> குருத்து: Confession of Murder (2012) - தென்கொரியா

July 5, 2020

Confession of Murder (2012) - தென்கொரியா

கதை. பத்துப்பெண்கள் வரிசையாக கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். ஒருமுறை போலீசு அதிகாரி அவனை துரத்தி பிடிக்க முயற்சி செய்யும் பொழுது, வாயை கிழித்து, தப்பித்துவிடுகிறான். இது தான் தொடக்க‌ காட்சி.

15 ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. தென்கொரியாவில் ஒரு வழக்கை 15 ஆண்டுகளுக்குள் (year statute of limitations) முடிக்கவில்லை என்றால், இனி அவ்வளவு தான் என‌ முறையாக (Officially) ஊத்திமூடிவிடுகிறார்கள்.

அதற்கு பிறகு, ஒரு ஆள் பத்து கொலைகளையும் நானே செய்தேன் என ஒரு புத்தகம் எழுதி வெளியிடுகிறான். ஊரே பரபரப்பாகிவிடுகிறது. சில லட்சங்கள் புத்தகம் வெளியான உடனேயே விற்று தீர்ந்துவிடுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் வீட்டில் போய், மன்னிப்பு கேட்கிறான். பெரிய புகழ் கிடைக்கிறது. பத்து பெண்களில் ஒரு குடும்பத்தினர் அந்த கொலைகாரனை கொலை செய்யவேண்டும் என வெறியோடு முயல்கிறார்கள். இதற்கிடையில் "நான் தான் உண்மையான கொலைகாரன்" என புதிதாய் ஒருஆள் சொல்லி, அதற்கான‌ ஆதாரத்தையும் வெளியிடுகிறான். இன்னும் பரபரப்பாகிவிடுகிறது.

யார் உண்மையான கொலைகாரன்? என்பதை பர பர சேஸிங் சண்டை காட்சிகளுடனும், உணர்வுபூர்வமாகவும் சொல்கிறார்கள்.

*****
மெமரிஸ் ஆப் மர்டர் என ஒரு புகழ்பெற்ற கொரிய படம் உண்டு. அந்தப் படத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்க மாட்டார்கள். அந்தப் படத்தின் தொடர்ச்சியைப் போல இந்தப் படம் என்கிறார்கள். கதை என்ற அடிப்படையில் சரிதான்.

'கொலைகாரனை' கொலை செய்ய துரத்தும் நெடுஞ்சாலை சண்டைக்காட்சியை அபாரமாக எடுத்திருக்கிறார்கள். சண்டை படமாக இருந்தாலும், உணர்வுபூர்வமாக எடுப்பதும் கொரியக்காரர்களுக்கு அருமையாக வருகிறது.

படத்தின் வெற்றியில் ஜப்பானிய மொழியில் 2017ல் எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தைத் தழுவி, மலையாளத்தில் Angels என்றொரு படத்தை எடுத்திருப்பதாக விக்கிபீடியா சொல்கிறது.

லாக்டவுனில் பார்க்ககூடிய படம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: