழிலாளர்களது பணத்துக்கு பாதுகாப்பு உத்திரவாதமானது. மேலும் ஸ்டேட் வங்கி பல்வேறு அரசுத் துறைகளிலும், மக்கள் நலத்திட்டங்களிலும் முதலீடு செய்வதால் தொழிலாளர்களது பணம் ஓரளவுக்கு மக்கள் சேவையில் ஈடுபட்டது என கூறலாம்.

1994-ல் நரசிம்மராவ் - மன்மோகன் - சிதம்பரம் கும்பல் ‘காட்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தனியார்மயம் - தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலணியாதிக்க சேவையில் விசுவாசமாக ஈடுபட்டது. உலக வங்கியின் கைக்கூலியும், முதலாளிகளின் சேவகனுமான மன்மோகன் தற்போது பிரதமராக உள்ள சூழலில், இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகளை முன்பைவிட வேகமாக செயல்படுத்தி வருகிறது. எல்லா பொதுத்துறைகளையும் தனியாரிடம் விற்பது அல்லது அவற்றுக்கு போட்டியாக பன்னாட்டு / உள்நாட்டு தனியார் நிறுவனங்களை கொம்புசீவி இறக்கி விட்டு பொதுத்துறையை ஒழிப்பது என்கிற துரோகத்தனத்தில் மன்மோகன் – சிதம்பரம் ஜோடி கனகச்சிதமாக ஈடுபட்டுவருகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக வலது – இடது போலிக் கம்யூனிஸ்டுகளின் தயவில் ஆட்சியை நடத்தியபோது பொதுத்துறைகளின் பங்குகளை விற்பது, தனியாரை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபடாத மாதிரி போக்கு காட்டிக் கொண்டிருந்தது காங்கிரசு கும்பல். ஜூலை 22-ல் நடந்த நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பணம் கொடுத்தும், பதவி ஆசை காட்டியும் ஆட்சியைத் தொடர்வதை உத்திரவாதப்படுத்திய பிறகு அப்பட்டமான முறையில் தனியார்மய தாராளமய – உலகமயக் கொள்கையை அமலாக்கத் துவங்கிவிட்டது.

எம்பிக்களை விலைக்கு வாங்க துணை செய்த தரகு முதாளிகளுக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்கிற விசுவாசத்தில் PF பணத்தில் கைவைத்துள்ளது. 56 ஆண்டுகளாக ஸ்டேட் வங்கியின் பராமரிப்பில் இருந்த இரண்டரை லட்சம் கோடி PF பணத்தை பராமரிக்கும் வேலையை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடன்சியல், HSBC போன்ற தனியார் கம்பெனிகளுக்கு பங்கு பிரித்து தந்துள்ளது.

இப்படி தந்ததன் மூலம் முன்பு ஸ்டேட் வங்கிக்கு பராமரிப்பு கட்டணமாக தந்ததில் இரண்டு கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்ன அயோக்கியத்தனமாக மத்திய அரசு கூறியுள்ளது. இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தை சூதாட்டத்தில் இறக்கப்போகும் ரிலையன்ஸ் உள்ளிட்ட 3 தனியார் நிறுவனங்களும் நாள் ஒன்றுக்கு பல கோடியை லாபமாக சுருட்டப் போகிறார்கள்.

ஸ்டேட் வங்கி பெயரளவிற்காவது நாட்டு நலத்திட்டங்களில் முதலீடு செய்த தொழிலாளர்களின் பணத்தை தரகு முதலாளிகளும், பன்னாட்டு நியாதிக்க கும்பல்களும் சூதாட்டத்தில் ஈடுபடுத்துவதும், அதற்கு மத்திய அரசு வழிவகை செய்வதும் எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்! யார் பணத்தை யார் சூதாடுவது? மன்மோகன் நிதியமைச்சராக இருந்த காலத்தில் பங்குச்சந்தை தரகன் அர்சத் மேத்தாவின் சூதாட்ட திருவிளையாடலில் பல லட்சம் கோடி சூறையாடப்பட்டதைப் போல நம் சேமிப்பும் சூறையாடப்படும்.

தொலைத் தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் பல்லாயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தது வரலாறு. விமானம் வாங்கியதில் பலகோடி வரி ஏய்ப்பு, அம்பானி சகோதரர்கள் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் மோசடியையே முதலீடாகப் போடும் திறன் கொண்டவர்கள். வங்கி மற்றும் காப்பீடு போன்ற துறைகளில் செயல்பட்டு வரும் ஐ.சி.ஐ.சி.ஐ., மோசடிக்குப் பெயர் பெற்றது. நுகர்வோர் நீதிமன்றங்கள் பலவற்றில் இழப்பீடு வழங்க உத்திரவிடப்பட்டு தண்டனை பெற்ற ‘புகழ்’ வாய்ந்தது. இவர்களிடம் தான் நம்முடைய சேமிப்பு ஒப்படைக்கப்படுகிறது.

பங்குச் சந்தை சூதாட்டத்திலும், கோல்மால் வேலைகளிலும் நம்முடைய பணம் ஏப்பம் விடப்படப்போவதை நாம் அனுமதிக்க முடியுமா? காங்கிரசு – பிஜேபி உள்ளிட்ட எல்லா ஓட்டுக் கட்சிகளும் இந்த துரோகத்தனத்தில் ஒரே அணியாகத்தான் உள்ளன. வாழ்வுரிமையை இழந்து வரும் உழைப்பாளி மக்கள் மட்டும் எதிரணியாக உள்ளோம். ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தி வரும் மறுகாலனியாதிக்க துரோகத்தை முறியடிக்க நக்சல்பாரி புரட்சியாளர்களின் பாதையில்; புதிய ஜனநாயகப் புரட்சிப்பாதையில் அணிதிரள்வது ஒன்றே நம்முன் உள்ள ஒரே வழி.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
சென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 9444834519, 9444442374

0 பின்னூட்டங்கள்: