> குருத்து: கரோனா : போலீசின் வாகனப் பறிப்பும், விடுவிப்பும்!

July 5, 2020

கரோனா : போலீசின் வாகனப் பறிப்பும், விடுவிப்பும்!

இரண்டு நாட்கள் எங்கேயும் வெளியே போகவில்லை. குப்பை கொட்டனும், இன்னும் சில அத்தியாவசிய‌ மளிகை, காய்கறி பொருட்கள் வாங்கவேண்டும். நம்ம ஏரியாவுக்குள்ளேயே சுத்தப்போறோம் என வண்டியை எடுத்தேன். தெருவைக் கடந்ததுமே ஒரு கான்ஸ்டபிள் நின்றுகொண்டிருந்தார். நானும், இன்னொரு நபரும் இணையாக செல்ல, அவரை கைக்காட்டினார். நான் போலீசை கடக்க முயன்றேன். பிறகு எனக்கும் குத்துமதிப்பாக கைகாட்டினார். நான் அவரை கொஞ்சம் கடந்துவிட்டேன். "என்ன மீறி போறீங்க?" என அதட்டினார். "அவருக்கு தானே சார் கை காட்டினீங்க! திடீர்னு எனக்கு கைகாட்டினா எப்படி சார்?" என்றேன். பிறகு ஏதும் சொல்லவில்லை.

எனக்கு முன்பாக ஏழு பேர் காத்திருந்தார்கள். ஒருவர் காரில் வந்தார். அவரை விசாரித்தால், தன் குழந்தைக்கு பால் வாங்க வந்ததாக தெரிவித்தார். அவருடைய காரில் பின்சீட்டில் குழந்தைகளுக்கான‌ விளையாட்டு சாமான்கள் இருந்தன. "பால் வாங்க காரில் யாராவது வருவார்களா?" என்றார். "சார் கடை ஏதும் இல்லை. இரண்டு கிலோமீட்டரா வரிசையா தேடிட்டு வர்றேன்" என்றார். திரும்ப போலீசே "காலையிலேயே வாங்கி வைச்சிருக்கனும்." என்றார். "நான் இந்த ஏரியாவிற்கு புதுசு சார்" என்றார். காரில் வந்தவரால் இருப்பு கொள்ளவில்லை. அவருடைய குழந்தை நினைப்பில் பதட்டமாகவே இருந்தார். என் வண்டியில் குப்பை இருந்தது. எப்படி கொட்டுவது? என யோசித்துக்கொண்டிருந்தேன். அருகில் நின்றிருந்த இளைஞர் கையில் ஒரு ரவை பாக்கெட் வைத்திருந்தார். காலை டிபன் போச்சு!

ஒரு ஐம்பது வயதுகாரர் வந்தார். நிறுத்தினார்கள். அவர் ஏதோ சொல்லிப் பார்த்தார். நிற்க சொன்னார்கள். அவர் யார் யாருக்கோ போன் செய்து, போலீசுகாரரிடம் கொடுத்தார். வாங்கி பேசிவிட்டு, அவரை அனுப்பினார். இன்னொருவரும் அதே போலவே யாரிடம் சீரியசாக போய்க்கொண்டிருந்தார். ஒரு அதிமுக கட்சி கொடியோடு ஒரு வண்டி போனது. போலீசுகாரர் நிறுத்தவேயில்லை. என்னிடம் செல்போன் இல்லை. இருந்தால், யாருக்கு பேசியிருக்கலாம் யோசித்தால், அதிகார வர்க்கம், தேர்தல் அரசியல் கட்சியாளர்கள் யாரோடும் நமக்கு உறவும் இல்லை. நமக்கு 'செல்வாக்கு' இல்லை என்பது பளிச்சென புரிந்தது. அப்படியே பேசினால் கூட, "நீ ஏன்ப்பா வண்டியெல்லாம் எடுத்துட்டு போற!" என அட்வைஸ் வேறு செய்வார்கள்.

பத்து வண்டிகள் வரை சேர்ந்துவிட்டது. ஆனால், ஐந்து பேரிடம் மட்டும் செல்போனை வாங்கிக்கொண்டனர். மிச்ச ஐந்து பேரும் உடன் வரவில்லை. என்ன கணக்கு? புரியவில்லை. ஒரு இளைஞர் வந்தார். என்னிடம் செல்போன் இல்லாததால், இடையிலேயே போய்விடக்கூடாது என்பதற்காக என் பைக்கிலேயே அந்த இளைஞர் வந்தார். குறுக்குப்புத்தி. நன்றாக சிந்திக்கிறது. ஆள் ரெம்ப குட்டையாக இருந்தார். போலீசு இல்லை. "நீங்க யார்? வாலண்டியரா?" என்றேன். "நான் ஸ்டேசன் ஸ்டாப்" என்றார். அரசாங்கம் இப்படி வேலைக்கு ஆள் நியமிக்கிறதா என்ன? மாதாமாதம் ஸ்டேசனுக்கு வரும் லஞ்ச பணத்தில் சம்பளம் கொடுப்பார்களோ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பகுதியில் இருந்த‌ வேலம்மாள் பள்ளியின் பார்க்கிங் பகுதியை போலீசு இப்படி பிடிக்கப்பட்ட வண்டியை நிறுத்த பயன்படுத்துகிறார்கள். ஏற்கனவே 200 பைக்குகள் மேல் நிறுத்தியிருந்தார்கள். 10 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எங்களுக்கு முன்பே சில பேர் வண்டி, தன் விவரம் கொடுக்க காத்திருந்தார்கள்.

அங்கு ஒரு பெண் ஆய்வாளர், இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒருவர் மப்டியில் இருந்தார்கள். இருவர் வண்டி விவரங்களை பதிவேடுகளில் பதிவதில் மும்முரமாக இருந்தார்கள். சுற்றி நின்றவர்களில் சிலர் போனில் சீரியசாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் அந்த ஆய்வாளரிடம் போனை கொடுத்தார். பேசியவர் சென்னையில் ஒரு பகுதியில் போலீசு அதிகாரியாக இருக்கிறார் என்பது புரிந்தது. இருவரும் பேசிக்கொண்டார்கள். அந்த அம்மா போனில் பேசியவரிடம் "இப்படி பிடிச்சுட்டு வந்தவங்கள எல்லாம் விட்டுட்டா, யார் வண்டியைத் தான் பிடிச்சு கேஸ் போடுறது!" என அலுத்துக்கொண்டார்.

சில நிமிடங்களில், இன்னொருவர் தன்னிடமிருந்த பாஸை காட்டினார். அந்த ஆய்வாளர் "இது பழசாச்சே!" என்றார் கோபமாய். உடனே, அவர் செல்போனில், புதிதான பாஸை காட்டினார். "இதை புடிக்கும் பொழுதே காட்ட வேண்டியது தானே!" என்றார் கோபமாய்! "நான் காட்டினேன். அவர் வாங்கிப் பார்க்காமலேயே கூட்டி வந்துவிட்டார்" என்றார்.

இப்படி வரிசையாய் போன் கொடுப்பதை தவிர்க்க, "யாரும் போன் பேசக்கூடாது" என சத்தமாய் சொன்னார். இன்னொருவர் இப்பொழுதும் பேசிக்கொண்டிருந்தார். உடனே அவரை மிரட்டினார். "ஹாஸ்பிட்டலிருந்து போன் மேடம். ஹவுஸ்கீப்பிங்‍‍லிருந்து கூப்பிடறாங்க!" என்றார்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஒருவர் "(அதிகாரத்தில் இருப்பவர்கள்) தெரிஞ்சவங்க பேசினா உடனே விடுறீங்க. என்னையும் விடுங்க." என்றார். தானும் ஒரு முக்கிய அலுவலகத்தில் வேலை செய்வதாக இந்தி ஸ்லாங்கில் சொன்னார். இப்படி எல்லாம் பேசினால், போலீசுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். கேள்வி கேட்பது அவர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது! அவரை உடனே வெளியே போகச் சொல்லி மிரட்டினார்கள். "எனக்கும் ஆட்கள தெரியும். நான் பார்த்துக்கிறேன்" என கோபமாய் சொல்லிக்கொண்டே கிளம்பினார்.

இப்பொழுது இன்னொருவர் வந்து போனை நீட்டினார். போனில் பேசியவர் பெரிய அதிகாரி போல! அந்த ஆய்வாளர் "நீங்க தான் உத்தரவு போடுறீங்க! நீங்களே விடவும் சொல்றீங்க! இங்க நிலைமை சரியில்லை சார். சொன்னா புரிஞ்சுக்குங்க!" என்றார்.

போனை வைத்ததும், உடனே ஒரு சவுண்ட் விட்டார். "இங்க வண்டிக்கு விவரம் கொடுத்தவங்கள தவிர, மற்றவங்க வெளியே போங்க! காத்திருக்கிறவங்க அவங்க செல்போனை எல்லாம் இங்க கொண்டு வந்து வைங்க" என்றார். யாரும் இப்படி பேசுவதை வீடியோ எடுத்துவிடக்கூடாது என்ற கவனம் இருக்கும் போல!

போலீசுகாரர்களுக்கு கொரானா பற்றிய பயம் இருந்தது. ஆனால், வரிசையை ஒழுங்குப்படுத்தவும் இல்லை. ஆனால், அதிகாரத்தோடு மரியாதை இல்லாமலும், கோபமாக திட்டிக்கொண்டும், கத்திக்கொண்டும் இருந்தார்கள்.

நான் ஒரு ஓரமாக போய் உட்கார்ந்துகொண்டேன். நடந்தவைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு முன்பாக வந்தவர்களுடைய விவரத்தை கேட்க ஆரம்பித்தார்கள். "நான் முன்னாடியே வந்துவிட்டேன். பின்னாடி வந்தவங்கள பதியறீங்க!" என குரல் கொடுத்தேன். உடனே என்னை அழைத்தார்கள். பெயர், செல்போன், முகவரி, வண்டி விவரம் கேட்டார்கள். அந்த பதிவேட்டில், என்னுடைய துணைவியார் பெயரையும், என் குழந்தை பெயரையும் கேட்டார்கள். "ஏங்க நான் மட்டும் தானே வந்தேன். குடும்பத்தோடு வந்ததா எழுதுறீங்களா?" என்றேன் சீரியசாய். எழுதிக்கொண்டிருந்த‌ அந்த பெண் கான்ஸ்டபிள் சிரித்துவிட்டார். ஆனால், பதில் சொல்லவில்லை. என்னுடைய அங்க அடையாளங்கள், போட்டிருந்த ஆடைகள் விவரம் என எல்லாவற்றையும் பதிந்துகொண்டார்கள். வண்டியை பெற்றுக்கொண்டதற்கு எந்தவித ரசீதும் தரவில்லை. கேட்டதற்கு "உங்க வண்டியெல்லாம் பத்திரமா இருக்கும். நாங்க கூப்பிடுவோம்!" என்றார்கள். கிளம்பினேன்.

கரோனாவை கட்டுப்படுத்தவேண்டும் என்ற உணர்வை விட, போலீசுகாரர்களுக்கு, தினமும் இத்தனை வண்டியை பிடித்தோம் என்ற கணக்கு காட்டவேண்டும் என்ற சடங்குத்தனமான வேலை பாணி தான் இருந்தது. அங்கு நின்றிருந்த வண்டிகள் எல்லாம் எந்தவித அதிகார தொடர்பு இல்லாதவர்களுடைய வண்டிகளை பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். உலகம் எப்பொழுதும் இரண்டாக தான் இயங்கிகொண்டு இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: