> குருத்து: தோழர் ஸ்டாலின் - இன்று நினைவு நாள்!

March 5, 2009

தோழர் ஸ்டாலின் - இன்று நினைவு நாள்!




தோழர் ஸ்டாலின் நினைவு நாள் இன்று! - மார்ச் 5, 1953



ஸ்டாலின் மீதான அவதூறு - இட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை!



தன்னுடைய ஆக்கிரமிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஏகாதிபத்தியங்கள் எத்தகைய அபாண்டமான பொய்களையும், அவதூறுகளையும் "ஆதாரபூர்வமாக'ப் பரப்புவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய வரலாற்றறிவு தேவையில்லை. கண்முன்னே ஈராக்கில் நடந்துவரும் ஆக்கிரமிப்பின் கதையை பாமரனும் புரிந்து கொண்டிருக்கிறான்.



சோசலிச முகாம் என ஒன்று இல்லாத இன்றைய சூழலில் கம்யூனிசத்தை எதிர்ப்பதற்காகத் தானே உருவாக்கிய ஒரு சர்வாதிகாரியை (சதாம் உசேன்) வீழ்த்தவும், எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும் இத்தனைப் பச்சையான பித்தலாட்டங்களில் ஈடுபடுகின்றன அமெரிக்காவும், பிரிட்டனும். எனில், ஏகாதிபத்தியத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிய சோசலிசத்தை வீழ்த்த, இவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கக்கூடும் என்பதை அறிவு நாணயமுள்ள எவரும் ஊகிக்க முடியும். ஊகம் வேண்டாம். ஆதாரங்களைத் தருகிறோம். "என்ன இருந்தாலும் ஸ்டாலின் செய்த கொலைகள்....'' என்று ஐ விட்னஸ் போலப் பேசும் அறிவாளிகள் தாங்கள் சோரம்போனது குறித்து வெட்கப்படுவார்களா?




"புதிய கலாச்சாரம் பத்திரிக்கை மீண்டும் ஸ்டாலினிசத்துக்குத் திரும்புவதைப் போலத் தெரிகிறது. ஸ்டாலின் துதி பாடுவது அதிக மாகி வருகிறது'' என்று சில நண்பர்கள் சமீபத்தில் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நண்பர்கள் "மீண்டும்'' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருப்பது நாம் ஏற்கக் கூடியதல்ல. தோழர் ஸ்டாலின் உயர்த்திப் பிடித்த சித்தாந்த அரசியல் அடிப்படையில் இருந்து புதிய கலாச்சாரம் விலகிப் போயிருந்தால் தானே மீண்டும் அதற்குத் திரும்புவது என்ற நிலை வரும். புதிய கலாச்சாரம் எப்போதும் அங்கேதான் இருக்கிறது.




ஸ்டாலினது காலத்தில் தனிமனிதத் துதிபாடிகளாகவும், தனிமனித வழிபாடு செய்தவர்களும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கேடாகப் பயன்படுத்தி சதிகள் செய்து, இரகசியக் கொலைகள் புரிந்தவர்களும் தான் ஸ்டாலினுக்குப் பிறகு அவருக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பி குணக் கொலைகள் புரிந்தனர். ஸ்டாலினைப் போல மீசை, புருவம், தலைமுடி, நடையும் உடையும் அணிந்து கொள்வதில் இருந்து ஸ்டாலின் என்ற பெயரைத் தம்பிள்ளைகளுக்கு வைத்துக் கொள்வது வரை பெருமைப்பட்டவர்களில்தாம் பலர் இன்று ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறு அலையால் அடித்துச் செல்லப்படுகிறார்கள். அத்தகைய அவதூறு அலைக்கு எதிராக எதிர்நீச்சல் போடுவதுதான் புதிய கலாச்சாரத்தின் வரலாறு அன்றும், இன்றும்.




நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நண்பர்களுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வேறுவேறான வகையைச் சேர்ந்தவை; வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள். ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள் என்பது நமது நிலைப்பாடு.




ஆனால் இந்த நண்பர்கள், "ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்'' என்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா? அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா? இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.




ஆனாலும், குருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இங்கே முன்வைக்கிறோம்.




"சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக'' கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.




1933 ஜனவரி இறுதியில், கொல்லைப்புற வழியே ஜெர்மனியின் பிரதமர் பதவியைக் கைப்பற்றினான் பாசிச இன கொலைவெறிய னும், யுத்த வெறியனுமான நாஜி இட்லர். அடுத்த ஐந்தாவது வாரம் தேர்தல்களை நடத்துவதாக அறிவித்தான். வாக்குப் பதிவுக்கு முதல்வாரம்
ஜெர்மானிய நாடாளுமன்றம் ரைஸ்டாக் கட்டிடத்துக்கு சதிகார நாஜிக்கள் தீ வைத்துக் கொளுத்திவிட்டு, கம்யூனிஸ்டுகள் மீது பழிபோட்டு பச்சைப் புளுகுணிப் பிரச்சாரம் செய்தனர். பின்னாளில் கம்யூனிஸ்டுகள் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக நடந்த தேர்தல்களில் நாஜிக்கள் வெற்றிபெற்று அதிகாரத்தின் மீது தமது இரும்புப் பிடியை நிறுவினர். பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டது. உடனே கம்யூனிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் நாஜிக்களால் வேட்டையாடப் பட்டனர். முதல் சித்திரவதை முகாம்கள் இடதுசாரி ஆண்களாலும் பெண்களாலும் நிரப்பப்பட்டன.




வலதுசாரிப் பிற்போக்காளர்கள் அனைவரும் இட்லரின் பின்னே அணி சேர்ந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவன் பலம் பெருகியது. நான்காண்டுகளுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் சட்டம் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து யூதர்களை வேட்டையாடி வதை முகாம்களில் அடைப்பது துவங்கியது. இட்லரின் நாஜிசக் கோரமுகம் அப்பட்டமாகத் தலைவிரித்தாடியது. ஜெர்மனி ஆயுதமயமாவ தையும், இராணுவமயமாவதையும் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தங்களை இட்லர் கிழித்துப் போட்டான். ஜெர்மனி அதி வேகமாக ஆயுதமயமாகி, இராணுவ வல்லரசானது. இந்தச் சமயத்தில்தான் "சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் சர்வாதிகாரத்தின் கீழ் படுகொலைகள்'' என்கிற கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்பட்டன.




இட்லரின் அமைச்சரவையில் பிரச்சார மந்திரியாக இருந்த பச்சைப் புளுகன் கோயபல்ஸ் ஜெர்மானிய மக்களிடையே நாஜிக் கனவை விதைக்கும் பொறுப்பேற்றிருந்தான். இன ரீதியில் தூய மக்கள் வாழும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு மாபெரும் ஜெர்மனியை நிர்மாணிப்பதுதான் அந்த நாஜிக் கனவு. அன்றைய ஜெர்மனியைவிட மிகமிகப் பெரும் அளவிலான பூமிப்பரப்பு ஜெர்மனிக்குக் கிழக்கே இருந்தது; அது இன்னமும் வென்றெடுத்து, கைப்பற்றி ஜெர்மானிய தேசத்துடன் இணைக்கப்படவேண்டும். ஜெர்மானியர்கள் வாழ்வதற் கான புவிப்பரப்பில் மிகவும் இன்றியமையாத ஓர் பகுதி உக்ரைன் என்பதை 1925இல் எழுதிய தனது "மெயின் கேம்ப்'' என்ற நூலில் ஏற்கனவே இட்லர் குறிப்பிட்டிருந்தான். தகுந்த முறையில் பயன்படுத் துவதற்காக உக்ரைனும் கிழக்கு ஐரோப்பாவின் பிற பகுதிகளும் ஜெர்மானிய தேசத்துக்குச் சொந்தமாக வேண்டியிருந்தது. ஜெர்மானிய (ஆரிய) இனத்துக்கான வாழுமிடத்தை உருவாக்குவதற்காக இந்தப் பிராந்தியத்தை நாஜிக்களின் போர்வாள் வென்றெடுக்கும் என்பது தான் நாஜிப் பிரச்சாரம்.




அப்பகுதிகள் ஜெர்மானியத் தொழில் நுட்பம், ஜெர்மானியத் தொழில் திறனைக் கொண்டு ஜெர்மனிக்கான தானிய விளைநிலமாக மாற்றப்படும். நாஜிப் பிரச்சாரத்தின்படி, உக்ரைனில் வாழும் மக்கள் தாழ்ந்த மிலேச்சர்கள்; முதலில் அவர்களை சோவியத் ஒன்றியத்தின் பிடியில் இருந்து விடுதலை செய்து ஜெர்மனியர்களின் வீடுகளில், ஆலைகளில், வயல்களில், ஜெர்மானியப் பொருளாதாரத்துக்குத் தேவையான வேறெங்கும் வேலை செய்யும் கூலி அடிமைகளாக மாற்ற வேண்டும்.




உக்ரைனையும் சோவியத் ஒன்றியத்தின் இதரப் பகுதிகளையும் வென்றெடுக்க வேண்டுமானால் அதற்கெதிராகப் போர் தொடுக்க வேண்டும்; அதற்கு முன்கூட்டிய தயாரிப்பு செய்தாக வேண்டும். இந்த நோக்கத்தோடு கோயபல்ஸ் தலைமையிலான நாஜி பிரச்சார அமைச்சரவை ஒரு இயக்கத்தைத் துவக்கியது. "சோசலிசக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி விவசாயிகளை நிர்ப்பந்திக்கும் பொருட்டு ஸ்டாலின் திட்டமிட்டு பேரழிவுப் பஞ்சத்தை உருவாக்கினார்; அந்தப் பயங்கரமான காலகட்டத்தில் உக்ரைனில் பெருந்திரள் படுகொலைகளை போல்ஷ்விக்குகள் நடத்தினார்கள்''என்ற அவதூறை மையமாகக் கொண்டிருந்தது, அந்த நாஜிப் பிரச்சார இயக்கம்.




உக்ரைனை ஜெர்மானிய இராணுவம் "விடுதலை' செய்ய வேண்டும் என்பதாக உலக மக்களிடையே பொதுக் கருத்தை உருவாக்குவதுதான் நாஜிப் பிரச்சாரத்தின் நோக்கம். பெருமுயற்சி எடுத்தும், ஜெர்மானியப் பிரச்சார நூல்களில் சில ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட போதிலும் "உக்ரைனில் பெருந்திரள் படுகொலை'' என்கிற நாஜி அவதூறு உலக அரங்கில் பெரிய வெற்றிபெற முடியவில்லை. சோவியத் ஒன்றியம் குறித்த தங்கள் அவதூறு வதந்தியைப் பரப்புவதற்கு இட்லருக்கும் கோயபல்சுக்கும் உதவி தேவையாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் அமெரிக்காவில் அத்தகைய உதவியைக் கண்டார்கள்.




ரடால்ஃப் ஹெர்ஸ்ட் இட்லரின் நண்பர் வில்லியம் ரடால்ஃப் ஹெர்ஸ்ட் — அமெரிக்காவில் மிகவும் பிரபலமான ஒரு பத்திரிக்கை முதலாளி. அந்நாட்டு மஞ்சள் பத்திரிக்கை உலகின் தந்தையாக விளங்கியவன். சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான உளவியல் பிரச்சாரப் போரில் நாஜிக்களுக்கு உதவுவதற்கு இந்தக் கோடீசுவரன்தான் முன்வந்தான். அமெரிக்க செனட் சபை உறுப்பினரும், சுரங்க முதலாளியும், பத்திரிக்கை முதலாளியும் பெரும் பணமுதலையுமான ஜார்ஜ் ஹெர்ஸ்டின் மகன் வில்லியம் ஹெர்ஸ்ட். "சான்பிரான்சிஸ்கோ டெய்லி எக்சாமினர்'' என்கிற அக்குடும்ப நாளேட்டின் ஆசிரியராக வில்லியம் ஹெர்ஸ்ட் 1885ஆம் ஆண்டு பொறுப்பேற்றான்.




ஹெர்ஸ்ட் பத்திரிக்கைப் பேரரசின் தொடக்கமாகவும் இது அமைந்தது. வட அமெரிக்க மக்களின் வாழ்விலும் சிந்தனையிலும் வலுவான செல்வாக்கு செலுத்துவதாக இந்தப் பத்திரிக்கை இருந்தது. அவன் தந்தை இறந்ததும், வில்லியம் ஹெர்ஸ்ட் தனது சுரங்கத் தொழில் பங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டு, அந்த மூலதனத்தை இதழியல் துறையில் முதலீடு செய்யத் துவங்கினான். பாரம்பரியமிக்க "நியூயார்க் காலை இதழ்'' என்னும் நாளேட்டை அவன் முதலில் வாங்கினான். அதை ஒரு பரபரப்பூட்டும் கிசுகிசு குப்பைப் பத்திரிக்கையாக மாற்றினான். அவன் செய்திக் கதைகளை என்ன விலை கொடுத்தும் வாங்கினான். குரூரமான அல்லது கிரிமினல் குற்றச் செய்திக் கதைகள் கிடைக்காத போது செய்திகளை உருவாக்கித் தரும்படி தன் நிருபர்களையும் புகைப்படக்காரர்களையும் நிர்பந்தத்துக் குள்ளாக்கினான். பொய்களும் புனைச்சுருட்டுகளுமான குரூர, அக்கிரம, அட்டூழியங்களை உண்மைகளைப் போலத் தருவதுதான் உண்மையில் மஞ்சள் பத்திரிக்கைகளின் தன்மைகள்.




ஹெர்ஸ்டின் இத்தகைய பொய்கள் தாம் அவனைக் கோடீசுவர னாக்கின, பத்திரிக்கை உலகில் அவனை மிக முக்கியப்புள்ளியாக்கின. 1935லேயே உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவனாக விளங்கினான். அவனுக்கு 20 கோடி அமெரிக்க டாலர் சொத்துக்கள் இருந்தன. "நியூயார்க் காலை இதழை'' வாங்கிய பிறகு பல நாளேடு களையும் வார இதழ்களையும் வாங்கினான், துவங்கினான். 24 வாரச் செய்தி ஏடுகள், 12 வானொலி நிலையங்கள், 2 உலகச் செய்தி சேவை கள், சினிமாவுக்கான செய்திகளைத் தரும் ஒரு தொழில் நிறுவனம், காஸ்மாபாலிடன் சினிமாக் கம்பெனி இன்னும் பலவற்றை நிறுவினான். 1948லேயே பால்டிமோ நகரில் அமெரிக்காவின் முதல் தொலைக்காட்சி நிலையத்தை நிறுவினான். ஹெர்ஸ்டின் செய்தி ஏடுகள் நாளொன்றுக்கு 1.3 கோடிப் பிரதிகள் விற்றன. சுமார் 4 கோடி வாசகர்கள் படித்தனர். அமெரிக்க மக்கட் தொகையில் சுமார் மூன்றிலொரு பகுதியினர் நாள்தோறும் ஹெர்ஸ்டின் செய்தியேடு களைப் படித்தனர். ஹெர்ஸ்டின் செய்திச் சேவைகள், திரைப்படங்கள் மற்றும் சங்கிலித் தொடர் செய்தியேடுகள் பெரும் எண்ணிக்கையில் மொழி பெயர்த்துப் பிரசுரிக்கப்பட்டதன் மூலம் அவனுடைய செய்திகள் உலக முழுவதும் உள்ள மேலும் பலகோடி மக்களை அடைந்தன.




பலப்பல ஆண்டுகளாக ஹெர்ஸ்டின் செய்திப் பேரரசு எவ்வாறு அமெரிக்க மற்றும் உலக அரசியலில் செல்வாக்குச் செலுத்தின என்பதை இந்தப் புள்ளி விவரங்களே தெளிவுபடுத்துகின்றன. அது பிரச்சாரம் செய்தவைகளில் சோவியத் ஒன்றியத்தின் அணி வரிசை யில் இரண்டாம் உலகப் போரில் அöமரிக்கõ குதிப்பதை எதிர்த்ததும், 1950களில் நடந்த கம்யூனிச எதிர்ப்பு புதிய மெக்கார்த்திய வேட்டைக்கு ஆதரவு கொடுத்ததும் அடங்கும். படுபிற்போக்குவாதம், தேசியவாதம் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு வெறி ஆகியன வில்லியம் ஹெர்ஸ்ட்டின் கண்ணோட்டம். அவனது அரசியல் கடைக்கோடித் தனமான வலதுசாரி அரசியல். 1934இல் அவன் ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்டபோது தனது விருந்தாளியாகவும் நண்பனாகவும் நாஜி இட்லர் அவனை வரவேற்றான். இந்தப் பயணத்துக்குப் பிறகு ஹெர்ஸ்டின் செய்தி ஏடுகள் மேலும் தீவிரமான பிற்போக்கானவையாக மாறின. சோசலிசம், சோவியத் ஒன்றியம், குறிப்பாக ஸ்டாலினுக்கு எதிரான பிரச்சாரக் கட்டுரைகளை ஹெர்ஸ்டின் செய்தியேடுகள் தினந்தோறும் தாங்கி வந்தன. வெளிப்படையான நாஜி பிரச்சார நோக்கத்துக்காக தன்னுடைய பத்திரிக்கைகளைப் பயன்படுத்தவும் கூட ஹெர்ஸ்ட் முயன்றான். இட்லரின் வலது கையான கோயரிங்கின் கட்டுரைத் தொடர்களைப் பிரசுரித்தான். பல வாசகர்களின் எதிர்ப்புக்கள் அம்மாதிரியானவைகளைப் பிரசுரிப்பதை நிறுத்தவும், விநியோகத்தில் இருந்து திரும்பப் பெறவும் நிர்ப்பந்தித்தன.




இட்லரைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய பிறகு, ஹெர்ஸ்டின் பரபரப்பூட்டும் செய்தியேடுகள் "சோவியத் ஒன்றியத்தில் நடக்கும் அட்டூழியங்கள்'' பற்றிய கட்டுக் கதைகளால் நிரப்பப்பட்டன. படுகொலைகள், பெருந்திரள் படுகொலைகள், அடிமைத்தனம், ஆட்சியாளர்களின் சுகபோகம், பரந்துபட்ட மக்களின் பட்டினி ஆகியவை சோவியத் ஒன்றியத்தில் நடப்பதாக நாள்தோறும் மிகப்பெரிய செய்திகள் இடம்பெற்றன. இவையெல்லாம் நாஜி ஜெர்மனியின் அரசியில் உளவுப்படையான கெஸ்டபோவால் ஹெர்ஸ்டுக்குத் தரப்பட்டவை. கையில் கத்தியுடன் இருக்கும் கொலைகாரனாக ஸ்டாலினைச் சித்தரிக்கும் சோவியத் ஒன்றியம் பற்றிய கேலிச் சித்திரங்களையும் அண்டப் புளுகுச் சித்திரங்களையும் தனது முதல் பக்கத்திலேயே ஹெர்ஸ்டின் நாளேடுகள் அடிக்கடி தாங்கி வந்தன. இந்தக் கட்டுரைகளை அமெரிக்காவின் 4 கோடி மக்களும், உலகம் முழுவதும் மேலும் பல பத்து இலட்சம் பேரும் நாள்தோறும் படித்தார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.




சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஹெர்ஸ்ட் ஏடுகளின் முதல் பிரச்சாரங்களில் ஒன்றாக, உக்ரைன் பஞ்சத்தின் விளைவாக லட்சக் கணக்கானோர் மடிந்து விட்டார்கள் என்கிற புளுகு இருந்தது. "சோவியத் ஒன்றியத்தில் 60 இலட்சம் பேர் பட்டினியால் மாண்டார் கள்'' என்கிற முதல் பக்க தலைப்புச் செய்தி "சிக்காகோ அமெரிக்கன்'' என்கிற நாளேட்டில் வந்ததோடு 1935 பிப்ரவரி, 18ந் தேதி இந்தப் பொய் பிரச்சாரம் துவங்கியது. "குலாக்குகள் எனப்படும் பணக்கார விவசாயிகளுக்கு எதிராக சோசலிச நடவடிக்கை என்கிற பெயரில் ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக்குகள் மேற்கொண்ட கட்டாய நிலவெளியேற்றம் மற்றும் திட்டமிட்ட பெருந்திரள் படுகொலைகளின் விளைவாக உக்ரைனில் பஞ்சம் பட்டினிச் சாவுகள் ஏற்பட்டு பல பத்து இலட்சம் பேர் மாண்டனர்'' என்ற புனை கதைகளை நாஜி ஜெர்மனியிடமிருந்து நாஜி ஆதரவாளரான ஹெர்ஸ்ட் பிரசுரிக்கத் துவங்கினான்.




ஜெர்மானிய நாஜிப்பேரரசை கிழக்கே விரிவுபடுத்தும் நோக்கத்தில் சோவியத் ஒன்றியத்துக்கும் ஸ்டாலினுக்கும் எதிரான அவதூறுப் பிரச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்பும் இட்லருடைய திட்டத்தின் அங்கம்தான் இது. இந்த விடயம் பற்றிய உண்மையே முற்றிலும் வேறானது. 1930களின் ஆரம்பத்தில், சோவியத் ஒன்றியத்தில் உண்மையில் நடந்தது ஒரு மாபெரும் வர்க்கப் போராட்டம். அதில் பணக்கார நிலப்பிரபுக்களுக்கு எதிராக எழுச்சியுற்ற நிலமற்ற, ஏழை விவசாயிகள் கூட்டுடமைக்கானதொரு போராட்டத்தைத் துவங்கினர்; அது "கோல்கோசஸ்'' எனப்படும் கம்யூன்களை நிறுவுவதற்கான போராட்டம். இம்மாபெரும் வர்க்கப் போராட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறக்குறைய 12 கோடி விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். அது விவசாய உற்பத்தியில் சற்றே உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியது; சில பகுதிகளில் ஓரளவு உணவுப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியது. அதன் விளைவாகத் தொற்று நோய்களுக்குப் பலியாவோர் எண்ணிக்கையைப் பெருக்கியது. அந்த நேரத்தில் உலகம் முழுவதும் இம் மாதிரியான நோய்கள் பொதுவில் எங்கும் இருந்தன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.




1918க்கும் 1920க்கும் இடையில் பரவிய "ஸ்பெயின் ஃப்ளூ'' என்ற தொற்று நோய் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 2 கோடி மக்களின் சாவுக்குக் காரணமாக இருந்தது. ஆனால் தமது சொந்தக் குடிமக்களின் சாவுக்காக அந்நாடுகளின் அரசுகள் மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை. இந்த வகையான தொற்று நோய்களைச் சந்தித்தபோது அந்த அரசாங்கங்கள் உண்மையில் எதுவும் செய்ய முடியவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது "பென்சிலின்'' மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; அப்போது மட்டுமே இம்மாதிரியான தொற்று நோய்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்த முடிந்தது. 1940களின் இறுதிவரை அதுவும்கூட பொதுவில் தாராளமாகக் கிடைக்கக் கூடியதாக இல்லை.




கம்யூனிஸ்டுகள் திட்டமிட்டு, வேண்டுமென்றே உருவாக்கிய ஒரு பஞ்சத்தால் உக்ரைனில் பலபத்து இலட்சம் பேர் மாண்டதாக எழுதிய ஹெர்ஸ்டின் பத்திரிகைக் கட்டுரைகள் கற்பனையான அந்தக் கோரத்தைப் பற்றி பரபரப்பூட்டும் அதிர்ச்சியூட்டும் விவரங்களை விலாவாரியாக எழுதின. தமது கட்டுக் கதைகளை உண்மையானவை என்று காட்டுவதற்கான எல்லா வழிமுறைகளையும் பின்பற்றி எழுதின. அதன் மூலம் முதலாளித்துவ உலகின் பொதுக் கருத்தை சோவியத் ஒன்றியத்துக்கு எதிராகத் திருப்புவதில் வெற்றியும் பெற்றன. இதுதான் சோவியத் ஒன்றியத்தில் பலபத்து இலட்சம் பேர் மாண்டு போனதாக முதற்பெரும் புனைச்சுருட்டு தயாரிக்கப்பட்டதன் தோற்றுவாய். மேற்குலகின் பத்திரிக்கைகள் கட்டவிழ்த்துவிட்ட இந்த புனைச் சுருட்டுகள் காரணமாக எழுந்த எதிர்ப்பு அலையில் சோவியத் ஒன்றியம் தெரிவித்த மறுப்புரைகளையும் ஹெர்ஸ்டின் பத்திரிக்கைகளுடைய பொய்கள் பற்றிய முழுமையான அம்பலப் படுத்தல்களையும் யாருமே காது கொடுத்துக் கேட்கவில்லை. இந்த நிலைமை 1934 முதல் 1987 வரை நீடித்து நிலவியது.




சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்டாலின் பற்றிய மேற்குலகின் இந்தப் புனைச் சுருட்டுக்கள் எல்லாம் வெறும் அவதூறுகள்தாம் என்பதை கனடா நாட்டுப் பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் எழுதி 1987இல் டோராண்டோ நகரில் பதிப்பித்த "மோசடி, பஞ்சம் மற்றும் பாசிசம் இட்லர் முதல் ஹார்வார்டு வரை உக்ரைன் பெருந்திரள் படுகொலை என்ற புனைவு'' என்ற நூல் அம்பலப்படுத்தியது. அதுவரை 50 ஆண்டுகளுக்கு மேலாக சோவியத் ஒன்றியத்தின் சோசலிசம் பற்றிய ஒரு எதிர்மறையான கருத்தைக் கொண்டிருக்கும் படி தலைமுறை தலைமுறையாக உலக மக்களுக்கு அவதூறுகள் மட்டுமே தீனியாகப் போடப்பட்டன.




கலிஃபோர்னியா, பிவெர்லி குன்றுகளில் உள்ள தனது மாளிகையில் 1951இல் வில்லியம் ஹெர்ஸ்ட் இறந்தான். அவன் தனக்குப் பின் ஒரு பெரிய மக்கள் தொடர்புப் பேரரசை விட்டுச் சென்றான். அது இந்நாள் வரை உலகம் முழுவதும் பிற்போக்குச் செய்திகளைப் பரப்புவதைத் தொடர்கிறது. ஹெர்ஸ்டின் தொழிற் கழகம் உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது; அது 15,000 பேர் பணிபுரியும் 100 கம்பெனிகளைக் கொண்டிருக்கிறது. இன்று செய்தி யேடுகள், வாரமாத இதழ்கள், நூல்கள், வானொலி, தொலைக்காட்சி, தொலைக்காட்சி பிணைப்பு, செய்திச் சேவைகள் மற்றும் பன்முக ஊடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது div>
ஹெர்ஸ்டின் பேரரசு. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோல்வி அடைந்ததோடு உக்ரைன் பற்றிய நாஜி கட்டுக் கதைப் பிரச்சாரம் நின்று போய்விடவில்லை. அந்த நாஜிப் புனைச் சுருட்டுகள் எல்லாம் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. மற்றும் பிரித்தானிய எம்15 ஆகிய உளவு அமைப்புக்களால் கையேந்திக் கொள்ளப்பட்டன. அவைதான் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான பிரச்சாரப் போரில் ஒரு முதன்மையான இடத்தை எப்போதும் உறுதிப்படுத்தின. உக்ரைனில் பலபத்து இலட்சம் பேர் பட்டினியால் மாண்டார்கள் என்கிற கதை மீதுதான் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு தலை விரித்தாடிய கம்யூனிச எதிர்ப்பு மெக்கார்த்தியம் கூட காலூன்றி நின்றது.




1933இல் இந்தப் பொருள் மீது அமெரிக்காவில் ஒரு புத்தகம் பதிப்பிக்கப்பட்டது. "கிரம்ளின் மாளிகையின் கருப்பு நடவடிக்கை கள்'' என்பது அந்நூலின் தலைப்பு. அமெரிக்காவில் வாழ்ந்த உக்ரைன் அகதிகள்தான் இந்நூலைப் பதிப்பிக்க நிதியளித்தார்கள்; இவர்கள் அனைவரும் இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களின் பங்காளிகளாகச் செயல்பட்டவர்கள்; இவர்களைத்தான் "ஜனநாயகவாதிகள்' என்று உலகின் முன் அடையாளங் காட்டிய அமெரிக்க அரசாங்கம் அரசியல் தஞ்சமளித்தது. அமெரிக்க அதிபராக ரீகன் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதாவது 1980களில், உக்ரைனில் பல பத்து இலட்சம் பேர் மாண்டார்கள் என்கிற கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பித்தார்; 1984இல் ஒரு ஹார்வார்டு பேராசிரியர் "ரஷ்யாவில் மனித வாழ்வு'' என்கிற ஒரு நூலைப் பதிப்பித்தார்; இதுவும் 1934இல் ஹெர்ஸ்ட் பத்திரிக்கைக் குடும்பத்தால் உற்பத்தி செய்யப்பட்ட எல்லாக் கட்டுகதைகளையும் திரும்பச் சொன்னது. 1930இல் நடந்ததாகக் கூறப்பட்ட நாஜிப் புளுகு 1984இல் மீண்டும் உயர்ப்பிக்கப் பட்டதை நாம் கண்டோம்; ஆனால் இந்த முறை "மதிப்புக்குரிய'' ஒரு அமெரிக்க பல்கலைக் கழகம் என்கிற மூடு திரையின் பின்னே வந்தன. ஆனால் இதோடு நிற்கவில்லை.




இதே பொருள் குறித்து "சோகத்தின் அறுவடை'' என்ற தலைப்பில் 1986இல் இன்னொரு நூல் வெளிவந்தது. இந்நூலின் ஆசிரியர் கலிஃபோர்னியாவின் ஸ்டாம்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ள ராபர்ட் கான்குவஸ்ட். இவர் பிரித்தானிய உளவுத் துறையின் முன்னாள் உறுப்பினர்! இந்த வேலைக்காக உக்ரைன் தேசிய அமைப்பிடம் இருந்து 80,000 அமெரிக்க டாலர் பணத்தை கான்குவஸ்ட் பெற்றார்; அதோடு இந்நூலின் புளுகுகளை அடிப்படையாகக் கொண்டு 1986இல் தயாரிக்கப்பட்ட "அவலத்தின் அறுவடை'' என்னும் திரைப்படத்துக்காகவும் அவர் ஏராளமாகப் பணம் பெற்றார். 1930களில் நாஜிக்கள் கட்டுக்கதை பரப்பத் துவங்கியதில் இருந்து 1986இல் இந்த நூல் வெளியானதற்குள் உக்ரைன் பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கையை 150 இலட்சமாக ஏற்றி விட்டார்கள்!




எவ்வாறாயினும் சரி, அமெரிக்காவின் ஹெர்ஸ்ட் பத்திரிக்கைக் குடும்பத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, புத்தகங்கள், திரைப் படங்களில் கிளிப் பிள்ளைகளைப்போல திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பலபத்து இலட்சம் பேர் உக்ரைன் பட்டினிச் சாவுக்கு பலியானார்கள் என்பதே முழுக்க முழுக்கக் கட்டுக் கதையாகும். "பித்தலாட்டம், பஞ்சம் மற்றும் பாசிசம் இட்லர் முதல் ஹார்வார்டு வரையிலான உக்ரைன் படுகொலைகள் என்கிற புனை கதை'' என்கிற நூலில் இவையெல்லாம் வெறும் கட்டுக் கதைகள் தாம் என்பதை கனடிய பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் தனது நூலில் மிகவும் கவனமாகவும் சிரத்தையோடும் அம்பலப்படுத்தியுள்ளார்.





பத்திரிக்கையாளர் டோட்டில் நிரூபித்துள்ள வேறு பலவற்றுள் முக்கியமானவை சோவியத் ஒன்றியத்தில் நடந்ததாகச் செய்யப்பட்ட பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் பற்றியவை. உண்மையில் அவையெல்லாம் 1922இல் பிரசுரிக்கப்பட்ட புகைப் படங்கள். 191821 உள்நாட்டுப்போரின் போது சோவியத் ஒன்றியத்தின் மீது எட்டு அந்நிய நாடுகளின் இராணுவங்கள் படையெடுத்தபோது நிகழ்ந்த போர் மற்றும் பட்டினி நிலைமைகளில் இலட்சக்கணக்கான மக்கள் மடிந்து போயினர்; அந்தச் சமயத்தில் அடுக்கப்பட்ட குழந்தைகள் பசி பட்டினியில் வாடிக் கிடக்கும் கோரமான புகைப்படங்கள்; அவற்றைத் தான் 1930களில் நடந்த பட்டினிச் சாவுகள் என்பதாக நாஜிக்களும் மற்ற கம்யூனிச எதிரிகளும் பிரசுரித்திருந்தனர். 1934 பஞ்சம் பற்றிய பல உண்மை விவரங்களை டக்ளஸ் டோட்டில் வெளிக் கொண்டு வந்து, ஹெர்ஸ்ட் குடும்பப் பத்திரிக்கைகள் பிரசுரித்த கலப்படப் பொய்களை அம்பலப்படுத்தினார். உக்ரைன் பஞ்சப் பூமியிலிருந்து நெடுநாட்களாகச் செய்திகளும் புகைப் படங்களும் அனுப்பிய ஒரு பத்திரிக்கையாளர் தாமஸ் வாக்கர் எனப்படுபவர்; இந்த மனிதர் உக்ரைனில் ஒருபோதும் கால் வைத்ததே கிடையாது. மாஸ்கோவில் கூட ஒரு ஐந்தே நாட்கள்தான் தங்கி இருந்தார்.




இந்த உண்மையை "தி நேசன்'' என்ற ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையின் மாஸ்கோ நிருபர் லூயிஸ் பிஷர் தெளிவுபடுத்தினார். எம். பரோட் என்ற நிருபர்தான் ஹெர்ஸ்ட் குடும்பப் பத்திரிக்கையின் உண்மையான மாஸ்கோ நிருபர்; இவர், 1933இல் சோவியத் ஒன்றியம் மிகச் சிறந்த அறுவடையைச் சாதித்துள்ளது என்றும் உக்ரைன் மிகவும் முன்னேறியுள்ளது என்றும் ஹெர்ஸ்டுக்கு அனுப்பிய செய்திகள் பிரசுரிக்கப்படாமலேயே இருட்டடிப்புச் செய்யப்பட்டன என்பதைக் கூட பிஷர் தெளிவுபடுத்தினார்.




டோட்டில் மேலும் ஒன்றை நிரூபிக்கிறார். உக்ரைன் பஞ்சம் எனச் சொல்லப்பட்டதின் மீதான செய்திகளை எழுதிய "தாமஸ் வாக்கர்'' என்ற நிருபரின் உண்மைப் பெயர் ராபர்ட் கிரீன்; இவன் அமெரிக்காவின் கொலராடோ மாநிலச் சிறையில் இருந்து தப்பிய ஒரு கிரிமினல் கைதி. இந்த வாக்கர் எனப்படும் கிரீன் அமெரிக்கா திரும்பியவுடன் கைது செய்யப்பட்டு வழக்கு மன்றத்தில் நிறுத்தப் பட்டபோது, தான் உக்ரைனுக்கு ஒருபோதும் சென்றதில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட ஒரு பஞ்சத்தில், 1930களில் உக்ரைனில் ஏற்பட்ட பட்டினியினால் பல பத்து இலட்சம் பேர் மடிந்து போனார்கள் என்கிற இந்தப் பொய்களெல்லாம் கடைசியாக, 1987இல் பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் மூலம் அம்பலப்பட்டுப் போனது.




ஹெர்ஸ்ட், நாஜிக்கள், போலீசு உளவாளி கான்குவஸ்ட் மற்றும் பலரும் பலபத்து இலட்சம் மக்களின் உயிரைப் பற்றி பித்தலாட்டம் செய்து, கட்டுக்கதைச் செய்திகளைப் பரப்பியிருக்கிறார்கள். இன்றும் கூட, வலதுசாரிச் சக்திகளின் சம்பளப் பட்டியிலில் உள்ள ஆசிரியர்கள் எழுதிப் புதிதாகப் பிரசுரிக்கப்படும் நூல்களில் நாஜி ஹெர்ஸ்டின் கட்டுக் கதைகள் மீண்டும் மீண்டும் எழுதப்படுகின்றன. அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஒரு ஏகபோக நிலைவகிக்கும், உலகம் முழுவதும் செய்தி முகாமைகளைக் கொண்ட ஹெர்ஸ்டின் குடும்பப் பத்திரிக் கைகள் நாஜி கெஸ்டபோ என்ற இட்லரின் அரசியல் உளவுப் படையின் பெரும் பிரச்சார பீரங்கியாக விளங்கின. ஏகபோக மூலதனம் ஆதிக்கம் வகிக்கும் இந்த உலகில், ஹெர்ஸ்டின் செய்தி ஊடகம் உலகம் முழுவதுமுள்ள பல பத்திரிக்கைகள், வானொலி நிலையங்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் கெஸ்டபோவின் புளுகுகளை உண்மையெனப் பரப்பிட முடிந்தது.




கெஸ்டபோ ஒழிந்து போனபின், அமெரிக்க சி.ஐ.ஏ. வைப் புதிய புரவலனாகக் கொண்டு, சோவியத் ஒன்றியத்தின் சோசலிசத்துக்கு எதிரான அசிங்கமான பிரச்சாரப் போர் தடையின்றி நடந்தது. அமெரிக்கச் செய்தி ஊடகத்தின் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் கொஞ்சமும் குறைவின்றி நடந்தது. வழக்கம் போல தொடர்ந்த இந்த வேலை, முதலில் நாஜி உளவுப்படை கெஸ்டபோவின் ஆணையாலும், பின்னர் அமெரிக்க சி.ஐ.ஏ.வின் ஆணையிலும் நீடித்தது; நீடிக்கிறது.




ராபர்ட் கான்குவஸ்ட்




முதலாளியச் செய்தி ஊடகம் மிகவும் பரவலாக மேற்கோள் காட்டும் ராபர்ட் கான்குவஸ்ட் எனப்படும் இந்த மனிதர், முதலாளிய வர்க்கத்தின் நம்பகமான உண்மையான பூசாரியான இந்த மனிதர் இந்தச் சமயத்தில் நமது குறிப்பான கவனத்துக்குரியவராக உள்ளார். சோவியத் ஒன்றியத்தில் இலட்சக்கணக்கானோர் மடிந்ததைப் பற்றி மிகமிக அதிகமாக எழுதிய இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் ராபர்ட் கான்குவஸ்ட். இரண்டாம் உலகப் போரில் இருந்து சோவியத் ஒன்றியம் குறித்த எல்லாப் புனைக் கதைகளையும் பொய்களையும் உண்மையில் உருவாக்கியவர் இவர்தான். "மாபெரும் பயங்கரம்'' (1969) "சோகத்தின் அறுவடை'' (1986) ஆகிய இரண்டு நூல்கள் மூலம் முக்கியமாக அறியப்பட்டவர்தான் கான்குவஸ்ட்.




குலாக்குகள் எனப்படும் நிலப்பிரபுகளுக்கான உழைப்பு முகாம் களிலும், 193638 விசாரணையின்போதும், உக்ரைன் பஞ்சத்தாலும் லட்சக்கணக்கானோர் மாண்டுபோனதாக கான்குவஸ்ட் எழுதுகிறார். இவர் தமது தகவல் மூலாதாரங்களாக அமெரிக்காவில் அகதிகளாக வாழும் வலதுசாரி கட்சிகளைச் சேர்ந்த உக்ரைனியரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்; இவர்கள் எல்லாம் இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களுடன் கூட்டுறவாடியவர்கள். கான்குவஸ்டின் நாயகர்கள் எல்லாம் உக்ரைனில் வாழ்ந்த யூதச் சமுதாயத்துக்கு எதிராக 1942இல் நடந்த படுகொலைகளில் தலைமையேற்றுப் பங்காற்றிய போர்க் குற்றவாளிகள். இவர்களில் ஒருவரான மைக்கேலா எலபிட் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு போர்க் குற்றவாளியெனத் தண்டிக்கப் பட்டவர். இந்த எலபிட், நாஜி ஆக்கிரமிப்பின்போது எல்வோவ் நகரத்தின் போலீசுத் தலைவனாக இருந்தான்; 1942இல் நடந்த யூதப் படுகொலை பயங்கரத்துக்குத் தலைமையேற்றவன். 1949இல் (சி.ஐ.ஏ.வால்) அவதூறு பரப்பும் ஊற்றுமூலமாகப் பணியாற்றினான்.




கான்குவஸ்டினுடைய நூல்களின் கரு கம்யூனிசத்துக்கு எதிரான வன்முறையும் வெறியும் நிறைந்தது. "1932க்கும் 1933க்கும் இடையில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கை 50 முதல் 60 இலட்சம் வரையிலானவை, அவற்றில் பாதி அளவு உக்ரைனில் ஏற்பட்டவை'', என்று கான்குவஸ்ட் தனது 1969 நூலில் சொல்கிறார். ஆனால், ரீகன் கால கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தின் போது அதாவது 1983இல் அதே பஞ்சம் 1937 வரையிலானது என்று நீட்டிக்கிறார்; பஞ்சத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையை 140 இலட்சமாக ஊதிப் பெருக்குகிறார்! இம்மாதிரியான புளுகுக்காக அவருக்கு நல்ல வெகுமதி கொடுக்கப் பட்டது; சோவியத் படையெடுப்புக்குத் தயாராகும்படி அமெரிக்க மக்களை அறைகூவி அழைக்கும் தனது அதிபர் தேர்தல் பிரச்சார சரக்குகளை எழுதித் தரும்படி, கான்குவஸ்ட்டுக்கு ரீகன் (1988இல்) பொறுப்பு ஒப்படைத்தார் "ரஷ்யர்கள் படையெடுக்கும்போது என்ன செய்வது உயிர் பிழைத்திருப்பவர்களுக்கான ஒரு கையேடு'' என்பது கான்குவஸ்ட் எழுதிய உரையின் தலைப்பு! ஒரு வரலாற்றுப் பேராசிரி யரிடமிருந்து என்ன வித்தியாசமான சொற்கள் பாருங்கள்!




உண்மையில் வித்தியாசமானவை ஒன்றும் இல்லை. ஏனென்றால் முதலில் ஒரு உளவுப் படையின் முகவர், பின்னர் கலிஃபோர்னியாவின் ஸ்டாம் ஃபோர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர், எழுத்தாளர் என்கிற முறையில் சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்டாலினுக்கு எதிரான பொய்யுரைகளாலும், புனை கதைகளாலும் தனது பிழைப்பை நடத்திய மனிதனிடமிருந்துதான் இந்தச் சொற்கள் வருகின்றன. அவன் பிரித்தானிய இரகசிய உளவுப் படையின் பொய்ப் பிரச்சாரத் துறை, அதாவது தகவல் ஆய்வுத் துறை (ஐ.ஆர்.டி.)யின் ஒரு முன்னாள் முகவர் என்று 1978 ஜனவரி 27ந் தேதியிட்ட பிரெஞ்சு கார்டியன் பத்திரிக்கை ஒரு கட்டுரையில் அடையாளங் காட்டியது. "ஐ.ஆர்.டி.'' என்பது பிரித்தானிய இரகசிய உளவுப் படையின் ஒரு பிரிவாக 1947இல் நிறுவப்பட்டது. (கம்யூனிசத் தகவல் குழு என்பது அதன் மூலப்பெயர்.) அதன் பிரதானப் பணி அரசியல்வாதி, பத்திரிக்கை யாளர்கள், பதவியிலுள்ள மற்றும் பிறர் மத்தியில் கட்டுக் கதைகளைப் பரப்பி, பொது மக்கள் கருத்தை உருவாக்கி உலகம் முழுவதும் கம்யூனிசச் செல்வாக்கை முறியடிப்பதுதான்.




பிரிட்டனைப் போலவே வெளிநாடுகளிலும் ஐ.ஆர்.டி.யின் நடவடிக்கைகள் மிகமிகப் பரவலானவை. வலதுசாரித் தீவிர வாதத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதாக ஐ.ஆர்.டி. கலைக்கப்பட்ட போது, பிரிட்டனில் மட்டும் நூற்றுக்கும் மேலான பிரபலமான பத்திரிக்கையாளர்கள் ஐ.ஆர்.டி. தொடர்பில் இருந்து கட்டுரை களுக்கான விடயங்களைக் கிரமமாக வழங்கி வந்ததாகக் கண்டு பிடிக்கப்பட்டது. ஃபினான்சியல் டைம்ஸ், தி டைம்ஸ், எகானமிஸ்ட், டெய்லி மெயில், டெய்லி மிர்ரர், தி எக்ஸ்பிரஸ், தி கார்டியன் மற்றும் பிற பெரிய பிரித்தானியப் பத்திரிக்கைகள் இதை வாடிக்கையாகக் கொண்டிருந்தன. எனவே கார்டியன் பத்திரிக்கை அம்பலப்படுத்திய விவரங்களில் இருந்து எவ்வாறு இரகசிய உளவுப் படையினர் மக்களைச் சென்றடையும் செய்திகளைத் திரித்துப் புரட்ட முடியும் என்பதை நாம் அறிய முடியும்.




இந்த ஐ.ஆர்.டி. நிறுவப்பட்டதில் இருந்து 1956 வரை ஐ.ஆர்.டி.க்காக ராபர்ட் கான்குவஸ்ட் வேலை செய்தான். அங்கே கான்குவஸ்டின் வேலை சோவியத் ஒன்றியத்தின் "கருப்பு வரலாறு' என்று சொல்லப்பட்டதைப் புனைந்தளிப்பது தான்; இந்தக் கட்டுக் கதைகள்தாம் உண்மையானவை என்பதைப் போல வெளியிடப் பட்டு, பொது மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக பத்திரிக்கையாளர்களிடம் பரப்பப்பட்டன. ஐ.ஆர்.டியை விட்டு அதிகாரபூர்வமாக விலகிய பிறகும் கூட அதன் யோசனை ஆதரவோடு, கான்குவஸ்டு நூல்கள் எழுதுவதைத் தொடர்ந்தான்.




"மாபெரும் பயங்கரம்'' என்னும் கான்குவஸ்டின் நூல் 1937இல் சோவியத் ஒன்றியத்தில் நடந்த அதிகாரப் போட்டி என்பதை ஆய்வுப் பொருளாகக் கொண்ட அது, அடிப்படையில் ஒரு வலதுசாரி நூலாகும். உண்மையில் அது, அவன் இரகசிய உளவுப் படையில் இருந்தபோது எழுதியதின் மறுவார்ப்பு ஆகும். அந்த நூலே ஐ.ஆர்.டி.யின் உதவியோடு முடிக்கப்பட்டு, பதிப்பிக்கப்பட்டது. சி.ஐ.ஏ. மூலங்களில் இருந்து வரும் நூல்களைப் பதிப்பிப்பதோடு அதன் மூன்றில் ஒரு பகுதிப் பிரதிகள், பிரேஜர் நிறுவனத்தால் வாங்கிக் கொள்ளப்பட்டன. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பத்திரிக்கை; வானொலி தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்கள் போன்ற "பயன்பாடுடைய முட்டாள்களுக்கு'' பரிசளிப்பதற்காக கான்குவஸ்டின் நூல்கள் வாங்கப்பட்டன. இதன்மூலம் கான்குவஸ்ட் மற்றும் வலதுசாரித் தீவிரவாதிகளின் பொய்கள் மக்கள் திரளின் பெரும் பகுதி முழுவதும் பரப்புவதைத் தொடர்வதற்கான உறுதி செய்யப்பட்டது. வலதுசாரி வரலாற்றாசிரியர்களுக்கு சோவியத் ஒன்றியம் பற்றிய செய்தி களுக்கான மிக முக்கியமான மூலாதாரங்களில் ஒன்றாக இன்றுவரை கான்குவஸ்ட் நூல்கள்தான் விளங்குகின்றன.




சோவியத் ஒன்றியத்தில் உயிரையோ, சுதந்திரத்தையோ இழந்ததாகப் புளுகும் புத்தகங்கள் கட்டுரைகளோடு எப்போதும் தொடர்புபடுத்தப்படும் இன்னொரு நபர் ருசிய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின். "தி குலாக் ஆர்சிபிலாகோ'' என்ற அவரது நூல் மூலமாக 1960களின் இறுதியில் முதலாளித்துவ உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் இந்த சோல்ஜெனித்சின். சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பரப்பிய எதிர்ப்புரட்சி நடவடிக்கைக்காக இவர் 1946ஆம் ஆண்டிலிருந்து எட்டு வருடங்கள் உழைப்பு முகாமில் வாழும்படி தண்டிக்கப்பட்டவர். இட்லருடன் சோவியத் ஒன்றிய அரசு ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான மோதலை அது தவிர்த்திருக்கலாம் என்பது சோல்ஜெனித்சின்னின் கருத்தாகும். சோவியத் ஒன்றியத்தின் மக்கள் மீது போர் ஏற்படுத்திய பேரழிவுப் பாதிப்பின் நோக்கில் பார்த்தால் சோவியத் அரசாங்கமும் ஸ்டாலினும் இட்லரை விட மோசமானவர்கள் என்று சோல்ஜெனித் சின் கூறினார். தனது நாஜி ஆதரவு அனுதாபங்களை அவர் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். ஆகவேதான் அவர் ஒரு துரோகி எனக் கண்டிக்கப்பட்டார்.




ஸ்டாலினுக்குப் பிறகு சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியைப் பிடித்த நிகிடா குருசேவின் ஒப்புதலோடும் உதவியோடும் சோல்ஜெனித்சின் 1962 முதல் தனது நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கினார். ஒரு கைதியின் வாழ்க்கையைப் பற்றி, "ஐவான் டெனிசோவிச் வாழ்வில் ஒரு நாள்'' என்பது அவர் பதிப்பித்த முதல் நூல். ஸ்டாலினுடைய சோசலிசப் பாரம்பரியத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு சோல் ஜெனித்சினுடைய எழுத்தை குருச்சேவ் பயன்படுத்திக் கொண்டார். "தி குலாக் ஆர்ச்சிபிலாகோ'' என்ற அவரது நூலுக்காக 1970இல் சோல்ஜெனித்சின் நோபல் பரிசு பெற்றார். அதன்பிறகு அவரது நூல்கள் பெரும் எண்ணிக்கையில் முதலாளித்துவ நாடுகளில் பிரசுரிப்பது துவங்கியது; அவற்றின் ஆசிரியர் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கான மிகவும் மதிப்புமிக்க கருவிகளில் ஒருவரானார்.




சோவியத் ஒன்றியத்தில் பலபத்து லட்சம்பேர் மாண்டு போனார்கள் என்ற பொய்ப் பிரச்சாரத்தோடு உழைப்பு முகாம்கள் பற்றிய இவரது எழுத்துக்களையும் சேர்த்து இவையும் உண்மையானவை என்பது போல் முதலாளித்துவச் செய்தி ஊடகங்கள் பரப்பின. 1974இல் சோல்ஜெனித்சின் சோவியத் குடியுரிமையைத் துறந்து சுவிட்சர்லாந்திலும் பிறகு அமெரிக்காவிலும் குடியேறினார். அக்காலங்களில் அவர் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான ஒரு மாபெரும் போராளியாக முதலாளியச் செய்தி ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். அவர் ஒரு நாஜி ஆதரவாளர் அனுதாபி என்பது சோசலிசத்துக்கு எதிரான பிரச்சாரப் போரில் குறுக்கிடாதவாறு மூடி மறைக்கப்பட்டது. அமெரிக்காவில், பல முக்கியக் கூட்டங்களில் உரையாற்றும்படி சோல்ஜெனித்சின் அடிக்கடி அழைக்கப்பட்டார். அவரது உரைகள் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டக் கூடியவையாகவும் அதீத பிற்போக்கு நிலைப்பாடுகளைப் பிரச்சாரம் செய்பவையாகவும் இருந்தன. அவற்றில் ஒன்று அமெரிக்காவின் மீது வியத்நாம் வெற்றி பெற்ற பிறகும் மீண்டும் வியத்நாமைத் தாக்க வேண்டும் என்ற கருத்து.




அது மட்டுமல்ல; 40 ஆண்டு கால பாசிச ஆட்சிக்குப் பிறகு போர்ச்சுக்கலில் இடதுசாரி இராணுவ அதிகாரிகள் மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தபோது, போர்ச்சுகலில் அமெரிக்கா இராணுவத் தலையீடு செய்ய வேண்டும் என்ற கருத்துக்கான பிரச்சாரத்தில் சோல் ஜெனித்சின் இறங்கினார். அமெரிக்கா தலையிடவில்லையெனில் சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகள் தலையிடும் என்று சொன்னார். அவரது உரைகளின் மூலம் போர்ச்சுக்கலின் பிடியில் இருந்து ஆப்பிரிக்கக் காலனிகள் விடுதலை அடைவதைக் கண்டு எப்போதும் வேதனை தெரிவித்தார்.




ஆனால், சோல்ஜெனித்சின்னுடைய உரைகளில் எப்போதுமே சோசலிசத்துக்கு எதிரான அசிங்கமான பிரச்சாரப் போருக்கு முக்கிய அழுத்தம் தரப்பட்டது தெளிவாக உள்ளது. அது சோவியத் ஒன்றியத்தில் பல பத்து இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு முதல் வட வியத்நாமில் பல பத்தாயிரம் அமெரிக்கர்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக்கப்பட்டு விட்டதாகப் புளுகுவது வரை சோல்ஜெனித்சின் புளுகுப் பிரச்சாரம் நீடித்தது. வடக்கு வியத்நாமில் அமெரிக்கர்கள் அடிமை உழைப்பாளர்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள் என்கிற சோல்ஜெனித்சினுடைய இந்தக் கருத்துதான் வியத்நாம் போர் பற்றிய "ராம்போ'' சினிமாக்கள் உருவாகக் காரணமாக இருந்தது.




அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே அமைதி ஏற்படுவதற்கு ஆதரவாக எழுதத் துணிந்த பத்திரிக்கையாளர்கள் துரோகிகளாக மாறக் கூடியவர்கள் என்று தனது உரைகளில் இந்த சோல்ஜெனித்சின் குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவை விட ஐந்து முதல் ஏழு மடங்கு அதிகமாக பீரங்கி வண்டிகள் மற்றும் போர் விமானங்களை சோவியத் யூனியன் பெற்றிருக்கிறது; அதேபோல அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கிறது அதாவது அமெரிக்காவில் இருப்பதைவிட மூன்று அல்லது ஐந்து மடங்கு கூட சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோவியத் ஒன்றியம் பெற்றுள்ளது; ஆகவே அதற்கு எதிராக அமெரிக்க இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று இதே சோல்ஜெனித்சின் பிரச்சாரம் செய்தார். சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான சோல்ஜெனித்சின்னுடைய உரைகள் வலதுசாரித் தீவிரவாதத்தைத்தான் பிரதிபலித்தது. ஆனால் அவரோ மேலும் ஒருபடி நகர்ந்து பாசிசத்தை வெளிப்படையாகவே ஆதரித்தார்.




எனவே, சோவியத் ஒன்றியத்தில் பல பத்து இலட்சம்பேர் மாண்டனர், சிறையிலடைக்கப்பட்டனர் என்கிற கட்டுக் கதைகளை "சப்ளை'' செய்த மதிப்புமிக்க புளுகு வியாபாரிகள் இவர்கள்தான்; நாஜி வில்லியம் ஹெர்ஸ்ட், இரகசிய உளவாளி ராபர்ட் கான்குவஸ்ட், மற்றும் பாசிஸ்ட் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின், இவர்களில் கான்குவஸ்ட்தான் தலைமைப் பாத்திரமாற்றியவன். ஏனென்றால், இவன் கொடுத்த செய்தியைத்தான் உலகெங்கும் உள்ள முதலாளித்துவப் பெருந்திரள் செய்தி ஊடகம் பயன்படுத்திக் கொண்டது. மேலும் அதுதான் சில பல்கலைக் கழகங்களில் நிறுவப்பட்ட திணைப் புலன்களுக்கு அடிப்படையாக அமைந்தது. கான்குவஸ்ட்டின் வேலை முதல்தரமான போலீசுப் புளுகுகள்தாம் என்பதில் சந்தேகமில்லை.




1970களில் சோல்ஜெனித்சின் மற்றும் இரண்டாம்தர ஆசாமிகளான ஆண்ட்ரேய் சக்கராவோ, ராய் மேட்வேடேவ் போன்றவர்களோடு, சோவியத் ஒன்றியத்தில் மாண்டவர்கள், சிறையிலடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பற்றிய ஊகங்கள் வதந்திகள் பரப்பும் பல நபர்கள், உலகமெங்கும் ஆங்காங்கே தோன்றினர். அப்படிப்பட்டவர்கள் முதலாளித்துவச் செய்தி ஊடகங்களால் பொன்னும் பொருளும் பரிசாகப் பெற்றனர். ஆனால், இறுதியில் இந்த விவகாரங்கள் பற்றிய முழு உண்மையும் வெளியானது; வரலாற்றுப் பொய்யர்களின் உண்மை முகங்கள் தெரிந்தன. வரலாற்று ஆய்வாளர்களுக்காக கட்சியின் இரகசிய ஆவணப் பாதுகாப்பகங்களைத் திறக்கும்படி கோர்பச்சேவ் உத்தரவு போட்டார்; அது யாரும் எதிர்பார்க்காத விளைவுகளை ஏற்படுத்தியது.




பிரச்சாரப் பொய்கள்




சோவியத் ஒன்றியத்தில் பல பத்து இலட்சம் பேர் மாண்டார்கள் என்கிற வதந்திகள் எல்லாம் அந்நாட்டிற்கு எதிரான அசிங்கமான பிரச்சாரப் போரின் ஒரு பகுதிதான்; இதன் காரணமாகத்தான் சோவியத் ஒன்றியம் அந்த வதந்திகளுக்குக் கொடுத்த மறுப்புகளும் விளக்கங்களும் பாரதூரமாக எடுத்துக் கொள்ளப்படவுமில்லை, முதலாளித்துவச் செய்தி ஊடகங்களில் இடம் பெறவுமில்லை. அதற்கு மாறாக, அவற்றைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கிய அதேசமயம், முதலாளியத்தால் விலைக்கு வாங்கப்பட்ட தனிச்சிறப்பானவர்கள் தாராளமாக இடம் பிடித்துக் கொண்டார்கள்; ஏனென்றால் இவர்கள்தான் முதலாளியம் விரும்பிய கட்டுக் கதைகளை வழங்கினர். அதென்ன கட்டுக் கதைகள்? கான்குவஸ்ட்டின் பொய் மற்றும் பிற விமரிசனங்களும் உரிமை கொண்டாடியபடி பல பத்து இலட்சம் பேர் மாண்டார்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள் என்கிற கதைகள் எல்லாம் ஒரு விடயத்தைப் பொதுவாகக் கொண்டிருந்தன; அந்தக் கதைகள் எல்லாமும் பொய்யான தோராயப் புள்ளி விவரங்களின் தொகுப்புத் தானே தவிர எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வுகளாலும் தொகுக்கப்பட்டவையல்ல.





கான்குவஸ்ட், சோல்ஜெனித்சின், மேட்வேடேவ் மற்றும் பிறர் சோவியத் ஒன்றியம் பிரசுரித்த புள்ளி விவரங்களைத்தான் பயன்படுத்தியுள்ளனர்; உதாரணமாக, தேசிய மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள்; இவற்றோடு அந்த நாட்டின் குறிப்பான நிலைமையைக் கணக்கில் கொள்ளாமல் எந்த விகிதத்தில் மக்கள் தொகை அதிகரித்திருக்க வேண்டும் என்று யூகித்தார்களோ அதைச் சேர்த்தார்கள்; தமது சொந்த யூகத்தின்படி குறிப்பிட்ட ஆண்டின் இறுதியில் இவ்வளவுபேர் இருக்க வேண்டுமே என்று கணக்குப் போட்டார்கள். அவ்வாறின்றி மக்கள் தொகை குறைவாக இருந்ததால், இந்தக் குறைக்குக் காரணம், அவ்வளவு பேர்கள் மாண்டு போனார்கள், சிறையிலடைக்கப்பட்டார்கள், ஸ்டாலினும் சோசலிசமும் மேற்கொண்ட கொடூரத்தின் விளைவுதான் இதுவென்று முடிவு செய்தார்கள். எளிமையான முறை. ஆனால் முற்றிலும் மோசடியானது. மேலை உலகைப் பற்றிய அம்பலப்படுத்துதல் என்றால் இவ்வளவு முக்கியமான அரசியல் நிகழ்வுகள் பற்றி இந்த மாதிரியான அம்பலப்படுத்தும் முறையை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அங்கேயென்றால் பேராசிரியர்களும் வரலாற்று வல்லுநர்களும் இம்மாதிரியான கட்டுக் கதைகளைக் கட்டாயம் எதிர்த்து ஆர்ப்பரித்திருப்பார்கள். ஆனால் இது சோவியத் ஒன்றியம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இந்தக் கட்டுக் கதைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. காரணம் பேராசிரியர்களும் வரலாற்று வல்லுநர்களும் தங்கள் தொழில் நேர்மைக்கு மேலாகத் தொழில் ரீதியிலான பிழைப்பு முன்னேற்றத்தை வைக்கிறார்கள்.





எண்ணிக்கையைப் பொருத்தவரை, இந்த விமர்சகர்களின் இறுதி முடிவுகள்தான் என்ன? ராபர்ட் கான்குவஸ்ட்டைப் பொறுத்தவரை, அவர் 1961இல் செய்த கணிப்புப்படி சோவியத் ஒன்றியத்தில் 1930களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட பட்டினிச் சாவின் எண்ணிக்கை 60 இலட்சமாக இருந்தது. 1986ல் அதே கான்குவஸ்ட் சாவின் எண்ணிக்கையை 140 இலட்சமாக உயர்த்திக் கொண்டார். இந்த கான்குவஸ்ட்டின் கணக்குப்படி, கட்சி, படை மற்றும் அரசு இயந்திரத்தில் 1937 களையெடுப்பு துவங்குமுன்பு சிறையிலடைக்கப்பட்ட குலாக்குகள் எனப்படும் புதிய நிலப்பிரபுக்களின் எண்ணிக்கை 50 இலட்சம். 193738இல் களையெடுப்புகள் துவங்கிய பிறகு மேலும் 70 இலட்சம் கைதிகள் கூடியிருக்க வேண்டும்; அதாவது 1939இல் 120 இலட்சம் பேர் உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள் என்று தானாகவே கான்குவஸ்ட் கூட்டிக் கொண்டார். கான்குவஸ்டினுடைய கணக்குப்படி இந்த 120 இலட்சம் பேரும் அரசியல் கைதிகளாகத்தான் இருக்க முடியும்! அவரது கணக்குப்படி இந்த அரசியல் கைதிகளைவிட மிகவும் மிதமிஞ்சியவர்களாக பொதுவான கிரிமினல் குற்றவாளிகள் இருப்பார்கள்; எனவே, இவர்களையும் சேர்த்து சோவியத் யூனியனின் உழைப்பு முகாம்களில் 250300 இலட்சம் பேர் அடைபட்டிருந்தார்கள் என்கிறார்.





கான்குவஸ்டின் இன்னொரு கணக்குப்படி, 193739 கால கட்டத்தில் ஒரு 10 இலட்சம் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டார்கள்; இதோடு மேலும் 20 இலட்சம் பேர் பட்டினியால் மாண்டு போனார்கள்; 193739 களையெடுப்புக்குப் பிறகு இறுதித் தொகுப்பாக 90 இலட்சம் பேர் சிறையில் இறந்திருக்க வேண்டும் என்கிறார். பின்னர் இந்தப் புள்ளி விவரங்களைச் சரிக்கட்டி 1939க்கும் 1953க்கும் இடையே 120 இலட்சம் அரசியல் கைதிகளை போல்ஷ்விக்குகள் கொன்று விட்டார்கள் என்கிற முடிவைக் கான்குவஸ்ட் வந்தடைந்தார். இந்தத் தொகையை 1930களில் ஏற்பட்ட பஞ்சத்தால் இறந்தவர்கள் என்று கொல்லப்பட்ட தொகையோடு சேர்த்து ஆக மொத்தம் 260 இலட்சம் பேரை போல்ஷ்விக்குகள் கொன்றார்கள் என்ற முடிவுக்கு வந்தார். 1950இல் 120 இலட்சம் அரசியல் கைதிகள் சோவியத் ஒன்றியத்தில் இருந்தனர் என்று வேறு கான்குவஸ்ட் சாதித்தார்.





அலெக்சாண்டர் சோல்ஜெனித்சினும் இதே புள்ளி விவர முறைகளைத்தான் ஏறக்குறைய பயன்படுத்தினார். ஆனால் பல்வேறு கருதுகோள்களின் அடிப்படையிலான இந்த அறிவியல்பூர்வமற்ற முறைகளைப் பயன்படுத்திய சோல்ஜெனித்சின் இன்னும் கடைக் கோடித்தனமான முடிவுகளைச் சென்றடைந்தார். 1932-33 பஞ்சத்தால் 60 இலட்சம் பேர் மாண்டார்கள் என்கிற கான்குவஸ்டின் கணக்கை சோல்ஜெனித்சின் ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி 1936-39களில் ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் பேர் என்று கணக்கிட்டார். விவசாயத்தைக் கூட்டுமயமாக்கியதில் இருந்து 1953இல் ஸ்டாலின் இறந்தது வரை அங்கே 660 இலட்சம் மக்களைக் கம்யூனிஸ்டுகள் கொன்று விட்டார்கள் என்று தொகுத்துச் சொல்கிறார் சோல்ஜெனித்சின். இவர்கள் தவிர இரண்டாம் உலகப் போரில் 440 இலட்சம் பேர் பலியானதற்கும் சோவியத் அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வாதிடுகிறார். இதையெல்லாம் வைத்து, பதினோரு கோடி ரஷ்யர்கள் சோசலிசத்துக்குப் பலியாகிப் போனார்கள் என்கிற முடிவுக்கு சோல்ஜெனித்சின் போனார். 1953இல் அங்கே 250 இலட்சம் பேர் உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்ததாகப் புளுகுகிறார்.





கான்குவஸ்ட் மற்றும் சோல் ஜெனித்சின்னுடைய புளுகுகளை கோர்பச்சேவின் புதிய சுதந்திரச் செய்தி ஊடகம் என்கிற ஒப்பாரிக் கூச்சல் முன்னுக்குக் கொண்டு வந்தது. இந்தச் செய்தி ஊடகத்தின் கோரிக்கையை ஏற்று சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியினுடைய மத்தியக் கமிட்டி ஆவணக் காப்பகத்தை வரலாற்று ஆய்வுக்காக கோர்பச்சேவ் திறந்து விட்டார். இந்த ஆவணக் காப்பகத்தைத் திறந்ததானது மிகவும் குழப்பப்பட்ட இந்த கட்டுக் கதைகளைப் பொறுத்தவரை உண்மையில் இரண்டு வகையில் பிரச்சினையாக அமைந்தது. அதாவது உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் விவரங்கள் இந்த ஆவணக் காப்பகத்தில் கிடைக்கும். அதைவிட முக்கியமான உண்மை என்னவென்றால், சோவியத் ஒன்றியத்தில் கொல்லப்பட்டவர்கள் சிறையிலடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றி அண்டப் புளுகு ஆகாசப் புளுகு பரப்பியவர்கள் எல்லாம், ஆவணக் காப்பகம் திறக்கப்படும் நாளில் தாங்கள் சொல்லி வந்தவையெல்லாம் சரி தானென்று உறுதி செய்யப்படும் என்று சாதித்தார்கள். கான்குவஸ்ட், சாக்காரோவ், மெட்வேடேவ் மற்றும் எஞ்சிய அனைவரும் இப்படித்தான் கூச்சல் போட்டார்கள். ஆனால் ஆவணக் காப்பகம் திறக்கப்பட்டு அசலான ஆவணங்களின் அடிப்படையிலான ஆய்வு அறிக்கைகள் பிரசுரிக்க ஆரம்பித்தவுடன் வினோதமானவை நிகழ்ந்தன. கோர்பச்சேவின் சுதந்திரச் செய்தி ஊடகமும் சரி, சாவையும் சிறையிலடைப்பையும் பற்றிய ஊகக்காரர்கள் புளுகுணிகளும் சரி திடீரென்று அந்த ஆவணக் காப்பகம் மீது ஆர்வம் காட்டாமல் போய் விட்டார்கள். அதாவது வாயும் மெய்யும் பொத்திக் கொண்டார்கள்.





ஜெம்ஸ்கோவ், டௌஜின், ழெவன் ஜுக் ஆகிய ருசிய வரலாற்றாசிரியர்கள் மத்தியக் கமிட்டியின் ஆவணக் காப்பக ஆதாரங்களை ஆய்வு செய்து, தமது முடிவுகளை 1990லிருந்து வரலாற்று அறிவியில் ஆராய்ச்சிப் பத்திரிக்கைகளில் வெளியிடத் துவங்கினர்; ஆனால் அவற்றை மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களும் எழுத்தாளர்களும் முழுக்க முழுக்க கண்டு கொள்ளவே இல்லை. இந்த வரலாற்று ஆய்வு முடிவுகள் பற்றிய அறிக்கைகள் எல்லாம் ஒரு விடயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின. அதாவது ஸ்டாலின் காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட பொய்யுரைக்கப்பட்ட சாவுகள், சிறையிலடைப்புகள் பற்றிய சுதந்திரச் செய்தி ஊடகங்கள் கொடுத்த தகவல்கள் எல்லாம் வெறுமே ஊதிப் பெருக்கப்பட்ட புளுகுகள்தாம் என்பதை நிரூபித்தன. இதன் காரணமாகவே ஆய்வு முடிவுகளின் உள்ளடக்கத்தை அவை பிரசுரிக்கவே இல்லை; இருட்டடிப்புச் செய்தன. ஆனால், அந்த ஆய்வு முடிவுகள் எல்லாம் பெருந்திரள் மக்கள் கண்டறியாத, சிறிய எண்ணிக்கையிலான அறிவியல் ஆய்வுப் பத்திரிக்கைகளில் மட்டும் வெளிவந்தன.
முதலாளியச் செய்தி ஊடகங்கள் போடும் வெறியாட்டத்தோடு அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் போட்டி போடுவது மிகமிகக் கடினமானது; எனவே, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் மக்கள் திரளின் பல பிரிவினரிடையே கான்குவஸ்டும் சோல்ஜெனித்சினும் தொடர்ந்து ஆதரவு பெற முடிகிறது. மேற்குலகில் கூட, ஸ்டாலினுடைய தண்டனை அமைப்பு முறைகள் என்று சொல்லப்படுவதின் மீதான ருசிய ஆராய்ச்சியாளர்களுடைய அறிக்கைகள் பத்திரிக்கைகளின் முன் பக்கங்களாலும் தொலைக்காட்சிச் செய்தி ஒளிபரப்புகளாலும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன இருட்டடிப்புச் செய்யப்பட்டன. ஏன்? ஏன் என்பதற்கான பதிலை கம்யூனிச எதிரிகளும் அறிவர்; கம்யூனிஸ்டுகளும் அறிவர். இனி, அறிய வேண்டியவர்கள் மக்கள் தான்!





(கட்டுரையின் மூலம்: சுவீடன் நாட்டின் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் புரட்சியாளர்கள்) உறுப்பினர் மரியோ சூசா, "நார்த்ஸ்டார் காம்பஸ்' என்ற வட அமெரிக்கப் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை. கல்கத்தாவில் இருந்து வெளிவரும் ஃபிராண்டியர் என்ற ஆங்கில வார இதழ் (ஜனவரி 915, 2000) அக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ததில் இருந்து சில விளக்கங்கள் சேர்க்கைகளுடன் இத்தொடர் மொழி பெயர்க்கப்பட்டது.)

மாணிக்கவாசகம்
மார்ச்மேஜூன் 2000

நன்றி - புதிய கலாச்சாரம், தமிழ்சர்க்கிள்

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test