> குருத்து: அலைமோதும் மக்கள்! அள்ள நினைக்கும் அரசு

August 29, 2008

அலைமோதும் மக்கள்! அள்ள நினைக்கும் அரசு
சென்னையில் வீட்டு வாடகை எகிறி கொண்டு, எங்கேயோ போய்கொண்டிருக்கிறது. வாடகைத்தர நடுத்தர வர்க்கங்களே திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

வீட்டு சொந்தகாரர்கள் இப்பொழுதெல்லாம், வாடகையை அதிகப்படுத்தி கேட்பதில்லை. மாறாக, காலி பண்ண சொல்கிறார்கள். ரூ. 3000 நாம் தந்து கொண்டிருந்தால், காலி பண்ண வைத்து, புதியவர்களிடம் ரூ. 5000க்கு வாடகைக்கு விடுகிறார்கள்.

பல குடும்பங்களுக்கு, சென்னையில் ஒரு வீடு என்பது கனவாகத் தான் இருக்கிறது. என் நண்பர்களில் இருவர் நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். இருவரும் சேர்ந்து, சென்னையில் வீடு வாங்க நினைத்து, எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது, ஆச்சரியப்படுகிறேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்களின் மனநிலை புரிந்து, அரசு ஒரு திருடன் மாதிரி, மக்களிடமிருந்து முடிந்ததை சுருட்டப் பார்க்கிறது.

கடந்த ஜுலை 31ந் தேதி செய்தித்தாள்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒரு விளம்பரம் செய்திருந்தது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - சென்னை முகப்பேர் ஏரி திட்டப்பகுதியில் மத்திய தர வர்க்கத்தினருக்காக 170 வீடுகள் 1998 - ஆம் ஆண்டு மற்றும் 2002ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தன.

இடைக்காலத்தில் பல்கலை கழக மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு, இப்பொழுது, "உள்ளது உள்ளபடியே உள்ள நிலையில்" (மழையால் வீடு ஒழுகுது, ஓட்டை இருக்கிறது, அதனால் பாம்பு வருகிறது என சரி செய்து கொடுங்கள் என வீட்டு வசதி வாரியத்திடம் யாரும் உரிமை கோரமுடியாது). குறைவான விலையில் ரூ.6 1/4 லட்சத்திலிருந்து 7 1/2 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்திருக்கிறது.

விண்ணப்பம் - ரூ. 110. பதிவு செய்ய ரூ. 400 (BY D.D.) (பணம் திரும்ப தரப்பட மாட்டாது.)

20தேதி வரை 1.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியிருக்கின்றன என பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றன.

கணக்குப் போட்டுப் பார்த்தால்.... 170 வீடுகள் @ 7 லட்சம் எனில்.... ரூ. 12 கோடி

1.5 லட்சம் விண்ணப்பம் விற்பனையெனில் .... 1.5 லட்சம் @ ரூ. 510.... 7 கோடியே 65 லட்சம்

இந்த மாத இறுதிக்குள் 2 லட்சத்தை எட்டிவிடும். அவ்வளவு கூட்டமாம். அப்படியானால்..

அடப்பாவி மக்கா! வீடு விற்காமலே, 10 கோடி லாபம்.

170 வீடுகள் 170 மக்கள் பெற இருக்கிறார்கள். அவ்வளவு தான். ஆனால், 2 லட்சம் மக்களிடம் கொள்ளையடிப்பது எந்த விதத்தில் சரி!

இந்த கொள்ளையை ஊடகங்களில் அம்பலப்படுத்தி, தொடர்ச்சியாய் பேசப்படவும்... முதலவர் கருணாநிதி 22ந் தேதி பதிவுக்கட்டணத்திற்காக வாங்கும் ரூ. 400 பணத்தை, திரும்ப தருவதாக அறிவிப்பு செய்திருக்கிறார்.

இந்த அரசின் மீது இன்னும் நம்பிக்கை வைத்தால், நாம் தாம் பரிதாபத்துக்குரியவர்கள்.

******

பின்குறிப்பு : கூட்டம் அலை மோதி, சுற்றியுள்ள வங்கிகள் தனது அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதை உணர்ந்து, வீ.வ.வாரியத்திற்கு DD தருவதை நிறுத்திவிட்டன. மக்கள் வங்கி வங்கியாக அலைகிறார்கள்.

அடுத்து ஒரு தலை போகிற பிரச்சனை இருக்கிறது. இது நாள் வரையும், வீ.வ.வாரிய அலுவலகங்கள் 4 இடங்களிலேயும், 4 வங்கிகளின் கிளைகள் 20 இடங்களிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்து முடித்துவிட்டார்கள்.

ஆனால், பதிவதோ, வீ.வ.வாரிய 4 இடங்களில் மட்டும். அங்கெல்லாம், கடந்த 1 வாரமாக திருவிழா கூட்டமாம். நாளையும், நாளை மறுநாளும் இன்னும் மக்கள் கூட்டம் அதிகமாகும். அரசு தகுந்த ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையெனில், அடிக்கிற வெயிலில் மக்கள் நின்று, பலர் மயங்கி விழுவர். அதிகபட்சமாக கூட்ட நெரிசலில், சில தலைகள் நசிவது நிஜம்.
பொறுப்பில்லாத அரசு. பாவம் மக்கள்.

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

திரும்ப தருகிறோம் என்பது பெரிய விசயம்.

நல்ல கட்டுரை!