> குருத்து: June - மலையாளம் (2019)

July 5, 2020

June - மலையாளம் (2019)

கதை. நாயகி 11ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளியில் புதிய நண்பர்கள், தோழிகள் கிடைக்கிறார்கள். நட்பும், காதலுமாய் இடைவேளை வரை கலகலப்பாக பள்ளிக் காலம் செல்கிறது. காதல் விசயம் வீட்டுக்கு தெரிந்து, பெற்றோர்கள் கண்டிக்கிறார்கள். காதல் முறிகிறது. பிறகு, ஒரே தாவலில் கல்லூரி வாழ்க்கையை முடித்துவிடுகிறாள்.

நாயகன் மும்பையில் இருப்பதை அறிந்து, வேலை அங்கு தேடிக்கொள்கிறாள். ’பழைய’ காதலை புதுப்பித்துக்கொள்கிறார்கள். நாயகன் வீட்டில் அவனின் அப்பா எல்லா விசயங்களையும் தீர்மானிக்கிறார். திருமணம் எப்படி நடத்துவது, நாயகி திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லக்கூடாது என சகல விசயங்களிலும் நாயகன் அப்பாவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்கிறான். நாயகி அதில் கேள்வி எழுப்புகிறாள். இருவருக்கும் மீண்டும் விரிசல் விழுகிறது.

பிறகு, ஊருக்கு திரும்புகிறாள். பள்ளிக்காலத்தில் ஒரு தலைக்காதல் செய்த இன்னொருவன் மீண்டும் அவள் வாழ்வில் வருகிறான். வீட்டில் திருமணம் செய்ய நெருக்குகிறார்கள்.

என்ன முடிவெடுத்தாள் என்பது மீதிக்கதை!
*****

பள்ளிக்கால வாழ்க்கையை எடுப்பது இப்பொழுது திரை உலகில் டிரெண்டாகி இருக்கிறது. ஒரு அடார் லவ்-வோடு இந்தப்படமும் வெளியாகி, பெரிய வெற்றியடைந்திருக்கிறது. இயல்பாகவும், கலகலப்பாகவும் எடுத்து சென்றிருக்கிறார்கள். மலையாளம் என்பதால், அந்த இயல்பு சாத்தியமாகியிருக்கிறது.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் காதல் வந்து, வந்து தான் போகும். அது இயல்பானது. இந்த நாட்டில் தான் சாதி, ஏற்றத்தாழ்வு என பல சமூக குறுக்கீடுகள் இருக்கிறதே! காதலை புனிதமாக்குவதும், ஆண்கள் பெருமையாக பழைய காதல்களை சொல்ல முடிவதும், பெண்கள் அதை தங்களுக்குள்ளேயே மூடி மறைப்பதுமே சமூகத்தில் கோளாறுகள் இருப்பதற்கான சான்றுகள் தான்.

மொத்தப்படத்தையும் நாயகி Rajisha தாங்கிப்பிடிக்கிறார். முதல் படமான ”அனுராக கரிக்கின் வெல்லம்” படத்திலேயே மாநில அரசின் சிறந்த நடிகை விருதை வென்றிருக்கிறார். மற்றவர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள்.

கொரானா காலத்தில் பாருங்கள். புன்னகைக்க வைக்கும். பள்ளிக்கால வாழ்க்கையை சில மணி நேரங்கள் நினைக்க வைக்கும் அல்லது நண்பர்களிடம் பேச வைக்கும்.

நண்பன் ஒருவனிடமிருந்து வாங்கிப் பார்த்தேன். ஆங்கில சப்டைட்டில்கள் அவ்வப்பொழுது வந்து வந்து போயின. கொஞ்சூண்டு மலையாளம் அறிந்த எவனோ ஒருவன், மொழிபெயர்த்து இருக்கிறான் என நினைத்துக்கொண்டேன். மலையாளம் புரிந்துகொள்ள முடிந்ததால் தப்பித்தேன்.

0 பின்னூட்டங்கள்: