> குருத்து: பங்குச் சந்தையும் குரங்கு கதையும்

November 16, 2008

பங்குச் சந்தையும் குரங்கு கதையும்


அமெரிக்காவின் பங்குச் சந்தையில் நிதி மூலதன கும்பல்கள் கொள்ளையடித்தது தான், இவ்வளவு பெரிய வீழ்ச்சியை அமெரிக்கா கண்டிருக்கிறது.

இந்த ஊழலைப் புரிந்து கொள்ள பங்குச் சந்தையை பற்றிய சில அடிப்படைகள் நமக்கு புரிந்து இருப்பது அவசியம். கீழே வருகிற குட்டிக்கதை பங்குச் சந்தையின் சூதாட்டத்தை கொஞ்சம் புரிய வைக்க முயற்சிக்கிறது.

ஏற்கனவே நான் இந்த கதையை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இருப்பினும் மீண்டும் ஒருமுறை படித்துவிடுங்கள். இனி வருகிற பதிவுகளை புரிந்து கொள்ள மிகவும் அவசியப்படும்.

இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி.

*******

2000 புள்ளிகள் சரிந்தன... சதுரங்கள் சிரித்தன...என பங்குச் சந்தையைப் பற்றி வரும் தகவல்கள் எதுவும் என் மர மண்டைக்கு எட்டியதேயில்லை. வாரச் சந்தையையே புரிந்து கொள்ளாத எனக்கு பங்குச் சந்தையைப் பற்றி எப்படிப் புரியப் போகிறது என்றிருந்த வேளையில்... அது ஒன்றும் சிரமமில்லை என்று ஒரு கதை.

தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்த கிராம மக்களைப் பார்ப்பதற்காக நகரத்திலிருந்து ஒருவன் வந்து சேர்ந்தான். கிராம மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டிய அவன்... தான் குரங்கு வாங்க வந்திருப்பதாகவும்... கிராம மக்கள் குரங்கு பிடித்துக் கொடுத்தால் அதற்கு 10 ரூபாய் கொடுப்பதாகவும் அறிவித்தான்.

இதை நம்பிய மக்களும் இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு குரங்கு பிடிக்கக் கிளம்பினார்கள்.

கொஞ்ச நாளிலேயே அந்தப் பகுதியில் குரங்குகள் குறைந்து போக...

இந்த முறை ஒரு குரங்கிற்கு 20 ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தான் நகரத்திலிருந்து வந்தவன். சில நூறு குரங்குகள் பிடித்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிச் சென்றனர் கிராம மக்கள்.

இதற்கிடையில் அக்கம் பக்கத்திலுள்ள குரங்குகளும் குறைந்து போகவே... குரங்குபிடி தொழிலில் தேக்கம் வந்து சேர்ந்தது.

குரங்குப் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரமாய்ப் பார்த்து...

நன்றாகக் கேளுங்கள்... இந்த முறை நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு குரங்குக்கும் 50 ரூபாய் தரப் போகிறேன். அதன்பிறகு நீங்கள்தான் பெரிய பணக்காரர்கள் என்று அறிவித்துவிட்டு நான் வெளியூர் செல்வதால் நான் வரும்வரை எனக்கு பதிலாக இவர் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்வார் என்று இன்னொரு ஆளையும் அறிமுகப்படுத்தி வைத்து விட்டு கிளம்பினான் நகரத்துவாசி. இம்முறை குரங்குகள் பிடிபடுவது லேசுப்பட்ட விஷயமாக இருக்கவில்லை. தேடிச் சலித்த மக்கள் எதுவும் பிடிபடாது விரக்தியுடன் குரங்குபிடி ஆபீசை நோக்கி சோகமாக வந்தனர். நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த புதிய ஆள் `இதற்கா இவ்வளவு கவலை....? இதோ இந்தக் கூண்டில் இருக்கும் குரங்குகளை நான் உங்களுக்கு வெறும் 35 ரூபாய்க்குத் தருகிறேன்...இதையே நீங்கள் நாளை அந்த ஆள் நகரத்திலிருந்து வந்தவுடன் 50 ரூபாய்க்கு சத்தமில்லாமல் விற்று விட்டு அள்ளிக் கொள்ளுங்கள் உங்கள் பணத்தை' என்றான்.

அதைக் கேட்டவுடன்... அட...பணம் சம்பாதிக்க இவ்வளவு சுலபமான வழியா? குரங்கைத் தேடி அலையாமலேயே இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சியில்... கையில் இருந்த பணம்... சேமித்து வைத்திருந்த பணம்... என எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு குரங்குகளை ஓட்டிச் சென்றனர்.

மறுநாள் காலை குரங்குகளைக் கொடுத்துவிட்டு பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வரலாம் என்று கிராமத்தினர் படையெடுத்துப் போக... அங்கே...

குரங்குபிடி ஆபீசில் பெரிய திண்டுக்கல் பூட்டு ஒன்று அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. அதன் பக்கத்திலேயே லேமினேட் செய்து மாட்டப்பட்டிருந்தது ஒரு கீதாசாரம்: `நேற்று உன்னிடம் இருந்தது இன்று என்னிடம் இருக்கிறது. நாளை அது யாரிடமோ?' என்று.

இப்ப அந்த ஊருல காசுக்குப் பஞ்சம் இருக்கோ இல்லியோ...

ஆனா...

குரங்குக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

எங்கும் குரங்கு. எதிலும் குரங்கு.

- பாமரன்

0 பின்னூட்டங்கள்: