> குருத்து: பங்குச் சந்தை சூதாட்டம்!

November 15, 2008

பங்குச் சந்தை சூதாட்டம்!அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி எழுதப்படுகிற எல்லா கட்டுரைகளிலும்
பங்குச் சந்தை, பங்கு சந்தை சூதாட்டம், நிதி மூலதன கும்பல்கள், மூலதன வங்கிகள் என்ற வார்த்தைகள் தவறாமல் இடம்பெறுகின்றன.

ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

முதலில் பங்கு என்றால்?

ஒரு முதலாளி நிறுவனம் தொடங்க நினைக்கிறார். 10 லட்சம் முதலீடு தேவைப்பட்டால், தானே தனி நபராகவே தொடங்கிவிடுவார்.

இதுவே 20 லட்சம் என்றால், ஒருவரையோ இருவரையோ பார்ட்னராக சேர்த்து கொண்டு தொழில் தொடங்குவார்.

50 லட்சம் என்றால் ... தனக்கு தெரிந்தவர்களை சேர்த்து கொண்டு பிரைவேட் லிமிடெட்-யாக தொடங்குவார்.

இதுவே அந்த தொழிலுக்கு தேவை 100 கோடி என்றால்... அதை பொது நிறுவனமாக (Public Limited) பதிவு செய்து, மொத்த தேவையும், 10 ரூ அல்லது ரூ. 100 பங்குகளாக பிரித்து, வெளியிடுவார்கள்.

அதை யார் வேண்டுமென்றாலும், 10 எண்ணிக்கையோ, அல்லது 100. எவ்வளவு தேவையோ அவ்வளவு வாங்கி கொள்ளலாம்.

இப்படி ஒன்று சேர்த்த நிதியை கொண்டு, அந்நிறுவனம் இயங்கத் தொடங்கும். இந்த நிறுவனத்தின் நிதி பொதுமக்களுடையதாக இருப்பதால், இதற்கு அரசு தரப்பில் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும். இந்நிறுவனத்தை கண்காணிக்க அரசு ஒரு ஐ.ஏ.எஸ். ஒருவரை நியமிக்கும்.

பிறகு, அந்நிறுவனம் உற்பத்தியில் ஈடுபடும். வருட இறுதியில் வருடாந்திர கணக்கு பார்க்கும் பொழுது, கிடைக்கிற லாபத்தை பங்குகள் ஒவ்வொருவரும் எவ்வளவு வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு பிரித்து தரப்படுகிறது.

கிடைக்கிற லாபத்தை வைத்து, கையில் வைத்திருக்கிற பங்கின் மதிப்பு உயருகிறது. வாங்கும் பொழுது ரூ. 10 யாக இருந்த பங்கின் மதிப்பு, பிரித்து கிடைத்த லாபம் ரூ. 5 என்றால், பங்கின் சந்தை மதிப்பு ரூ. 15. இப்படி வருடம் தோறும், கிடைக்கிற லாபம் கொண்டு பங்கின் மதிப்பு ஏறும்.

பங்கு சந்தை சூதாட்டம்

இப்படி வருடத்திற்கு ஒருமுறை பங்கின் மதிப்பு ஏறும். அரசின் தொழிற்கொள்கை முடிவுகளில், எதிர்காலத்தில் அந்த குறிப்பிட்ட தொழிலில் ஏற்படும் சில மாற்றங்களில், பங்கின் விலை ஒரு பாய்ச்சலில் ஏற வாய்ப்புண்டு. மற்றபடி பாய்ச்சலில் ஏற வாய்ப்பேயில்லை.ஆனால், பல நிறுவனங்களின் பங்கு விலையை 300 என சந்தை மதிப்பு 400, 500 என செயற்கையாய் ஏற்றி, இறக்கி குறைந்த காலத்தில் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். சிலர் அதால பாதாளத்தில் வீழ்கிறார்கள். நடுத்தர வர்க்கம் தனக்கு அடுத்த நிலையை எட்டிப் பிடிக்கும் ஆசையில், சிறுக சிறுக சேமித்த பணத்தை பங்குச் சந்தையில் ஏமாறி தோற்கிறது.

பங்குச் சந்தை தரகன் ஹர்சத் மேத்தாவின் ஊழல் – 700 கோடி (என் நினைவில்) என்றார்கள். இந்த ஊழலைப் பற்றி அந்த சமயத்தில் ஒரு நிபுணர் இது குறித்து சில தகவல்களை சொன்னார்.

ஹர்சத் மேத்தா, பல வங்கி மேலாளர்களை கையில் வைத்துக் கொண்டு பணத்தைத் திரட்டி, ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 300 என்றால், கையில் உள்ள பெரும் பணத்தை வைத்துக் கொண்டு, அந்த நிறுவனத்தின் பங்குகளை 310, 320 என வாங்கத் தொடங்குவான். சேகரிக்க, சேகரிக்க தொடர்ச்சியாய் இந்த பங்குகளின் விலை சந்தையில் ஏறத் தொடங்கும். இப்படி ஏறத் தொடங்கிய பங்கின் விலை குறிப்பிட்ட காலங்களில் 400 என ஏறி நிற்கும் பொழுது, சேகரித்த பங்குகளையே ஹர்சத் மேத்தாவே சந்தையில் விற்கத் தொடங்குவான். இப்படித்தான் தொடர்ச்சியாக நடக்கிறது பங்குச் சந்தை ஊழல். ஹர்சத் மேத்தாவோடு பல வங்கி நிர்வாகிகளும் மாட்டினார்கள்.

என்ன பாலிஷாக சொன்னாலும், இது சூதாட்டம் தான். இந்த சூதாட்டத்தைத் தான், எல்லா முதலாளித்துவ அரசுகளும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கின்றன.

பங்குச் சந்தை சூதாட்டம் – நான் சொன்ன முறை மிக பழைய முறை. அமெரிக்கா முதலாளித்துவத்தின் உச்சகட்டமான ஏகாதிபத்தியமாயிற்றே! ஆகையால், இந்த சூதாட்ட முறையின் பரிணாம வளர்ச்சியில் நடந்த மிகப்பெரிய சூதாட்டத்தை நடத்தியது. அதனால் தான், இப்படி மாபெரும் நெருக்கடியில் அமெரிக்க அரசு சிக்கியுள்ளது. அந்த சூதாட்டத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

குறிப்பு : நான் சார்ந்த துறை வணிகம். ஆகையால், செய்திகளைச் சேகரித்து நான் எழுதுகிறேன். இது ஒரு எளிய அறிமுகம். பங்குச் சந்தை குறித்து விரிவாக, ஆழமாக பிறகு எழுதுகிறேன். சில பதிவர்கள் இதில் நிபுணத்துவம் இருக்கலாம். நீங்களும் கருத்து சொல்லலாம்.

2 பின்னூட்டங்கள்:

கலையரசன் said...

அனைவருக்கும் அவசியமான நல்ல பதிவு. மக்களுக்கு விளக்கம் கொடுப்பது இன்றைய காலத்தில் தேவையானது.

உங்கள் பதிவோடு சேர்ப்பதற்காக பின்னூட்டமாக சில தகவல்கள்.

மத்தியதர வர்க்கம் மட்டுமல்ல, ஒரு தொழிலாளி கூட தனது நிறுவனத்தில் பங்கு வாங்கலாம். அதை காட்டி எல்லோரும் முதலாளியாகி விடுவதாக பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் அதிகமான பங்குகளை வைத்திருப்பவர்களே அந்த நிறுவனத்தில் ஆதிக்கம் செய்கின்றனர் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை.

Socrates said...

நீங்கள் சொல்வது உண்மை தான். பல பெரிய நிறுவனங்கள் நீங்கள் சொல்வது போல சொல்கின்றன.

பொருளாதாரம் சம்பந்தமான பதிவுகளை தொடர்ச்சியாக எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் கருத்துகள் மிக அவசியம் கலையரசன். தொடர்ந்து சொல்லுங்கள்.