> குருத்து: எஸ்.எம்.எஸ். மூலம் கலெக்டருக்கு கோரிக்கை! வாவ்! என்ன ஒரு அருமையான திட்டம்!

November 20, 2008

எஸ்.எம்.எஸ். மூலம் கலெக்டருக்கு கோரிக்கை! வாவ்! என்ன ஒரு அருமையான திட்டம்!


இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக” என்ற சன் தொலைக்காட்சியின் பில்டப் போலவே, திருவள்ளூர் மாவட்ட வருவாய் நிர்வாகத்தில், எஸ்.எம்.எஸ் மூலம் பொதுமக்கள் மனு கொடுக்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறதாம்.

நமக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பட்டா நகல் வேண்டுமென்றால், கலெக்டருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். அவர்கள் அதை மனுவாக ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு தேவையான சான்றிதழை வீட்டுக்கு தபாலில் அனுப்பி வைத்துவிடுவார்களாம்.

சான்றிதழுக்கான பணம் செலுத்த வேண்டுமே! பி.எஸ்.என்.எல். நிறுவனம் உங்கள் செல்லில் பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்திவிடும். இதன் மூலம் மக்கள் தங்களுடைய வீண் அலைச்சலை தவிர்க்கப் போகிறார்களாம்.

திட்டம் கேட்க காதுக்கு இனிமையாக இருக்கிறது. நடைமுறைக்கு?

இந்த அரசு தரக்கூடிய ஒவ்வொரு சான்றிதழுக்கும் அலைய வேண்டிய அலைச்சல் இருக்கிறதே! சொல்லி மாளாது. ஒரு ரேசன் கார்டுக்கு நான் ஒரு வருடம் அலைந்தேன். 15 முறை போயிருப்பேன். ஒவ்வொருமுறையும், பர்மிசன் சொல்லிவிட்டுப் போவேன். அங்கு கூட்டமோ கூட்டம். கேட்க வேண்டிய நபர் சீட்டில் இருக்காது. பக்கத்து சீட்டிடம் கேட்டால், வருவார் என்பார்கள். 1 மணி நேரம் கழித்து திரும்ப கேட்டால், விடுப்பு எடுத்திருக்கலாம் என குத்துமதிப்பாய் பக்கத்து சீட் பதில் சொல்லும்.

இப்படி பர்மிசன் பலமுறை அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டியதாகிவிட்டது. 10 முறைக்கு மேல் போகும் பொழுது, அலுவலகத்தில், “ரேசன் கார்டுக்கு தானே! போகிறீர்கள். வேறு எங்கும் இல்லையே!” என நக்கலாய் கேட்பார்கள். வாங்காமலே விட்டுவிடலாம் என்றால், ரேசன் கார்டு இருந்தால் தான், கேஸ் சிலிண்டர் தருவேன் எனச் சொல்லிவிட்டார்கள்.

இந்த எஸ்.எம்.எஸ். திட்டத்தில் மிகப்பெரிய ஓட்டை இருக்கிறது. இப்படி பலமுறை அலையவிடுதலுக்கு காரணம் அரசு அலுவலகங்களில் விளையாடும் லஞ்சம் தான். கொஞ்சம் அலையவிட்டால் தான், ‘loss of pay” க்கு பயந்து லஞ்சமே தேறும். அதுவும் நிறைய தேறும் என்ற நிலை இருக்கிறது. அரசு தனக்கு தேவையான பணத்தை மொபைல் பில்லில் பிடித்துக்கொள்வார்கள். ஆனால், லஞ்சப்பணத்தை பற்றி இந்தத் திட்டத்தில் எதுவுமே திட்டத்தில் இல்லையே! இதனால் இந்த திட்டத்தை கிடப்பில் போட 99% வாய்ப்பு இருக்கிறது.

எல்லா அரசு அலுவலகங்களுக்கும் தொலைபேசி வைத்திருப்பார்கள். பல அலுவலகங்களுக்கு சில சில்லறைத் தகவல்களுக்கு தொலைபேசி செய்தால், “Does’not Exist” என்ற குரல் தான் கேட்கும். அல்லது தொலைபேசி ரிங் அடித்துக் கொண்டே இருக்கும். வெறுத்துப் போய்விடுவோம்.

இப்படிப்பட்ட திட்டங்கள் எங்கு நடைமுறைக்கு சாத்தியப்படும் என்றால்... மக்கள் நலம் நாடு அரசாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

பின்குறிப்பு : உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். காதைக் கொடுங்கள். முதலாளிகள் போன் செய்தால் எல்லா அதிகாரிகளும் கட்டாயம் பேசுவார்கள். எப்படி என்கிறீர்களா? அதற்கு நவீன தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது.

அந்த அதிகாரியே முதலாளிக்கு தனது செல்பேசி எண்ணைத் தானே முன்வந்து தருவார். போன் அடித்தால், தவறாமல் எடுப்பார். அவரை டீக்கடைக்கோ அல்லது டாஸ்மார்க் கடைக்கோ முதலாளியோ அல்லது அவரது பிரதிநிதியோ அழைத்தால் உடனடியாக வந்து லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டு போவார். வேலையும் கனக்கச்சிதமாக முடித்தும் தருகிறார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள். இது பெரும்பான்மை உழைக்கும் மக்கள் நலம் நாடும் அரசா? அல்லது ‘முதலாளி’ மக்களுக்கான அரசா?

0 பின்னூட்டங்கள்: