> குருத்து: புரட்சிகர கலை நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை!

February 17, 2013

புரட்சிகர கலை நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை!

"கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.  இதை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே ரசித்து பார்க்கிறார்கள்.  இனி ஆபாசமான கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது!" என உத்தரவிட்டார் நீதிபதி சந்துரு.

"ஜொள் வடிச்சது தப்பாயா! இப்படி பப்ளிக்கா கண்டிச்சு அசிங்கப்படுத்திட்டாரே நீதிபதி!" என கொலைவெறியாகி, அப்பொழுதிலிருந்து காவல்துறை கலைநிகழ்ச்சி, நடனநிகழ்ச்சி என எதற்குமே அனுமதி தருவதில்லை.  இடையில் ஒருமுறை ஆளும்கட்சி அதிமுக கூட்டத்திலேயே கலைநிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுத்திருக்கிறார்கள்.

ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் கடந்த மாதத்திலிருந்து, மாநிலம் தழுவிய அளவில் "பெண்களுக்கு எதிரான பாலியல் வெறியாட்டத்தை எதிர்த்து" ஒரு பிரச்சார இயக்கத்தை உற்சாகமாய் நடத்தி வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியில், இன்று செங்குன்றம் பகுதியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பொதுக்கூட்டம், புரட்சிகர கலை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்கள்.  அதற்கு காவல்துறையிடம் அனுமதிக் கேட்டால்  'கலை நிகழ்ச்சிக்கு தடை' இருப்பதால் நடத்த முடியாது என்றார்கள்.

விளம்பர ஆபாசம், நடன ஆபாசம், திரை ஆபாசம் என இப்படி எல்லா ஆபாசங்களையும் எதிர்த்து தான் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடத்துகிறோம் என விளக்கி சொன்னால், காது கொடுத்து கேட்க மறுக்கிறார்கள் அல்லது புரிந்து கொள்ளும் அறிவு இல்லாமல் "நடத்த கூடாதுன்னா நடத்தக்கூடாது" என பழைய பல்லவியையே பாடினார்கள்.

தோழர்கள் விடாது காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்து, பல்வேறு விளக்கங்கள் தந்து, போராடி ஒருவழியாய் நேற்று அனுமதி வாங்கிவிட்டார்கள்.

இன்று மாலை 6  மணியளவில் செங்குன்றம் பகுதியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொருளாளர் காளியப்பன் சிறப்புரை ஆற்ற, ம.க.இ.கவின் மையகலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.  அவசியம் கலந்துகொள்ளுங்கள்.

0 பின்னூட்டங்கள்: