> குருத்து: August 2011

August 29, 2011

மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி!

3 பேரின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற, உயர்நீதிமன்றம் 8 வாரம் தடை!

ராஜிவ் படுகொலை வழக்கில் 3 பேரின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற 8 வாரம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி இவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.

இந்த நிலையில் இவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், 8 வாரத்துக்கு 3 பேரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டது

******
ஆயுள் தண்டனையாக குறைக்க சட்டசபையில் தீர்மானம்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.

இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருப்பு - II (செங்கொடியின் நினைவில்)


என்ன சொல்வது?
என்ன வெளிப்படுத்துவது?
என்ன செய்வது?

உன்னை கண்டிப்பதா?
அதற்கான தகுதி எனக்கு உண்டா?
உனக்காகக் கதறி அழுவதா?
தன்னை நொந்து கொள்வதா?
நம்மை நொந்து கொள்வதா?
ஆவேசம் கொள்வதா?
அடங்கி விடுவதா?

என்ன செய்வது?

சொற்கள்…
சொற்கள் மட்டுமே போதுமா?

மூலக்கொத்தளத்தில் உறங்குபவன்
அன்று எரிய விட்ட தீயின் ரணமே
இன்றளவும்
அவ்வப்பொழுது
நினைவில் எழும்பி
இதயம் கிழித்துக் கடக்கும் பொழுதில்…
நீ…
நீ ஏன் இப்படிச் செய்தாய்…?

மொத்தமாய் மரத்து விட்ட சமூகம்
உன் உடல் தின்ற
நெருப்பினால் உணர்வு பெறும் என்றா?
உணர்வு…
உணர்வு பெறுமா சமூகம்?
உணர்வு பெறுவார்களா மக்கள்?
அது நடக்குமா?
என்றேனும் நடக்குமா?

நான் நம்ப விரும்புகிறேன் செங்கொடி…
நடக்கும் என நம்ப விரும்புகிறேன்.
உனக்காக நம்ப விரும்புகிறேன்…

விசும்பல்கள் மாத்திரமே ஒலித்தாலும்,
வீர வசனங்கள் மாத்திரமே ஒலிக்கும்
என இரண்டாண்டுக்கு முந்தைய நிகழ்வுகள்
மூளையில் அறைந்து சொன்னாலும்,

உனக்காக…
அருமை செங்கொடி…
அன்பு மகளே…
உனக்காக நான் நம்ப விரும்புகிறேன்…
உணர்வு பற்றும்…
உனதுடல் தின்ற தீயின் ஆவேசத்தோடு
நாடு முழுதும் பற்றியெறியும்
என நம்ப விரும்புகிறேன்.
நம்புவேன்

- போராட்டம்

August 27, 2011

அன்னா ஹசாரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன் - அருந்ததிராய்


அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..

தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்விக்கு கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைத்தான் சரியென அவர்கள் 'டிக்' செய்திருப்பார்கள் (அ) வந்தே மாதரம்! (ஆ) பாரத அன்னைக்கு ஜே! (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா! (ஈ) இந்தியாவுக்கு ஜே!

முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)

2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது "சாகும் வரை உண்ணாவிரதத்தை" சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் "அன்னா அணி" என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்பு சட்ட வரைவு கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக அது இருந்தது.

பிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் "சாகும்வரை போராட்ட"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது 'போராடும் உரிமைக்கான‌ போராட்டம்', ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள் அன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார்; விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய திகார் சிறையிலேயே கெளரவம்மிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் மக்கள் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, 'அன்னா அணி'யின் உறுப்பினர்கள் திகார் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த வீடியோ செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப்பட்டிருக்குமா?)

இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லீலா மைதானத்தில் நாள் முழுக்க வேலை பார்த்து, வார இறுதியில் அரங்கேறப் போகும் மிகப்பெரிய 'ஷோ'வுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட "சாகும் வரை உண்ணாவிரதம்" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்” என்று நம்மிடம் சொல்ல‌ ஆரம்பித்து விட்டார்கள்.

அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை அ-மத்தியத்துவப்படுத்த காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத - அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம். இந்த வரைவுச்சட்டத்தின் படி, ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு, ஒரு அதிகார மையத்தை நிர்வகிப்பார்கள். அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு; அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து, நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாக, கணக்கில் அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும். அரசு நிர்வாகம் என்பதே இதற்காகத்தானே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அரசு நடுத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்று, மற்றொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. இதன் மூலம், இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாக இந்த லோக்பால் மசோதா அமைகிறது.

இந்த மசோதா பயன் தருமா, தராதா என்பது நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா? ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா? அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா? ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள்! பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறித்தான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா? எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதிகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா? சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி நியாயமாக இருக்கும்?

இதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்காவிட்டால், அவர்கள் உங்களை "உண்மையான இந்தியன் இல்லை" என்று அடையாளப்படுத்துவார்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லை என்று முடிவெடுத்துவிட்டன‌.

இந்த உண்ணாவிரதம் இரோம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தம் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் AFSPA (Armed Forces [Special Power] ACT) சட்டத்திற்கு எதிராக பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப்பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே இரோம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரக்கணக்கான கிராமவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.

அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்? இரோம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா? போபால் வாயுக் கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா? அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இல்லையா? தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்பு தெரிவித்த நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா? அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.

பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படாவிட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டும் அன்னா என்ற 74 வயது மனிதரை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. "ஒரு பில்லியன் குரல்கள் ஒலித்து விட்டன” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.”

மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்? உடனடி அவசரத் தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ இவர் ஒரு வார்த்தை கூட உதிர்த்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைக‌ள் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர் அன்னா. 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமாரப் புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)

இந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள், தற்போது இப்பத்திரிகையாளர்கள் மூலமாக அம்பலத்துக்கு வந்துள்ளது. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்விப்படுகிறோம். அங்கு கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலோ அல்லது கூட்டுறவு சொசைட்டி தேர்தலோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: “மகாத்மா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு 'சமார்', ஒரு 'சுனார்', ஒரு 'கும்ஹர்' இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைத்தான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.” இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது?

கோகோ கோலாவில் இருந்தும், லேமென் பிரதர்ஸில் (Lehman Brothers) இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்துபவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில், அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான நிறுவனங்க‌ளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய நிறுவனங்க‌ளும், பல சிறப்புப் பொருளாதார பகுதிகளைக் கட்டிய நிறுவனங்க‌ளும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய பல கோடிக்கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்க‌ளும், ரியல் எஸ்டேட் நிறுவனங்க‌ளும் அடக்கம். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்?

எப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! 2G ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக்ஸ் மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமானபோது, பல முக்கியமான நிறுவனங்க‌ளும் மூத்த பத்திரிகையாளர்களும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும், நேச கட்சிகளின் மந்திரிகளும், ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கான ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொது கருவூலத்தில் இருந்து கரந்து கொண்டு சென்றனர் என்பது தெரிந்தது. இத்தனை ஆண்டுகளில் முதன் முறையாக அரசியல் புரோக்கர்கள் பெரும் அவமானப்பட்டார்கள். இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர், சிறைச்சாலையில் வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டார்கள். இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும், இல்லையா?

அரசு தனது வழக்கமான கடமைகளைக் கை கழுவி, கார்ப்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்ப்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்ப்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது.

தற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும், அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசை பொதுவெளியில் இருந்து இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை கொண்டு செல்வதற்காகத்தான். இதன் மூலம் இன்னும் தனியார்மயமாக்குதலை ஊக்குவிப்பதற்காகவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கை வளங்களை இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்ப்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்கு 'பரிந்துரைக்கும் கட்டணம்' (Lobbying Fee)என்று பெயர் சூட்டப்படும் நாள் வெகுதூரம் இல்லை.

இந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராரிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்?

இந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடீஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது. அவர்கள் கொடி ஆட்டுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்! நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்க்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப்பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

-அருந்ததி ராய் (21/08/2011, தி இந்து)

நன்றி : மொழிபெயர்ப்பாளர் சொ.பிரபாகரன்

August 26, 2011

மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!

மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!

ஈழத்தின் மீதான போர் புரிந்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற போர்க்குற்றவாளி ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்யக் கோரியும், விடுதலை செய்யக்கோரியும் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் 27.8.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்ட விவரத்தை இங்கே தருகிறோம். அனைவரும் வருமாறு கோருகிறோம்.

இடம்: பனகல் மாளிகை, சைதாப்பேட்டை

நாள்: 27.8.2011

நேரம்: மாலை 4.30 மணி

தலைமை: வே. வெங்கடேசன், சென்னை ம.க.இ.க செயலாளர்

சிறப்புரை: மா.சி.சுதேஷ்குமார், மாநில இணைச்செயலாளர், பு.ஜ.தொ.மு

* இராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்! இது அநீதி!! தன்மானமுள்ள, மனிதாபிமானமுள்ள எவரும் இதனை எதிர்த்து போராடவேண்டும்.

* தடா என்ற கொடிய கருப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து, பல்வேறு சித்திரவதைகள் செய்யப்பட்டுத்தான் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டது. முதலில் இந்த கருப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியதையும் அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதும் பச்சை பாசிசம்!

* இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை பரிசீலிக்காமலே ஏற்கனவே, முடிவு செய்துவைத்த கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பைதான் உச்ச நீதிமன்றம் அன்று வழங்கியது. கருணை மனுப்போட்ட பின்னர், அவர்களது மரணத்துடன் விளையாடத் தொடங்கிய காங்கிரசு அரசு, தற்போது அவர்களை தூக்கிலிட அனுமதித்துள்ளது.

* இந்தத் தீர்ப்பன் அடிப்படையில் 21- ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோர் சிறைதண்டனையும் சொல்லமுடியாத கொடுமைகளையும் அனுபவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை என்பது என்னவகை நீதி?

* ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தான் இராஜபக்சே, இராஜபக்சே இனப்படுகொலை செய்தவன், போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் போராடிக் கொண்டு வருகின்றனர். இராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்குத் துணைபுரிந்த இந்திய அரசு, இராஜபக்சேவை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளைதான் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேரறிவாளன், சாந்தன், முருகனின் கருணை மனுக்களை நிராகரித்து தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டதன்மூலம் தனது நோக்கத்தை மீண்டும் தெளிவுப்படுத்தி உள்ளது.

* ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க இராஜபக்சேவுக்கு உதவுவதன் மூலம் தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள இந்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியே பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத்தண்டனை!

* ஈழத் தமிழர்களின் சுயநிரணய உரிமைக்காகவும், இந்திய அரசின் தெற்காசிய மேலாதிக்கத்தை வீழ்த்தவும், இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்கவும், பேரறிவாளன்- சாந்தன்- முருகன் ஆகியோரின் விடுதலைக்காகவும் போராடுவோம்!

அனைவரும் வருக!

______________________________________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

அலைபேசி - (91) 97100 82506 (வினவு)

தொடர்புடைய சுட்டிகள் :

கருணையினால் அல்ல! - புதிய கலாச்சாரம்

ஊழலை ஒழிக்குமா, லோக்பால்? பி. சாய்நாத்


முன்குறிப்பு : இன்று நாடுமுழுவதும் ஊழல் குறித்தான விவாதம் முன்னணிக்கு வந்து இருக்கிறது. ஊழல் குறித்தான தனது நிலைப்பாடை பத்திரிக்கையாளர் சாய்நாத் முன்வைக்கிறார். ஊழலின் வேரை சுட்டிக்காட்டுவது முக்கியமானது.

****

ஜூலை 8, 2011 அன்று 'தி இந்து' பத்திரிக்கையில் பி. சாய்நாத் எழுதிய கட்டுரையின் சாரம்

"எது எப்படி இருந்தாலும் நமது பிரதமர் மிகவும் நேர்மையானவர்" என்று பெருமையாகவும் பிறகு தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ளவும் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், சமீபத்தில் இந்த வாக்கியம் நம் காதிற்கு வருவதில்லை. ஏனெனில், மிக நேர்மையான நம் பிரதமர் வரலாறு காணாத ஊழல் நிறைந்த அரசுக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

இந்த ஊழலுக்கான காரணங்களை பற்றி பலர் பல கருத்துக்களை சொல்கிறார்கள். ஆனால், முக்கியமான இந்த மூன்று விசயங்களை ஆராயாவிட்டால் இந்திய ஊழலை பற்றிய எந்த ஆய்வும் முழுமை கிடையாது.

1. இந்திய சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு, பணமும், வசதியும் ஒரு இடத்தில் குவிப்பது. வர்க்கம் மற்றும் சாதிகளினாலான ஏற்றத்தாழ்வு மற்றும் பல.

2. இந்த ஏற்றத்தாழ்வுகலை வலுப்படுத்தி, அதை நியாயப்படுத்தும் இந்திய பொருளாதாரக்கொள்கை.

3. பல விதிவிலக்குகள், தனிச்சையான முடிவெடுக்கும் தன்மை மற்றும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத கலாச்சாரம். இவற்றினால் பணம், பதவி உள்ளவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் எனும் நிலைமை. ஆளும் வர்க்கத்தை பகைத்துக் கொள்ளாமல் இருந்தால், எந்த வரிச்சட்டத்தையும் உடைத்து வரி காட்டாமலேயே சமாளித்துவ்ட முடியும் என்கிற நிலைமை.

ஊழலை அதன் அடிப்படையிலிருந்து சரி செய்ய தவறுவது, குழாய் திறந்திருக்கும் பொழுது தரையை துடைத்து ஈரத்தை போக்க முயற்சிப்பது போல் ஆகும்.

கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வரும் பொருளாதார கொள்கையினால் இந்திய அரசு கம்பெனிகளை மேலும் செல்வச் செழிப்புமிக்கவைகளாக்கும் கருவியாய் குறுகிவிட்டது. தனியார் முதலீட்டுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவே அரசு இயங்கி வருகிறது.

கடந்த 6 பட்ஜெட்களில் மட்டும் ரூ. 21 லட்சம் கோடி அரசு, வரிவிலக்கு என்ற பெயரில் கம்பெனிகளுக்கு நன்கொடை வாரிவழங்கியிருக்கிறது. அதே காலகட்டத்தில் உணவு மற்றும் விவசாயத்திற்கான மானியங்களும் பெருவாரியாக குறைக்கப்பட்டுள்ளன.

புதிய பொருளாதார கொள்கை, கம்பெனிகளின் தேவைகளை மிக விசுவாசமாக பூர்த்தி செய்யும் பணியாளராக அரசை மாற்றியுள்ளது. அதுவும் மக்கள் வரிப்பணத்தில். நிலம், தண்ணீர், அலைவரிசை போன்ற இந்தியாவின் வளங்களை கொண்டு தனியார் கம்பெனிகளின் லாபத்தை அதிகரிக்க அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

இந்து மாநிலங்களில் கடந்த மே மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 825 எம்.எல்.ஏக்கள் வெளியிட்ட தகவ்ல் படி அவர்களது மொத்த சொத்து மதிப்பு ரூ. 2128 கோட். இவர்கள் வெளியிடாத சொத்து மதிப்பு இன்னும் எவ்வளவோ? தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் 825 பேர் இதே பணத்தை சம்பாதிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா? வெறும் 2000 ஆண்டுகளே. இதை 10,000 பேர் சேர்ந்து சம்பாதித்தால் கூட 170 ஆண்டுகளாகும். இது தான் நம் நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வு.

நாட்டின் பல இடங்களில் தன்னுடைய வலமான நிலங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுதல், கட்டாயமாக வளமான நிலங்களை கையகப்படுத்துதல் போன்ற அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். ஊழலை எதிர்த்து போராட வேண்டுமா? அதற்கு லோக்பால் மட்டும் போதாது.

சமுதாய ஏற்றத்தாழ்வு, பொருளாதார கொள்கை போன்ற போராட்டங்களுடன் ஊழல் எதிர்ப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு சின்ன லோக்பால் கூட்டம் செய்துவிடமுடியாது. மக்களின் மிகப்பெரிய போராட்டமாக இது அமையும்.

- மொழிபெயர்ப்பாளர் : திரு. பாலாஜி

ஆகஸ்ட் மாத தோழமை இதழிலிருந்து.

இணைப்பு சுட்டிகள் :

The gang that couldn't shoot straight - P. Sainath

August 24, 2011

அமெரிக்காவில் பெட்ரோல் விலை ரூ. 42.82 சென்னையில் ரூ. 67.20


புது தில்லி, ஆக.23: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 23.37, ஆனால் அதற்கு விதிக்கப்படும் வரியோ ரூ. 40.33. இத்தகைய வரி விதிப்பு வேறெந்த நாட்டிலும் அல்ல. இந்தியாவில்தான் பொருளின் உற்பத்தி விலையை விட அதிக வரி விதிக்கப்படுகிறது.

அமெரிக்காவை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்தார்.

தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 63.70-க்கு விற்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 42.82 என்று அவர் குறிப்பிட்டார்.

இதேபோல இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்.

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 41.81, இலங்கையில் ரூ. 50.30, வங்கதேசத்தில் ரூ. 44.80, நேபாளத்தில் ரூ. 63.24-க்கு விற்கப்படுகிறது.

இருப்பினும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.97, ஜெர்மனியில் ரூ. 95.99, இங்கிலாந்தில் ரூ. 96.39, இத்தாலியில் ரூ. 96.79-க்கு விற்பனையாகிறது.

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு அதிகப்படியான வரி விதிப்பு முக்கியக் காரணமாகும். வரி விதிப்பின்றி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ஒரு லிட்டர் ரூ. 23.37-க்கு விற்பனை செய்ய முடியும்.

தில்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 41.29. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விடக் குறைவானதாகும். ஆனால் இலங்கை, வங்கேதசம் ஆகிய நாடுகளை விட அதிகமாகும்.

வரி விதிப்பின்றி ஒரு லிட்டர் டீசலை ரூ. 24.90-க்கு விற்பனை செய்ய முடியும்.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 45.84. பிரான்ஸில் ரூ. 69.87, ஜெர்மனியில் ரூ. 72.54, இங்கிலாந்து ரூ. 82.93, இத்தாலியில் ரூ. 74 விலையில் விற்பனையாகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 46.70, நேபாளத்தில் ரூ. 45.38, இலங்கையில் ரூ. 34.37, வங்கதேசத்தில் ரூ. 27.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொது விநியோக முறையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 14.83-க்கு விற்கப்படுகிறது. இப்பிராந்தியத்தில் இது மிக மிகக் குறைவான விலையாகும். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ. 44.06, இலங்கையில் ரூ. 24.67, வங்கதேசத்தில் ரூ. 45.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (14.2கி.கி) ரூ. 399. இது பாகிஸ்தானில் ரூ. 757.04, இலங்கையில் ரூ. 863.40, வங்கதேசத்தில் ரூ. 469.24, நேபாளத்தில் ரூ. 819.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- தினமணி, 24/08/2011

August 17, 2011

மருந்து விற்பனை பிரதிநிதிகள் போராட்டத்தை ஆதரிப்போம்!

இன்று நாடு முழுவதும் 1.5 லட்சம் மருந்து விற்பனை பிரதிநிதிகள் தங்களுடைய நீண்ட நாள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும், பொதுமக்களுக்கான 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் போராடுகிறார்கள்.

இந்தியாவின் மருத்துவ துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்ரமிப்பு மெல்ல, மெல்ல அதிகரித்து, இப்பொழுது 50% -ஐ தொட்டுவிட்டதாம்!. மருந்துகளின் விலை எல்லாம் கடந்த 15 ஆண்டுகளில் 300%, 600% அதிகரித்துவிட்டது. அரசு, அரசு மருத்துவமனைகளை கண்டுகொள்ளாமல் விட்டு, ஒழித்துக்கட்ட பார்க்கிறது. வருங்காலங்களில் மருத்துவம் என்பதே தனியார் மருத்துவமனையில் பார்ப்பது என்ற அபாய நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஆகையால், உயிர்காக்கும் 356 முக்கிய மருந்துகளின் விற்பனை விலையை அரசு நிர்ணயித்து, விலை ஏறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் அடக்கம்.

பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதோடு, தொழிலாளர்களின் உரிமைகள் பலவற்றையும் மதிக்க மறுக்கிறது!

ஆகையால், மருத்துவ பிரதிநிதிகளின் போராட்டத்தை ஆதரிப்போம்!

http://articles.timesofindia.indiatimes.com/2011-08-12/kanpur/29879792_1_sales-representatives-association-sales-promotion-employees-act-sales-target

August 15, 2011

தோழர் மருதையன் வாழ்த்துரை! - (தொடர்ச்சி)


வாழ்த்துரை - முதல் பதிவு

தொடர்கிறது.

****

இந்த மணவிழாவில், மணமக்கள் உறுதிமொழி வாசிப்பார்கள். "பொதுநலனுக்கு உட்படுத்தி, எங்களது குடும்ப வாழ்க்கை வாழ்வோம்! மணமகன் ஆணாதிக்கம் இல்லாமல் நடந்துகொள்வேன் என சொல்வார். இந்த இரண்டு விசயங்களும் அமுல்படுத்துவது மிக சிரமமானது.

ஏனென்றால், ஆணாதிக்கம் என்பது கிட்டத்தட்ட இரத்தத்தில் ஊறி இருக்கிறது. ஆணாதிக்கம் என்றால் என்ன? என ஒரு ஆணைக் கேட்டால் அதிகபட்சமாக சொல்வது "போடி! வாடின்னு பேசக்கூடாது! கை நீட்டி அடிக்க கூடாது. இப்படி மூணு, நாலு சொல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அவ்வளவு தான் ஆணாதிக்கம். மற்றபடி உட்கார்ந்தபடி கைநீட்டி டீ கேட்பது; காலாட்டி உட்கார்ந்து கொண்டு, மனைவி தான் தண்ணீர் தூக்கனும்; வேலை செய்ய வேண்டும் என நடந்து கொள்வது ஆணாதிக்கத்தின் வடிவம் என ஒரு ஆண் கருதுவதில்லை.

அதுபோல, பெண்ணும் கூட பெண்ணடிமைத்தனத்தை, ஜனநாயக உணர்வு கொண்ட பெண்கள் கூட இயல்பாக பல பெண்ணடிமை கருத்துக்களை, நடவடிக்கைகளை, வாழ்க்கை நடைமுறைகளை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் நுட்பமான முறையிலே கவனித்து, இரண்டு பேரும் அதை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆணாக இருக்கட்டும்! பெண்ணாக இருக்கட்டும்! கணவன், மனைவியருக்கிடையே அல்லது நண்பர்களுக்கிடையே எழும் முரண்பாடாகட்டும் அதில், எது அடிப்படையாக அமைகிறது என்றால், நம்மீது மனைவியோ, நண்பர்களோ ஒரு தவறை நம்மீது சுட்டி காட்டும் பொழுது, தவறு என தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுப்பது தான்! தவறு என தெரியாமல் இருந்தால் அது வேறு விஷயம். தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுப்பது; அதில் வீம்பாக நின்றுகொண்டு, நியாயப்படுத்தி வாதம் செய்வது! இதுதான் உறவுகள் சிதைவதற்கு அடிப்படை!

இதை நாம் எப்பொழுது களைந்து கொள்வோம்? இவையெல்லாம் களைந்து கொள்ள வேண்டிய தவறுகள் என ஒரு ஒப்புக்கொள்ள (Conviction) வேண்டும். இரண்டாவது, முக்கியமாக ஆண்களுக்கு, தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள்கிற, தான் இரட்டை வேடக்காரனாக இருக்கிறேன் என்று தன்னைத் தானே சிரித்துக்கொள்கிற பக்குவம் வேண்டும். மனைவி சொன்னால், தான் அப்படித்தான் இருக்கிறேன் என உணரவேண்டும். இப்படி இருக்கும் பொழுது தான் சமத்துவம் நிலைநாட்டப்படும்.

இரண்டாவதாக, தன்னுடைய சொந்த வாழ்க்கையை சமூக நலனுக்கு உட்படுத்துவது. அப்படி ஒரு பொதுவாழ்க்கைக்கு சொந்த வாழ்க்கையின் இன்பங்களை விட்டுக்கொடுக்க தயாராய் இருப்பது! இதை செய்வது மிக கடினம். சொந்த வாழ்க்கையில் தனக்கு வசதி, வாய்ப்பு சாத்தியமென்றாலும், அது வேண்டாம் என்று தள்ளுகிற பக்குவம் வரவேண்டும்.

பொதுநலனின் பொருட்டு இந்த வசதிகளை நாம் அனுபவிக்க கூடாது அது ஒரு அறம் கொன்ற செயல் என உணர வேண்டும். மக்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்கிற ஒரு நாட்டில், வசதி வாய்ப்பு எல்லாம் இருக்கிறது என்றாலும், அனுபவிப்பது என்பது அநாகரிகம் என்று கருதுகிற பக்குவத்தில், அதை ஏற்றுக்கொள்கிற பக்குவத்தில், ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள துணிந்திருப்பது என்பது முக்கியமானது.

மேலும், குழந்தை இருக்கிறது என்றால், அதை எப்படி வளர்க்க வேண்டும்? அந்த குழந்தைக்கு செய்து கொடுக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகள் என்ன? எவற்றுக்கு அந்த குழந்தையை பயிற்றுவிக்ககூடாது? எவையெல்லாம் தவறானவை; ஆடம்பரமானவை; உழைக்கும் மக்கள் பண்பாட்டுக்கு விரோதமானவை என்பதை தீர்மானிப்பதிலும்; அமுல்படுத்துவதிலும் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இது ஒவ்வொன்றும் ஒரு போராட்டத்தின் ஊடாகத்தான் தீர்க்கப்படும்.

இது உறுதிமொழியில் முடிந்துவிடாது. பல தோழர்களுக்கு அது முடிவதில்லை. நுகர்பொருள் மோகத்தை எதிர்க்க வேண்டும் என்று சொன்னாலும், அதன் மீது மோகம் இருக்கிறது; சபலம் இருக்கிறது. அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என தங்களை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். ஏன் ஒப்பிட வேண்டும்? அப்படி ஒப்பிடுவதென்றால், திருக்குறளுக்கு போகவேண்டும்.

தம்மினும் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்றகமகிழ்க.

பிளாட்பாரத்தில் வாழ்கிறவர்களோடு நம்மை ஒப்பிடலாமே! ஏன் வசதி, வாய்ப்பு இருக்கிறவர்களோடு ஒப்பிடவேண்டும்? உழைக்கும் மக்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து, தங்களுடைய குடும்ப வாழ்க்கையை அதற்கேற்ப எளிமையாக்கி கொள்வதும், சமூக விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபடுத்துவதும், அந்த சிந்தனையை முன்நிறுத்துவதும் அவசியம்.

இவையெல்லாம் கணவன், மனைவி ஒத்த வாழ்க்கை வாழ அவசியம். தன் குடும்பம், தன் சுற்றம் என்று மட்டும் கணவன், மனைவி வாழத் துவங்குவார்களேயானால் குடும்ப முரண்பாடு தவிர்க்கவே முடியாதது! எங்கே ஆணாதிக்கம் இல்லாது, நாகரிகமான, ஆண், பெண் உறவு நிலவும் என்றால், எந்த குடும்பம் சமூக நலனை முன்நிறுத்தி அதற்கு உட்பட்டது தான் தனது குடும்ப நலன் என எந்த கணவனும், மனைவியும் உறுதியோடு ஈடுபாடு கொண்டிருக்கிறார்களோ அந்த குடும்பத்தில் சமத்துவமும், மகிழ்ச்சியும் நிலவும்.

தோழர்களின் வாழ்விலும் அப்படிப்பட்ட சமத்துவமும், மகிழ்ச்சியும் நிலவும் என்ற நம்பிக்கையை தெரிவித்து, வாழ்த்த வாய்ப்பு தந்தமைக்கு, நன்றி கூறி விடைபெறுகிறேன்!

தேசியக்கொடி!


இரண்டாவது மாடியில்
நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தேன்!

கார் ஒன்று விர்ரென பறந்தது!
காற்றின் வேகத்தில் காரிலிருந்து
தேசியக்கொடி விழுந்தது!
கார் திரும்பி வரும் என நம்பினேன்!
வரவே இல்லை.

பரபரப்பான வீதி அது!
எல்லாவித வண்டிகளும்
எல்லாவித மனிதர்களும்
கடந்து போனார்கள்!
அரை மணி நேரம் - யாரும்
பளபள தேசியக்கொடியை
கண்டுகொள்ளவேயில்லை!

இரண்டு நாள்களில் - தொலைக்காட்சிகளில்
பாய்ந்து பாய்ந்து
பலமுறை அணைத்து கொண்டிருக்கும்
ரோஜா கணிப்பொறி வல்லுநர்
நினைவில் வந்துபோனார்!
நிழல் அது!
நிஜம் இது!

ஆடிக்காற்று
மெல்ல மெல்ல நகர்த்தி
குப்பைக்கு கொண்டு சேர்த்தது!

August 11, 2011

வாழ்த்துரை -‍ தோழர் மருதையன்



கடந்த மாத இறுதியில் தோழர் ஒருவருக்கு 'வாழ்க்கை துணை நல ஏற்பு விழா' நடைபெற்றது. தாலி மறுத்து, சடங்குகள் மறுத்து எளிமையாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி பேசியவர்களில் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனும் ஒருவர். 10 நிமிடங்கள் அவர் பேசியதில், நான்கு விசயங்கள் மிகவும் முக்கியமானவை. பகிர்ந்துகொள்ள வேண்டியதின் அவசியம் கருதி, சுருக்கமாய் இங்கு பதிகிறேன்.

*******

பொதுவாக இந்த மணவிழாவை போல புரட்சிகர திருமணங்கள் தமிழகமெங்கும் ம.க.இ.க அமைப்பாலும், அதன் தோழமை அமைப்புகளாலும் ஏராளமாக நடத்தப்படுகின்றன.

இந்த மணவிழாவை பொறுத்தவரை, மற்றவர்கள் குறிப்பிட்டது போல தோழருக்கு தாமதமான திருமணம். (பெண்) தோழருக்கு இது மறுமணம். இப்படி ஒரு சொல்லால் குறிப்பிடுவது என்பது இங்கு இருக்கிறது. மேலை நாடுகளில் இப்படி இல்லை. அது திருமணமா? மறுமணமா? என்ன வெங்காயமா இருந்தா உனக்கென்ன? இப்படி ஒரு அநாகரிகம் நம் சமூகத்தில் இருக்கிறது. அதனால் முதல் திருமணம், மறுமணம் என சொல்ல வேண்டியிருக்கிறது.

