> குருத்து: Gantumoote (2019) கன்னடம்

July 5, 2020

Gantumoote (2019) கன்னடம்

கதை. 90களில் நடக்கிறது. மீரா பள்ளி மாணவி. அவர்களுடைய பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். அவளுக்கு சினிமா மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. சல்மான்கான் பிடித்த நாயகனாக இருக்கிறார். பள்ளியில் உடன்படிக்கும் பையன் ரோஜா தருகிறான். எதற்கு என தெரியாமலே வாங்குகிறாள். பிறகு, அவனை தவிர்க்கிறாள். வகுப்பில் சல்மான்கான் சாயலில் (!) இருக்கும் மதுவை விரும்புகிறாள். இருவரும் காதலிக்கிறார்கள். அதற்கு பிறகு என்ன ஆனது என்பது முழுநீளக்கதை!

****
கன்னடத்தில் வந்த நல்ல படங்களில் ஒன்று என பத்திரிக்கைகள் எழுதியிருக்கின்றன. திரைப்படம் சார்ந்த ஒரு குழுவில் இன்னும் எத்தனைப்பேர் இந்த படத்திற்கு இன்னும் எழுதிவைத்திருக்கிறீர்கள் என, ஒரு நிர்வாகி அலுத்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது.

பள்ளிக்காலத்து காதல் கதைகள் இதுவரை வந்த பெரும்பாலான படங்கள் எல்லாம் ஆண் பார்வையில் வந்தது என்றால், இந்தப்படம் பெண் பார்வையில் வந்திருப்பது சிறப்பு. பெண் இயக்குநர் என்பதும் சிறப்பு. பெண் பார்வையில் எடுப்பதற்கு பெண் இயக்குநர் தான் வரவேண்டியிருக்கும் நிலை வருத்தம் தான். எந்தவித மசாலாத்தனமும் இல்லாமல், இயல்பாக இருப்பது இன்னும் சிறப்பு.

90களில் எடுத்தப்படம் என சொல்லிவிட்டு, இவ்வளவு லிப்லாக் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் என்பது கொஞ்சம் நெருடல் தான். 90களில் பள்ளிப் படித்தவர்களுக்கு இப்படி எல்லாம் நாம் இருந்தோமா என கடுப்படித்திருக்கிறது. அதை எழுதியும் இருக்கிறார்கள்.

பள்ளிச் சார்ந்த ஒரு கல்வி சுற்றுலாவில், இருவரும் தனியாக இருப்பதை பார்த்த ஒரு ஆசிரியர் கண்டும் காணாதது போல வந்துவிட்டு, இருவரையும் தனியாக அழைத்து “தேர்வுகள் நெருங்கி கொண்டிருக்கிறது. ஆகையால் படிப்பில் கவனம் செலுத்துங்கள்” என அவ்வளவு அழகாக அறிவுரைகள் வழங்குவார். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என ஆசைப்படுகிறாரா?

அந்த பெண்ணுக்கு திரைப்படம் தான் ஆதர்சனம். ஆனால் இயல்பு வாழ்க்கையில் உள்ள உண்மை அவளுக்கு திரைப்படம் வேறு. இயல்பு வாழ்க்கை வேறு என அவளுக்கு உணர்த்துகிறது.

”தேர்வில் தோல்விக்கா இப்படி?” என நாயகி வருத்தமடைவாள். நல்ல கல்வி என்பது சுதந்திரத்தையும், தன்னம்பிக்கை உணர்வையும் தரக்கூடியது. தேர்வில் தோல்வி என்றால், ஒவ்வொரு வருடமும் நிகழ்கிற தற்கொலைகளும் இந்த கல்விமுறை தவறு என நிரூபிக்கும்.

மொத்தப் படத்தையும் மீராவும், மதுவாக நடித்தவர்களே தாங்குகிறார்கள். மற்றவர்கள் இயல்பாக வலம் வருகிறார்கள்.

நல்லபடம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: