> குருத்து: ஆட்டிஸம் + என்கவுன்டர் = ஹரி + தாஸ்!

April 3, 2013

ஆட்டிஸம் + என்கவுன்டர் = ஹரி + தாஸ்!


நேற்று 'உலக ஆட்டிஸம்' விழிப்புணர்வு நாள். மீண்டும் ஹரிதாஸின் நினைவுகளில் மூழ்கிப்போனேன். ஆட்டிஸம் பாதித்த பையனைப் பற்றிய படம்; அருமையான படம்; விருது வாங்கப்போகிற படம் என பலரும் பாராட்டி எழுதிவிட்டார்கள்.

ஆட்டிஸம் படத்தின் ஒரு பாதி தான்.  இன்னொரு பாதி என்கவுன்டர்.  அதைப்பற்றி பலரும் அக்கறை கொள்ளாததால் இந்தப் பதிவு எழுத தோன்றியது.

காவல்துறையில் சட்ட ஒழுங்கு, உளவுப் பிரிவு போல என்கவுன்டர் (மோதல் கொலை)  பிரிவு இருப்பது போல பார்வையாளனை பல படங்கள் நம்ப வைக்கின்றன.

என்கவுன்டர் என்று சொல்லப்பவைகளில் 99% 'போலி மோதல்கொலைகள்' தான். நாம் கடந்து வந்த வரலாறு நமக்கு சொல்லும் உண்மை
அதுதான்!  போலி மோதல் கொலை என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலான விசயம்.  அதை எப்படி பதிவர்களும், விமர்சகர்களும் மிக எளிதாக கடந்து போகிறார்கள் என்பது ஆச்சரியமான விசயம்.

அமெரிக்கா பின்லேடனை தனது தேவைக்கு உருவாக்கியது போல தான் ச‌மூக விரோதிகளை இந்த ஆளும் சமூக அமைப்பும், அரசியல்வாதிகளும் உருவாக்குகிறார்கள்.  அவர்களுக்குள் முரண்பாடு வரும் பொழுது சட்டபூர்வ மாபியாவான காவல்துறையை கொண்டு சட்டப்பூர்வமில்லாத மாபியா கும்பலை போட்டுத் தள்ளுகிறார்கள்.

படங்களில் நேர்மையான அதிகாரி Vs கொடூர சமூக விரோதி என முன்நிறுத்துவதன் மூலம் காவல்துறையே நீதிபதியை போல‌ மரணதண்டனை தருவதை நமது இயக்குநர்கள் நியாயப்படுத்திவிடுகிறார்கள்.

இதில் நடைமுறையில் சிக்கல் என்னவென்றால், யதார்த்தத்தில் நேர்மையான அதிகாரியை எங்கு போய் தேடுவது? 'நரகலில் நல்லதை தேடுவது' என பழமொழி சொல்வார்களே! அதைப் போன்றது.

தின, வார, மாத மாமூல் வாங்குவது , பலவகைகளில் ஆயிரக்கணக்கிலும், லட்சகணக்கிலும் லஞ்சம் வாங்குவது, அப்பாவிகளை மிரட்டி பொய்கேஸ்களை போடுவது, போலி எப்.ஐ.ஆர் தயாரிப்பது, விசாரணை கைதிகளை சித்ரவதை செய்வது; லாக்கப்பில் கொன்றுவிட்டு தற்கொலை என மாற்றுவது, கட்ட பஞ்சாயத்து செய்வது; கிரிமினல்களை காப்பாற்றுவது, பாலியல் பலாத்காரம் செய்வது என சகல சட்டவிரோத செயல்களையும் செய்வது எல்லாம் நமது மதிப்புமிகு காவல்துறை தான். இவ்வளவு சட்டவிரோத செயல்களை சமூக விரோதிகள் கூட செய்வதில்லை!

இப்படிப்பட்ட 'நேர்மையான' காவல்துறை சமூக விரோதிகளை மட்டும் சுடுவதில்லை. கம்யூனிச போராளிகளை, தொழிற்சங்க தலைவர்களை,  தேசிய இனப் போராளிகளை, ஜனநாயக சக்திகளையும் சுட்டுத்தள்ளுகிறார்கள்.

இப்படிப்பட்ட மோதல் கொலைகளை ஆதரிக்கும் படங்களை நாம் எப்பொழுதும் கடுமையாக விமர்ச்சிக்க வேண்டும்.

****

'காக்க காக்க' சூர்யா தான் இந்த படத்தின் ஹீரோவும். சூர்யாவிற்கு ஒரு ஆட்டிஸம் பாதித்த ஒரு பையன் இருந்திருந்தால்,  காதலி, ஆசிரியருமான ஜோதிகா தான் இந்த படத்தில் சினேகாவாக வருகிறார்.

இந்த படம் கொரிய மொழியில் வந்த "மாரத்தான்' கதையை தழுவியது என்கிறார்கள்.  அந்த படம் போல ஆட்டிஸம் குறித்த அப்பா, மகன் உணர்வுகளை கொண்ட‌ முழு நீளப்படமாகவே எடுத்திருக்கலாம். கருப்பு ‍ வெள்ளை, இன்பம் துன்பம் என்பது போல ஆட்டிஸம் -டல், என்கவுன்டர் - சுறுசுறுப்பு என இயக்குநர் யோசித்து எடுத்திருக்கிறார்.  (ஏன் இப்படி எடுத்திருக்கிறார் என பதிவர் உண்மைத் தமிழன் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அதற்கான விடை இது தான்)

'தாரே ஜமீன் பர்' என்ற இந்திப்படத்தில் இயக்குநர் ‍தான் எடுத்துக்கொண்ட கதைக்கு சின்சியராக இருந்ததை போல, இந்த இயக்குநருக்கு ஆட்டிஸத்தின் மீதும் தன் மீதும் நம்பிக்கை இல்லை.  'நினைத்தாலே இனிக்கும்', 'யுவன் யுவதி' என ஏற்க‌னவே இரண்டு தோல்விப்படங்கள் பயத்தை கொடுத்திருக்கும்.

காவல்துறையில் இவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தும், ஆட்டிஸத்தை குறித்த விழிப்புணர்வே இல்லை.  இது போல ஆயிரக்கணக்கான, லட்சகணக்கான குழந்தைகள் இந்த மண்ணில் மனநிலை சரியில்லை என்ற பெயரில் தான் வதைக்கப்படுகிறார்கள்.

இதற்காக சிறப்புப் பள்ளிக்கூடங்களை திறந்திருக்கலாம். பாடத் திட்டத்தில் ஆட்டிஸம் குறித்த பாடங்களை வைத்திருக்கலாம். இந்த குழந்தைகள் மீது ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியிருக்கலாம். எதுவுமில்லை.

அப்பா - மகன் என வெறும் செண்டிமெண்டை பிழிந்து கண்களை குளமாக்கி, 'அய்யோ பாவம் இந்த பையன்" என்று சொல்வதில் பெரிதாக என்ன பலன் இருக்கப் போகிறது. கல்லா கட்டத்தான் பயன்படும்.  விழிப்புணர்வை ஏற்படுத்தாது. அந்த குழந்தைகளுக்கு நல்லதோரு விடிவைத் தராது.

****

2 பின்னூட்டங்கள்:

சந்தனமுல்லை said...

படத்தைப் பார்த்த போது எனக்கும் இதேதான் தோன்றியது. நீங்கள் விரிவாக விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். தரமணியில் வேலை செய்த போது பார்த்திருக்கிறேன், அங்கு இருக்கும் ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டிக்கு செல்ல மத்திய கைலாஷ் சிக்னலில் அம்மாக்கள் குழந்தைகளோடு நின்றுக்கொண்டிருப்பார்கள். கூட்ட நெரிசலில் பிதுங்கி வரும் பஸ்ஸில் தானும் ஏறி, குழந்தைகளையும் ஏற்ற அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. ஆனாலும், ஒரு நாள் கூட விடாமல் நேரம் தவறாமல் சின்சியராக குழந்தைகளை அழைத்துவரும் அவர்களது அக்கறையை,பொறுமையை, சாதாரண மக்களின் குழந்தைகளைப் பாடுகளைப் பற்றி ஹரிதாஸ் பேசவில்லை. ஒரு போலீஸ் அதிகாரியின் மகன் ஸ்பெஷல் கிட்டாக இருப்பதை பேசுவதாகத்தான் நான் உணர்ந்தேன். மேலும், சாதாரண குடும்பத்தில், அப்பா வேலைக்கு செல்லும் பட்சத்தில் அம்மாக்கள்தான் இந்த குழந்தைகளை கவனித்தாக வேண்டும். சாலையிலோ அல்லது பேருந்து நிறுத்தத்திலோ இது அன்றாடம் நாம் காணும் காட்சி. ஆனால், அப்பாவின் பாசம் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இருப்பதாக போஸ்டரிலோ விமர்சனத்திலோ பார்த்த நினைவு.

நேரம் இருப்பின் விரிவாக எழுதுகிறேன். நன்றி

VOICE OF INDIAN said...

பயனுள்ள தகவல் ஐயா!