பொதுவில் திருமணம் என்பதை எப்படி பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள் என்றால், முழு வாழ்க்கையில் அது முக்கியமான சம்பவம். தன்னைப் பற்றிய ஸ்டேட்மெண்ட். தன்னை பிரகடனப்படுத்தி கொள்கிற நிகழ்வு. அதற்காக எல்லா பொருளையும், சிந்தனையையும், உழைப்பையும் செலவழிக்கிறார்கள்.

இந்த தோழர்களை பொறுத்தவரை அப்படி இல்லை. தோழருடைய வாழ்க்கை தான் ஒரு ஸ்டேட்மெண்ட். இந்த திருமணம் இப்படி நடத்த வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒரு பதிவு திருமணமாகவோ, சில நண்பர்களுக்கு வீட்டளவில் தேநீர் வழங்கியோ கூட முடித்து கொண்டிருக்கலாம். பிறகு ஏன் நடத்துகிறோம்? சுயமரியாதை திருமணம், சாதி மறுப்பு, தாலி மறுப்பு, இவற்றையெல்லாம் பிரபலப்படுத்த வேண்டும் என்பது ஒரு நோக்கம்.

ஒரு குறிப்பிட்ட வயது கடந்துவிட்டால், மாப்பிள்ளையாய் மேடையில் அமருவது கூச்சத்திற்குரிய விசயம் என்ற கருத்து நம்மிடம் இருக்கிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேலே போனால், மாப்பிள்ளை இல்லையா? அல்லது மறுமணம் என்றால் திருமணம் இல்லையா?! இதை முறிப்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

இப்படிப்பட்ட திருமணம் உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலே கொண்டு செல்லப்பட வேண்டும். (பெண்) தோழர் இருக்க கூடிய கிராமத்திலே, 25 இளம் கைம்பெண்கள் இருப்பதாக கூறினார்கள். அந்த கிராமத்திலே 500 தலைக்கட்டு (குடும்பங்கள்) இருக்குமா? அந்த ஊரிலே மணவயதில் 25 கைம்பெண்கள் இருப்பது கொடுமையில்லையா? அவர்கள் வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்வார்கள் என்பது எவ்வளவு பெரிய சமூக அநீதி.

இந்த மணவிழாவை உறவினர்கள், ஊர்க்காரர்கள் பார்த்து, இன்னும் ஒன்றிரண்டு திருமணங்கள் நடைபெற்றால் கூட மிகப்பெரிய வெற்றி என பார்க்கவேண்டும்.

தோழரின் பெற்றோர், உறவினர்களும் வந்திருக்கிறார்கள். தோழரின் தந்தைக்கு வருத்தம் இருக்கும். எந்த பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை பொது வாழ்க்கைக்கு அனுப்பிவிட்டு, மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்!

தன் குடும்பம், தன் பெண்டு என வாழ்வதை தான் முன்மாதிரியான வாழ்க்கை என பொற்றோர்கள் கருதுகிறார்கள். பிள்ளைகளையும் அப்படியே பயிற்றுவிக்கிறார்கள். பிற்காலத்தில் தன் பிள்ளை தங்களுக்கு சோறுபோட மாட்டேன் என்று சொல்லும் பொழுது கூட இப்படி சுயநலவாதிகளாக பயிற்றுவித்தது தப்பு என புரிவதில்லை. உரைப்பதில்லை. இது துரதிருஷ்டம்!

தொடரும்! அடுத்த பதிவில் முடிவடையும்!

August 8, 2011

அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் பண்!


பட்டினிக் கொடுஞ் சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்!
பாரில் கடையரே எழுங்கள் வீறுகொண்ட தோழர்காள்!
கொட்டுமுரசு கண்ட நம் முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வினைச் சமைத்திட

பண்டையப் பழக்கமென்னும் சங்கிலி அறுந்தது!
பாடுவீர் சுயேச்சை கீதம் விடுதலை பிறந்தது!
இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்தெழும்
இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகமாகிடும்

முற்றிலும் தெளிந்த முடிவான போரிதாகுமே!
முகமலர்ச்சியோடு உயிர்த்தியாகம் செய்ய நில்லுமே!
பற்றுகொண்ட மனித ஜாதி யாவும் ஒன்றதாகுமே!
படிமிசைப் பிரித்த தேசபாஷையும் ஓர் அய்க்கியமே!

பாரதோ மமதையின் சிகரத்திறு யாந்துமே
பார்க்கிறான் சுரங்க மில் நிலத்தின் முதலாளியே
கூறிடில் அன்னார் சரித்திரத்தில் ஒன்று கண்டதே

கொடுமை செய்து உழைப்பின் பலனைக் கொள்ளை கொண்டு நின்றதே!
மக்களின் உழைப்பெலாம் மறைத்து வைத்து ஒருசிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்ற தறிகுவீர்
இக்கணம் அதைத்திரும்ப கேட்பதென்ன குற்றமோ?
இல்லை நாம் நமக்குரிய பங்கைக் காட்டி கேட்கிறோம்!

தொன்று தொட்டு உழைத்த விவசாயி தொழிலாளி நாம்
தோழர் ஆகினோம் உழைப்போர் யாவரெனும் ஓர் குலம்
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்த வாக்குச் சொல்லுவோம்
உழைப்பவர் யாவருக்கும் சொந்தமிந்த நிலமெலாம்

வேலை செய்யக் கூலியுண்டு வீணர்கட்கிங் கிடமில்லை
வேதம் ஓதி உடல் வளர்க்கும் காதகர்க்கிங் கிடமில்லை
நாளை எண்ணி வட்டி சேர்க்கும் ஞமலிகட்கிங் கிடமில்லை
நாமுணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங் கிடமில்லை

பாடுபட்டுழைத்தவர் நிணத்தைத் தின்ற கழுகுகள்
பறந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சில நாளதில்
காடுவெட்டி மலை உடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்
கவலையற்ற போகவாழ்வை சகலருக்குண்டாக்குவோம்!

August 7, 2011

பிரணாப்-ன் ஒப்புதல் வாக்குமூலம்!


முன்குறிப்பு : கடந்த இரு பத்தாண்டுகளாக நடைமுறைப்படுத்தி வரும், மறு காலனியாதிக்க கொள்கைகளால், கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் என பல துறைகளிலும் மோசமான பாதிப்புகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. அமுல்படுத்தும் பொழுது, புதிய பொருளாதார கொள்கைகளை ஆதரித்தவர்கள் கூட இன்று தங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்திருக்கிறார்கள்.

நிதிமந்திரி பிரணாப் இன்னும் விரைவுப்படுத்தி இந்தியாவை அதல பாதாளத்துக்குள் தள்ளிவிடப்போவதாக கீழே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு என்று சொல்வது முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. நிகழ்காலமும், வருங்காலமும் இனி போராட்ட காலங்களாக தான் இருந்தால் தான் இந்தியாவை இவர்களிடமிருந்து காப்பாற்ற முடியும்..

****
நிதி அமைச்சர் பிரணாப்-ன் பேட்டி

சீர்திருத்தங்கள் தொடரும்:
பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் அவ்வளவுதான், இனி தொடராது என்று நீங்கள் (தொழில்துறையினர்) அச்சப்படத் தேவையில்லை. சீர்திருத்தங்கள் தொடரும். சில நேரங்களில் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக சீர்திருத்தங்களை அமல் செய்யும் நடவடிக்கைகளில் தேக்க நிலை ஏற்படலாம், நடவடிக்கை நின்றுவிட்டது, இனி இருக்காது என்ற முடிவுக்கு வரவேண்டாம்.

ஒத்துழைப்பு:
சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல் செய்வதில் எல்லா அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படும் மன நிலையிலேயே இருக்கின்றன. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை இனி திரும்பப் பெற முடியாது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது இந்த சீர்திருத்தங்கள் கைவிடப்படும் என்று யாரும் அஞ்ச வேண்டாம். இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்களையே இன்னமும் நிதித்துறையில் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள இடைவெளியைச் சரி செய்ய வேண்டிய முக்கிய கடமையும் அரசுக்கு இருக்கிறது

- தினமணி, 07/08/2011 - நாளிதழிலிருந்து...

August 4, 2011

வங்கி ஊழியர்கள் போராட்டம்!

இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட தேசிய‌ வங்கிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் இணைத்து, டாப் 10 வங்கிகள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற அளவில் மத்திய அரசு காய்கள் நகர்த்துகிறது. தனியார்மயப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன.

இதனை எதிர்த்தும், வங்கி ஊழியர்களின் பற்றாக்குறை 3 லட்சம் அளவில் இருக்கிறது. வங்கிகளுக்கெல்லாம் போனால், வாடிக்கையாளர்களையே எல்லா வேலைகளையும் செய்ய வைக்கிறார்கள். ஒருமுறை இந்தியன் வங்கியில் இதற்காக சண்டையே போட்டிருக்கிறேன். ஆகவே, ஏற்கனவே இழுத்துமூடப்பட்ட‌ தேர்வு செய்து நியமனம் செய்யும்BSRB ஐ- மீண்டும் திற! என்ற கோரிக்கையும் உண்டு.

இப்படி பல்வேறு நீண்ட கால கோரிக்கைகளை 21 அம்ச திட்டத்தை வைத்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட‌ வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

கடந்த ஜூலை 7ந் தேதி ஸ்டிரைக் அறிவித்து, பின்பு, இன்றைக்கு தள்ளி வைத்தார்கள்.

காலையிலிருந்து பேசிய மூவர் என்னவென்று கோரிக்கை என்று தெரியாமலே, வங்கி ஸ்டிரைக்கை எதிர்த்து பேசுகிறார்கள். (இன்னைக்கு செக்‍‍ஐ போடமுடியலையாம்!) இது என்ன பண்பு? எனபுரியவில்லை. அவர்களின் நியாய கோரிக்கைகளை எடுத்து சொன்னபிறகு, ஆமோதிக்கிறார்கள்.

தொடர்புடைய சுட்டிகள் :