> குருத்து: காந்தாரா – கன்னடம் (2022)

October 28, 2022

காந்தாரா – கன்னடம் (2022)


முன்பொருகாலம். ஒரு ஜமீன். மனநிம்மதியில்லாமல் அலைகிறார். பழங்குடிமக்கள் வழிபடும் ஒரு கல் தெய்வத்தைப் பார்த்து நிம்மதியடைகிறார். அந்த மக்களிடம் என்னிடம் தந்துவிடுங்கள். உங்களுக்கு எவ்வளவு நிலங்கள் வேண்டுமோ தந்துவிடுகிறேன் என்கிறார். மலைவாழ் சாமியாடியின் சத்தம் எவ்வளவு தூரம் கேட்கிறதோ, அந்த நிலங்களை தாருங்கள் என்கிறார்கள். அதே போல நிலங்களை தந்தும்விடுகிறார்.


வருடங்கள் நகர்கின்றன. ஜமீனின் வாரிசு வழி வந்தவர் ”இழந்த” நிலங்களை எப்படியாவது திரும்ப கைப்பற்ற முயல்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அதனால் ரத்தம் கக்கி சாகிறார்.

படம் நிகழ்காலத்திற்கு வருகிறது. மலைவாழ் மக்களை அவர்கள் வாழும் இடத்தில் இருந்து துரத்த அரசு இந்திரம் முயல்கிறது. ஜமீன்தாரரோ மலைவாழ் மக்களிலேயே நாயகன் உட்பட சிலரை பயன்படுத்தி மரங்களை வெட்டி கடத்துகிறார். தான் மூதாதையர் எழுதி வைத்த நிலங்களையும் எழுதி வாங்க சதித்தனமாய் முயல்கிறார்.
இறுதியில் என்ன ஆனது என்பதை ஆக்ரோசமாய் சொல்லியிருக்கிறார்கள்.

***

பழைய கள் தான். அதை புதிய மொந்தையில் தந்திருக்கிறார்கள். அனைவரின் நடிப்பு, வசனம், ஒளிப்பதிவு, இசை என எல்லாமும் கச்சிதமாய் இருக்கிறது. கேஜிஎப் படம் தயாரித்தவர் தான் இந்தப் படத்தையும் எடுத்திருப்பதாக தகவல் சொல்கிறார்கள். இதையும் ஒரு பான் இந்தியா படமாக எடுத்திருக்கலாமே என நாயகனும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டியிடம் கேட்டால், இது கன்னட மண்ணுக்குரிய கதை. ஆகையால், மற்ற மொழிக்காரர்கள் சப் டைட்டிலுடன் பார்க்கட்டும் என்றாராம். படம் அடைந்துள்ள பெரிய வெற்றி பல மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நாயகனை இதற்கு முன் எப்போதோ பார்த்திருக்கிறோமோ என யோசித்தால், ”பெல் பாட்டம்” என ஒரு படம். அதில் கொஞ்சம் கிறுக்குத்தனமான டிடெக்டிவ்வாக வருபவர் அல்லவா! என நினைவுக்கு வருகிறது.

துளு பேசும் மலைவாழ் மக்களின் நம்பிக்கை, சடங்கு. அவர்களுடைய பண்பாடு குறித்து படம் பேசியிருக்கிறது. சாதி, ஏற்றத்தாழ்வு என்பதையும் பேசியிருக்கிறது.

கதையின் ஒன்லைனைப் பொறுத்தவரை எனக்கு நாட்டுப்புற கதையாக தான் படுகிறது. ”மரகத நாணயம்” என நகைச்சுவைப் படத்தில், இரும்பொறை அரசன் ஒரு மன்னன். தவம் இருந்து, மரகத நாணயத்தை பெறுவான். அதை வைத்துக்கொண்டு நிறைய வெற்றிகளை அடைவான். 96 வயதில் சாகும் பொழுது கூட தன் வாரிசுகளுக்கு கூட கொடுக்க மனமில்லாமல், தனது கல்லறையில் வைத்து புதைக்க சொல்வான். அந்த நாணயத்தை யார் அடைய நினைத்தாலும், விரட்டி விரட்டி கொல்வான் என கதை போகும். இது தான் ஒரு அரசனின் இயல்பு.

ஒரு நாட்டில் மன்னனோ, ஜமீனோ எவ்வளவு நிலங்கள் தங்கள் வசம் இருக்கிறதோ அவ்வளவு சொத்து மட்டுமல்ல! அது சமூக அரசியல், ஆட்சி அதிகாரத்தையும் தரும். ஆகையால், ஒரு கல் தெய்வத்திற்கு தன் நிலங்களை தருவது என்பது இயல்புக்கு மீறியதாக இருக்கிறது. இந்த அடிப்படையில் தான் நாட்டுப்புற கதையாக தான் இருக்கிறது என்கிறேன். மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லுங்கள். பேசலாம்.

இறுதிக்காட்சிகளில் நாயகன் மிரட்டியிருப்பார். இன்னும் அந்த இசையும், அசைவுகளும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன.

நண்பர்கள் சொல்லும் செய்திகளை வைத்து பார்த்தால், தீபாவளி படங்களில் சர்தாரையும், பிரின்ஸையும் ”காந்தாரா” பின்னுக்கு தள்ளும் என்றே நினைக்கிறேன். காந்தாரா தமிழிலும் வெற்றி பெறட்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு தானே!

0 பின்னூட்டங்கள்: