> குருத்து: வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள் - டாக்டர் பி. கிருஷ்ணகுமார்

November 7, 2021

வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள் - டாக்டர் பி. கிருஷ்ணகுமார்


’நேர நிர்வாகம்’, ’தலைமைத்துவம்’, ’சிறிய பழக்கங்கள்’ என புகழ்பெற்ற புத்தகங்கள் 35 ஐ தேர்ந்தெடுத்து, தி இந்து நாழிதழில் செப்டம்பர் 2014 முதல் வாரா வாரம் வணிக நூலகம் பகுதியில் வெளிவந்த புத்தக விமர்சன கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம். அப்பொழுது வீட்டில் இந்து நாளிதழ் வாங்கிக்கொண்டிருந்தோம். ஒரு சில வாரம் வந்த விமர்சனத்தை அப்பொழுதே படித்துள்ளேன்.


இந்த தலைப்புகளில் தனித்தனியான புத்தகங்களை முழுவதுமாக படிப்பது என்பது போரடித்துவிடுகிறது. ஆகையால், 35 புத்தகங்களின் சாரத்தை தொகுத்து கொடுத்தது
அருமையான

விசயம்.

நாலாவது புத்தகமான “Making Habits, Breaking Habits”ல் ”பழக்கங்களில் கவனம் வேண்டும். அலார்ட்டாக இல்லையென்றால் ஆளை சாய்த்துவிடும். ஒருபுறம் பழக்கத்துக்கு அடிமையாக இருந்துகொண்டு, மறுபுறம் வாழ்வில் உருப்படவும் வேண்டும் என நினைப்பது எப்படி? என ஆசிரியர் கேள்வி எழுப்புகிறார்.

இதையே வேறு வழிகளில் சொல்கிறார். இருபத்தி ஏழாம் புத்தகமான “Mini Habits”ல் ஆயிரம் மைல்களுக்கான பயணம், ஒரு அடியிலேயே துவங்குகிறது. சிறிய செயல்களின் மூலம் பெரிய வெற்றிகளை வசப்படுத்துவது என்பதை கற்றுத்தருகிறது இந்த புத்தகம். நமது ஒட்டு மொத்த வாழ்க்கைக்கான கட்டமைப்பு, நமது பழக்கங்களே என்கிறார்.

ஏழாம் புத்தகமான “Office Fables”ல் விசுவாசத்தின் விலை - நாயும், கழுதையும் அந்த வீட்டின் பிராணிகள். திருடர்களின் சத்தம். நாய் பார்த்துவிட்டு பார்க்காதது போல தூங்கியது. கழுதை நாயை கோபித்துக்கொண்டது! 'எதுவும் செய்து தொலைக்காதே!' என நாய் எச்சரித்தது! மீறி கழுதை கனத்தது. திருடர்கள் ஓடினார்கள்.

தூக்கம் கெடுத்த கழுதையை எஜமானன் அடித்து துவைத்தார்! – இப்படி குட்டிக்கதைகள் வழியாக பேசுகிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர்.

எட்டாவது புத்தகமான “The Best Place to work”ல் ”அலுவலக சூழல் - பணிபுரியும் இடத்தில் நல்ல சூழலை உருவாக்க வேண்டும். செய்யும் வேலைக்கு தகுந்த அலுவலக வடிவமைப்பு அவசியம்! எப்பொழுதும் வேலை! கிரியேட்டிவிட்டி முளைக்க வாய்ப்பேயில்லை! வெற்றிகளை விட புதிய முயற்சிகளை கொண்டாடுங்கள்! வெவ்வேறு சூழலில் இருந்து வரும் தனி மனிதர்களை குழுவாய் மாற்றுங்கள்!” என்கிறார்.

பதினான்காவது புத்தகமான “Smart Change“ல் “நிறுவனங்கள் ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ளவேண்டும். அவர்களின் ஆரோக்கிய குறைபாடு உற்பத்தியை பாதிக்கும். 2005ல் கிளீவ்லேண்ட் மருத்துவமனை ஊழியர்களின் மீது அக்கறை கொண்டு, நிறுவன வளாகத்தில் முதலில் புகைப்பிடிக்க தடை விதிக்கிறது. அடுத்து புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் கருத்தரங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டன. பிறகு 2008ல் யோகா, உடற்பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடுகள். 2010ல் சர்க்கரை உள்ள குளிர்பானங்களை தவிர்க்க வெண்டிங் எந்திரங்கள் நீக்கப்பட்டுள்ளன. இயற்கையான உணவு பொருட்கள் ஏற்பாடு செய்யபப்ட்டன. 2012ல் ஆண்டில் ஊழியர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது.”

பொதுவாக இதெல்லாம் முதலாளித்துவ சரக்குகள். ஆகையால் இதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு தள்ளிவிடலாம் என சிலர் நினைப்பார்கள். முதலாளித்துவ செல்வங்களும் வரலாற்றில் வழியில் மனித வள செல்வங்களே! நாம் அதில் சரியானவற்றை பயன்படுத்துவோம். நடைமுறைக்கு பொருந்தாததை தள்ளிவைப்போம்.

புத்தகத்தின் வடிவத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு புத்தகத்தில் மூன்று பக்கங்கள் என கச்சிதமாய் அமைந்திருப்பது சிறப்பு. படிப்பதற்கு சிரமம் இல்லாமல் எளிய தமிழில் அழகாக எழுதியிருக்கிறார். ஆங்காங்கே ஆங்கிலம் எட்டிப்பார்க்கிறது. அதை தவிர்த்திருக்கலாம். இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். புத்தகம் முழுவதுமே ஆங்காங்கே ஒரே வார்த்தை இரு வார்த்தைகளாக உடைந்தி ருக்கிறது. அதை வரும் பதிப்புகளில் கவனமாக தவிர்க்கவேண்டும்.

#விலை : ரூ. 120
#வெளியீடு : தமிழ் திசை

0 பின்னூட்டங்கள்: