January 28, 2010
இந்திய ஐ.டி. துறைக்கு பாதிப்பு: வெளிப்பணி ஒப்படைப்புக்கு வரிச்சலுகை ரத்து!
வாஷிங்டன், ஜன.28: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்துள்ள புதிய மசோதாவால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை பெருமளவு பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே சர்வதேச தேக்க நிலை காரணமாக பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆள்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்நிலையில் அதிபர் பராக் ஒபாமா தனது ஓராண்டு பதவி நிறைவை ஒட்டி நிகழ்த்திய உரையில் வெளிப்பணி ஒப்படைப்பு (பிபிஓ) மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வெளிப்பணி ஒப்படைப்பு (பிபிஓ) பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும். காப்பீடு, மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ன் போன்ற பணிகளை பிபிஓ முறையில் நிறைவேற்றும் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும்.
அமெரிக்காவில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதற்காகவே வரிச் சலுகை ரத்து செய்யப்படுகிறது என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேலை வாய்ப்பு தொடர்பான மசோதாவில் இப்புதிய கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் வேலையின்றி தவிப்பவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. எனவே வேலைவாய்ப்பு மசோதா மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க அரசு தீவிரமாக உள்ளது. இதைப் போல மேலும் சில பரிந்துரைகளை அளிக்குமாறு செனட் சபையை ஒபாமா கேட்டுக் கொண்டார்.
உலகிலேயே அதிக அளவில் வெளிப்பணி ஒப்படைப்புப் பணியை மேற்கொள்ளும் நாடாக இந்தியா விளங்குகிறது. அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவால் இத்துறை பெரிதும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
2008-09-ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு 5.8 சதவீதமாகும். 1997-98-ம் நிதி ஆண்டில் இது 1.2 சதவீதமாக இருந்தது.
அமெரிக்க நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக பணிகளை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றன. இதில் ஆங்கிலப் புலமை மிகுந்த இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தகவல் தொழில்நுட்பம் பெற்றவர்களின் விகிதம் அதிகமாக இருந்ததால் இங்கு அதிக அளவில் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் உண்மையிலேயே கடந்த சில ஆண்டுகளில் இழந்த 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது என்றும் ஒபாமா குறிப்பிட்டார். தற்போதைய நடவடிக்கையால் ஏற்கெனவே 20 லட்சம் அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
2010-ம் ஆண்டில் அரசின் முன்னுள்ள பிரதான பிரச்னைகளில் முக்கியமானது வேலை வாய்ப்பை உருவாக்குவதே ஆகும் என்று ஒபாமா சொன்னார்.
புதிய வேலைவாய்ப்பு மசோதா மூலம் வால் ஸ்டிரீட்டில் உள்ள வங்கிகள் திரும்பச் செலுத்திய 3,000 கோடி டாலர் தொகையைக் கொண்டு சமுதாய வங்கிகள் உருவாக்கப்பட்டு சிறு வணிகத்துக்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகத்தை பிரதானமாகக் கொண்டே புதிய மசோதா அமையும். அத்துடன் அரசும் வர்த்தகம் பெறுக தேவையான உதவிகளை அளிக்கும். இதன் மூலம் ஏராளமானோர்க்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றும் ஒபாமா சுட்டிக் காட்டினார். மனித வள மேம்பாடு மற்றும் கல்வியில் அதிக முதலீடு செய்ய அரசு தீவிரமாக உள்ளது.
தற்போது வழங்கப்படும் உயர்நிலைப் பள்ளி கல்வியானது வேலை வாய்ப்பைப் பெறுவதற்கானதாக அமையவில்லை. அனைவரும் கல்லூரி படிப்பைத் தொடரும் வகையில் அளிக்க அரசு முயன்றுள்ளது. மக்கள் செலுத்தும் வரிப் பணம் வங்கிகளுக்கு மானியமாக அளிக்கப்பட்டு அது மாணவர்களுக்கு கல்விக் கடனாக வழங்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஏற்றுமதியை இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஒபாமா கூறினார்.
இதன் மூலம் இறக்குமதியை மட்டுமே அமெரிக்கா நம்பியிருக்காது என்ற மறைமுக தகவலை சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமணி - 29/01/2010
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment