> குருத்து: ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது - இறுதி பாகம்!

January 29, 2010

ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது - இறுதி பாகம்!


பாகம் 1
பாகம் 2
பாகம் 3

தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

ஆனால், கடந்த ஓராண்டாகவே நெருக்கடிகள் முற்றி வந்தன. குடியிருப்புகளின் வாடகைகள் பாதியளவுக்குக் குறைந்த போதிலும், பெரும்பாலும் அவை காலியாகவே கிடந்தன. துபாய் மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளது மன்னர்கள்-அமீர்களது பொருளாதார நிலை பற்றி எந்த விவரமும் உலகுக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. இதனால் நெருக்கடியின் பரிமாணத்தை எவராலும் மதிப்பிட முடியவுமில்லை.

இந்தக் கூட்டமைப்பில் இன்று அபுதாபி மட்டுமே எண்ணெய் வளமும் பொருளாதார பலமும் கொண்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியால் துபாய் திவாலாகி விழும் வரை உதவ மறுத்த அபுதாபி, இப்போது கடனளிக்க முன்வந்துள்ளது. துபாயைப் போல மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டிராமல், இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் அபுதாபி, துபாய் பிராந்தியத்தை தனது இரும்புப் பிடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்து மேலாதிக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

1997-இல் தென்கிழக்காசிய நாடுகள் திவால், 2001-இல் அர்ஜெண்டினா திவால், கடந்த ஆண்டில் அமெரிக்கா திவால் என்று உலக முதலாளித்துவம் அடுத்தடுத்து குப்புற விழுந்து கிடக்கிறது. இது தொடக்கம்தான். ஆனால், இந்நெருக்கடிக்கான முடிவு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.

லெமென் பிரதர்ஸ் என்ற நிதி நிறுவனம் திவாலாகிச் சரிந்தபோது, அது துபாயைப் பாதிக்கவில்லை என்று கூறி, உலக முதலாளித்துவ நெருக்கடி என்பது வேறு, துபாய் வேறு என்று நம்பச் சொன்னார்கள். ஆனால், துபாய் நெருக்கடி கசியத் தொடங்கியதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிதிச் சந்தைகள் ஆட்டங்காணுகின்றன. ஐரோப்பிய வங்கிளும் குறிப்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பி.சி. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, பர்க்லேஸ், ஏ.பி.என்.அம்ரோ முதலான வங்கிகள் பல்லாயிரம் கோடிகளுக்கு மேல் பெருத்த இழப்பைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் பாங்க் ஆஃப் பரோடா 5,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இது தவிர, பல இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளன. பிரிட்டனும் ஜெர்மனியும் கடன் பத்திரங்களைப் பெருமளவில் வாங்கியுள்ளதால், அவற்றின் நிதியமைப்புமுறையே கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. வீட்டு விலைகள் உயரும் என எதிர்பார்த்துக் கடனை வாரியிறைத்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்று புரியாமல் அவை தவிக்கின்றன.

அரசாங்கத்தின் தலையீடோ, கட்டுப்பாடோ இல்லாமல் தாராளமயம் சுதந்திரமாகச் செயல்பட்டால், முதலாளித்துவம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பொருளாதாரம் பூத்துக் குலுங்கும் என்று ஏகாதிபத்தியவாதிகள் உபதேசித்து, அதைத் தீவிரமாகச் செயல்படுத்தினர். ஆனால், கட்டுப்பாடற்ற நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடல், துபாயின் பொருளாதாரத்தையே மீளமுடியாத பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. துபாய் மட்டுமின்றி இதர நாடுகளிலும் கட்டுமானத் துறையும் வீட்டுமனைத் தொழிலும் நொறுங்கிச் சரியும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அதி விரைவில் கிரீசும் அயர்லாந்தும் சரிவது நிச்சயமாகிவிட்டது. அனைத்துலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கி மரணப்படுக்கையில் முனகுகிறது.

கோடீஸ்வர நாடான துபாயே ஆடிக்காற்றில் அம்மியாகப் பறக்கும்போது, ஏழை நாடுகளின் கதி இனி என்னவாகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. திவாலாகும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து முட்டுக் கொடுத்து முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்துவது என்ற கொள்கையைத்தான் அமெரிக்கா முதல் துபாய் வரை எல்லா அரசுகளும் பின்பற்றுகின்றன. நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடலை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஆதரிக்கும் இக்கேடுகெட்ட முதலாளித்துவக் கொள்கையால், எந்த நாடும் இனி மீளவே முடியாது என்பதைத்தான் துபாய் அனுபவமாக உணர்த்துகிறது.

- நன்றி - புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

1 பின்னூட்டங்கள்:

kailash,hyderabad said...

நல்ல பதிவு.தொடர்ந்து படித்து கொண்டிருந்தேன். தமிழ் மணத்தில ஓட்டும் போட்டேன். தமிலிஷ் ஓட்டு பட்டை நிறுவினீர்கள் என்றால் பதிவு நிறைய பேரை போய் சேரும்.
அப்படியே நம்ம நாட்ல விலைவாசி குறையுமா, இல்ல வருமானமாவது பெருகுமான்னு கொஞ்சம் எழுதுங்க தல.