சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த புத்தகத்தை வாங்கி, படிக்க ஆரம்பித்து, பாதியில் விட்டுவிட்டு, வேறு புத்தகங்கள் பின்னால் போய்விட்டேன். இப்பொழுது மீண்டும் கண்ணில்பட்டது. இரண்டு நாட்களில் மீண்டும் துவக்கத்தில் இருந்தே படித்து, முடித்தும்விட்டேன்.
நளினி 1950களில் கேரளாவில் பிறந்திருந்திருக்கிறார். அந்த ஊரில் உள்ள பெரிய வீடுகளில் ஒன்றாய் அவர்களுடைய வீடும் இருந்திருக்கிறது. பிறகு அப்பாவின் தொழிற்சங்க போராட்டத்தினால், அம்மாவின் வேலை போய்விட, வறுமை வாட்ட மூன்றாவதோடு பள்ளி படிப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. பிறகு குழந்தை தொழிலாளியாய் மண் அள்ளியிருக்கிறார்.,
அண்ணனின் திருமணத்திற்கு உதவி செய்ததற்காக, அப்பா கோபத்தில் 18 வயதில் இவரை ”வீட்டை விட்டு போ!” என துரத்தியுள்ளார். அவசர கோலத்தில் ஒருவரை திருமணம் செய்ய, இரண்டு குழந்தைகள் இருக்கும் பொழுது, கணவர் இறந்துவிட, ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் கொடுத்தால் தான் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள முடியும் என உறவினர் சொல்ல, பாலியல் ”தொழிலில்” ஈடுபட துவங்கியுள்ளார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, இந்த ‘தொழிலில்’ ஈடுபட்டதால், குழந்தைகளுக்கும் இவருக்குமான உறவை உறவினர்கள் கத்தரித்துக்கொண்டுள்ளனர்.
பிறகு, ஒரு வேறு ஒரு திருமணம் முடிந்து, ஒரு குழந்தை பிறந்து, அவரையும் பிரிந்து, முசுலீம் ஒருவரோடு 13 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து. தொழில் செய்து, பிறகு நட்டமாகி பிறகு அந்த உறவும் நிலைக்காமல்… கடுமையான வறிய நிலைக்கு தள்ளப்பட்டு பிறகு பாலியல் ”தொழிலில்” மீண்டும் ஈடுபட்டுள்ளார். அந்த ஒரு பெண் குழந்தையை வளர்க்கவும், பாதுகாக்கவும், செட்டில் செய்யவும் படாதப்பாடு பட்டிருக்கிறார்.
பிறகு பாலியல் ”தொழிலாளர்களுக்கென” ஒரு அமைப்பை அணுகி, தொடர்ச்சியாக இந்த ”தொழிலில்” ஈடுபட்டவர்களுக்காக சட்ட ரீதியில் உதவ தொடங்கி… இப்பொழுது ஒரு அமைப்பை துவங்கி, அதன் தலைவியாகவும் இருந்து வருகிறார். பாலியல் ”தொழிலாளர்கள்” பற்றிய சில ஆவணப்படங்கள் எடுத்துள்ளார்.
இப்படி அவருடைய பிறப்பு, வளர்ப்பு, திருமண வாழ்க்கை, பிறகு “தொழில்” வாழ்க்கை, மீண்டும் குடும்ப வாழ்க்கை, அமைப்போடு தொடர்பு, அவர் வாழ்வில் நடந்த மாற்றங்கள் என தன்னுடைய ஐம்பது வயது வாழ்க்கையை ஒரு பறவை பார்வையில் எழுதியுள்ளார்.
****
நளினி ஜமீலா வாழ்க்கையில் சமூக அடிப்படையில் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் பல அம்சங்கள் இருக்கின்றன. அதில் சில அம்சங்களை மட்டும் தொட்டுச் செல்வோம்.
சமூக நாணயத்தின் ஒரு பக்கத்தை தான் நாம் பெரும்பாலும் அறிவோம். திருடன் மணியன் பிள்ளை வாழ்க்கையும், நளினி ஜமீலா அவர்களுடைய வாழ்க்கையும் சமூக ”நாணயத்தின்” மறுபக்கமாக இருக்கிறது. அதனால் இவர்களை படிக்க வேண்டியிருக்கிறது. இருவருடைய வாழ்க்கையின் ஊடாக, மக்களின் சிந்தனையையும், ஒரு காலக்கட்டத்தையும் ஒரு பறவை பார்வையில் பார்த்துவிட முடிகிறது.
போலீசின் அற்பத்தனம். நளினியின் முதல் போணியே ஒரு போலீசு அதிகாரி தான். இரவு கொஞ்சிவிட்டு, காலையில் கைது செய்ய ஆளை அனுப்பிவிடுகிறார். என்ன ஒரு வில்லத்தனம்?
நளினி ஒரு இடத்தில் கடவுள் நம்பிக்கை குறித்து பேசுகிறார். அவர் வாழ்வில் நடந்த துயரங்கள், தன்னுடைய பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு பட்ட பாடு, தர்ஹாவை சுற்றி நடக்கும் அவலங்கள் அவருக்கு கடவுள் மீது நம்பிக்கையை கேள்விஎழுப்பியிருக்கிறது. இருப்பினும் ”தர்ஹாக்கள்” சில காலம் சோறும் போட்டுள்ளதால், தப்பு தப்பு என கன்னதில் போட்டுக்கொள்கிறார். என் வாழ்விலும் அப்படித்தான். நான் பிறந்தது. வளர்ந்தது எல்லாம் மதுரையில் தொழிலாளர்கள் வாழும் பகுதியில் தான். தெருவிற்கு ஒரு மாரியம்மன் குடியிருப்பார். அம்மா வணங்குவார். தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளியன்று சிறப்பாக தெப்பக்குளம் மாரியம்மனை போய் தரிசிப்பார். வருடத்திற்கு ஒருமுறை ஊரில் குலசாமியை கும்பிடுவார். ஆனால் அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றமில்லை. இது அம்மாவிற்கு மட்டுமில்ல! அங்கு வாழ்ந்த அத்தனை மக்களுக்கும் தான் நேர்ந்தது. பிறகு எல்லா தொழில்களும் நசிந்து, வேறு வேறு ஊர்களுக்கு நகர்ந்தனர். அதனாலேயே கடவுளின் இருப்பில் பதினைந்து வயதிலேயே கேள்விவந்துவிட்டது.
காதலர்களுக்கு எப்பொழுதும் ஒரு புகார் உண்டு. ஒரு இடத்தில் நிம்மதியாக உட்கார்ந்து பேச முடியலையே! இப்படி போறவன் வர்றவன் எல்லாம் உத்து உத்துப் பார்த்துட்டு போறான் என புகார் செய்வார்கள். அது போல நளினியும் அலுத்துக்கொள்கிறார். என்னைத் தேடி வருபவர்களில் பலர் பாலியல் ரீதியான ஆலோசனைக்கு வருபவர்கள் தான். அவர்களோடு உட்கார்ந்து பேசுவதற்கு ஒரு நல்ல இடம் இல்லையே! என்கிறார். ஆட்டோவில் போனால், ரூ.10க்கு 75 ரூ பில்லை போடுகிறார்கள். ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினால், ரூ.100க்கு ரூ. 600 கேட்கிறார்கள். சாப்பிட்டால், ஏகப்பட்ட பில்லை போடுகிறார்கள். சேச்சே! என்கிறார்.
இந்த பதிவில் பாலியல் தொழில் என வருமிடத்தில் எல்லாம் “தொழில்” என குறிப்பிட்டிருப்பேன். ஏனென்றால் இதை தொழில் என அங்கீகரிக்க முடியுமா? என்ற எனக்குள் எழுந்த கேள்வி தான். நளினியும் ஒரிடத்தில் அதைப் பற்றி எழுதுகிறார். இந்த நிலையை மாற்றுவது தானே சரி! ஆனால் அவர் அனுபவ வாதத்தில் இந்த பிரச்சனையை ஒழிக்கமுடியாது என்கிறார். அதுவரைக்கும் அதில் ஈடுபட்டவர்கள் வதைபட வேண்டுமா? சாகவேண்டுமா? என கோபமாய் கேட்கிறார். உண்மை தானே! இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் வறுமையை ஒழிக்க முடியாது. குடும்பம் என்கிற நிறுவனம் சாதியாலும், மதத்தாலும், உடைமை சிந்தனையிலும் இன்னும் இறுக்கமாக இருக்கிறது. ஆகையால், குடும்பத்திலிருந்து வெளியேறுகிற ஆணோ, பெண்ணோ தனித்துவிடப்படுகிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் நிர்கதியில் விடப்படுகிறார்கள். சீனாவில் 1949க்கு பிறகு நடந்த புரட்சிக்கு பிறகு, நளினி மாதிரி இருந்தவர்களுக்கு எல்லாம் வேலைகள் தரப்பட்டன. அவர்கள் காதலித்தார்கள். கல்யாணம் முடித்தார்கள். அங்கு இருந்த நிலைமை மாறியதாக ஒரு நீண்ட கட்டுரை படித்தேன். (இப்பொழுது நிலைமை மாறியிருக்கும்)
மற்றபடி நளினி ஜமீலா அமைப்பு என்ற கூட்டுத்துவத்திற்குள் வந்த பிறகு, அவருடைய வாழ்க்கை மாறியிருக்கிறது. கண்ணோட்டம் மாறியிருக்கிறது. அவருடைய பெண்ணுக்கு அவர்களை புரிந்துகொண்ட ஒரு ஆட்டோ டிரைவர் வாழ்க்கை துணையாக கிடைத்திருக்கிறார். அவரைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக உதவுகிறார். சமீபத்தில் பாலியல் “தொழிலாளி”யினுடைய வாழ்க்கையைப் பற்றி எடுத்த ஒரு படத்திற்கு உடை வடிவமைப்பாளராக பணியாற்றி விருதும் வென்றியிருக்கிறார்.
மொழியாக்கம் பொறுத்தவரையில் குளச்சல் யூசூப் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி கொஞ்சம் மலையாள வாடை அடிக்கிறது. அப்படித்தான் அடிக்கும் போல! கேரளா என்றால், மழை, பசுமை என ”கடவுளின் தேசம்” என்பார்கள். நளினியை போன்றவர்களும் அங்கு தான் வாழ்கிறார்கள்.
அனைவரும் படிக்கவேண்டிய வாழ்க்கை வரலாறு. படியுங்கள்.
பக்கங்கள் 184
வெளியீடு : காலச்சுவடு
தமிழ் மொழியாக்கம் : குளச்சல் யூசூப்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment