> குருத்து: Andhadhun (2018) - இந்தி

July 5, 2020

Andhadhun (2018) - இந்தி

கண் தெரியாத கலைஞனின் இசை

கதை. நாயகன், தனக்கு கண் தெரிந்தும், கண் தெரியாத மாதிரி நடந்துகொள்கிறான். அது தன்னுடைய இசைத் திறமைக்கு வலுவூட்டும் என நம்புகிறான். லண்டன் சென்று செட்டிலாகவேண்டும் என்பது அவனது கனவு. தற்செயலாக ஒரு பெண்ணைச் சந்தித்து, அவளுடைய உணவகத்தில் தொடர்ந்து பியானோ வாசிக்கிறான்.

பாலிவுட் முன்னாள் காதல் மன்னன் அந்த உணவகத்தின் வாடிக்கையாளர். தன்னுடைய துணைவிக்கு பிறந்தநாள். அவரை ஆச்சர்யப்படுத்தவேண்டும் என நாயகனுக்கு முன்பணம் கொடுத்து வீட்டுக்கு வந்து வாசிக்கச் சொல்கிறார். சொன்ன நேரத்திற்கு சென்றால், அங்கு ஒரு கொலை நடந்திருக்கிறது. கண் தெரியாத மாதிரியே நடந்துகொண்டு, பியானோ வாசித்து, வாழ்த்துக்கள் சொல்லி, சமத்தாய் நழுவி வந்துவிடுகிறான்.

அதற்கு பிறகு, யூகிக்கமுடியாத பல களேபரங்கள் தான் முழுநீளக் கதை.

****
இந்த படம் வந்த பொழுதே பார்த்திருக்கவேண்டியது. இந்தி தெரியாததால், சப் டைட்டிலோடு தான் பார்க்கவேண்டியிருக்கிறது. அருகில் உள்ள திரையரங்குகளில் கேட்டால் இல்லை என்பார்கள். பிரபல திரையரங்குகள் தூரமாக இருக்கும். இப்படி பல படங்கள் தப்பியிருக்கின்றன.

படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே என அனைவருமே நன்றாக பொருந்தியிருக்கிறார்கள். ஆயுஷ்மான் குரானின் ஆர்ட்டிகிள் 15 படத்தையும் சமீபத்தில் பார்த்தேன். அதுவும் நல்லபடம்.

பிரெஞ்சில் வந்த ஒரு குறும்படத்தை எடுத்துக்கொண்டு, கற்பனை குதிரையை ஓடவிட்டு, ஒரு அருமையான திரில்லரை தந்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்தப் படத்தின் இயக்குநரான ஸ்ரீராம் ராகவனின் ஜானி கட்டார், பத்லாபூர் என இரண்டு நல்ல படங்களைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு கொலை என தொடங்கும் படம், பிறகு உறுப்புகள் திருட்டு, கடத்தல் என பயணிக்கிறது. கொஞ்சம் சுத்தலாய் இருந்தாலும், சுவாரசியமாய் தான் இருந்தது. இறுதிக்காட்சி கொஞ்சம் குழப்பமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு, ”நாம நினைக்கிறது சரியா!” என பலருக்கும் கேள்வி வரும்! இயக்குநர் தெரிந்தே பார்வையாளர்களின் சிந்தனைக்கு விட்டுவிட்டார்.

பலரும் பார்த்தீருப்பீர்கள். பார்க்காதவர்கள் பாருங்கள்.

குறிப்பு : இந்த படத்திற்கு அடிப்படையான ப்ரெஞ்ச் குறும்படமான Piano Tuner படத்திற்கான சுட்டி. சுவாரசியமான படம்.

0 பின்னூட்டங்கள்: