> குருத்து: பந்தய ஒப்பந்தங்கள் – சில குறிப்புகள்

November 30, 2008

பந்தய ஒப்பந்தங்கள் – சில குறிப்புகள்


//புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த ‘அபரிதமான பொருளாதார வளர்ச்சி’-யின் உண்மையான பொருள் என்ன? இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு! அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்பொழுது வந்திருப்பது மாரடைப்பு// - புதிய கலாச்சாரம், அக். 2008.***

பந்தய ஒப்பந்தங்களைத் தான் “நிதி உலகின் பேரழிவு ஆயுதங்கள்” என்கிறார்கள் இதன் பாதிப்பை ஆழமாய் உணர்ந்த பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும். அதில் ஒருவர் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட்.

பேரழிவு ஆயுதங்கள் மட்டுமில்லை. இவைகள் “கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்” என்கிறார் குருமூர்த்தி.

****

இன்று நிதி மூலதன உலகத்தை ஆட்டி வைப்பவை பந்தய ஒப்பந்தங்கள் (Derivatives) தான். பல நிதிக் கருவிகளில் ஒன்றான இந்த பந்தய ஒப்பந்தங்கள் தங்களது மதிப்பை தமது சொந்த, உண்மையான மதிப்பிலிருந்து பெறுவதில்லை; எந்த சொத்து அல்லது தொழில் நடவடிக்கையை (Transaction) வைத்து ஒப்பந்தம் போடப்படுகிறதோ, அதிலிருந்து தனது மதிப்பைப் பெறுகிறது.

எவைகள் மீதெல்லாம் இந்த பந்தய ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன? சில உதாரணங்களை பார்க்கலாம்.

• சரக்குகள்
• பங்குகள்
• கடன் பத்திரங்கள்
• வட்டி விகிதங்கள்
• அன்னிய செலாவணி மாற்று விகிதங்கள்
• பங்குச் சந்தை குறியீட்டு எண்
• பணவீக்க விகிதங்கள்
• தட்பவெட்ப நிலைக் குறியீட்டு எண்கள்

ஒரு உதாரணம் மூலம், இதை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

பங்குகள் மீதான பந்தய ஒப்பந்தம்

டி.வி.எஸ்-ஸின் பங்குகளின் உண்மை விலை ரூ. 10. கடந்த பல ஆண்டுகளில் உற்பத்தியில் ஈடுபட்டு, லாபம் பிரித்து கொடுத்ததில், அதன் இன்றைய மதிப்பு ரூ. 300 என வைத்துக் கொள்வோம்.

டி.வி.எஸ்-ஸின் பங்கு கடந்த மாதத்தில் அதன் மதிப்பு ரூ. 300. இந்த மாதத்தில் அதன் மதிப்பு ரூ. 350 என விற்கிறது. இப்பொழுது பந்தய ஒப்பந்தம் தொடங்குகிறது. அடுத்த மாதம் இதன் விலை ரூ. 400 வரைக்கும் உயரும். எவ்வளவு பந்தயம் என்கிறேன்? நீங்கள் ரூ. 350-ல் தான் நிற்கும். நீங்கள் உயராது என்கிறீர்கள். இருவருக்கும் பந்தயம் ரூ. 1 லட்சம். ரூ. 350-ஐ தாண்டினால், எனக்கு லாபம். உயராமல் அப்படியோ நின்றால், உங்களுக்கு லாபம்.

தள்ளி நின்று தானே, பந்தய ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன? இவைகள் எப்படி அந்த சரக்கைப் பாதிக்கும் என நமக்கு சந்தேகம் வருகிறது. பாதிக்கும். எப்படி என்கிறீர்களா?



நான்கு நாட்களுக்கு முன்பு, இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி கட்டாக்கில் நடந்தது. 10 நாட்களுக்கு முன்பு, இந்த போட்டியின் மீது, ஊக வாணிகத்தில் பந்தய ஒப்பந்தம் போடப்படுகிறது (என வைத்துக்கொள்வோம்.) எப்படி? இந்தியா ஜெயிக்கும். இங்கிலாந்து ஜெயிக்கும் – என இரண்டு தரப்பிலும் சில நூறு கோடிகள் புரள்கிறது.

இந்தியா ஜெயித்தால் சில கோடிகளை இழக்கப் போகும் தரப்பு, இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தியாவில் நன்றாக பந்து வீசக்கூடிய ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, முனாப் படேலை அணுகி ஒரு கோடி தருகிறோம் பவுலிங்கைச் சொதப்புங்கள் என்கிறது. ஒருவரோ அல்லது இருவரோ இதில் சிக்கி சொதப்புவார்களா இல்லையா?

இந்த ஊக வணிகத்தில் பலர் சிக்கியிருக்கிறார்கள். கிரிக்கெட்டின் வரலாறு நமக்கு ஏற்கனவே நிரூபித்து இருக்கிறது.

இப்பொழுது சொல்லுங்கள். தள்ளி நின்று போடப்பட்டாலும், பந்தய ஒப்பந்தங்கள் சரக்கைப் பாதிக்கிறதா இல்லையா?

பின்குறிப்பு : ஏகாதிப்பத்திய நாடுகளில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி உலகத்தில் 1930 காலகட்டத்தில் வந்த பொருளாதார நெருக்கடியை விட பல மடங்கு பெரிதாக இருக்கிறது. இந்தியாவில் இன்னும் இந்த பாதிப்புகள் தொடக்க அளவில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. தொடக்க விளைவுகளே நமக்கு பயம் ஏற்படுத்துகின்றன.

இவ்வளவு பெரிய நெருக்கடி எப்படி ஏற்பட்டது? எல்லோருடைய மனதிலும் இந்த கேள்வி திரும்ப திரும்ப அலை அலையாய் எழுந்து கொண்டேயிருக்கின்றன.

ஊக வணிகம், பங்குச் சந்தை சூதாட்டம், பந்தய ஒப்பந்தங்கள், நிதி மூலதனத்தின் வளர்ச்சி – இதை எதைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சிக்காத அரை வேக்காட்டு பேர்வழிகள் இந்த பொருளாதார நெருக்கடி வழக்கமானது தான். கடந்த காலங்களில் சின்ன அளவில் இருந்தது. இப்பொழுது கொஞ்சம் பெரியது. விரைவில் சரியாகிவிடும் என்கிறார்கள்.

தனிநபர்களை விடுங்கள். பத்திரிக்கைகள் கூட இதனை ஆய்ந்து எழுதுவதில்லை. குரு பெயர்ச்சிக்காக புத்தகம் போட்டு விற்பதில் எல்லா பத்திரிக்கைகளும் கவனமாய் இருக்கின்றன.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் இந்த நெருக்கடியின் தீவிரத்தை புரிந்துகொள்வதும், முதலாளித்துவத்தின் கோரத்தை, அதன் சித்து வேலைகளை, அதனால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளை சக நண்பர்களிடம், உறவுகளிடம் பகிர்ந்து கொள்வது மிக அவசியம்.

இது தொடர்பாக தேடும் பொழுது செய்திகள் குறைவாக கிடைக்கின்றன. கிடைக்கின்ற தகவல்களைத் திரட்டி தான் பதிவுகள் எழுதப்படுகின்றன. இப்பொழுது, பணிச்சூழலில் தேடுவது சிரமமாக இருக்கிறது. பல சமயங்களில் மின்சாரம் இல்லாமல் வலையில் உலாவ முடியவில்லை. ஆகையால், வாய்ப்பு உள்ளவர்கள் தேடி, பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நன்றி.

americadhival@gmail.com

0 பின்னூட்டங்கள்: