> குருத்து: 12 Angry Men (1957)

July 5, 2020

12 Angry Men (1957)

"நீதி புலன்களால் அறியமுடியாத பொருளாகும். அதனை உணர மட்டுமே இயலும்."
"மனிதனை மனிதன் சுரண்டாத சமுதாயத்தில், ஒரு சிலருடைய நன்மைகளுக்காக பலர் துன்பங்கள் அனுபவிக்க வேண்டியதாக இருக்காத சமுதாயத்தில் மட்டுமே சமுதாய நீதியை நிலை நாட்ட இயலும்"
- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம் தொகுப்பிலிருந்து...

****
கதை. 18 வயது பையன் தன் தந்தையை கொன்றுவிட்டான் என்பது வழக்கு. சந்தர்ப்பங்களும், சாட்சிகளும் அவன் குற்றவாளி என்கிறார்கள்.

நீதிபதி சமூகத்தில் வெவ்வேறு தகுதிகளில் இருக்க கூடிய 12 பேரை ஜுரிகளாக நியமித்து, அந்த பையன் குற்றவாளியா இல்லையா என்பதை விவாதித்து முடிவைச் சொல்ல சொல்கிறார். அதன்படி தான் தீர்ப்பு என்கிறார்.

விவாதம் தொடங்கும் முன்பே, எத்தனை பேர் குற்றவாளி என வாக்கெடுப்பு நடத்தும் பொழுது, 11 பேர் "குற்றவாளி" என்கிறார்கள். ஒருவர் மட்டும் "குற்றவாளி இல்லை" என சொல்லவில்லை. நாம் விவாதிப்போம் என்கிறார்.

விவாதம் மெல்ல துவங்கி, வழக்கின் முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படுகிறது. இறுதியில் என்ன முடிவெடுத்தார்கள் என்பது முழுநீளக்கதை!

*****
சமூகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் ஒன்றாய் கூடி, ஒன்றை விவாதித்தால் விவாதம் எப்படி களைகட்டும்? ரணகளமாக இருக்கும். அப்படி இருந்தது.

இப்படி ஒரு நீதி பரிபாலன முறை உண்மையில் அமெரிக்காவில் இருந்ததா என தெரியவில்லை. வேறு சில படங்களில், பழைய தமிழ்படங்களில் பார்த்து இருப்பது போல மங்கலாக நினைவுக்கு வருகிறது.

ஒவ்வொருடைய வாழ்க்கை முறை தான் சிந்தனையை தீர்மானிக்கும் என்ற விதி இருக்கிறது.

படத்தில் விவாதத்தை ஒருங்கிணைப்பவர் ஒரு கோச். வாதங்களை அடுக்கி, அலசி ஆராய்ந்து முன்வைப்பவர் பங்குச் சந்தை புரோக்கர்.

ஒன்றைப் பற்றி திறந்த மனதுடன் அணுகவேண்டும். முன்முடிவோடு அணுககூடாது.
அந்த பையன் சேரி. அம்மா இல்லை. அப்பாவும் சரியில்லை. அப்ப அவன் கொலை செஞ்சிருப்பான் என யோசிப்பது தான் முன்முடிவு. படத்தில் இரண்டு இடத்தில் வந்து போகும்.

படத்தில் தன் வாதத்தை நிதானமாக, ஆதாரங்களுடன், மற்றவர்களின் கருத்தை மதித்து நடப்பவர் மெல்ல மெல்ல முன்னேறி, மற்றவர்களின் ஆதரவை பெறுவார். கோபமாகவும், மற்றவர்களை சிறுபிள்ளைத்தனமாகவும் நடந்துகொள்கிறீர்கள் என கத்தி கத்தி பேசுபவர் தனிமைப்படுவார்.

படத்தில் இப்படி பேசுவதற்கு பல இடங்கள் உண்டு. நீள்வதால், இப்போதைக்கு நிறுத்திக்கொள்வோம்.

படம் இன்று வரைக்கும் உலக அளவில் பேசக்கூடிய படமாக இருக்கிறது. முதலில் தொலைக்காட்சி படமாக எடுத்து, பிறகு படமாக எடுத்திருக்கிறார்கள். ரசியாவிலும், இந்தியிலும் மீண்டும் எடுத்திருக்கிறார்கள். தமிழில் "வாய்மை" இந்த படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த படத்தை மேலாண்மை வகுப்புகளில் இன்றைக்கும் பாடமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆச்சர்யமான செய்தி. படம் வெளிவந்த பொழுது, வசூல் அளவில் தோல்வி என்கிறார்கள்.

தமிழில் இல்லை. ஆங்கில சப் டைட்டில்களுடன் பார்த்தேன்.

0 பின்னூட்டங்கள்: