பெரிய நிறுவனங்களில் ஆண்டு முழுவதும் என்னென்ன நாட்கள் விடுமுறை என்பதை ஆண்டு துவங்கும் பொழுதே தெரியப்படுத்திவிடுகிறார்கள். அரசும் அதை ஒரு விதிமுறையாக வைத்திருக்கிறது.
ஆனால், வளர்ந்து வரும் நிறுவனங்களில் அப்படி அறிவிக்கப்படுவதில்லை. ஒரு வரி ஆலோசகராக அந்த நிறுவனம் விடுமுறையா இல்லையா என தெரிந்துகொண்டு போவது வழக்கம். அப்படி ஒரு சில நிறுவனங்களில் முதல் நாள் வரைக்குமே தெரியாது என்பார்கள்.
இதெல்லாம் அடிப்படையான விசயங்கள். வெளியூரில் வேலை செய்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பே ரயிலோ, பேருந்தோ புக் செய்தால் தான் ஊருக்கு கிளம்பமுடியும். கடைசி நேரத்தில் கிளம்பினால், கூடுதலாக பணமும் செலவாகும். அலைச்சலுக்குள்ளவோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம் இதை கேட்பது சரியானது. கேளுங்கள் என வலியுறுத்தினாலும், கேட்க தயங்கிக்கொண்டே பல மாதங்களை கடந்து செல்வார்கள்.
யாராவது, இதன் நியாயத்தை நிர்வாகத்திடம் பேசி, புரியவைத்து, அல்லது தைரியமாய் கேட்கும் அந்த பணியாளருக்காக அவர்கள் காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
***
நேற்று ஒரு நண்பரிடம் இது குறித்து பேசும் பொழுது, பள்ளியில் பெற்றோர்களுக்கான கூட்டம் நடைபெறும் பொழுது, கூட்டம் துவங்கும் வரைக்கும், பள்ளியில் அடிப்படை பிரச்சனைகள், வேறு வேறு விசயங்களை பெற்றோர்களுக்குள் விவாதிப்பார்கள். ஆனால், கூட்டம் துவங்கியதும் பெரும்பாலோர் அமைதியாய் இருப்பார்கள். ஏதாவது கேட்டால், பிள்ளைகளின் வாழ்வை பாதிக்கும் என பயந்துகொண்டு அமைதி காப்பார்கள்.
நிர்வாகத் தரப்பில் சில விசயங்களை அவர்களுடைய கண்ணோட்டத்தில் அமுல்படுத்திக்கொண்டே இருப்பார்கள். மாணவர்கள் தரப்பில், பெற்றோர்கள் தரப்பில் நாம் நடைமுறை சிக்கல்களை சொல்லும் பொழுது தான் அவர்களே புரிந்துகொள்வார்கள்.
இப்படி பெற்றோர்கள் கூட்டம் கூட்டியே பேசாதவர்கள், எப்படி தனித்தனியாய் கேட்க போகிறார்கள்? இப்படி நியாயமான அம்சங்களை கேட்டால் தான் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என அறிந்தும், கேட்கும் தைரியமான பெற்றோர் கேட்கும் வரை அமைதியாய் இருப்பார்கள்.
****
ஒரு வரி ஆலோசகர்களுக்கான, கணக்காளர்களுக்கான அமைப்பு ஒன்று இருக்கிறது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள். அனுபவ அறிவு கொண்டவர்கள். அது இலவச சேவையும் கூட அல்ல. எல்லோரும் வருடச் சந்தா செலுத்துபவர்கள்.
அந்த அமைப்பு இணைய வழியில் ஜூம் கூட்டம் நடத்துகிறார்கள். குறிப்பாக சனிக்கிழமைகளில் நடத்துகிறார்கள். சனிக்கிழமைகளில் அதன் பல உறுப்பினர்கள் நிறுவனங்களில் பொறுப்பான வேலைகளில் இருப்பவர்கள். அதனால், கூட்டங்களில் அவர்களால் பங்கேற்கமுடியவில்லை.
அந்தக் கூட்டத்தை பதிவு செய்து அவர்கள் வைத்திருக்கும் சானலில் வலையேற்றினால், கலந்துகொள்ள இயலாத உறுப்பினர்களும் பயன்பெறுவார்கள். தனிப்பட்ட முறையில் சந்திக்கும் பொழுது, பேசும் பொழுது, அதன் தேவையை பேசுகிறார்கள். பரஸ்பரம் வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் கேட்க தயங்குகிறார்கள். அப்படி யாராவது ஒருவர் தொடர்ந்து கேட்டால், அவர் வேண்டுமென்றே கேட்கிறார் என நிர்வாகத்தினர் கோபப்படுகிறார்கள். யார் தேவை என உணர்கிறார்களோ பலரும் கேட்க துவங்கினால், அந்த வேலை இயல்பாக நடந்துவிடும். ஆனால் கேட்க தயங்குகிறார்கள். அந்த அமைப்பில் இணைவதே அந்த கூட்டங்களுக்கு தான். அதையே இழப்பது என்பது பெரிய இழப்பு. அதைக் கேட்காமல் அதில் ஏன் நாம் உறுப்பினராக இருக்கவேண்டும்? புரியவில்லை.
என் வாழ்வில் கேட்டால் தான் கிடைக்கும் என உணர்ந்தே இருக்கிறேன். நமது உரிமைகள் அப்படித்தான். வரலாறு நமக்கு கற்றுத் தந்ததும் அப்படித்தான். கேட்டால் கிடைக்கும். கேட்கவில்லை என்றால் இழப்பு நமக்கு தான்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment